நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

கடன் வலையில் சிக்காமல் இருக்க ஸ்மார்ட் டிப்ஸ்..!

கடன்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்...

கடன்

ஒருவரின் நிதித் தேவைகளை நிறைவேற்ற இன்றைக்கு சுலபமாக பல கடன்கள் கிடைக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங் களிடம் ஏராளமான பணம் இருப்பதால், அவை கடன் கொடுக்க ஆள்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவுதான், கடன் வேண்டுமா எனக் கேட்டு செய்யப்படும் போன் அழைப்புகளாகும்.

ராமகிருஷ்ணன் விநாயக், 
நிதி ஆலோசகர், 
https://www.dakshincapital.com/
ராமகிருஷ்ணன் விநாயக், நிதி ஆலோசகர், https://www.dakshincapital.com/

பலருக்குக் கடன் தேவை எதுவும் இல்லை என்றாலும், இப்படிவரும் தொலைபேசி அழைப்புகளால் மனம் தடுமாறி கடன் வாங்கிவிடுகிறார்கள். இப்படி வாங்கும் கடனைக் கொண்டு தேவையில்லாத பொருள் களை வாங்கிக் குவித்துவிடுகிறார்கள்.

அவசியமற்ற கடன்களைத் தொடர்ந்து வாங்குவதால், மாதத் தவணையை சரியாகக் கட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. ஏற்கெனவே, உள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்த வேறு புதிய கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, கடன் வலையில் நிரந்தரமாக சிக்கித் தவிக்கிறார்கள்.

இந்தத் தேவை இல்லாத கடன்கள், ஒருவரின் வாழ்நாள் சேமிப்புகள், முதலீடுகள், தங்க நகைகள், சொத்துகள் என அனைத்தையும் அழித்துவிடக் கூடும்.

சேமிப்பை சிதைப்பதுடன் நிம்மதியையும் பறித்துவிடும் கடன் வலையில் சிக்காமல் இருப்பதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.

கடன் வலையில் சிக்காமல் இருக்க ஸ்மார்ட் டிப்ஸ்..!

1.மொத்த கடன் தவணைத் தொகையைக் கணக்கிடுங்கள்...

ஒருவருக்கு ஒரே நேரத்தில் பல கடன்கள் இருக்கும். உதாரணமாக, நுகர்வோர் கடன் (டிவி போன்ற பொருள்கள் வாங்கியது) ரூ.3,500 (தவணை 5-ம் தேதி), கார் கடன் தவணை ரூ.8,000 (தவணை 8-ம் தேதி), வீட்டுக் கடன் ரூ.25,000 (தவணை 10-ம் தேதி) எனக் கடன் தவணைகள் இருக்கின்றன.

இந்தத் தவணைத் தொகைகள் மற்றும் தேதிகளைத் தனித்தனியே நினைவில் வைத்து, அந்தத் தேதியில் வங்கிக் கணக்கில் போதிய தொகையைப் பராமரிப்பது கடினமான காரிய மாகும். ஏதாவது ஒரு தவணை தவற வாய்ப்பு இருக்கிறது. இது தொடரும்பட்சத்தில் கடன் வலையில் மாட்டக்கூடும்.

இந்த நிலையில், மொத்தக் கடன் தவணை (3,500+ 8,000+ 25,000) ரூ.36,500-க்கும் தேவையான மொத்த பணத்தையும் 5-ம் தேதி முதல் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் தவணை தவற வாய்ப்பில்லை. மேலும், கூடியவரை முதலீடு மற்றும் கடன் தவணைகளுக்கு ஒரே வங்கிக் கணக்கைப் பயன் படுத்தும்போது, கடன் தவணைக்கான பணம் குறையும்போது முதலீடுகளிலிருந்து எடுத்து விரைந்து கடன் தவணையைக் கட்ட முடியும்.

2.அதிக வட்டியிலான கடன்களை முதலில் அடையுங்கள்...

கடன் வலையில் சிக்காமல் இருக்க எப்போதும் அதிக வட்டியிலான கடன்களை முதலில் அடையுங்கள். கிரெடிட் கார்டு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி முறையே 36% - 40% மற்றும் 14% - 22 சதவிகிதமாக உள்ளன.இந்தக் கடன்களை அடைப்பதன்மூலம் வட்டிக்குச் செல்லும் தொகையைக் கணிசமாகக் குறைக்கலாம்.

3.சரியான தேதியில் கடன் தவணையைக் கட்டுங்கள்...

சரியான தேதியில் கடன் தவணையைக் கட்டுவதால், மூன்று லாபங்கள் இருக்கின்றன. ஒன்று, வட்டிக்கு வட்டி கட்டுவது தவிர்க்கப்படுகிறது. அடுத்து, தாமதக் கட்டணம் கட்டுவது தவிர்க்கப்படுகிறது. மூன்றாவ தாக, நல்ல கிரெடிட் ஸ்கோரைத் தொடர்ந்து பராமரிக்க முடிகிறது.

நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்தில் பிற்காலத் தில் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும். கடன் சுலப மாகவும் கிடைக்கும்.

கடன் வலையில் சிக்காமல் இருக்க ஸ்மார்ட் டிப்ஸ்..!

4.கடன் அளவு குறைவாக இருக்கட்டும்...

கடன் அளவு குறைவாக இருக்கும்பட்சத்தில் கடன் வலையில் மாட்ட வாய்ப்பில்லை. ஒரே நேரத்தில் பல கடன்களை வாங்காதீர்கள். அப்படி வாங்கி னாலும் வீட்டுக்கு எடுத்து வரும் சம்பளப் பணத்தில் கடன் தவணைக்குச் செல்லும் தொகை 35 சதவிகிதத்துக்கு அதிகமாக செல்லாதபடிக்குப் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவரின் மொத்த சம்பளம் ரூ.70,000 என வைத்துக்கொள் வோம். பிராவிடன்ட் ஃபண்ட், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம், வருமான வரிப் பிடித்தம் எல்லாம் போக கையில், ரூ.50,000 கிடைக்கிறது எனில், இந்த 50,000 ரூபாயில் 35% என்பது ரூ.17,500 ஆகும். இந்த அளவுக்குத்தான் கடன் தவணைத் தொகை இருக்க வேண்டும்.

இதுவே வீட்டுக் கடன் என்கிற பட்சத்தில், அதுவும் உடனடியாக வீட்டில் குடியேறப் போகிறீர்கள்; வாடகை கொடுக்க வேண்டிய தில்லை எனில், நிகர சம்பளத்தில் 40% - 45% வரைக்கும் கடன் தவணைக்கான தொகை இருக்கலாம்.

5.முதலீடுகளைக் கொண்டு கடன்களை அடையுங்கள்...

உங்களின் முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 7% - 8% வட்டி வருமானம் ஈட்டி தந்துகொண்டிருக் கிறது; ஆனால், கடனுக்கான வட்டி 12 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது; திரும்பக் கட்டும் வட்டி மற்றும் அசலுக்கு வரிச் சலுகை இல்லை என்கிறபட்சத்தில் முதலீடுகளைக் கொண்டு கடனை முழுமையாக அடைத்துவிட்டு வெளியே வருவது லாபகரமாக இருக்கும்.

கடன் இல்லை என்பதால், அடுத்து வரும் மாதங்களில் கடன் மாதத் தவணைக்காகத் திட்ட மிட்டிருந்த தொகையை நீண்ட காலத்தில் பணவீக்கத்தை விட அதிக வருமானம் தரும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துவரலாம். இப்படிச் செய்வது மூலம் அதிக வட்டி யிலான கடன் அடைபட்ட துடன் கடன் வலையில் சிக்குவதி லிருந்தும் தப்பிக்க முடியும். கூடவே கடன் இருக்கிறது என்கிற மன அழுத்தத்திலிருந்தும் தப்பிக்க முடியும்.

6.கடன் வலையிலிருந்து காக்கும் காப்பீடுகள்...

ஒருவர் ஆயுள் காப்பீட்டுடன் மருத்துவக் காப்பீடு (Health Insurance) மற்றும் ஊனம் காப்பீடு (Disability Insurance) எடுத்து வைத்திருப் பதன் மூலம் கடன் வலையில் சிக்காமல் தப்பிக்க முடியும். விபத்து, நோய் பாதிப்பு காரணமாக ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும்போது செலவுக்கு மருத்துவக் காப்பீடு பாலிசி கைகொடுக்கும். அதனால், கடன் வாங்க வேண்டியதில்லை; கடன் வலையில் மாட்ட வேண்டிய தில்லை. அதே போல், விபத்து அல்லது நோய் பாதிப்பு ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியவில்லை எனில், ஊனம் காப்பீடு கைகொடுக்கும். அதாவது, தடைபடும் சம்பாத்தியம் / சம்பளம் காப்பீடு மூலம் கிடைக்கும். இதனாலும் கடன் வாங்கி, கடன் வலையில் சிக்குவது தடுக்கப்படும்.

மேற்கண்ட விஷயங்களைப் பின்பற்றும்போது கடன் வலையில் சிக்காமல் தப்பிக்க முடியும். எப்போதுமே நம்முடைய திரும்பச் செலுத்தும் தகுதிக்கேற்ப கடன் வாங்கினால் கடன் சிக்கல் வர வாய்ப்பே இல்லை.

கடன் என்பது இரு பக்கமும் கூர்மையாக உள்ள ஆயுதம். இந்த ஆயுதத்தை வைத்து ஆக்கவும் முடியும்; அழிக்கவும் முடியும். எந்தெந்த விஷயத்துக்காக நாம் கடன் வாங்கப்போகிறோம், அந்தக் கடன் பணத்தைக் கொண்டு எதில் முதலீடு செய்யப்போகிறோம், எப்படிச் செலவு செய்யபோகிறோம், கடன் வாங்கிய பணத்தை உரிய காலத்தில் நம்மால் திரும்பச் செலுத்த முடியுமா என்கிற கேள்விகளுக்கான பதிலைக் கடன் வாங்கும் முன் நமக்கு நாமே கேட்டுத் தெளிவுபெற வேண்டியது மிக முக்கியம்!

கடன் செட்டில்மென்ட்டுகளைத் தவிருங்கள்..!

ஒருவர் தொடர்ந்து கடன் தவணையைக் கட்ட வில்லை எனில், வங்கி அல்லது நிதி நிறுவனம் செட்டில்மென்ட்டுக்கு (Settlement) வரும். அதாவது, மொத்த கடன் பாக்கியைவிடக் குறைவான தொகையை ஒரே முறையில் கட்டச் சொல்வார்கள். பார்ப்பதற்கு, இது லாபகரமாக இருக்கும்.

ஆனால், இந்தக் கடன் செட்டில்மென்ட்டுக்குப் போகாமல் கடனை அடைக்கும் வழியைத் தேட வேண்டும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள். காரணம், கடன் செட்டில்மென்ட் மேற்கொள்வதால் எதிர்காலத் தில் வாங்கப்போகும் கடனுக்கான தகுதி குறையும்; கிரெடிட் ஸ்கோரும் மோசமாகப் பாதிப்படும். பிற்காலத்தில் வீட்டுக் கடன் போன்ற ஏதாவது அவசியக் கடன் வாங்க வேண்டும் என்றாலும் கிடைக் காமல் போக வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் கடன் செட்டில்மென்டுக்கு செல்லாமல் உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டவர்களிடம் பணத்தைத் திரட்டி மொத்தக் கடனைக் கட்டி முடிப்பது நல்லது.