நடப்பு
Published:Updated:

நிறுவனர்கள் வெளியேற்றம்... ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை?

பிரச்னை
பிரீமியம் ஸ்டோரி
News
பிரச்னை

பிரச்னை

பிரைவேட் ஈக்விட்டி முதலீடானது ஒரு நிறுவனத்தில் ஓரளவுக்கு மேல் வந்தால், நிறுவனங்களைத் தொடங்கியவர்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். நேற்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து பின்னி பன்சால் வெளியேற்றப்பட்டதுபோல, இப்போது ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்திலிருந்து அந்த நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீகாந்த் மீனாட்சி, சி.ஆர்.சந்திரசேகர் இருவரும்் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து விசாரித்தோம். நமக்குக் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தன.

நிறுவனர்கள் வெளியேற்றம்... ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை?

அமெரிக்கா டு சென்னை

அமெரிக்காவில் வேலைபார்த்த சி.ஆர். சந்திரசேகரும், ஸ்ரீகாந்த் மீனாட்சியும் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பிருப்பதை உணர்ந்து, அங்கு பார்த்துவந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு இந்தியாவுக்கு வந்தனர். கடந்த 2009-ம் ஆண்டு ஃபண்ட்ஸ் இந்தியா (Funds India) என்கிற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். ஆன்லைன் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்கிற புதுமையான முறையை ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியதால், தமிழகத்தைத் தாண்டி இந்தியா மற்றும் உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள் ஃபண்ட்ஸ் இந்தியாமூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர்.

நிறுவனர்கள் வெளியேற்றம்... ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை?

கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் சுமார் 2,000 நகரங்களில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களைப் பெற்றது. சுமார் ரூ.6,500 கோடி இந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 330-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 2013-ம் ஆண்டு இந்த நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு உதவும் ரோபோ ஆலோசனை சேவையைத் தரத் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சந்திரசேகரும், ஸ்ரீகாந்த் மீனாட்சியும் மிகச் சிறப்பாக நடத்தி, மிக முக்கியமான நிறுவனமாக மாற்றிக் காட்டினார்கள்.

பிரைவேட் ஈக்விட்டிக்கு அனுமதி

இந்த நிறுவனம் மேலும் வளரவேண்டும் என்பதற்காக இதன் நிறுவனர்கள் சந்திரசேகரும் ஸ்ரீகாந்த் மீனாட்சியும் தனிப்பட்ட பங்கு முதலீட்டைப் (பிரைவேட் ஈக்விட்டி) பெற்றனர். இந்த முதலீடு படிப்படியாக மிக அதிக அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.

2010-ம் ஆண்டில் இன்வென்டஸ் கேப்பிட்டல் (Inventus Capital), 2012-ம் ஆண்டில் ஃபவுண்டேஷன் கேப்பிட்டல், (Foundation Capital) ஆகிய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனங்கள் பங்கு மூலதனத்தைக் கொண்டிருந்தன. 2015-ம் ஆண்டு ஃபாரிங் கேப்பிட்டல் (Faering Capital) நிறுவனம், ரூ.70 கோடி முதலீடு செய்தது. அப்போது, இந்த நிறுவனத்தின் சமீர் ஷரூஃப் மற்றும் ஆதித்ய பரேக் (இவர் ஹெச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் தலைவர் தீபக் பரேக்கின் மகன்) ஆகியோர் இயக்குநர் குழுவில் இயக்குநர்களாகச் சேர்ந்தனர். ஃபவுண்டேஷன் கேப்பிட்டல் சார்பில் அஷூ கார்க், இன்வென்டஸ் கேப்பிட்டல் சார்பில் பராக் தூல் ஆகியோரும் இயக்குநர்களாக இருந்தனர். அண்மைக் கால நிலவரப்படி, இந்த நிறுவனத்தின் சுமார் 80% பங்குகள் பி.இ முதலீட்டாளர்கள் வசமும், 20% பங்குகள் நிறுவனத்தைத் தொடங்கிய சந்திரசேகர் மற்றும் ஸ்ரீகாந்த் மீனாட்சி வசமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

லாபத்தைக் குறைத்த டைரக்ட் முதலீடும் அப்ஃப்ரண்ட் கமிஷனும்

அண்மைக் காலம் வரை இந்த நிறுவனத்தில் பெரிய பிரச்னை எதுவும் இல்லாமல் சுமூகமாகச் சென்றுகொண்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிலபல பிரச்னைகள் தலையெடுக்க ஆரம்பித்தன.

நிறுவனர்கள் வெளியேற்றம்... ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை?

முன்பு, மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் முதலீடு செய்யவேண்டும் எனில், விநியோகஸ்தர்மூலமாகத்தான் செய்யமுடியும். இந்த வழக்கத்தை மாற்றி, நேரடியாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம் என்கிற புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது செபி. இதன்பிறகு குறிப்பிடத்தக்க அளவு முதலீட்டாளர்கள் நேரடித் திட்டத்தைத் தேர்வுசெய்து, முதலீடு செய்ய ஆரம்பித்தனர். இன்னும் சிலர், டீமேட் கணக்குமூலமும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இப்படிச் செய்வதால், ஃபண்ட் விநியோகம் செய்யும் நிறுவனங்களின் வருமானம் குறைய ஆரம்பித்தது.

மியூச்சுவல் ஃபண்ட் துறை இன்னும் நன்றாக வளரவேண்டுமெனில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இன்னும் அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்று செபி நினைத்தது. இதனால், மியூச்சுவல் ஃபண்டுகளை விநியோகம் செய்யும் நிறுவனங் களுக்கு வழங்கப்படும் அப்ஃபிரண்ட் கமிஷனை நீக்கியது. இது போதாது என்று செலவு விகிதத்தை யும் (எக்ஸ்பென்ஸ் ரேஷியோ) செபி குறைத்தது.

செபியின் இந்த நடவடிக்கைகளால் ஆடிப் போயிருந்த ஃபண்ட் விநியோக நிறுவனங்களுக்குப் பங்குச் சந்தையின் தொடர் இறக்கத்தால், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கிறவர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இந்தக் காரணங்களால் மியூச்சுவல் ஃபண்டு களை விநியோகம் செய்யும் எல்லா நிறுவனங்களின் வருமானமும் குறைந்தது. இந்த நிலையில், ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருமானமும் குறைந்ததில் எந்த ஆச்சர்யமுமில்லை.

நிர்வாகத்தில் கருத்துவேறுபாடு

ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் லாபம் குறைவது குறித்து அதில் முதலீடு செய்திருந்த பி.இ முதலீட் டாளர்கள் கவலைபடத் தொடங்கினர். லாபத்தை உடனடியாகக் கூட்டுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியதால், செலவைக் குறைப்பதற்கான வழிகளை யோசிக்கத் தொடங்கினர்.

ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தில் உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர் களை முதலீடு செய்ய வைக்க பலரும் வேலை பார்க்கின்றனர். இவர்களுடைய தொடர்ச்சியான பணியால்தான் ஃபண்ட்ஸ் இந்தியாவின் வருமானம் கணிசமாக அதிகரித்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஃபண்ட்ஸ் இந்தியாவில் முதலீடு செய்திருந்த பி.இ முதலீட்டாளர்களின் கருத்து வேறு மாதிரி யாக இருந்தது. எதிர்காலத்தில் ஆன்லைன் மூலமமாகவே பெரிய அளவில் முதலீடு வரும் என்பதால், வேலைக்கு ஆட்கள் அதிகம் தேவை யில்லை என நினைத்தாகச் சொல்லப்படுகிறது.

சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி
சந்திரசேகர், ஸ்ரீகாந்த் மீனாட்சி

பி.இ முதலீட்டாளர்களின் இந்தக் கருத்தை சந்திரசேகரும், ஸ்ரீகாந்த் மீனாட்சியும் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்கள். ஆன்லைன்மூலம் மட்டுமே பெரிய அளவில் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாது என்பது அவர்களின் எண்ணமாக இருந்திருக்கிறது. இதுபற்றி கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பினரும் விவாதித்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் இரண்டு தரப்பினருமே கறாராக இருந்ததால்தான், கசப்பான நிகழ்வினைச் சந்திக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2018-ம் ஆண்டு பிப்ரவரியிலேயே இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறினார் ஸ்ரீகாந்த் மீனாட்சி. அப்போது இயக்குநர் குழுவினை விட்டு வெளியேறியவர், தற்போது நிறுவனத்தைவிட்டே வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

அவர் மட்டுமல்ல, மியூச்சுவல் ஃபண்ட் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவர் வித்யா பாலா, அவருக்கு உதவியாக இருந்த பாவனா ஆகியோரும் பி.இ முதலீட்டாளர் களின் சிந்தனைப் போக்கு பிடிக்காமல் ஃபண்ட்ஸ் இந்தியாவை விட்டு வெளி யேறியிருக்கிறார்கள். எனினும், இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான சி.ஆர்.சந்திரசேகர் மட்டும் இயக்குநர் குழுவில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறார்.

புதிய நிர்வாகம், புதிய சி.இ.ஓ

ஃபண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்பத் தலைவராக இருந்த கிரிராஜன் முருகன் இப்போது நிறுவனத்தின் சி.இ.ஓ-வாக நியமிக்கப் பட்டிருக்கிறார். சுராஜ் காலே, ஃபண்ட்ஸ் இந்தியாவின் மூத்த ஆலோசகராக நியமிக்கப் பட்டிருக்கிறார்.

நிறுவனத்தைத் தொடங்கியவர்களே நிர்வாகத்தைவிட்டு வெளியேறிய நிலையில், ஃபண்ட்ஸ் இந்தியாவின் செயல்பாடு இனிவரும் காலத்தில் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறி தான். நிறுவனர்கள் அளவுக்கு பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டாளர்கள் ஈடுபாட்டுடன் செயல்படுவார்களா என்கிற சந்தேகத்தையும் பலர் எழுப்புகிறார்கள்.

இதெல்லாம் நிர்வாகத்தை எப்படி நடத்துவது என்பதிலுள்ள பிரச்னைதான். இதனால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இந்த நிறுவனம் மூலம் மேற்கொண்டவர்களுக்குப் பிரச்னை எதுவும் ஏற்படாது எனலாம்!