
மியூச்சுவல் ஃபண்ட்
இன்றைக்கு மட்டுமல்லாமல் என்றைக்கும் அனைவர் முன்னும் இருக்கும் முக்கியமான கேள்வி, சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதே. காலங்காலமாக இருந்துவரும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், தபால் அலுவலக சேமிப்பு, தங்கம், நிலம், பங்குச் சந்தை ஆகியவற்றுடன் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் பிரபல மாகி வருகிறது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.

சந்தையில் இன்றைய தேதியில் சுமார் நாற்பதுக்கும் மேலான சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (Asset Management Companies) செயல்பட்டு வருகின்றன. இவை நிர்வகித்து வரும் மியூச்சுவல் ஃபண்டுகளின் மதிப்பு சுமார் ரூ.40.5 லட்சம் கோடி என அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இண்டியா (AMFI) அறிக்கை தெரிவிக்கிறது. நம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது மிகவும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்டு வருவதுடன், போட்டிகள் நிறைந்ததாக இருப்பதால், வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது.
தற்போது நம் நாட்டில் செயல்பட்டுவரும் 40-க்கும் மேற்பட்ட சொத்து மேலாண்மை நிறுவனங்களில் கோலியாத்துகளாக அறியப்படும் முதல் 10 பெரிய நிறுவனங்கள் மட்டும் ரூ.31.51 லட்சம் கோடி அதாவது, மொத்த மியூச்சுவல் ஃபண்டுகளில் 80 சதவிகிதத்தை நிர்வகித்து வருகின்றன. 11 பெரிய ஃபண்ட் நிறுவனங்கள் தலா ரூ.1 லட்சம் கோடிக்கு மேலான நிதியை நிர்வகித்து வருகிறது. முதல் மூன்று பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மட்டும் தலா ரூ.4 லட்சம் கோடிக்கும் மேலான மதிப்புள்ள மியூச்சுவல் ஃபண்டு களை நிர்வகித்து வருகின்றன. சந்தையில் மிகவும் அனுபவம் வாய்ந்த, நிதி நிலையில் நல்ல ஸ்திரத்தன்மையுடன் இந்த நிறுவனங்கள் இயங்கி வருவது ஆரோக்கியமான அம்சமாகும்.
சந்தையில் ஏற்கெனவே பல கோலியாத்துகள் இயங்கிவரும் நிலையில், டேவிட்டுகளாக சில சிறிய நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸைத் தொடங்க உரிய அமைப்பிடம் விண்ணப்பித்து உரிமத்துக்காகக் காத்திருக்கிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுக்குப் புதியவர்களாக இருந்தாலும், சந்தையில் நிதி சம்பந்தப்பட்ட புரோக்கிங், பேமென்ட், இ-காமர்ஸ் போன்ற துறைகளில் சிறப்பாக இயங்கிவரும் நிறுவனங்கள் ஆகும்.

செபி அளிக்கும் தரவுகளின்படி, ஜெரோதா புரோக்கிங், ஃபோன்பே, ஹீலியோஸ் கேப்பிடல் மேனேஜ்மென்ட், எம்.கே குளோபல் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஏஞ்சல் ஒன், அல்கெமி, கேப்பிடல் மைண்ட், பஜாஜ் ஃபின்செர்வ் ஆகிய நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளை நிர்வகிப்பதற்கென தனியாக நிறுவனம் ஆரம்பிக்க விண்ணப்பித்திருக்கின்றன. சமீபத்தில் நவி மியூச்சுவல் ஃபண்ட், சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட், என் ஜே மியூச்சுவல் ஃபண்ட், வொயிட் ஓக் கேப்பிடல் ஆகியவை சில மியூச்சுவல் ஃபண்டுகளை அறிமுகப்படுத்தி யிருக்கின்றன.
புதிதாக இதில் நுழையும் நிறுவனங்கள் புதுமை யான ஃபண்டுகளை அறிமுகப்படுத்தி தங்களை வித்தியாசமாகக் காட்டிக்கொண்டால்தான் சந்தையில் வரவேற்பு இருக்கும் என இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தத் துறை நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டு தரப்படுத்தப்பட்ட பல அம்சங்களுடன் இயங்கி வருகின்றன.
இப்போதைக்கு எந்த மாதிரியான ஃபண்டுகள் சந்தையில் இருக்கின்றன என்பது முக்கியமான தாகும். `முதலீடு செய்பவர்களைக் கவர்வதற்கு நிறுவனப் பெயர் அல்லது அதன் பிராண்ட் மட்டும் முக்கியமாக இருந்த காலம் மலையேறிவிட்டது. `நல்ல பிராண்ட்’ என்பதிலிருந்து `நல்ல ஃபண்ட் / திட்டம்’ என்கிற நிலைக்கு சந்தையும் முதலீடு செய்பவர்களும் நகர்ந்திருக் கிறார்கள்` என்று மிரே அஸெட் இன்வெஸ்ட்மென்ட்டின் தலைமை அதிகாரி கூறுகிறார். இந்த நிறுவனமானது க்ளவுட் கம்ப்யூட்டிங், சுத்தமான ஆற்றல் (clean energy), செயற்கை நுண் ணறிவு, மின்சார வாகனங்கள் போன்ற துறைகள் சார்ந்த `தீமேட்டிக்’ ஃபண்டுகளை வெளியிட அனுமதி கேட்டு காத்திருக்கிறது.
ஃப்ளிப்கார்ட்டின் நிறுவனர் களில் ஒருவராக இருந்த சச்சின் பன்சால் அவருடைய நவி மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக மெட்டாவெர்ஸ், ஐ.ஓ.டி (IoT), ப்ளாக்செயின் போன்ற துறைகள் சார்ந்த ஃபண்டுகளை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.
ஆக, இந்தத் துறையில் சமீபத்தில் நுழைந்திருக்கும், நுழையக் காத்திருக்கும் நிறுவனங் கள் மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றி `மாத்தி யோசி’த்து தனக் கான இடத்தைப் பெற போராடத் தொடங்கியுள்ளன.

‘‘ஃபண்ட் நிறுவனங்கள் தரும் ஃபண்ட் திட்டங்கள் வித்தியாச மாக இருந்தால் மட்டும் போதாது; அது நன்கு செயல்பட்டு முதலீடு செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத் தைப் பெற்றுத் தருவதும் முக்கியம்’’ என்கிறார் வைஸ் மார்க்கெட்ஸ் அனலிடிக்ஸின் ஷெனாய்.
மிகவும் போட்டிமிக்க மியூச்சுவல் ஃபண்ட் துறையில் பல பெரிய நிறுவனங்கள்கூட தோல்வி அடைந்து வெளியேறி இருக்கின்றன அல்லது வேறு நிறுவனத்துடன் இணைந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. 2002-ம் ஆண்டு டாரஸ் மியூச்சுவல் ஃபண்டானது பேங்க் ஆஃப் இண்டியா மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தன்னகப்படுத்திக் கொண்டது தொடங்கி, சமீபத்தில் எல் & டி மியூச்சுவல் ஃபண்டை ஹெச்.எஸ்.பி.சி நிறுவனம் வாங்கி யது வரை பல இணைப்புகளும் கையகப்படுத்தல்களும் தொடர்ந்து நடந்தபடி இருக்கிறது.
இன்றைக்கு நடுத்தர வர்க்க மக்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் பிரபலமாகி வருகிறது, அதுவும் குறிப்பாக பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு, எஸ்.ஐ.பி மூலம் மாதம்தோறும் ரூ.13,000 கோடி முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இன்றைக்கு சுமார் 6.05 கோடி பேர் எஸ்.ஐ.பி கணக்கு தொடங்கி, தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார்கள். இன்றைக்கு எஸ்.ஐ.பி மூலம் மாதம்தோறும் ரூ.100, ரூ.250, ரூ.500 என சிறிய அளவில்கூட முதலீடு செய்ய முடியும். 2017-18-ம் ஆண்டு எஸ்.ஐ.பி மூலம் மக்கள் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.67,190 கோடியாகும். ஆனால், 2022-23-ம் நிதியாண்டில் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் ரூ.1,00,581 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. சந்தை விரிவாகி வளர்ச்சி அடைந்து வருவதால், புது நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
ஆனால், இந்தத் துறையில் நுழையவிருக்கும் புது நிறுவனங்கள் காலத்தின் போக்கை (பருவநிலை மாற்றம், தொழில்நுட்பத் துறை வளர்ச்சி, எரிசக்தி சேமிப்பு போன்றவை) மனதில்கொண்டு அதற்கேற்றாற்போல வித்தியாசமான, நல்ல ஆதாயம் கொடுக்கக்கூடிய ஃபண்டு களை அறிமுகப்படுத்தினால், ஏற்கெனவே இருந்துவரும் பெருநிறுவனங்களுக்கு நல்லதொரு சவாலாக இருப்பதுடன், தங்களைச் சந்தையில் நிலைநிறுத்திக்கொள்ளவும் அது உதவும்.
முதலீட்டாளர்கள் எந்தத் திட்டத்தில் முதலீடு செய் கிறோம் என்பதை நன்கு ஆராய்ந்து முதலீடு செய்வது அவசியம். இதற்கு ஒரு நிதி ஆலோசகரின் ஆலோசனையுடன் முதலீட்டை மேற்கொள்வது எதிர்காலத் தேவைகளை சரியாக நிறைவேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.
மாதம் 5 டாலர் முதலீடு... எஸ்.ஐ.பி மூலம் ரூ.50,000 கோடி முதலீடு!
ஆங்கில நாளிதழான பிசினஸ் ஸ்டாண்ட்டர்டு சில வாரங்களுக்குமுன் மும்பையில் நிதிசார் முதலீடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ‘செபி’யின் முழுநேர உறுப்பினர் அஷ்வினி பாட்டியா ஒரு சுவாரஸ்யமான கணிப்பை வெளியிட்டார்.
‘‘மியூச்சுவல் ஃபண்டில் தற்போது இந்தியர் ஒருவர் செய்யும் முதலீடு சுமார் 1.2 டாலராக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இது 5 டாலர்களாக உயர வாய்ப்புண்டு. அப்படி ஆகும்பட்சத்தில் தற்போது மாதம்தோறும் எஸ்.ஐ.பி மூலம் முதலீடாகும் தொகை ரூ.13,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக உயரும்.
அது மட்டுமல்ல, இன்றைக்கு எல்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் நிர்வகிக்கும் சொத்து மதிப்புக்கும், நம் நாட்டின் மொத்த பொருள் உற்பத்திக்குமான விகிதம் (AUM - GDP Ratio) 16 ஆக இருக்கிறது. இதுவே உலக சராசரி 60 ஆக இருக்கிறது. 60 என்ற இலக்கை நாம் அடைய வேண்டுமெனில், இன்னும் நிறைய வளர வாய்ப்புண்டு’’ என்று பேசியிருக்கிறார்!
- ஆகாஷ்