
முதலீட்டு மனநிலை
மனச்சோர்வு தீர்க்கும் மருந்துகளின் (Antidepressants) உபயோகம் கடந்த ஆறு வருடங்களில் 35% உயர்ந்திருப்பதாக ஃபார்மசூட்டிகல் ஜர்னல் தெரிவிக்கிறது.
மனச்சோர்வால் தனிமை உணர்வும், தாழ்வு மனப் பான்மையும், எதிர்மறை எண்ணங்களும், அலைபாயும் உணர்வுகளும் அதிகரித்து உடலையும் மனதையும் பாதிக்கின்றன.

தவறவிட்டுவிடுவோமோ என்கிற பயம்...
மனச்சோர்வுக்கான பல காரணங்களில் ஃபோமோவும் (FOMO - Fear Of Missing Out) ஒன்று. பொதுவாக, அடுத்த வருக்குத் தெரியும் விஷயங்கள் தனக்குத் தெரியாமல் போய்விடுமோ, அவருக்குக் கிடைக்கும் நல்ல அனுப வங்கள் தனக்குக் கிடைக் காமல் போய்விடுமோ; இதனால் தன் வாழ்வே அர்த்தமற்றுப் போய்விடுமோ என்பது போன்ற பயங்களை உருவாக்கவல்லது இந்த ஃபோமோ.
மக்களை இந்த ஃபோமோ வுக்கு அடிமையாக்குவதில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களுக்குப் பெரும்பங்கு உண்டு.
உதாரணமாக, தாய் லாந்தில் ஒரு பீச் ரிசார்ட்டில் உல்லாசமாக நீந்திக் களிப்பது போன்ற புகைப்படத்தை நம் நண்பரின் ஃபேஸ்புக்கில் நாம் காண நேர்ந்தால் போதும்; அடுத்த நிமிடமே நம் மனதில் ‘போன வருடம் மாலத் தீவுகளுக்கு மேற்கொண்ட பயணம் சுத்த வேஸ்ட்; இந்த வருடம் கண்டிப்பாக தாய்லாந்து போய்விட வேண்டும்’ என்ற எண்ணம் தோன்றி, நம்மிடம் இல்லாத பணத்தை கடன் வாங்கி யாவது செலவழிக்கத் தயா ராகிவிடுகிறோம். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாக்களில் இந்த ஃபோமோவின் பங்கு கணிசமானது.

முதலீட்டுச் சந்தையில் ஃபோமோ...
முதலீட்டுச் சந்தைகளிலும் இந்த ஃபோமோ பலவித தாக்கங்களை ஏற்படுத்து கிறது. நாம் அறியாத புரியாத முதலீடுகளில் அவசரப்பட்டு இறங்குவதற்குக் காரணம், ஃபோமோதான். இன்ஸ்டா கிராமில் யாராவது தினம் தோறும் பங்குச் சந்தையில் 6% லாபம் பார்ப்பதாக பெருமைபேசுவது சகஜம். அதைப் பார்க்கும்போது நம்மை அறியாமலேயே நாம் இதுவரை செய்த முதலீடுகள் பற்றிய தாழ்வு எண்ணங்களும், நம் முதலீட்டு முறை சரிதானா என்ற கேள்விகளும் நம் மனதில் எழுவதைப் பார்க் கிறோம்;
வெற்றியாளர்கள் என்று நாம் கருதும் நபர்களைப் போல, முதலீடு செய்ய முயல்கிறோம். இந்த ஃபோமோ நம் ஆசைகளைத் தூண்டி, ஏற்கெனவே ஏறிக்கொண் டிருக்கும் பங்குச் சந்தை போன்ற முதலீடுகளை இன்னும் அதிகம் ஏற்றம் பெற வைக்கும். இந்த மாதிரியான சூழலைத்தான் நாம் 2020 மற்றும் 2021-ல் பார்த்தோம்.
இழந்துவிடுவோமோ என்கிற பயம்...
ஆனால், பணவீக்கம் அதிகரிக்கும்போது இதற்கு நேர்மாறான உணர்வுகளைத் தருவது ஃபோலோ (FOLO - Fear Of Losing Out). ஒருவேளை, பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தால் நம் முதலீடுகள் என்னவாகும் என்ற பயம் மேலோங்கி நல்ல பங்குகளைக்கூட விற்கத் தூண்டுவதுதான் ஃபோலோ.
ஃபோமோவால் சந்தை அளவுக்கதிகமாக மேலே போவது போல், ஃபோலோவால் சந்தை வீழ்ச்சி துரிதப்படுத்தப்படுகிறது. சந்தை இறங்குகையில் பலரும் விற்று வெளியேறுகிறார்கள் என்று அறிந்தவுடன், நாமும் அந்த முதலீட்டில் இருந்து வெளியேறத் துடிக்கிறோம்.
எப்படித் தவிர்க்கலாம்?
பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு நல்ல முதலீட்டாளர் இவை இரண்டுக்குமே இடம்தராமல் இருப்பது அவரது முதலீடுகளுக்கு நன்மை என்பதால், இவற்றை எப்படித் தவிர்ப்பது என்று பார்க்கலாம்.
* சந்தை இரைச்சலை பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. குடும்பத்தாரில் ஆரம்பித்து, நண்பர்கள், சந்தை நிபுணர்கள், டிவி நிகழ்ச்சிகள், முதலீட்டு வலைதளங்கள் என்று பல உருவங்களில் நம்மை அடையும் சந்தை இரைச்சல்கள்தான் ஃபோமோவுக்கும் ஃபோலோவுக்கும் வழிவகுக் கின்றன. எப்பேர்ப்பட்ட முதலீட்டு யோசனைகள் சுடச்சுட முன்வைக்கப்பட்டாலும் அவை நம் இயல்புக்குப் பொருத்தமானவையா, இப்போது வாங்க / விற்க சரியான நேரம்தானா என்ற தீர்க்கமான ஆராய்ச்சிக்குப் பின் செயல்படுவது நன்று.
* மனப்பிழைகளை உணர்வது அவசியம். மிகுந்த மனஉறுதியுடன் இருக்கும் முதலீட்டாளர்களையும் பாதிக்கவல்ல 21 வகை மனப்பிழைகளை (Mental bias) உளவியல் நிபுணர்கள் பட்டியல் இடுகிறார்கள்.ஃபோமோ, ஃபோலோ போன்ற உணர்வுகள், ‘உறுதிப்படுத்தல் சார்பு’ (Confirmation Bias) போன்ற மனப்பிழைகளின் தாக்கத்தால் வருபவை. ‘உறுதிப்படுத்தல் சார்பு’ இருக்கும் ஒருவர் தன் கருத்துக்கு சாதகமான செய்திகளை மட்டுமே படிப்பவராக இருப்பார். தான் விரும்பாத செய்திகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். இதனால் அவர் எடுக்கும் முடிவுகள் ஒரு சார்பாக ஆகி, தவறாகப் போகும் வாய்ப்பு உண்டு.
உதாரணமாக, சந்தை ஏறுகிறது என்று தீர்மானித்தால் அதை உறுதிப்படுத்தும் செய்தி களை மட்டுமே படித்து, அதிக மதிப்பீட்டில் விற்பனையாகும் பங்குகளைக்கூட வாங்குவார். சந்தை இறங்குகிறது என்ற கருத்து ஏற்பட்டால், அது தொடர்பான செய்திகளை மட்டுமே படித்து ஏறுமுகத்தில் இருக்கும் நல்ல பங்குகளைக்கூட அவசரமாக விற்றுத் தள்ளுவார்.
இப்படி உணர்வுகள் நம் மனதை ஆட்டிப் படைத்து முதலீடுகளைப் பதம் பார்க்கின்றன என்பதை நாம் உணர்ந்து, நம் ஒவ்வொரு முடிவையும் புதிய கோணத்தில் பரிசீலிக்கத் தொடங்கும்போது அவற்றின் தாக்கம் குறைய ஆரம்பிக்கிறது.

பொருளாதாரத் திட்டம்...
நமது குறுகிய கால மற்றும் நீண்ட கால குறிக்கோள்கள் எவை, அவற்றை நிறைவேற்ற நம் முன் இருக்கும் கால அளவைகள் என்னென்ன, நமது ரிஸ்க் எடுக்கும் திறன் எவ்வளவு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நமக்கான ஒரு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்கி அதை இம்மி அளவும் பிசகாமல் நடைமுறைப்படுத்து வது ஒரு நல்ல வழி.
இப்படி உருவாக்கும்போது ‘ஒரே நாளில் இந்தப் பொருளாதார சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்ப இயலாது; இது ஒரு நீண்ட நெடும் பயணம்; இதில் ஃபோமோ, ஃபோலோ போன்ற உணர்வு களுக்கு இடம்தருவது தடுமாற் றத்தை ஏற்படுத்தும்’ என்ற தெளிவு இருத்தல் முக்கியம்.
உணர்வுபூர்வமான செயல் பாடுகள் நமது முடிவெடுக்கும் திறனை மழுங்கடித்து, நாம் எதிர்காலத்துக்காகப் போட்டு வைத்திருக்கும் பொருளாதாரத் திட்டங்களைக் குடைசாய்த்து விடுவதோடு, மனச்சோர்வு ஏற்படும் அளவுக்கு நம்மை பாதிக்கவல்லவை. அதை அனுமதிக்கக் கூடாது என்றால் முடிவுகளை மேற்கொள்ளும்முன் சற்று நிதானித்து, அந்த முடிவு களின் ரகசிய வேர்கள் விரிவான ஆராய்ச்சியா அல்லது உணர்வு களின் தாக்கமா என்று இனம் கண்டு பின் செயல்படவேண்டும்.
‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்று வள்ளுவர் சொன்னபடி நடந்துகொண்டால், ஃபோலோ, ஃபோமோ ஆகிய இரு மனச் சாய்வுகளில் இருந்து தப்பித்து, மனச்சோர்வு இல்லாமல் இருக்கலாம்!