மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி... ஏன்... எதற்கு... எப்போது?

மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி
பிரீமியம் ஸ்டோரி
News
மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 8

பாவனா ஆச்சார்யா, இணை நிறுவனர், Primeinvestor.in

பொதுவாகவே, மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது மிகவும் சிறந்தது என்று கூறி வருகிறோம். முதலீட்டாளர்களும் அதை தெளிவாகப் புரிந்துகொண்டுதான் எஸ்.ஐ.பி மூலம் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது கிடைக்கும் பலன்கள் குறித்து எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இருப்பினும், எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி முறையின் மூலம் குறைவான தொகையை முதலீடு செய்து வந்தாலும், எப்போதெல்லாம் நம்மிடம் கணிசமான தொகை இருக்கிறதோ, அதை மொத்தமாக முதலீடு செய்யும்போது குறுகிய காலத்தில் அது தரும் பலன் குறிப்பிடத்தக்க அளவுக்கு நன்றாகவே இருக்கிறது.

பாவனா ஆச்சார்யா 
இணை நிறுவனர், 
Primeinvestor.in
பாவனா ஆச்சார்யா இணை நிறுவனர், Primeinvestor.in

ஏன் எஸ்.ஐ.பி?

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதில் உள்ள ஒரு முக்கியமான நன்மை, அது நமக்கு வெவ்வேறு சந்தை சுழற்சிகளில் / வெவ்வேறு என்.ஏ.வி-களில் முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. அதாவது, சந்தையின் ஏற்ற இறக்கமான சூழல்களில் உண்டாகும் அபாயத்தைக் குறைக்க எஸ்.ஐ.பி மூலமான முதலீடு உதவியாக இருக்கிறது. அதனால்தான் மொத்த முதலீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், தவறான நேரத்தில் சந்தையில் மொத்தமாக முதலீடு செய்தால், அதனால் பெரிய அளவு நஷ்டம் உண்டாகும்.

எஸ்.ஐ.பி முறையின் மூலம் சந்தையின் வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு சுழற்சிகளில் முதலீடு செய்யப்படுவதால் கிடைக்கும் இந்தப் பலன் காரணமாகவே அது பெரும்பாலும் வரவேற்கப்படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் மட்டுமே முதலீடு செய்துவரலாம் என்று கூறுகிறோம்.

ஆனால், நம்மிடம் மொத்தமாக உபரித் தொகை இருக்கிறது என்கிறபோது, அதை ஒரே நேரத்தில் மொத்தமாக முதலீடு செய்ய லாமா அல்லது வேண்டாமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டடைய வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி... ஏன்... எதற்கு... எப்போது?

1. உபரி முதலீட்டுத் தொகையின் விகிதாச்சாரம்

நீங்கள் ஏற்கெனவே கணிசமான முதலீட்டை மேற்கொண்டிருக்கும் போது, முதலீடு செய்ய உங்களிடம் உபரித் தொகை இருக்கிறது எனில், இந்தச் சூழ்நிலை பொருந்தும். உங்களிடம் இருக்கும் உபரித் தொகைக்கும் உங்கள் மொத்த போர்ட்ஃபோலியோ மதிப்புக்கும் இடையிலான விகிதாச்சாரத்தைப் பொறுத்து, நீங்கள் மொத்தமாக முதலீடு செய்யலாமா அல்லது எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாமா என்கிற முடிவை எடுக்கலாம்.

நீங்கள் முதலீடு செய்யப்போகும் உபரித் தொகை குறைந்த விகிதாச்சாரத்தில் இருந்தால், அது உங்கள் முதலீட்டின் வருமானத்தையோ அல்லது உங்களுடைய முதலீட்டுச் செலவையோ பெரிதாக பாதிக்காது. அதாவது, நீங்கள் முதலீடு செய்யப்போகும் தொகை உங்களுடைய முதலீட்டு மதிப்பை பெரிய அளவுக்கு அதிகரிக்காது என்னும்போது அதனுடைய செயல்பாடானாது பெரிய தாக்கத்தைக் கொண்டிருக்காது. அதாவது, நீங்கள் முதலீடு செய்யப்போகும் தொகை உங்களுடைய போர்ட் ஃபோலியோவில் 5% - 7 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கிறது எனில், அதன் மூலம் உண்டாகும் லாபமோ, நஷ்டமோ குறைவாகவே இருக்கும் என்பதால், மொத்த போர்ட்ஃபோலியோவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

இதை ஒரு உதாரணத்துடன் பார்த்தால், தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் கடந்த 2010 மே மாதத்தில் நிஃப்டி மிட்கேப் 150-ல் ரூ.5 லட்சம் முதலீடு செய்திருக் கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். 2018 மே மாதம் உங்களுடைய முதலீட்டு மதிப்பு ரூ.14 லட்சமாக வளர்ச்சி கண்டிருக்கும். இப்போது இரண்டு சூழலை எடுத்துக்கொள்வோம்.

சூழல் 1: உங்களிடம் ரூ.3 லட்சம் இருக்கிறது. இது உங்களுடைய போர்ட்ஃபோலியோ மதிப்பில் 20 சதவிகிதத்துக்கு மேல்.

சூழல் 2: உங்களிடம் ரூ.1 லட்சம் இருக்கிறது. இது உங்களுடைய போர்ட்ஃபோலியோ மதிப்பில் 7% மட்டுமே.

போர்ட்ஃபோலியோ மதிப்பில் குறைந்த விகிதத்தில் மொத்த முதலீடு மேற்கொள்ளும்போது அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது குறைவாகவே இருக்கும் (பார்க்க அட்டவணை). இதற்குக் காரணம், மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டுத் தொகை ஒட்டுமொத்த முதலீட்டுச் செலவை சராசரி செய்வதற்குப் போதுமானதாக இல்லை என்பதுதான்.

மேலும், இங்கு எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு நாம் எடுத்துக் கொண்ட காலகட்டம் என்பது மிட்கேப் சீராக செயலாற்றிய காலகட்டம் ஆகும். இதனால் குறைந்த விலையில் வாங்கி, முதலீட்டுச் செலவை சராசரி செய்திருக்க முடியும். ஆனால், இப்படியான எஸ்.ஐ.பி முதலீட்டுக்குச் சாதகமான காலகட்டம் எப்போதும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே, உபரி முதலீட்டுத் தொகை போர்ட்ஃபோலியோவில் 10 சதவிகிதத்துக்குக் குறைவாக இருக்கும்போது மொத்த முதலீடாகவும், அதற்குமேல் இருக்கும்போது எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி முறையிலும் முதலீடு செய்யும் முடிவை எடுக்கலாம்.

2. கடன் ஃபண்டுகள் அல்லது ரிஸ்க் குறைவான ஹைபிரிட் ஃபண்டுகள்...

மொத்தமாக முதலீடு செய்யத் தயங்கக் காரணம், மதிப்பு இறங்கி நஷ்டம் ஆகிவிடுமோ என்கிற கவலைதான். கடன் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, மொத்த முதலீடா அல்லது எஸ்.ஐ.பி முறையிலான முதலீடா என்கிற கேள்விக்கு அவசியமே இல்லை. காரணம், கடன் ஃபண்டுகளில் நடக்கும் ஏற்ற இறக்கமானது ஃபண்டின் போர்ட் ஃபோலியோவில் உள்ள பாண்டுகளின் மதிப்பு மாற்றங் களுக்கேற்ப ஏற்படுகிறது.

தவிர, கடன் ஃபண்டுகள் வட்டி வருமானத்தைத் திரட்டும் உத்தியைக் கொண்டிருப்பதால், இதில் மதிப்பு குறைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன.

ஆர்பிட்ரேஜ், ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகளில் ஏற்ற இறக்கமும், கடுமையான சரிவும் பெரிதாக இருக்காது என்பதால், இவற்றில் உச்சநிலையில் முதலீடு செய்யக்கூடிய ரிஸ்க் இல்லை.

மேலும், ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் ஒரு மாத வருமானத்தில் உள்ள விலகல் (Standard deviation) சராசரியாக 0.19 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. எனவே, இவற்றிலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வது பலன் அளிக்காது. எனவே, இவற்றில் ் மொத்த முதலீட்டை மேற் கொள்ளலாம்.

3. ஒரே சொத்து வகையில் ஃபண்டுகளை மாற்றும்போது...

ஒரே சொத்து வகையைச் சேர்ந்த ஃபண்டுகளுக்கு இடையில் முதலீடுகளை மாற்றும்போது மொத்த முதலீட்டு முறையைப் பயன்படுத்தலாம். இவற்றில் எஸ்.ஐ.பி அல்லது எஸ்.டி.பி முறையில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக, நீங்கள் ஈக்விட்டி ஃபண்டில் ஏற்கெனவே முதலீடு செய்து, இன்னொரு ஈக்விட்டி ஃபண்டுக்கு மாறும்போது, ஃபண்ட் தான் மாறுகிறதே தவிர, ஃபண்டின் வகை மாறுவதில்லை. அதே போலத்தான் கடன் ஃபண்டும்.

எனவே, ஈக்விட்டி ஃபண்டில் இருந்து ஈக்விட்டி ஃபண்டுக்கு, கடன் ஃபண்டில் இருந்து கடன் ஃபண்டுக்கு என ஒரே சொத்து வகைகளுக்குள் ஃபண்ட் மாறும்போது மொத்த முதலீட்டை மேற்கொள்ளலாம்.

4. சந்தையின் செயல்பாடு அடிப்படையில்...

பொதுவாக, முதலீடு என்று வரும்போது சந்தை ஏற்றத்தில் இருக்கிறதா அல்லது இறக்கத்தில் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, முதலீடு செய்ய நினைக்கிறார்கள். இதற்கு சந்தையைப் பற்றி உங்களுக்கு முழுமையாகப் புரிந்திருக்க வேண்டும்.

அப்படி முழுமையாகப் புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்கள் மேற்குறிப்பிட மூன்று விஷயங்களை மட்டும் பின்பற்றி மொத்த முதலீடா அல்லது எஸ்.ஐ.பி முதலீடா என்கிற முடிவை எடுக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் மொத்த முதலீடு Vs எஸ்.ஐ.பி... ஏன்... எதற்கு... எப்போது?

மொத்த முதலீடு / எஸ்.ஐ.பி முதலீடு எப்போது?

சந்தையின் போக்கை வைத்து முதலீடு செய்ய நினைப்பவர்கள் இரு விதமான அணுகுமுறையை மேற் கொள்ளலாம். முதலாவது, சந்தையில் இறக்கம் வரப் போவது ஓரளவுக்கு உறுதியாகத் தெரியும்போது (உதாரணமாக, கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தை இருந்ததுபோல) சந்தை அதன் உச்சங்களில் இருந்து சரிவடையும்; இந்தச் சரிவானது சில வாரங்களுக்குமேல் நீடித்திருக்கும். அந்த சமயங்களில் மொத்த முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை, மிக அதிகமான தொகையாக இருந்தால் அதை சில பகுதிகளாகப் பிரித்தும் சந்தையின் வெவ்வேறு நிலைகளில் முதலீடு செய்யலாம்.

இரண்டாவது, சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் வரு வதற்கான அறிகுறியே இல்லாத நேரங்களில், முதலீடுகளைப் படிப்படியாகத் திட்டமிடலாம். அப்படி செய்வதன் மூலம் சந்தையின் நகர்வுகளிலிருந்து பலன் அடைய முடியும்.

சந்தை உச்சத்தில் இருக்கிறது எனில், மொத்தமாக முதலீடு செய்வது ரிஸ்க்கை அதிகமாக்கும். ஆனால், சந்தை நிலையான ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது; ரிஸ்க் எடுத்து, முதலீடு செய்யத் தயார் எனில், மொத்தமாக ஒரே நேரத்தில் முதலீடு செய்யலாம்.

சந்தை இறக்கத்தின் போக்கில் இருக்கிறது எனில், மொத்த முதலீட்டுத் தொகையை இரண்டு அல்லது மூன்று பகுதிகளாகப் பிரித்து முதலீடு செய்தால் அதிகப் பலனை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் முதலீட்டு முடிவை எடுப்பது அவசியம்!

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்