
அதிக வருமானம் இல்லாமல் நீங்கள் செல்வத்தை உருவாக்க முடியும்...
‘‘நான் கொஞ்சம் சம்பளம்தான் வாங்கு கிறேன். என்னால் எப்படி கோடீஸ்வரர் ஆக முடியும்?’’ - இந்தக் கேள்வி நம்மில் பெரும் பாலானவர்களிடம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, ரூ.15,000 - ரூ.20,000 வரை சம்பளம் வாங்குகிற பலரிடம் இருக்கிறது. ஆனால், குறைந்த அளவு சம்பளம் வாங்கினாலும் செல்வத்தைக் குவிக்கும் வழிகள் இருக்கவே செய்கின்றன. பானையின் அடியில் உள்ள நீரை கூழாங்கற்களைப் போட்டு மேலே கொண்டு வந்த காக்கையைப்போல, ஒருவர் தன் வாழ்நாள் முழுவதும் சராசரிக்கும் குறைவாக சம்பாதித்தாலும், சிறிய தொகையை சேமிப்பதன் மூலம் அவர் சுலபமாக கோடீஸ்வரராக மாற முடியும்.

சேமிப்பின் முக்கியத்துவம்...
பணத்தின் உளவியல் (The Psychology of Money) என்கிற புத்தகத்தின் ஆசிரியர் மார்கன் ஹவுஸெல் (Morgan Housel) சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்க இப்படிச் சொல்கிறார்... “அதிக வருமானம் இல்லாமல் நீங்கள் செல்வத்தை உருவாக்க முடியும். ஆனால், அதிக சேமிப்பு இல்லாமல் செல்வத்தை உருவாக்க வாய்ப்பே இல்லை. உங்களுக்கு எது (அதிக வருமானம், சேமிப்பு விகிதம்) முக்கியம் என்பது இப்போது தெளிவாகி இருக்கும்” என்கிறார்.
அதற்காக நாம் யாரையும் ஏழையாக, கஞ்சனாக வாழச் சொல்ல வில்லை. ஆனால், சிக்கனமாக இருக்கச் சொல்கிறோம். குறைந்தபட்ச வாழ்க்கை முறையைப் (Minimalistic Lifestyle) பின்பற்றுவது மூலம் ஒருவர் சுலபமாகக் கோடீஸ்வரர் ஆக முடியும். இந்த முறையில் ஒருவர் குறைவாக செலவழிப்பதால், பணத்தை அதிகமாக சேமிப்பது எளிதாக இருக்கும்.
குறைந்த வருமானம் உள்ள பெரும்பாலானவர்கள் சேமிக்கப் போராடுகிறார்கள் அல்லது அவர்களிடம் சேமிக்கும் பழக்கம் இல்லை. சேமிப்பில் ஓர் ஒழுங்கு இருந்தால் எவ்வளவு குறைவாக சம்பாதித்தாலும் ஒவ்வொருவரும் சேமிக்க முடியும் என்பதே உண்மை. நீங்கள் எவ்வளவு அதிகமாகச் சேமிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரமாக நிதிச் சுதந்திரம் அடைந்து, வேலை, தொழிலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்கள்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். 30 வயதாகும் ஒருவர் மாதம் ரூ.30,000 சம்பாதிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர் தனது வருமானத்தில் மாதம்தோறும் 10 சதவிகிதத்தை அதாவது, 3,000 ரூபாயை தன்னுடைய 60 வயது வரைக்கும் சேமிக்கிறார். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால், 60-வது வயதில் அவருக்கு ரூ.1.1 கோடி கிடைக்கும். இதுவே அவர் சம்பளத்தில் மாதம் 30% அதாவது, ரூ.9,000 முதலீடு செய்தால், அவருக்கு 60-வது வயதில் ரூ.3.2 கோடி கிடைக்கும். (பார்க்க, அட்டவணை 1)
சேமிப்பை சுலபமாக அதிகரிக்க...
சேமிப்பு சதவிகிதம் அதிகரிக்க அதிகரிக்க தொகுப்பு நிதியின் அளவு மிக அதிகமாக இருக்கும். உங்கள் செலவுகள் அனைத்தையும் டைரியில் குறித்து வைப்பது அல்லது எக்ஸெல் தாளில் பதிவது அல்லது செலவுக் கண்காணிப்பு மொபைல் செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் சேமிப்பில் ஓர் ஒழுங்கை ஏற்படுத்தலாம். இதன் மூலம் சேமிக்கும் தொகையை சுலபமாக அதிகரிக்க முடியும்.
பட்ஜெட் போட்டு செலவுக்கான தொகையைக் கணக்கிட்டு, அதை உங்கள் சம்பளக் கணக்கிலிருந்து ஒரு தனி வங்கிக் கணக்குக்கு மாற்றுவதன்மூலம் கூடுதலாக ஆகும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். மேலும், சீரான முதலீட்டு முறையின் (SIP) மூலம் சேமிப்புத் தொகையைத் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். உங்கள் முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலமாக இருக்கும் பட்சத்தில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டை மேற்கொண்டு வரலாம். இப்படி முதலீடு செய்வதன் மூலம் பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் பெறமுடியும். இப்படி முதலீடு செய்யும்போது ஒருவர் சுலபமாக கோடீஸ்வரராக முடியும்.

ரூ.1 கோடி சேர்க்க...
60 வயதில் பணி ஓய்வுக் காலத் துக்காக ரூ.1 கோடியை பல்வேறு வயதினர் சேர்க்க மாதம் எவ்வளவு தொகை முதலீடு செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.
ஒருவர், 25 வயதில் மாதம்தோறும் ரூ.1,540 வீதம் 35 ஆண்டுகள் முதலீடு செய்கிறார். அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரி யாக 12% வருமானம் கிடைத்தால், ரூ.1 கோடி சேர்ந்துவிடும். இதுவே பத்து வருடங்கள் தாமதமாக 35 வயதில் முதலீட்டை ஆரம்பித்தால், மாதம் ரூ.5,270 வீதம் 25 ஆண்டு களுக்கு முதலீடு செய்து வர வேண்டும். 45-வது வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்தால், மாதம் ரூ.19,820 சேமித்துவந்தால்தான் 60 வயதில் ரூ.1 கோடி சேர்க்க முடியும். (பார்க்க, அட்டவணை 2)
முதலீட்டைக் காலதாமதமாக ஆரம்பித்தால், மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டிய தொகை பல மடங்காக அதிகரித்துவிடும். இது எத்தனை பேரால் முடியும்? மேலும், வயதாக வயதாக வேறு நிதி இலக்குகளுக்கும் பணம் தேவைப்படும். அப்போது ஓய்வுக் காலத் தேவைக்கென பணம் சேர்க்க முடியாது. எனவே, இளம் வயதிலேயே முதலீட்டை ஆரம் பித்துவிடுவது நல்லது. முதலீட்டை இடையில் எடுக் காமல் தொடர்வது மூலம் கூட்டு வட்டியின் வளர்ச்சி யைப் பெற முடியும்.
மறுமுதலீடு...
மியூச்சுவல் ஃபண்டுகளில் அவ்வப்போது பணம் கிடைக்கும் டிவிடெண்ட் ஆப்ஷனுக்கு பதில், முதலீட்டின் லாபம் அதிலேயே சேர்ந்து பெருகும் குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்வது லாபகரமாக இருக்கும். பணத்தை மறுமுதலீடு செய்வதால், அதிக லாபம் கிடைக்கிறது. பணக்காரர் கள் மேலும் பணக்காரர்களாகிறார் கள்” என உலகின் முன்னணி முதலீட்டு ஆலோசகர்களில் ஒருவரான ராபர்ட் கியோசாகி குறிப்பிட்டிருப்பது மிகவும் அர்த்த முள்ளதாகும்.
பங்கு முதலீடு என்கிறபோது, கிடைக்கும் டிவிடெண்ட் வருமானத்துக்கு வரி கட்டியது போக மீதமிருக்கும் தொகைக்கு அந்தப் பங்கைக் கூடுதலாக வாங்கும்பட்சத்தில் நீண்ட காலத்தில் அதிக செல்வம் சேரும்.பங்கு மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளைப் பொறுத்தவரை, டிவிடெண்ட் வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரியைக் கட்ட வேண்டும். 30% வரி வரம்பில் இருக்கும் ஒருவருக்கு ரூ.10,000 டிவிடெண்ட் வந்தால், வருமான வரியாக மட்டுமே சுமார் ரூ.3,000 கட்ட வேண்டும். பங்கு நிறுவனம் அதன் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் டிவிடெண்ட் வழங்குவதால், அதை தவிர்க்க முடியாது. மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யாமல், குரோத் ஆப்ஷனைத் தேர்வு செய்தால் அது வளர்ந்துகொண்டே வரும்; நீண்ட காலத்தில் அதிக செல்வம் சேரும்.
சம்பாத்தியம் கொஞ்சம்; சேமிப்பு அதிகம்!
நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கு, நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். பணக்காரராக இருப்பது (Being Rich) வேறு, செல்வந்தராக இருப்பது (Being Wealthy) வேறு. பணக்காரர்கள் பொருள் சார்ந்த விஷயங்களை நம்பு கிறார்கள்; தங்களை மற்றவர்கள்முன் பகட்டாகக் காட்டிக்கொள்வதற்காகவே தேவையற்ற செலவுகளை அதிகம் செய்கிறார்கள். ஆனால், ஒரு செல்வந்தர் அதாவது, உண்மையான பணக்காரர் எப்போதும் தனது தேவைகளுக்கு மட்டுமே பொருள்களை வாங்குவார்; எந்தப் பொருளையும் தேவை இல்லாமல் வாங்க நினைக்க மாட்டார், ‘தேவை இல்லாத பொருள்களை வாங்கிக் குவித்தால், ஒரு கட்டத்தில் தேவையான பொருள் களை விற்க வேண்டி வரும்’ என்கிற உலகின் முன்னணி முதலீட்டாளர் வாரன் பஃபெட்டின் கருத்தைப் பின்பற்று பவர்களாக உண்மையான பணக்காரர்கள் இருக்கிறார்கள்.
‘வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவு பெரிதாகாத வரை கேடில்லை’ என்று 2000 ஆண்டு களுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லிவிட்டார். அவர் சொன்ன படி, நம் செலவை வரவுக்குள் வைத்துக்கொண்டால் நம் வருமானம் கொஞ்சமாக இருந்தாலும், அதில் குறிப்பிட்ட அளவு பணத்தை மிச்சப்படுத்தி, நம்மாலும் பெருமளவில் பணம் சேர்க்க முடியும் என்பது நிச்சயம்!

முதலீட்டில் ரிஸ்க்கை எப்படிக் குறைப்பது?
“வெற்றிகரமான முதலீடு என்பது ரிஸ்க்கை நிர்வகிப்பது; அதைத் தவிர்ப்பதல்ல” என முன்னணி முதலீட்டுக் குருக்களில் ஒருவரான பெஞ்சமின் கிரகாம் சொல்லியிருக்கிறார். எனவே, ஒருவர் தனது மொத்த முதலீட்டுத் தொகையை ஒரே சொத்துப் பிரிவில் வைத்திருக்காமல் தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட், கடன் மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட் ஆகியவற்றில் முதலீடு செய்வதன்மூலம் ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க முடியும். முதலீட்டில் ரிஸ்க் எடுத்தால் மட்டுமே பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தை நம்மால் பெற முடியும்!