பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்குப் பிறகு செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

சம்பளதாரர்கள் ஒரு வழியாக 2021 டிசம்பர் 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் (Filing Tax Returns) செய்திருப்பார்கள். பலர் அத்துடன் தங்கள் கடமை முடிந்துவிட்டது என நினைத்திருப் பார்கள். ஆனால், அதற்குப் பிறகும் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. முக்கியமாக, ஐந்து அம்சங்களைக் கவனிக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துபவர்கள் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துபவர்கள் சங்கம்

1. வரிக் கணக்குத் தாக்கலை உறுதிப்படுத்துங்கள்..!

ஒருவரின் வருமான வரிக் கணக்கு தாக்கல் எப்போது வரித்துறையால் உறுதிப்படுத்தப்படுகிறது எனில், வரிக் கணக்கைத் தாக்கல் செய்தது வரிதாரர்தான் என்பதை நிரூபிக்கும் போதுதான். இதை வரிக் கணக்கு தாக்கல் செய்தவுடன் இ–வெரிஃபிகேஷன் (E-Verification) என்கிற முறையில் செய்யலாம். அதாவது உங்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப் பட்டிருக்கும் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வருவதை வருமானவரித் துறையின் புதிய இணையதளத்தில் உள்ளீடு செய்வதன் மூலம் உறுதிப்படுத்தலாம். அடுத்து உங்களின் வங்கிக் கணக்கு நெட் பேங்கிங் வழியாக வருமான வரித் துறையின் இணைய தளத்துக்குச் சென்று உறுதிப்படுத்தலாம். வங்கிக் கணக்கு, டீமேட் கணக்கு மூலம்கூட ஒருவர் வரிக் கணக்குத் தாக்கல் செய்ததை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மேற்கண்ட முறையில் செய்யவில்லை எனில், பெங்களூரில் இருக்கும் வருமானவரித் துறையின் பரிசீலனை மையத்துக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்தற்கான படிவத்தை (Acknowledgement form - Form V) பிரின்ட் அவுட் எடுத்து அனுப்பலாம்.

இ-வெரிஃபிகேஷன் அல்லது பெங்களூருக்கு அனுப்புவதை வரிக் கணக்குத் தாக்கல் செய்த 120 நாள்களுக்குள் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில், நீங்கள் வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகிவிடும்; வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரலாம்; அபராதம் கூட விதிக்கப்படலாம்.

படிவம் V-ஐ சாதாரண தபால் அல்லது விரைவுத் தபால் (Speed Post) மூலம் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் அனுப்பக் கூடாது. இந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டு அனுப்புவது முக்கியம். இல்லை எனில், வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாகி விடும்.

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்குப் பிறகு செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

2.வரிக் கணக்குத் தாக்கலில் ஏதாவது தவறு செய்திருந்தால்..?

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் ஏதாவது வருமான விடுபாடு அல்லது ஏதாவது வரிச் சலுகையைக் கோராமல் விட்டிருந்தால், வரிக் கணக்கைத் திருத்தம் (Revised Return) செய்ய முடியும். வருமான வரித் துறையால் உங்கள் வரிக் கணக்கு படிவம் பரீசிலணைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் மட்டுமே மாற்றி வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.

இதற்கென தனியே படிவம் எதுவும் கிடையாது. வருமான வரித் துறையின் இ-ஃபைலிங் இணையதளத்தில் (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/login) ‘Revised Return’ என்கிற ஆப்ஷனைத் (option) தேர்வு செய்து, தேவையான மாற்றங் களைச் செய்ய முடியும். அப்போது ஒரிஜினலாக முதலில் என்றைக்கு வரிக் கணக்கு தாக்கல் செய்தீர்கள், அதன் ஒப்புகை (Acknowledgement) எண் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டியிருக்கும். நிதி ஆண்டு 2020-21 அதாவது, மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான மாற்றப் பட்ட வரிக் கணக்கு தாக்கலை 2022 மார்ச் 31-ம் தேதி வரைக்கும் தாக்கல் செய்யலாம். இந்தக் காலம் வரைக்கும் எத்தனை முறை வேண்டுமானாலும் வரிக் கணக்கை மாற்றித் தாக்கல் செய்ய முடியும்.

பழைய வரிக் கணக்குகள் எல்லாம் அழிக்கப்பட்டு, கடைசியாகச் செய்திருக்கும் வரிக் கணக்குத் தாக்கல்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதே நேரத்தில், பல தடவை விவரங்களை மாற்றி மாற்றித் தாக்கல் செய்தால் அல்லது மிகப் பெரிய மாற்றத்தைச் செய்திருந்தால், வரித் துறையின் கண்காணிப்பு (Scrutiny) அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

வருமானவரித் துறை உங்களின் வரிக் கணக்குத் தாக்கலை மதிப்பாய்வு செய்து, அதை ஏற்றுக்கொண்டு உங்களுக்கு பிரிவு 143(1)-ன்கீழ் தகவல் அனுப்பிவிட்டது எனில், உங்களால் வரிக் கணக்கை மாற்றித் தாக்கல் செய்ய முடியாது.

2022 மார்ச் 31–ம் தேதி வரைக்கும் தாமதமாக வரிக் கணக்குத் தாக்கல் (Belated returns) செய்ய முடியும். இதற்கு அபராதம் கட்ட வேண்டும். இதற்கான கெடு தேதியும் வரிக் கணக்கை மாற்றிச் செய்வதற்கான கெடு தேதியும் மார்ச் 31-தான்.

மேலும், வரிக் கணக்கை மாற்றி தாக்கல் செய்யும்போது அதை உறுதிப்படுத்த இ-வெரி ஃபிகேஷன் மேற் கொள்ள வேண்டும் அல்லது பெங்களூருவுக்குப் படிவம் V -ஐ பிரின்ட் எடுத்து அனுப்ப வேண்டும்.

மத்திய பட்ஜெட் 2022-23-ல் ஏதாவது வருமானத்தைக் குறிப்பிட மறந்திருந்தால், அதைக் குறிப்பிட்டு வரி கட்ட மற்றும் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. (பார்க்க, பெட்டிச் செய்தி)

3. ரீஃபண்ட் கண்காணிப்பு

நீங்கள் அதிகமாக வருமான வரி கட்டியிருக்கும்பட்சத்தில் வரிக் கணக்குத் தாக்கலில் ரீஃபண்ட் கோரிக்கை வைத்திருப்பீர்கள். இப்போதெல்லாம் ரீஃபண்ட் விரைவில் வந்து விடுகிறது.

உங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்ட் எந்த நிலையில் இருக்கிறது என்பதை வருமான வரித் துறையின் புதிய இணைய தளத்தில் தெரிந்துகொள்ள முடியும். அல்லது என்.எஸ்.டி.எல் இணையதளத்தில் (NSDL portal) https://tin.tin.nsdl.com/oltas/servlet/RefundStatusTrack) என்கிற இணைப்பில் பான் எண்ணை சமர்ப்பிப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், உங்களுக்கு ரீஃபண்ட் வரப்போகிற விவரத்தை வருமான வரித்துறை உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கும். இந்தத் தகவல் வந்து 15 நாள்களுக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும்.

உங்களுக்கு வர வேண்டிய ரீஃபண்ட் தாமதமாகிறது எனில், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் தந்திருக்கும் புள்ளி விவரங்கள் போதுமானதாக இருக்காது அல்லது தவறாக இருக்கலாம். வங்கிக் கணக்கு எண் அல்லது வங்கி ஐ.எஃப்.எஸ்.சி கோட் தவறாகத் தரப்பட்டிருக் கலாம். உங்களுக்கு ரீஃபண்ட் வர வேண்டும். ஆனால், அது நீண்ட நாளாக வரவில்லை எனில், வங்கி குறித்த விவரத்தில் தவறு அல்லது உங்களுக்கு உண்மை யிலேயே ரீஃபண்ட் வர வேண்டியது இல்லாமல் இருக்கலாம். வங்கிக் கணக்கு விவரங்களில் தவறு எனில், வருமான வரி புதிய இணையதளத்துக்குச் சென்று சரி செய்துகொள்ள முடியும்.

வருமான வரிக் கணக்குத் தாக்கலுக்குப் பிறகு செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்..!

4. பழைய வரி முறையா, புதிய வரி முறையா?

ஒருவர் பழைய வரி முறையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அவருக்கு இப்போதுதான் புதிய வரி முறை (New Tax Regime) பற்றித் தெரிய வந்திருக்கிறது. அவர் வரிச் சலுகை அளிக்கும் செலவுகள், முதலீடுகள் எதையும் 2020-21-ம் நிதி ஆண்டில் செய்யவில்லை. இந்த நிலையில் வரிக் கணக்குத் தாக்கலை புதிய வரி முறையில் வரிக் கணக்கை மாற்றித் தாக்கல் செய்யும்போது குறைவான வரியைக் கட்ட வேண்டிவரும்.

இது போன்ற நிலையில், வரிக் கணக்கை மாற்றி தாக்கல் செய்து, புதிய வரிக் கணக்கைத் தேர்வு செய்ய முடியும். இப்படிச் செய்யும்போது கூடுதலாகக் கட்டிய வரி (பழைய வரி முறையில் கட்டிய வரி) ரீஃபண்டாக வந்து சேரும்.

5. வரி பாக்கி அல்லது கூடுதல் வரிக் கட்ட சொல்லி நோட்டீஸ்

வருமான வரியைக் கணக்கிடுவதில் தவறு அல்லது வரியைக் குறைவாகக் கட்டியிருந்தால் வரியைக் கட்ட சொல்லி வருமானவரித் துறையிலிருந்து நோட்டீஸ் வரக்கூடும். வரித் துறை கூடுதலாக வரிக் கட்டச் சொல்வது சரியாக இருக்கும்பட்சத்தில் 15 தினங்களுக்குள் பாக்கி உள்ள வரியைக் கட்ட வேண்டும். மேலும் அந்த மெயிலுக்கு பதில் அளிக்க வேண்டும்.

வரிக் கணக்குத் தாக்கல் செய்தவர்கள் இந்த ஐந்து விஷயத்தையும் கவனித்துச் செயல்பட்டால், பிரச்னை இல்லாமல் இருக்கலாம்!

கணக்கில் காட்ட மறந்த வருமானத்தைத் தெரிவிக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம்..!

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் வருமானம் தொடர்பான சில தவறுகளைக் குறிப்பிட மறந்துவிட்டதை வரிதாரர் பின்னர் உணரலாம். அந்தத் தவறுகளைச் சரிசெய்து, கூடுதல் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என மத்திய பட்ஜெட் 2022-23-ல் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘‘புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை (Updated Income) தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் (Assessment year) முடிவிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம். தற்போது வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்வோர், வருமானத்தைத் தவறவிட்டதாக வருமான வரித் துறை கண்டறிந்தால், அது ஒரு நீண்ட செயல்முறையாக நீளுகிறது. ஆனால், புதிய திட்டத்தின்கீழ் வருமான வரி செலுத்துவோர் மீது நம்பிக்கை வைக்கப்படும். இது கணக்குத் தாக்கல் செய்வோர், தாங்கள் முதலில் தவறவிட்ட வருமானத்தை அறிவிக்க உதவும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தார்.

இப்படி விடுபட்ட வருமானத்தைத் தெரிவித்து புதுப்பிக்கப்பட்ட வரிக் கணக்குத் தாக்கலை செய்யும்போது, குறிப்பிட்ட மதிப்பிட்டு ஆண்டு முடிவிலிருந்து ஓராண்டுக்குள் இப்படி வரிக் கணக்கை மாற்றி செய்யும்போது கூடுதலாக 25% வரியைக் கட்ட வேண்டும். இதுவே ஒராண்டுக்கு மேல் இரண்டு ஆண்டுக்குள் எனில், கூடுதல் வரி 50% கட்ட வேண்டும். இந்த முறையில் ஒருவர் வருமானத்தைக் கணக்கில் காட்டாதற்கு அபராதம் விதிக்கப்படுவது மற்றும் தண்டனையிலிருந்து தப்புகிறார். ஆனால், வழக்கத்தைவிட கூடுதல் வரிக் கட்டுகிறார். எனவே, ஒருவர் கெடுதேதிக்குள் சரியான வருமானத்தைக் காட்டி வரி கட்டுவதுதான் நல்லது!