
மோசடித் திட்டங்கள் நமது மாநிலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் எனில், பொருளாதாரக் குற்றத் தடுப்பு போலீஸார் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.
நம் நாட்டில் கல்வியறிவு அதிகம் இருக்கும் மாநிலங்களில் தமிழகம் எப்போதுமே முன்னணியில் இருந்துவருகிறது. அதிலும், நிதி சார்ந்த விஷயங்களில் நம்மவர்களிடம் இருக்கும் அறிவானது உலகமே மெச்சக்கூடிய வகையில் இருக்கிறது. இதனால்தான் உலக அளவில் உள்ள பெரும் நிறுவனங்களின் தலைமைப் பதவியை வகிப்பதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் பல லட்சக் கணக்கானவர்கள் வேலையும் பார்க்கிறார்கள்!
ஒரு பக்கம் இது பெருமையான விஷயம் எனில், இன்னொரு பக்கம் நமது மாநிலத்தில் உள்ள மக்கள் பல வகையான மோசடித் திட்டங்களில் பணத்தை இழப்பதைப் பார்க்கும்போது, நம் மக்கள், நிதி சார்ந்த விஷயங்களில் அந்தளவுக்குத் திறமையானவர்கள் இல்லையா அல்லது குறுகிய காலத்தில் பெரும் பணம் சேர்த்துவிட வேண்டும் என்கிற பேராசை அவர்களின் கண்களை மறைத்து, பணத்தை இழக்கச் செய்துவிடுகிறதா என்பது முக்கியமான கேள்வி!
காரணம், சில நாள்களுக்குமுன் சென்னை வடபழனியில் ‘பிராவிடன்ட் டிரேடிங்’ என்கிற நிறுவனம், ‘ரூ.1,00,000 முதலீடு செய்தால், மாதம்தோறும் ரூ.20,000 வட்டியாகத் தரப்படும்’ என்று சொல்லி, ரூ.2,000 கோடிக்கு மேல் பணம் வசூலித் திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனம், கானா நாட்டில் தங்கத்தை சுரண்டி எடுக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும், இதன்மூலம் கிடைக்கும் லாபத்தைத் தரப்போவதாகவும் சொல்ல, மக்களும் அதை நம்பிப் பணத்தைப் போட, இப்போது இந்த நிறுவனம் மாயமான பிறகு, கதறத் தொடங்கி இருக்கிறார்கள்.
‘நம்மூர் நிறுவனம் ஒன்று, வெளிநாட்டில் இருக்கும் நிறுவனத்தில் இப்படி முதலீடு செய்ய முடியுமா, முடியும் எனில், அதற்கு நம் நாட்டு அரசிடம் இருந்தும், தொழில் செய்யும் வெளிநாட்டு அரசிடம் இருந்தும் என்ன மாதிரியான அனுமதி களை வாங்கினார்கள், அந்த அனுமதிகள் உண்மையானவைதானா, இந்த நிறுவனத்தில் பணம் போடுவதால், என்ன ரிஸ்க்குகள் நமக்கு வர வாய்ப்புண்டு?’ இப்படிப்பட்ட கேள்விகளை இந்த நிறுவனத்தில் பணம் போடும்முன் எத்தனை பேர் கேட்டார்கள் என்பது முக்கியமான விஷயம். நிறுவனங்கள் சொல்லும் பொய்களை நாங்கள் அப்படியே நம்புவோம்; அது பற்றி எந்த வகையில் சந்தேகப் படவும் மாட்டோம்; விசாரிக்கவும் மாட்டோம் என்று மக்கள் செயல்படுவது எந்த வகையில் சரி?
மோசடித் திட்டங்கள் நமது மாநிலத்தில் நடக்காமல் இருக்க வேண்டும் எனில், பொருளாதாரக் குற்றத் தடுப்பு போலீஸார் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும். அதே சமயம் மக்களும், குறுகிய காலத்தில் பெரும் பணம் சேர்க்க வேண்டும் எனப் பேராசையுடன் செயல்படாமல், எதில் பணம் போட்டால், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும்.
எல்லா விஷயங்களிலும் சிந்தித்து செயல்படும் நம் மக்கள், மோசடி நிறுவனங் களிடம் பணம் தந்து இழப்பதை என்றைக்கு நிறுத்துகிறார்களோ, அன்றைக்குதான் நாம் கல்வியறிவுடன் நிதி சார்ந்த விழிப்புணர்வையும் முழுமையாகப் பெற்றிருக் கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்!
- ஆசிரியர்