குறைந்த ரிஸ்க்... கூடுதல் வருமானம்... டென்ஷன் இல்லாத முதலீட்டுக்கு உதவும் ஃபண்ட்..!

மியூச்சுவல் ஃபண்ட்
பங்குச் சந்தை இறங்கும்போது நமக்கு அதிகம் நஷ்டம் வரக்கூடாது. அதே சமயம், மேலே செல்லும்போது, பெரிய அளவில் லாபம் கிடைக்க வேண்டும் என நினைக்கும் முதலீட்டாளர்கள் பலர்.

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் பொது வாக, சந்தை இறங்கினால் ஒருவரின் முதலீட்டுக் கலவையின் (Portfolio) மதிப்பு குறைந்துவிடும். இதுவே பங்குச் சந்தை ஏறினால் போர்ட் ஃபோலியோ மதிப்பு ஏறியிருக்கும். இந்த அதிக ஏற்ற இறக்கத்தைத் தவிர்த்து முதலீட்டில் லாபம் ஈட்ட முடியுமா எனில், முடியும்.
2008-ம் ஆண்டில் உலக அளவில் பங்குச் சந்தை பெரிய ஒரு வீழ்ச்சியைச் சந்தித்தது. அப்போது இந்தியப் பங்குச் சந்தை கிட்டத்தட்ட 60% வீழ்ச்சியடைந்தது. பங்குச் சந்தை அல்லது ஈக்விட்டி ஃபண்டில் ரூ.10 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு அப்போது வெறும் ரூ.4 லட்சமாகத்தான் இருந்திருக்கும். அதீத பயத்தில் பங்கு முதலீடு மற்றும் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளை விற்று விட்டு வெளியேறியவர்கள் எண்ணிக்கை தான் அதிகம். அப்படியே அந்த முதலீட்டை ஒன்றும் செய்யாமல் இருந்திருந்தால், அது இன்றைக்கு 155% வருமானம் கொடுத்திருக்கும். அதாவது, 60% வீழ்ச்சியிலிருந்து மீண்டு இந்த அளவுக்கு அதிக ஆதாயம் கொடுத்திருக்கும்.

முதலீட்டுக் காலம் மிக முக்கியம்...
பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டைப் பொறுத்தவரை, அது கொடுக்கும் வருமானம் மட்டும் முக்கியமல்ல; முதலீட்டுக் காலமும் மிக முக்கியமாகும். நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகள் எப்போதும் ஐந்தாண்டு களுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கொடுத்து வருவதை வரலாறு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. ஒருவரின் முதலீட்டுக் கலவை அல்லது முதலீடு செய்திருக்கும் நிறுவனப் பங்கு அல்லது ஈக்விட்டி ஃபண்டின் மதிப்பு எந்தளவுக்கு குறைவான ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர் சந்தோஷமாக இருப்பார். அதாவது, அவரின் முதலீட்டுப் பயணம் பயமில்லாததாக, டென்ஷன் இல்லாததாக சுகமாக இருக்கும்.
டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட்...
ஒரு நல்ல நிறுவனப் பங்கில் முதலீடு செய்துவிட்டோம் அல்லது சிறந்த டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றில் (ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் அல்லது மல்ட்டிகேப் ஃபண்ட்) முதலீடு செய்துவிட்டோம். இந்த முதலீடு ஐந்தாண்டு கழித்து, பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தைத் தாண்டி பணவீக்க விகிதத்தைவிட நல்ல வருமானம் தரும் என்பது நமக்கு தெரியும்.
அதே நேரத்தில், அந்த ஐந்தாண்டு முதலீட்டுக் காலத்தில் முதலீட்டின் மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்தில் இல்லாமல் இருந்தால், நமது முதலீட்டுப் பயணம் அமைதியானதாக, மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். அப்படி ஏதாவது பங்குச் சந்தை சார்ந்த திட்டம் இருக்கிறதா எனில், அதுதான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றான பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் (Balance Advantage Fund). இதை டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் (Dynamic Asset Allocation Fund) என்றுகூட சொல்லலாம்.
2020 மார்ச் மற்றும் ஏப்ரலில் உலக அளவிலான பங்குச் சந்தைகள் அதிக இறக்கத்தைச் சந்தித்தன. இதில், இந்தியப் பங்குச் சந்தையும் தப்பவில்லை. நம் பங்குச் சந்தை கிட்டத்தட்ட 40% வீழ்ச்சியைச் சந்தித்தது. ஒருவர் இந்த பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அந்த ஃபண்டின் என்.ஏ.வி- யும் கீழே வந்திருக்கும். அப்போது பயத்தில் நாம் யாரும் புதிதாக முதலீடு செய்திருக்க மாட்டோம். மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் இந்தக் கால கட்டத்தில் சந்தை இறக்கத்திலிருந்து ஏறி மேலே வந்து விட்டது. அப்போதுகூட நாம் முதலீடு செய்திருக்க மாட் டோம். அதன் பிறகு, சந்தை நன்றாக ஏறி புதிய உச்சத்துக்கு வந்த பிறகுதான் நாம் முதலீட்டை ஆரம்பித்தோம்.
ஆனால், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் ஆட்டோமேட்டிக் டைனமிக் அஸெட் அலொகேஷன் பின்பற்றப்படுவதால், பங்குச் சந்தையின் மதிப்பீட்டை வைத்து பிரைஸ் டு புக் வேல்யூ (P/B), பிரைஸ் டு ஈர்னிங்க்ஸ் (P/E) ஆகியவற்றின் அடிப்படை யில் பங்கு முதலீடு கூட்டி குறைக்கப்படும்; குறைத்து கூட்டப்படும். இந்த ஃபண்டின் மேனேஜர் பங்குச் சந்தையின் மதிப்பீடு மற்றும் பங்கின் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஃபண்டில் பங்குகளின் முதலீட்டு அளவை மாற்றி அமைப்பார்.
பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் காலத்தில் பங்கு முதலீடு குறைக்கப்பட்டு, கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு அதிகரிக்கப்படும். பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் போது, பங்கு முதலீடு அதிகரிக்கப்பட்டு, கடன் பத்திர முதலீடு குறைக்கப் படும். ஒரு குறிப்பிட்டக் கால கட்டத்தில் பங்கு முதலீடு 30 சதவிகிதத்திலிருந்து 80% வரைக்கும் அதிகரிக்கப்பட லாம். அதேபோல், 80 சதவிகிதத் திலிருந்து 30 சதவிகிதமாகவும் குறைக்கப்படலாம்.
இன்றைக்கு (ஜூலை 19, 2022) நிஃப்டி பி/இ விகிதம் 19.82-ஆக இருக்கிறது. நிஃப்டி பி/வி 3.92-ஆக உள்ளது. இவை நீண்ட கால சராசரியைவிட சிறிது அதிகமாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியப் பங்குச் சந்தை அதிக மதிப்பிலும் இல்லை; கவர்ச்சிகரமாகவும் இல்லை. இந்த நேரத்தில், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் பங்கு முதலீடு சுமார் 50 - 55 சதவிகிதமாக இருக்கும்.
அதே நேரத்தில், வரும் காலத்தில் சந்தை ஏதாவது ஒரு காலத்தில் இன்னும் அதிகமாக இறங்கினால் இந்த ஃபண்டில் பங்கு முதலீட்டு அளவு 70%, 80% என அதிகரிக்கப்படும். இந்த வேலையை அந்த ஃபண்டின் மேனேஜரே செய்துவிடுவார். முதலீட்டாளர்கள் எதுவும் செய்யத் தேவையில்லை; அவர்கள் தொடர்ந்து முதலீடு செய்துவந்தால் போதும். அல்லது, ஏற்கெனவே செய் திருக்கும் முதலீட்டை எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும்.
இந்த ஃபண்டில் எந்த காலகட்டத்திலும் 100% பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மாட்டார்கள். எனவே, ரிஸ்க் என்பது மிகவும் அதிகரிக்காது. பங்குச் சந்தையின் மதிப்பீட்டைப் பின்பற்றித்தான் பங்கு முதலீட்டின் அளவு இந்த ஃபண்டில் முடிவு செய்யப்படுகிறது.

வருமானம் எவ்வளவு?
இந்த ஃபண்டில் இன்றைக்கு பங்குச் சந்தையில் சுமார் 50 - 55% முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. பங்குச் சந்தை உச்சத்திலிருந்த 2021 செப்டம்பரில் பங்கு முதலீடு 30 - 35 சதவிகிதமாக இருந்தது. அதாவது, சந்தை உச்சத்திலிருக்கும் போது பங்குகளை விற்று, அந்தத் தொகையைக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துவிடுவார்கள். இதனால், லாபம் பாதுகாக்கப்படுவதோடு, ஃபண்டின் லாபமும் அதிகரிக்கிறது.
இப்படிச் செய்யும்போது ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட 3 - 4% கூடுதல் வருமானம் இந்த ஃபண்டின் மூலம் பெற முடியும். நீண்ட காலத்தில் சராசரியாக சுமார் 10% வருமானம் கிடைக்கக்கூடும். ஈக்விட்டி ஃபண்ட் கொடுக்கும் அதிக வருமானத்தை இந்த ஃபண்ட் பிரிவு கொடுக்காது. ஆனால், முதலீட்டுப் பயணம் இனிமையாக இருப்பதுடன், பணவீக்க விகிதத்தைவிட சுமார் 2 - 3% அதிக வருமானம் கிடைக்கக்கூடும். பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகள் மூன்றாண்டு காலத்தில் 11% முதல் 15%, ஐந்தாண்டு காலத்தில் 9% முதல் 11.5% வரைக்கும் வருமானம் கொடுத்திருக்கின்றன.
இந்த ஃபண்ட் பிரிவு நன்றாக இருக்கிறதே எனக் குறுகிய காலத் தேவைக்காக ஓராண்டு, இரண்டாண்டு இலக்குடன் இந்த ஃபண்டில் முதலீடு செய்யக் கூடாது. குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் என முதலீட்டுக் காலத்தை நிர்ணயம் செய்து கொண்டுதான் இந்த ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இந்த பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யும்பட்சத்தில் சந்தை இறக்கம் முதலீட்டுக்கு வாய்ப்பாகவும், சந்தை ஏற்றம் லாபத்தை வெளியே எடுக்கும் வாய்ப்பாகவும் அமையும்!
பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட்... செபி வரையறை!
பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வது, டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் என செபி அமைப்பு வரையறை செய்துள்ளது.
இது ஒரு ஓப்பன் எண்டட் ஃபண்ட். அதாவது, இந்த ஃபண்டில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்று தேவைக்குப் பணமாக்கிக் கொள்ளலாம்.