நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மூலதன ஆதாயத்தில் வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

டாக்டர் வி.முரளி, சார்டர்ட் அக்கவுன்டன்ட்

முதலீட்டுக் காலம் மற்றும் நிதி அமைச்சகம் தந்திருக்கும் சலுகைகள் மூலம் மூலதன ஆதாயத்துக்கு (Capital Gain) கட்டும் வரியில் மிச்சப்படுத்த முடியும். அதனால்தான் விவரம் தெரிந்தவர்களும் பெரும் பணக்காரர்களும் மூலதன ஆதாயம் அளிக்கும் சொத்துப் பிரிவுகளில் அதிகமாக முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி மேலும் மேலும் செல்வம் சேர்த்து வருகிறார்கள்.

நீங்களும் மூலதன ஆதாய வரியை மிச்சப் படுத்தத் தேவையான வழிமுறைகளைப் பார்ப்போம்.

டாக்டர் வி.முரளி 
சார்டர்ட் அக்கவுன்டன்ட்
டாக்டர் வி.முரளி சார்டர்ட் அக்கவுன்டன்ட்

வீட்டுமனை, நிலம், கட்டடங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள்

வீட்டு மனை, நிலம், கட்டடங்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், வீடுகள், தங்கம், வைரம், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகளின் யூனிட்டுகள் போன்ற மூலதனச் சொத்துகளின் விற்பனைப் பரிவர்த்தனைகளில் பெரும் பணம் கைமாறிக்கொண்டிருக்கிறது. எனவே, மேற்கூறிய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு விதிக்கப்படும் வரியும் அந்த அளவுக்கு அதிகமாக உள்ளது.

மூலதன ஆதாயத்தில் வருமான வரியை சேமிப்பது எப்படி?

வரிச் சலுகைகள் மற்றும் நன்மைகள்...

மூலதன ஆதாயப் பரிவர்த்தனைகளின் சிறப்பு மற்றும் தனித்துவமான தன்மையின் காரணமாக, இந்திய வருமான வரிச் சட்டம் மூலதன ஆதாயங்களின் வரிக் கணக்கீட்டில் (Computation of Capital Gains Tax) சில சிறப்பு வரிச் சலுகைகள் மற்றும் நன்மைகளை வழங்குகிறது.

மூலதன ஆதாயங்களுக்கான வரி, மூலதன சொத்துகளுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது.முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து, மூலதன ஆதாயம், குறுகிய கால மூலதன ஆதாயம், நீண்ட கால மூலதன ஆதாயம் என இரு வகைப்படும். இந்த முதலீட்டுக் கால அளவு சொத்துப் பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடும்.

உதாரணமாக, பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளில் (நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்) முதலீடு செய்து ஓராண்டு மற்றும் அதற்கு மேற்பட்டு விற்று கிடைக்கும் லாபம், நீண்ட கால மூலதன ஆதாயம் எனப்படும். இதுவே கடன் சந்தை சார்ந்த திட்டங்களுக்கு (கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்) மூன்றாண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட லாபம் நீண்ட கால மூலதன ஆதாயம் எனப்படும். (பார்க்க, அட்டவணை)

குறுகிய காலமா, நீண்ட காலமா..?

மூலதன ஆதாயம் குறுகிய காலமா அல்லது நீண்ட காலமா என்பதைத் தீர்மானிப்பது வரித் திட்டமிடல் கோணத்தில் மிகவும் முக்கியமானது. குறுகிய கால மூலதன ஆதாயங்களுடன் ஒப்பிடும்போது, ​​அனைத்து நீண்ட கால மூலதன ஆதாயங்களும் லாபகர மான வரிகள் மற்றும் நன்மை பயக்கும் விதி விலக்குகளைக் கொண்டுள்ளன.

நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமான நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரி விலக்குக்குப் பிறகு, 10% வரி கட்டினால் போதும். நிறுவனப் பங்குகள்/ ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலமான குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு 15% வரி கட்டினால் போதும். நிறுவனப் பங்குகள் / ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் தவிர மற்ற அனைத்து சொத்துகளுக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரி, பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு, 20% கட்ட வேண்டும். இந்தப் பிரிவின்கீழ் கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள், தங்கம் (தங்க நகை, தங்க நாணயம், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட்), வைர முதலீடுகள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் போன்றவை வரும்.

நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் தவிர, மற்ற அனைத்துச் சொத்துகளுக்கும் (உதாரணம், கடன் ஃபண்டுகள், தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவை) குறுகிய கால மூலதன ஆதாய வரியாக வரிதாரர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வருமான வரி வரம்புப்படி 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்.

மூலதன ஆதாயத்தில் வருமான வரியை சேமிப்பது எப்படி?

மூலதன ஆதாயம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

பொதுவாக, மூலதன ஆதாயத்தைக் கணக்கிடும்போது, விற்ற விலையிலிருந்து வாங்கிய விலை கழிக்கப்படும். இப்படிக் கிடைக்கும் தொகைக்கு குறிப்பிட்ட விகிதத்தில் வரி கட்ட வேண்டிவரும். அதே சமயம், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு சில கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிகட்டல் சலுகை (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள் தவிர்த்து) அளிக்கப்படும். இந்த பிரத்யேகச் சலுகை நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு லாபகரமாக இருக்கும். இங்கே வாங்கிய விலை பணவீக்க விகித உயர்வுக்கேற்ப ஈடுகட்டப் படுகிறது. இதனால், வாங்கிய விலை அதிகரித்து, மூலதன ஆதாயம் குறைகிறது. விளைவு, வருமான வரி கணிசமாகக் குறைகிறது.

இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒரு மனை 2001-ம் ஆண்டு வாங்கப்பட்டிருக்கிறது. இந்த மனை 2021-ல் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. மூலதன ஆதாயம் கணக்கிட வாங்கிய விலை, பணவீக்க விகித அதிகரிப்புக்கேற்ப அதிகரிக்கப்படும். இந்தத் தொகை, விற்ற விலையிலிருந்து கழிக்கப்படும்போது, மூலதன ஆதாயம் குறையும். இதனால், வருமான வரியும் குறைகிறது. இந்த அடக்க விலைக் குறியீட்டை (Cost Inflation Index - CII), ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் வெளியிட்டு வருகிறது.

விற்பனைத் தொகையை மற்ற சொத்துகளில் மறுமுதலீடு செய்து, வரி இல்லாமல் செய்வது...

விற்பனையை சரியாகத் திட்டமிட்டு, விற்பனைத் தொகையை, மற்ற சொத்துகளில் மறுமுதலீடு செய்வதன் மூலம் வருமானம் வரி இல்லாமல் செய்ய முடியும். வருமான வரியைக் குறைக்க அல்லது இல்லாமல் செய்ய பொதுவாகப் பயன்படுத்தப்படும் விதி விலக்குகள் 54, 54EC மற்றும் 54F பிரிவுகளின் கீழ் வருகின்றன.

வரிப் பிரிவு 54 மூலம் சலுகை: வீட்டை விற்று மற்றொரு வீட்டை வாங்குதல்

வீடு விற்றது மூலமான, நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கொண்டு மற்றொரு வீடு வாங்கினால் நீண்ட கால மூலதன ஆதாய வரியைக் கட்ட வேண்டாம். இந்த வீட்டை விற்பதற்கு முன் ஓராண்டுக்கு முன் வாங்கப்பட்ட வீட்டுக்கு செலவிட்ட தொகைக்கும் இந்தச் சலுகை உண்டு. அதாவது, ரூ.20 லட்சம் நீண்ட கால மூலதன ஆதாயம் இருக்கிறது.

உதாரணமாக, ஓராண்டுக்கு முன், ஒருவர் ரூ.20 லட்சத்துக்கு வீடு வாங்கி அதைக் கணக்கில் காட்டினால், வரி கட்ட வேண் டாம். வீட்டை விற்றதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் புதுவீடு வாங்கினாலும் மூலதன ஆதாய வரி கட்டுவதைத் தவிர்க் கலாம். இந்தத் தொகையைக் கொண்டு மூன்று ஆண்டு களுக்குள் புது வீடு கட்டி முடித்து விட்டால், வரிச் சலுகை கிடைக்கும்.

இப்படி மூலதன ஆதாயத்தைக் கொண்டு புதிதாகக் கட்டப்பட்ட வீட்டைத்தான் வாங்க வேண்டும் என்பதில்லை பழைய வீடு களையும் வாங்கலாம். வாங்கும் வீடு உங்களுக்கு புது வீடு என்கிற கணக்கில் வரும்.

மூலதன ஆதாயத்தைக் கொண்டு வாங்கிய வீட்டை மூன்று ஆண்டுக்குள் விற்கக் கூடாது. அப்படி விற்பனை செய்தால், மூலதன ஆதாயத்துக்கு என்ன வரியோ, அதைக் கட்ட வேண்டிவரும்.

வரி விலக்கு 54EC பிரிவு: நீண்ட கால மூலதன ஆதாயத்தையும் பிரத்யேக பாண்டுகளில் முதலீடு செய்தல்

நீண்ட கால மூலதன ஆதாயத்தை, சொத்தை விற்ற ஆறு மாதக் காலத்துக்குள் பிரத்யேக பாண்டுகளில் முதலீடு செய்தால், வரி கட்டுவதைத் தவிர்க்கலாம். எந்த நீண்ட கால மூலதன ஆதாயம் என்பதில் நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட், தங்கம், வைரம் மூலமான நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் குறிக்கும்.

ஆர்.இ.சி (REC), என்.ஹெச்.ஏ.ஐ (NHAI) போன்ற நிறுவனங்கள் வெளியிடும் பிரத்யேக பாண்டு களில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால மூலதன ஆதாய வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த பாண்டுகளை ஐந்து ஆண்டு களுக்கு விற்க முடியாது. இந்த பாண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிவரும். ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.50 லட்சத்துக்குத்தான் முதலீடு செய்து வரிச்சலுகை பெற முடியும்.

வரி விலக்கு பிரிவு 54F: வீடு தவிர்த்து இதர நீண்ட கால மூலதன ஆதாயத்தின் மூலம் மற்றொரு வீடு வாங்குதல்

வீடு தவிர்த்து, மற்ற எந்த நீண்ட கால மூலதன ஆதாய மாக (உதாரணம், நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள், தங்கம், வைரம் போன்றவற்றின் மூலமாக நீண்ட கால மூலதன ஆதாயம்) இருந்தாலும், விற்பனைத் தொகையைக் (Sale Proceeds) கொண்டு, மற்றொரு குடியிருப்பு வீடு வாங்குவது மூலம் நீண்ட கால மூலதன ஆதாய வரி கட்டுவதைத் தவிர்க்க முடியும். இங்கே மூலதன ஆதாயம் முதலீடு செய்யப்படுவதில்லை. மொத்த விற்பனைத் தொகையையும் முதலீடு செய்தால்தான் வரி விலக்கு கிடைக்கும் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இதில் ஒரு முக்கிய நிபந்தனை இருக்கிறது. வரிதாரர், புதிய வீடு வாங்கும்போது அவர் பெயரில் ஒரே ஒரு வீடு மட்டும் சொந்தமாக இருக்கலாம்: அதற்குமேல் வீடு இருக்கக் கூடாது. புதிய வீட்டையும் சேர்த்து அவர் பெயரில் இரண்டு வீட்டுக்குமேல் இருக்கக் கூடாது.

ஓராண்டுக்கு முன் வாங்கப்பட்ட வீட்டுக்குக் கொடுத்த தொகைக்கும் இந்தச் சலுகை உண்டு. இரண்டு ஆண்டு களுக்குள் வீடு வாங்கினாலும் வரி கட்டுவதைத் தவிர்க்கலாம். இந்தத் தொகையைக் கொண்டு புது வீடு கட்டுவது எனில், மூன்று ஆண்டுகளுக்குள் கட்டி முடித்துவிட்டால், வரி விலக்கு கிடைக்கும். விற்பனைத் தொகையைக் கொண்டு வாங்கிய புதிய வீட்டை மூன்று ஆண்டுக்குள் விற்கக்கூடாது.

நிறைவாக...

மூலதன ஆதாயங்கள் என்பது வருமான வரிச் சட்டத்தின் மிக முக்கியமான அம்சமாகும். மூலதன ஆதாயங்களைக் கணக்கிடுவது மற்றும் அனைத்து விதிவிலக்குகளையும் பயன்படுத்தி மூலதன ஆதாய வரியை மிச்சப்படுத்த வரி நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது அவசியம்!