பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஒரு பவுன் ரூ.1 லட்சம்..? அதிர வைக்கும் அலசல் ரிப்போர்ட்

தங்கம் விலை...
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கம் விலை...

கவர் ஸ்டோரி

தற்போதுதான் தீபாவளி முடிந்திருக்கிறது. அடுத்து, பொங்கல் என விழாக் காலம் தொடர்கிறது. இதனால், தங்கத்தின் விலையில் ஏற்றப்போக்கு காணப்படுகிறது. அலுமினியம், இயற்கை எரிவாயு ஆகிய கமாடிட்டிகளின் விலையானது கொரோனா தாக்கத்துக்குப் பின்பு, ஒன்றன்பின் ஒன்றாக பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பால், அதற்கான தேவை அதிகரிப்பதே இதற்கான முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது விலை அதிகரிக்கும் பட்டியலில் தங்கமும் உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஒரு பவுன் ரூ.1 லட்சம்..? அதிர வைக்கும் அலசல் ரிப்போர்ட்

குறுகிய காலத்தில் 57,000 ரூபாயைத் தொடும்?

கனடாவின் கோல்டு மைனிங் நிறுவனமான ‘கோல்டுகார்ப் இன்க்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களான டேவிட் கரோஃபாலோ மற்றும் ராப் மெக்வென், இனிவரும் நாள்களில் தங்கத்தின் விலைப்போக்கு எப்படி இருக்கும் என்று கணித்துச் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் கணிப்பு நம்மை உண்மையிலேயே ஆச்சர்யத்துக்கு உள்ளாக்குகிறது. அவர்கள் சொல்வது என்ன?

“சர்வதேச அளவில் தற்போது பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இதை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிலையில், இந்தப் பணவீக்க மானது, பாதுகாப்புப் புகலிடமான தங்கத்துக்கு ஆதரவாக அமைய வாய்ப்பிருக்கிறது. அதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

தங்கத்தின் விலையானது தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ள நிலையில், நீண்ட கால நோக்கில் அதன் விலை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புண்டு. தற்போது 1 டிராய் அவுன்ஸ் (31.10 கிராம்) 1,827 டாலர்களாக உள்ள நிலையில், குறுகிய காலத்தில், அதாவது சில மாதங்களில் சுமார் 3,000 டாலர்களாக (ரூ.2,25,450) உயர வாய்ப்பு உள்ளது; இது நீண்டகால நோக்கில் 5,000 டாலர்களாக (ரூ.3,75,750) அதிகரிக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிபுணர்கள் சொல்வதை வைத்துப் பார்த்தால், அடுத்த சில மாதங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.7,250 வரையும், ஒரு சவரன் தங்கம் (8 கிராம்) சுமார் ரூ.57,990 வரையும் (10.11.2021-ல் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விற்பனை விலை ரூ.36,360) உயரும் என்றும் தெரிகிறது.

நீண்டகால அடிப்படையில் சொல்லி யிருக்கும் கணிப்பின்படி பார்த்தால், ஒரு சவரன் தங்கம் விலை சுமார் 97,000 ரூபாயை தொடும் என்றும் தெரிகிறது. ஏறக்குறைய ரூ.1 லட்சத்தை நெருங்கும் என்ற ரீதியிலான இந்தக் கணிப்பானது தங்கம் வாங்க நினைப்பவர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“தற்போதைய நிலையில், தங்கத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் துறையில் தொழிலாளர் பற்றாக்குறை, தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் அவர்களுக்கான செலவு, மூலதனப் பற்றாக்குறை, அதிகரிக்கும் இதர செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் உற்பத்தி செய்வதற்கான செலவு இன்னும் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவி வருகிறது. இதனால் நடுத்தர அளவிலான உற்பத்தி யாளர்களுக்கு மிகவும் பாதிப்பு அடைவார்கள். உற்பத்தி குறையும் நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயரவே செய்யும்’’ என்று டேவிட் கரோஃபாலோ குறிப்பிடுகிறார்.

பாதுகாப்பான மாற்று முதலீடு!

கொரோனா பாதிப்புகளால் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பல்வேறு கமாடிட்டி பொருள்களை எடுத்துச் செல்வதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கப்பல் போக்கு வரத்தில் மிகப் பெரிய காலதாமதம் ஏற்பட்டதுடன், கன்டெய்னர்களின் வாடகைக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது தவிர, மெக்ஸிகோவில் ஏற்பட்ட கடும் புயல் காரணமாகப் பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக மேலும் சில புயல் தாக்குதல்கள் ஏற்படலாம் என்கிற கணிப்புகளும் வெளியாகி யுள்ளன. இதனால் பொருள்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் அதிகரித்து வருகிறது. பொருளா தார பாதிப்புகள் ஒருபக்கமும், பொருளாதாரம் குறித்த நிச்சய மற்றத்தன்மை மறுபக்கமுமாகச் சேர்ந்து தங்கம் ஒரு மாற்று முதலீடாக முதலீட்டாளர்களால் பார்க்கப்பட்டது.

அதே நேரத்தில், கொரோனா வின் கோர தாண்டவத்தால் கடந்த 2020-ம் ஆண்டில் சர்வதேச பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. இதனால் மிகப் பெரிய வீழ்ச்சியைப் பங்குச் சந்தைகள் சந்தித்தன. இந்தியப் பங்குச் சந்தை முக்கியக் குறியீடுகளான சென்செக்ஸ், நிப்ஃடியும் பெருமளவு வீழ்ச்சியைச் சந்தித்தன. இதன் காரணமாகப் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலிருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றான தங்கத்தில் முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்தனர்.

தவிர, ரியல் எஸ்டேட் துறை இன்னும் மந்தநிலையிலேயே இருப்பதால், பலரும் பாதுகாப்பான முதலீடு என்று நினைத்து் தங்கத்தில் முதலீடு செய்து வருவதால், அதற்கான தேவை அதிகரித்து, தங்கம் விலை தற்போதும் ஏற்றத்தின் போக்கிலேயே இருக்கிறது.

ஜெயந்திலால் ஜலானி
ஜெயந்திலால் ஜலானி

தங்கம் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடுமா..?

தங்கம் விலை குறித்த இந்தக் கணிப்பு சரியா என சென்னை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானியிடம் கேட்டோம்.

“கடந்த 2020-ம் ஆண்டு உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை, பிறகு வீழ்ச்சியைச் சந்தித்தாலும் அது பெரிய அளவுக்கான வீழ்ச்சியாக இல்லை. அதே அளவுக்கான வீழ்ச்சியை இனி எப்போதும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. ஏனெனில், இனிவரும் நாள்களில் தங்கத்தின் விலை ஏற்றத்தில்தான் இருக்கும். குறிப்பாக, 2022-ம் ஆண்டின் ஜூன் மாதத்துக்குப் பிறகு, தங்கத்தின் விலை மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொடும். தற்போதைய நிலையில், ஒரு பவுன் தங்கம் (24 கேரட்) தொட்டிருக்கும் உச்சம் என்பது 43,330 ரூபாயாக இருக்கிறது.

உலக நாடுகளின் அமைதியின்மை, போர்ச் சூழல், அரசியல் பதற்றம், இயற்கைச் சீற்றங்களால் பேரழிவு போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் நிச்சயம் பிரதிபலிக்கும். இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில், தங்கம் விலை அதிகரிக்கத்தான் வாய்ப்புள்ளதே தவிர, இறங்காது. இன்னும் சொல்லப் போனால், கொரோனா, மக்களுக்குத் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளின் மீது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. இதனால் தங்கம் விலை இறக்கம் தக்க வைக்கப்படும். உலகத்தின் உண்மையான கரன்சி எனில், அது தங்கம்தான். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்தி தங்கத்துக்கு இருப்பதால், என்றைக்குமே தங்கத்துக்கு மவுசு அதிகம்தான்” என்றார் அவர்.

ஷியாம் சுந்தர்
ஷியாம் சுந்தர்

தங்கத்தின் விலை அதிகரிக்கும்...

தங்கத்தின் விலை குறுகிய காலத்தில் 3,000 டாலர் வரை செல்வதற்கு வாய்ப்பு உள்ளதா அல்லது இது வெறும் கணிப்புதானா என கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தரிடம் கேட்டோம். “இந்தியாவில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, வரவிருக்கும் விழாக்கால பருவம் மற்றும் திருமண விழாக்களால், தங்கத்தின் தேவையானது அதிகரிக்கும். இதனால், தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என்ற நிலையே இருந்து வருகிறது. ஆனால், குறுகிய காலத்தில் 3,000 டாலர் வரை விலை உயருமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் ‘ஜாக்சன் ஹோல்’ என்னும் இடத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளின் பிரதிநிதிகள், நிதித்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சர்வதேசப் பொருளாதார நிலை குறித்து விவாதிப்பது வழக்கம். இந்தக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெற்றது.

இதில் கோவிட் 19 காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்கள், மத்திய வங்கிகள் வரும்காலத்தில் எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள்... குறிப்பாக, பொருளாதாரத்தை ஊக்குவிக்க சந்தையில் புதிதாக நுழைக்கப்பட்ட பணப்புழக்கத்தை மீண்டும் எப்போது திரும்பப் பெறுவது என்ற சூழல், அதிகரிக்கும் பணவீக்கம், வட்டி விகிதங்களில் மாற்றம் எனப் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் முடிவில், வேலைவாய்ப்பின்மை மிகவும் குறைந்து காணப்படுவது மற்றும் பணவீக்கம் 5 சதவிகித அளவுக்கு குறைவாக ஆகிய இரண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமான புள்ளி விவரங்களாக பார்க்கப்பட்டாலும், 2021-ம் ஆண்டு இறுதிக்குள்ளாக அவசரப்பட்டு வட்டி விகிதங்களை உயர்த்தும் எண்ணம் இல்லை. இப்போதைய பணவீக்க அதிகரிப்பானது தற்காலிகமானது எனவும், மீண்டும் 2% என்ற நிலைக்கே திரும்பக்கூடும் எனவும் அமெரிக்க ஃபெடரல் சொன்னது. கோவிட் நோய்த் தொற்று இன்னும் முழுவதும் விலகாத நிலையில், வட்டி விகிதம் சார்ந்த முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க ஃபெடரல் ஒரு விதமான நிச்சயமற்றத் தன்மை யிலேயே இருப்பதையும் இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

அமெரிக்க ஃபெடரல் வட்டியை அதிகரிக்காது எனவும், வட்டி உயர்வைத் தள்ளிப் போட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஒரு வேளை, அடுத்த ஆண்டிலும் வட்டி உயர்வு இருக்காது என்கிற செய்தி வெளியானால், 2022-ல் நிச்சயமாகத் தங்கத்தின் விலை அதிகரிக்கும். அப்போது 2020-ம் ஆண்டைப் போல, தங்கம் தொடர் விலை ஏற்றத்தைச் சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அப்போது தங்கம் விலை புதிய உச்சத்தைத் தொட பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன.

ஒரு பவுன் ரூ.1 லட்சம்..? அதிர வைக்கும் அலசல் ரிப்போர்ட்

கொரோனா மூன்றாவது அலை..?

மேலும், சீனாவில் நிலவிவரும் சூழ்நிலையால் கொரோனா அச்சம் மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. இந்தியாவில் மூன்றாவது அலை தொடர்பான செய்திகளும் வந்தவண்ணம் இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பயம் ஊடுருவியிருக்கிறது. அதனால் மற்ற முதலீட்டின் மீதுள்ள கவனம் தங்கம் மற்றும் தங்கம் சார்ந்த முதலீடுகளின் மீது திசை திரும்புவதாகத் தெரிகிறது. இதுவும் தங்கம் விலை ஏற்றத்துக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

ஒரு பவுன் ரூ.1 லட்சம்..? அதிர வைக்கும் அலசல் ரிப்போர்ட்

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏற்றத்தில் காணப் பட்டது. சமீபத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1767.50 டாலர்களாகக் குறைந்தது. அதன் பிறகு, உயரத் தொடங்கிய தங்கம், தற்போது 1826 டாலர்களாக உயர்ந்து வர்த்தக மாகிறது.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் கண்டது. ஆனால், பெரிய ஏற்றமோ, பெரிய இறக்கமோ காணப்படவில்லை. அதே சமயம் தங்கத்தின் விலையில் ‘சைடு வேவ் மூவ்மென்ட்’ இருப்பதையும் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்க டாலர் இண்டெக்ஸையும் முதலீட்டாளர்கள் கவனிப்பது முக்கியம். எப்போதெல்லாம் அமெரிக்கா இண்டெக்ஸ் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை குறையும். எப்போதெல்லாம் டாலர் இண்டெக்ஸ் குறைகிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். உதாரணத்துக்கு, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டாலர் இண்டெக்ஸ் 103 புள்ளிகளில் வர்த்தகமானது. ஆனால், தற்போது 93 என்கிற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இது 90 புள்ளிகளுக்குக் கீழே குறைந்தால் தங்கத்தின் விலை வேகமாக அதிகரிக்கும்’’ என்றார் தெளிவாக.

ஆக, எதிர்காலத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்தைச் சந்திக்கும் என்பதால், தங்க நகை வாங்குபவர்களுக்கும், தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கும் இது சரியான தருணமே!

அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி!

சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியாவில், நகை உற்பத்திக்காகவே பெரும்பாலான தங்கம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் தங்கத்துக்கான மோகம் எப்போதுமே அதிகமாக இருக்கும். அதோடு மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகவும் தங்கம் இருக்கிறது. இதனால் அதிக தேவைக்கு ஏற்ப அதிக அளவு தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியா சுமார் 800 - 900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில், நாட்டின் தங்க இறக்குமதி மதிப்பு சுமார் 1.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது எனவும், இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நடந்த இறக்குமதி மதிப்பான சுமார் 51,000 கோடி ரூபாயாக இருந்தது எனவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் ஆடம்பர திருமணங்கள் குறைந்துவிட்டதாகவும் அதில் மீதமான பணத்தை மக்கள் தங்கத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், பங்குச் சந்தை முதலீடுகளில் தற்போது நல்ல லாபம் கிடைத்து வருவதால், அந்த லாபத்தை வெளியே எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாவரின் கோல்டு பாண்ட்!

‘இப்போது எனக்கு தங்கம் தேவையில்லை. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, என் மகளின் திருமணத் தேவைக்காகத் தங்கம் தேவைப்படுகிறது. அதற்கான சேமிப்பை இப்போதிருந்தே தொடங்க வேண்டும்’ என நினைப்பவர்கள் அரசின் ‘Sovereign Gold Bond’ திட்டத்தைத் தேர்வு செய்யலாம். அக்டோபர் 25-ல் தொடங்கிய சாவரின் கோல்டு பாண்ட் திட்டத்தில் ஏழாவது சீரிஸ் அக்டோபர் 29-ம் தேதியுடன் முடிந்திருக்கிறது. இதைத் தவறவிட்டவர்கள், எட்டாவது சீரிஸ் நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரையிலும், 9-வது சீரிஸ் 2022-ம் ஆண்டின் ஜனவரி மாதம் 10 முதல் 14-ம் தேதி வரையிலும், 10-வது சீரிஸ் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4-ம் தேதி வரையிலும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படுகிறது. அதில் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் தங்கத்தின் விலை ஏற்றத்துடன், ஆண்டுக்குக் கூடுதலாக 2.5% வட்டி வருமானம் கிடைக்கும். இந்தப் பத்திரத்தின் முதிர்வுக் காலம் எட்டு ஆண்டுகள். அதன் பிறகு, பணத்தை எடுத்தால் நீண்டகால மூலதன ஆதாயத்துக்கு வரி கிடையாது. எட்டு ஆண்டுகள் வரை காத்திருக்க முடியாதவர்கள், சில நிபந்தனைகளுடன் ஐந்து வருடங்கள் முடிவடைந்த பிறகு வெளியேறலாம். ஆனால், அதற்கு மூலதன ஆதாய வரி உண்டு. ஒரு தனிநபர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக நான்கு கிலோ வரை முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ வரை முதலீடு செய்யலாம்.கணவன்-மனைவி இணைந்தும், மைனர் பேரிலும் முதலீடுகளைச் செய்யலாம். குறிப்பிட்ட தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளின் மூலம் முதலீடு செய்யலாம்.