
கணவன், மனைவி இருவருமே தாம் வசிக்கும் வீட்டுக்குத் தனித்தனியே வாடகை கொடுப்பவர் எனில், இருவரும் வரிச் சலுகை பெறலாம்...
சுமார் ரூ.33 லட்சம் அளவுக்கு பழைய வரி திட்டத்தில் வரிச் சலுகை தந்து வரும் வருமான வரித்துறை, வருமானத்தைக் குறைத்துக் காண்பிப்பவர்களையும், வரிச் சலுகையை அதிகரித்துக் காண்பிப்பவர் களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எனவே, வரிச் சலுகையில் தெளிவின்மை காரணமாக வரித்தவறு ஏற்படுவதைத் தவிர்க்க, வாடகைக்கு வரிச் சலுகை எவ்வளவு என்பது பற்றிய சந்தேகங்களுக்கான தெளிவைப் பெறுவது அவசியம்.

இரண்டு வகையில் வாடகைக்கான வரிச் சலுகை...
வீட்டு வாடகைக்குரிய வரிச் சலுகை இரண்டு விதிகளின்கீழ் தரப்படுகிறது.
1. விதி 10 (13A)-ன்கீழான வீட்டு வாடகைக் குரிய வரிச் சலுகை சம்பளத்துடன் வீட்டு வாடகை அலவன்ஸ் பெறும் ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும். இந்த விதியின்படி, அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் அரசு சார் ஊழியர்களுக்கும் தரப்படும் அதிகபட்ச வீட்டு வாடகைச் சலுகை தற்போதைய நிலையில் ரூ.8.1 லட்சமாக உள்ளது.
2. விதி 80GG-யின்கீழும் வீட்டு வாடகைக்கு வரிச் சலுகை தரப் படுகிறது. ஆனால், இச்சலுகை சம்பளத்துடன் வீட்டு வாடகை பெறாத ஊழியர்களுக்கு மட்டுமே உரியது. எனவே, சம்பளதாரர் ஒருவர் இரண்டு விதிகளில், ஏதாவது ஒன்றின்கீழ் மட்டுமே வரிச்சலுகை பெறமுடியும். இனி, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்...

1. வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை பெற அடிப்படை விதி எது?
வாடகை வீட்டில் குடியிருந்தால் மட்டுமே சம்பளத்துடன் பெறப்படும் வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை பெறலாம் என்பதே அடிப்படை விதி. சம்பளதாரர் ஒருவர் ஒரு நிதியாண்டு முழுவதும் கொடுத்த வீட்டு வாடகையானது, அவர் அந்த நிதியாண்டு முழுவதும் பெற்றிருந்த சம்பளத்தின் கூட்டுத்தொகையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்க வேண்டும். சம்பளம் என்பது அடிப்படைச் சம்பளம் + அகவிலைப் படியின் கூட்டுத்தொகை ஆகும். உதாரணமாக, ஒருவரின் 10% சம்பளம் ரூ.60,000 என்று வைத்துக்கொண்டால், அவர் அந்த நிதியாண்டு முழுவதும் கொடுத்த வீட்டு வாடகை 60,000 ரூபாயைவிட அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு அதிகமாகக் கொடுத்த தொகைதான் வரிச் சலுகைக்குப் பரிசீலிக்கப்படும்.
நான்கு காரணிகள்...
கீழ்க்கண்ட நான்கு காரணிகளில் எது மிகவும் குறைவானதோ, அதுவே வீட்டு வாடகை அலவன்ஸுக்குப் பெறக்கூடிய வரிச் சலுகையாக இருக்கும்.
(அ) உங்களது 10% சம்பளத்தை விடவும் நீங்கள் அதிகமாக கொடுத்த வீட்டு வாடகை. உதாரணமாக, கொடுத்த வீட்டு வாடகை 6,000 X 12 = 72,000. ஓராண்டின் 10% சம்பளம் 6,00,000/10% = 60,000) எனவே, 10% சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்த வீட்டு வாடகை 72,000 - 60,000 = 12,000.
(ஆ) ஒரு நிதியாண்டு முழுவதும் சம்பளத்துடன் நீங்கள் பெற்றுக்கொண்ட வீட்டு வாடகை அலவன்ஸ் (12 X 750=9,000)
(இ) சென்னை, மும்பையில் வசிப்பவராக இருந்தால், ஓராண்டுச் சம்பளத்தில் 50% (6,00,000 X 50% = 3,00,000)
(ஈ) இதர ஊரில் இருப்பவர்கள் எனில், ஆண்டுச் சம்பளத்தில் 40% (6,00,000 X 40% = 240,000). மேற்கண்ட நான்கில் ஒரு நிதியாண்டு முழுவதும் நீங்கள் பெற்றிருந்த வீட்டு வாடகை அலவன்ஸான 9,000 ரூபாய்தான் மிகவும் குறைவான தொகை. எனவே, கிடைக்கக்கூடிய வரிச் சலுகை ரூ.9,000 மட்டுமே.
2. ஒரே சம்பள வருமானம் உள்ளவர்களாக இருக்கும் நிலையில் வீட்டு வாடகைக்கான வரிச் சலுகை பணிபுரியும் இடத்தைப் பொறுத்து மாறுபடுமா?
மாறுபடும். மத்திய அரசைப் பொறுத்தவரை, இந்திய நகரங்கள் X, Y, Z என மக்கள் தொகையைப் பொறுத்து மூன்று வகையாக உள்ளன. தமிழக அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை அலவன்ஸ் ஊரைப் பொறுத்து, ஐந்து வகையாக உள்ளன. எனவே, பணியிடம் + சம்பளம் ஆகியவற்றைப் பொறுத்து வீட்டு வாடகை அளவில் மாறுபடும்.
3. ஒரே வாடகை வீட்டில் வசிக்கும் சம்பளம் வாங்கும் கணவன் - மனைவி இருவரும் தங்களுடைய வீட்டு வாடகை அலவன்ஸுக்குத் தனித்தனியே வரிச் சலுகை பெற முடியுமா?
முடியாது. வீட்டு வாடகை தரும் சம்பளதாரர் எவரோ, அவர் மட்டும்தான் வரிச் சலுகை பெற முடியும்.
4. வெவ்வேறு ஊர்களில் பணி புரியும் கணவன் - மனைவி தனித் தனியாக வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை பெற முடியுமா?
இருவருமே தாம் வசிக்கும் வீட்டுக்குத் தனித்தனியே வாடகை கொடுப்பவர் எனில், இருவரும் வரிச் சலுகை பெறலாம்.
5. லீஸுக்கு அதாவது, ஒத்திக்கு இருக்கும் வீட்டில் குடியிருக்கும் சம்பளதாரர் வரிச் சலுகை பெறலாமா?
முடியாது. வாடகை தந்தால் மட்டுமே வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை பெற முடியும்.
6. சொந்த வீடு சொந்த ஊரில், வேலை பார்ப்பது வேறு ஊரில். வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை உண்டா?
உண்டு. அதே போல, சொந்த ஊரில் உள்ள சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு ஊரில் பணியில் உள்ளவர் வீட்டு வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை கோரலாம். சொந்த வீட்டுக்கு வரும் வாடகையானது வீட்டுச் சொத்து வருமானம் என்ற தலைப்பில் கொண்டு வரப்பட்டு அதற்கு வரி செலுத்த வேண்டும்.
7. ரூ.3,000-க்கும் குறைவாக வீட்டு வாடகை கொடுப்பவர் வாடகை ரசீது காண்பிக்க வேண்டியதில்லை என்கிற சலுகை உள்ளதா?
இல்லை. 3,000 ரூபாய்க்கும் குறைவாக வீட்டு வாடகை அலவன்ஸ் பெறுபவரிடம் வாடகை ரசீது கோரி வற்புறுத்த வேண்டாம் என்பதே நீங்கள் குறிப்பிடும் சலுகை. இந்த சலுகை 2016-17-ம் நிதியாண்டுக்குப் பிறகு வரப்பெற்ற சுற்றறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே, கொடுத்த வாடகை எத்தனை ரூபாயாக இருப்பினும் வாடகை ரசீது அவசியம்.
8. பணம் தரும் விருந்தாளியாக (Paying guest) குடியிருப்பவருக்கு வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சலுகை கிடைக்குமா?
கிடைக்கும். ஒப்பந்தப் பத்திரத்தில் விருந்தாளி தரும் பணத்தில் உணவுக்கு எத்தனை ரூபாய், வாடகைக்கு எத்தனை ரூபாய் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். அப்போதுதான் சலுகையைக் கணக்கிட முடியும்.
9. வாடகை வீட்டில் குடியிருப் பவர் அதன் ஒரு பகுதியை உள் வாடகைக்கு விட்டு வாடகை பெறும் நிலையில் வீட்டு வாடகை அலவன்ஸுக்கு சலுகை பெற முடியுமா?
முடியும். உள்வாடகைக்கு விட்ட பகுதியிலிருந்து கிடைக்கும் வாடகையைத் தனது இதர வருமானமாகக் குறிப்பிடுவது அவசியம்.
10. வாடகை அலவன்ஸுக்கான வரிச் சலுகையை ஒரு நிதியாண்டு முழுவதும் பெறலாமா?
ஒரு நிதியாண்டில் எத்தனை மாதம் / எத்தனை நாள் வாடகை வீட்டில் குடியிருந்தாரோ, அந்தக் காலத்துக்கு மட்டுமே வரிச் சலுகை.
11. தாய் தந்தையருக்குச் சொந்தமான வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தால், வரிச் சலுகை கிடைக்குமா?
பெற்றோருக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந் தாலும் வீட்டு வாடகை அலவன்ஸ்க்கு வரிச் சலுகை பெறலாம். வாடகை ஒப்பந்தப் பத்திரம், வாடகை ரசீது அவசியம். பெற்ற வாடகைக்கு பெற்றோர் வரித் தாக்கல் செய்ய வேண்டும்.
12. வாடகைதாரரின் கடமை என்ன?
மாத வாடகை 50,000 ரூபாய்க்கும் அதிகம் எனில், வீட்டுச் சொந்தக்காரருக்குத் தரப்படும் வாடகையில் 5% தொகையை வாடகைக்குக் குடியிருப்பவர் வரிப்பிடித்தம் (TDS) செய்து 30 நாளுக்குள் அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், மாதம் 8,334 ரூபாய்க்குமேல் வாடகை செலுத்துபவர் ஒரு நிதியாண்டில் ரூ.1 லட்சத்துக்கு மேல் வாடகையாகக் கொடுத் திருப்பவர். இவர் தனது வீட்டு உரிமையாளரின் பான் (PAN) எண்ணைத் தெரிவிக்க வேண்டும்.
பிரிவு 80GG மாதம் ரூ.5,000 வீதம் ஆண் டொன்றுக்கு ரூ.60,000 அல்லது ஒரு நிதியாண்டின் மொத்த வருமானத்தில் 25%, இந்த இரண்டில் எது குறைவோ, அந்தத் தொகை வரிச் சலுகையாக இருக்கும். கொடுத்த வாடகை, வரிதாரரின் ஆண்டுச் சம்பளத்தில் 10%-க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்பதும் வசிப்பிடத்தில் சொந்த வீடு இருக்கக் கூடாது என்பதும் வரிச் சலுகை பெற நிபந்தனை. படிவம் 10BA சமர்ப்பித்து வரிச் சலுகை பெறலாம். சம்பளத்துடன் வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாதவர்களுக்கு உரியது இந்தச் சலுகை.
வீட்டுக் கடன் வாங்கியவர் வீட்டுக் கடனுக்கும் வட்டிக்கும் வரிச் சலுகை பெறும் நிலையில், வாடகை அலவன்ஸுக்கு வரிச் சலுகை கிடைக்குமா?
கிடைக்கும். வீட்டுக் கடனில் வாங்கிய வீடு கட்டப்பட்டு வரும்போது, வாடகை வீட்டில் குடியிருந்தால், அந்த வீட்டுக்குத் தரும் வாடகைக்கு வரிச் சலுகை உண்டு. வீட்டுக் கடனில் வீடு வாங்கிவிட்டு, வேறு ஓர் ஊரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தாலும், அந்த வீட்டுக்குத் தரும் வாடகைக்கு வரிச் சலுகை உண்டு. ஆனால், வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்ட வேண்டும் என்பது முக்கியமான விஷயம்!