பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

35,000 கோடி... கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணம்... வங்கிகள் செய்ய வேண்டியது இதுதான்!

வங்கிகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
வங்கிகள்...

வங்கிகளில் 10 கோடி கணக்குகளில் சுமார் ரூ.35,000 கோடி பெறுமான பணம் கேட்பாராற்றுக் கிடக்கிறது...

ஏப்ரல் 6-ம் தேதி மானிட்டரி பாலிசி கமிட்டி உரையுடன் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டார். வங்கிகளில் கோரப்படாமல் குவிந்திருக்கும் தங்கள் பணத்தை (Unclaimed Deposits) முதலீட்டாளர்கள் எளிதில் அடையாளம் கண்டு, கோரும் வகையில் அத்தனை வங்கிகளுக்கும் பொதுவாக ஒரு இணையதளத்தை (Web portal) உருவாக்க ரிசர்வ் வங்கி தீர்மானித்துள்ளது என்ற தகவல் தான் அது. ஆனால், வங்கி முதலீட்டாளர் களுக்கு இந்த இணையதளம் எந்த அளவுக்கு உதவும் என்ற கேள்வியை வங்கி முன்னாள் உயர் அதிகாரிகளே எழுப்பியுள்ளார்கள்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

வங்கிகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், டிவிடெண்ட் வழங்கும் கம்பெனிகள் போன்றவற்றில் கோரப் படாமல் மக்கள் பணம் பல்லாயிரம் கோடி குவிந்து கிடக்கிறது. அதிலும் முக்கியமாக வங்கிகளில் மட்டும் சுமார் 10 கோடி கணக்கு களில் ஏறக்குறைய ரூ.35,000 கோடி பெறுமான பணம் கேட்பாரற்றுக் கிடக்கிறது.

35,000 கோடி... கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணம்... வங்கிகள் செய்ய வேண்டியது இதுதான்!

கோரப்படாத பணம் (Unclaimed Deposits) என்றால் என்ன..?

இரண்டு வருடங்கள் ஆபரேட் செய்யப் படாததால் ‘செயல்படாதவை’ (Inoperative) என்று முத்திரை குத்தப்பட்ட சேமிப்புக் கணக்குகள், முதிர்வடைந்தும் கோரப்படாத ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் மற்றும் ஆர்.டி-கள், பணமாக்கப்படாத டிமாண்ட் டிராஃப்ட், பே ஆர்டர், வாடிக்கையாளரைச் சென்று சேராத நெஃப்ட் கணக்கு ஆகியவற்றில் உள்ள பணம் 10 வருடங்கள் வரை வங்கிகளால் பராமரிக்கப்பட்டு, வாடிக்கையாளர் கோரும் போது சிறு வட்டித்தொகையுடன் திரும்ப அளிக்கப்படுகிறது. 10 வருடங்களாகியும் கோரப்படாமல் இருக்கும் தொகை, ரிசர்வ் வங்கியின் டெபாசிட் எஜுகேஷன் அண்ட் அவார்னஸ் ஃபண்டுக்கு (Deposit Education and Awareness Fund) மாற்றப்படுகிறது. அதன்பின் தன் பணத்தை ஒரு வாடிக்கையாளர் கண்டறிந்து கோரும் பட்சத் தில், சம்பந்தப்பட்ட வங்கி அந்தப் பணத்தை வாடிக்கையாளருக்குத் தந்துவிட்டு, ரிசர்வ் வங்கியிடமிருந்து ரீஃபண்ட் பெற்றுக்கொள்கிறது.

வங்கிகளின் தலைவலி...

வங்கிகளிடம் சுமார் பத்து கோடி கோரப்படாத அக்கவுன்ட்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றை கணக்கு வைத்துப் பராமரிப்பது என்பது வங்கிகளுக்கு சவாலான விஷயமே. ஒருவர் அதைக் கோரும்போதும் ரூ.25,000 வரை உள்ள டெபாசிட்டுகளை மட்டுமே வங்கிகள் சுயமாக முடிவெடுத்து திருப்பி அளிக்கலாம். தொகை அதைவிட அதிகம் என்கிறபோது அது சட்டம் சம்பந்தப்பட்ட விஷயமாகி, அதைத் திரும்பத் தருவதற்கான வழிமுறைகளும் வாரிசுச் சான்றிதழும் (Succession certificate) தேவை, இழப்புக்கு எதிரான காப்புப் பத்திரம் (Indeminity bond) தேவை என்று சிக்கலாகிவிடுகின்றன.

மேலும், இது போன்ற அக்கவுன்டுகளில் மோசடி செய்தல் எளிது. பண மோசடி மட்டுமன்றி, இந்தக் கணக்குகளைப் புதுப்பித்து சட்டத்துக்குப் புறம்பான செயல்களுக்குப் பயன்படுத்துவதும் நடக்கிறது என்பதால், வங்கிகளுக்கு இவை பெரும் தலைவலியை விளைவிக்கின்றன.

பொது மக்களின் இழப்பு...

இன்னொரு புறம், தமக்குச் சொந்தமான பணம் கோரப் படாமல் இருப்பதை அறியாத பொதுமக்களுக்கும் நஷ்டம் விளைகிறது. வாடிக்கையாளர் இறந்துபோனால், அவரின் (ஜாயின்ட் அல்லாத) சிங்கிள் அக்கவுன்ட்டுகள், நாமினேஷன் செய்யப்படாத அக்கவுன்டுகள் போன்றவையே கோரப்படாமல் போகின்றன.

சிலர் வீடு அல்லது ஊர் மாற்றம் ஏற்படுகையில் பழைய கணக்குகளை குளோஸ் செய்யா மலேயே வேறு வேறு வங்கிகளில் புது அக்கவுன்டுகள் தொடங்குவ தாலும் இது நேர்கிறது. வர வேண்டிய தொகை பெரிது என்கிறபட்சத்தில் அது தன்னுடையதுதான் என்பதை பலவித ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுப்பு வாடிக்கை யாளரையே சாரும்.

இதுசார்ந்த சிரமங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், முதலில் தனக்கு வர வேண்டிய பணம் இந்த வங்கியில் கோரப்படாமல் கிடக்கிறது என்ற செய்தியை அறிவதே பொதுமக்களுக்கு மிகுந்த கடினமாக இருக்கிறது. ஏதாவது பழைய பாஸ் புத்தகம், டெபாசிட் ரசீது போன்றவை கிடைத்தால் மட்டுமே அது சாத்தியம்.

2012-ம் வருட நடவடிக்கை...

வங்கிகளுக்கும், பொது மக்களுக்கும் ஒரு சேர சிரமம் விளைவிக்கும் இதைத் தவிர்க்க வங்கிகளின் வெப்சைட்டுகளில் கோரப்படாத அக்கவுன்டுகள் குறித்த தகவல்கள் பகிரப்பட வேண்டும் என்று 2012-ம் வருடம் பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி ஆணை பிறப்பித்தது. அதன்படி, 12 அரசு வங்கிகளும், 19 தனியார் வங்கிகளும் தங்கள் இணைய தளத்தில் இதற்கென இடம் ஒதுக்கி யுள்ளன. ஆனால், ஒவ்வொரு வங்கியும் தங்கள் வசதிக்கேற்றவாறு இதை வெவ்வேறு வகையில் வடிவமைத்துள்ளன.

சில வங்கி வெப்சைட்டுகளில் எவ்வளவு தேடியும் இந்தத் தகவல் கிடைப்பதில்லை. சில வங்கி இணையதளங்களில் அத்தனை பெயர்களும் குவியலாக பக்கம் பக்கமாக விரிகின்றன. அந்த சமுத்திரத்தில் ஒருவர் தன் பெயரைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் ஹெச்.டி.எஃப்.சி போன்ற சில தனியார் வங்கிகள் செய்திருக்கும் ஏற்பாடு வரவேற்கத்தக்கதாக உள்ளது. இவற்றில் நம் பெயரை டைப் செய்தால், அந்தப் பெயர் உள்ள, கோரப்படாத கணக்குகள் வெளிப் படையாக அறிவிக்கப்படுகின்றன. அதில் நமது கணக்கு என்று நாம் எண்ணும் ஒன்றை ‘க்ளிக்’ செய்தால் அந்தப் பெயருடன் தொடர்புள்ள விலாசம் காணக் கிடைக்கிறது. அந்த விலாசம் நம்முடையதாக இருந்தால், பக்கத்தில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று தகுந்த ஆவணங் களை சமர்ப்பித்து தொகையைப் பெறலாம் அல்லது அக்கவுன்டைத் தொடரலாம்.

ஆனால், இவ்வளவு ஏற்பாட்டுக் குப் பின்னரும் கடந்த பத்து ஆண்டு களில் இந்தப் பணம் சுமார் இரண்டரை மடங்கு அதிகரிக்கவே செய்துள்ளது. 2021-22-ம் நிதி ஆண்டில் மக்களால் கோரப்பட்ட தொகை, மொத்தத் தொகையில் 1.22% மட்டுமே. அதனால்தான் ரிசர்வ் வங்கி ஒரு பொது இணைய தளத்தைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

35,000 கோடி... கேட்பாரற்றுக் கிடக்கும் மக்கள் பணம்... வங்கிகள் செய்ய வேண்டியது இதுதான்!

நாம் செய்ய வேண்டியது என்ன?

ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற நம் போன்ற வாடிக்கையாளர்களும் சில காரியங்களைச் செய்ய வேண்டும்.

* நம் ஒவ்வொரு முதலீட்டுக்கும் நாமினியை நியமிப்பது அவசியம்.

* மனைவி, வயது வந்த குழந்தைகள் ஆகியோரிடம் நம் சேமிப்புக்கள் பற்றிய தகவல்கள் இருக்குமிடம் பற்றித் தெரியப்படுத்துவது அவசியம்.

* அவர்கள் தவிர, வெளியில் இருக்கும் ஒரு நம்பிக்கை யான மனிதரிடமும் இதை சொல்லிவைப்பது முக்கியம்.

* சமீபத்தில் வீடு / வேலை / ஊர் மாற்றம் செய்தவர்கள் தங்கள் பணம் கோரப்படாமல் கிடக்கிறதா என்பதை வங்கி இணையதளங்களில் இருந்து அறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கிகள் செய்ய வேண்டியது என்ன?

 கோரப்படாத பணத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித் தரும் நடவடிக்கைகளை வங்கிகள் முழு வீச்சில் தீவிரப்படுத்த வேண்டும்.

* முதல்கட்டமாக, கோரப்படாத பணம் பற்றி வங்கிகள் தங்கள் இணையதளங்களில் தரும் தகவலை மக்கள் எளிதில் பயன்படுத்தும்படி சீரமைக்க வேண்டும்.

* சமீப காலங்களில் அனைத்து வங்கிகளும் நாமினி, போன் நம்பர், இ-மெயில் ஐடி போன்றவற்றை சமர்ப்பிக்கும்படியும், அடிக்கடி கே.ஒய்.சி ஆவணங்களைப் புதுப்பிக்கும்படியும் வலியுறுத்துகின்றன. வாடிக்கையாளர் தரப்பில் இருந்து தரப்படும் இந்தத் தகவல்களை சரியான முறையில் பயன்படுத்தி வாடிக்கையாளர் தொடர்பை அதிகரிக்க வழி தேட வேண்டும்.

* வேறு என்னென்ன வழிகளில் இந்த முயற்சியை முன்னெடுக்கலாம் என்று முயற்சி செய்வது அவசியம்.

ஒரு சிறு கடன் தொகையைப் பொதுமக்கள் கட்டாமல் பாக்கி வைத்திருந்தாலும், போன் செய்தும், இ-மெயில் அனுப்பியும், நேரில் ஆள் அனுப்பியும் வசூல் செய்யும் வங்கிகள், அந்த முனைப்பை வாடிக்கையாளர்களின் கோரப்படாத பணத்தைத் திருப்பித் தருவதிலும் காட்ட வேண்டும் என்பதே நம் கோரிக்கை.

கோரப்படாமல் கிடக்கும் பணத்தை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தலாமா என்கிற கோணத்தில் மத்திய அரசாங்கம் நினைக்கக் கூடாது. மக்களுக்குரிய பணத்தை அவர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை!