நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

நிதித் திட்டமிடல்... அவசியம் இடம் பெற வேண்டிய 10 முக்கியமான அம்சங்கள்..!

நிதித் திட்டமிடல்...
பிரீமியம் ஸ்டோரி
News
நிதித் திட்டமிடல்...

நிதித் திட்டமிடல்...

ஒரு நல்ல நிதித் திட்டம் (Financial Plan) என்பது ஒருவரின் நிதிச் சார்ந்த இலக்கு களை நிறைவேற்றத் தேவையான தொகையை சரியான நேரத்தில் கிடைக்கச் செய்வதுதான்.

ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு நிதி இலக்குகள் இருக்கும். திருமணமாகி பிள்ளைகள் இருப்பவர்களின் நிதித் திட்டம் என்பது கீழ்க்கண்ட 10 முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த 10 அம்சங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

1. குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி ரீதியான பாதுகாப்பு...

குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும்போது குடும்ப உறுப்பினர்களை நிதி ரீதியாகப் பாதுகாக்கும் ஆயுள் காப்பீட்டு பாலிசி கட்டாயம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். மாதச் சம்பளத்தைப் போல், கிட்டத்தட்ட 100 முதல் 120 மடங்குக்கு ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரின் மொத்தச் சம்பளம் மாதம் ரூ.50,000 எனில், ரூ,50 லட்சம் முதல் ரூ.60 லட்சத்துக்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், மருத்துவச் செலவுகளைக் குறைக்கும் மருத்துவக் காப்பீட்டு பாலிசியைக் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எடுத்திருப்பது அவசியமாகும். இந்த இரு காப்பீடுகளும் ஒரு நிதித் திட்டத்தில் கட்டாயம் இடம்பெறுவது அவசியம் ஆகும்.

நிதித் திட்டமிடல்...  அவசியம் இடம் பெற வேண்டிய 10 முக்கியமான அம்சங்கள்..!

2. பிள்ளைகளின் உயர்கல்விக்குத் தேவையான தொகை...

நாளுக்கு நாள் கல்விக் கட்டணம் அதிகரித்து வருகிறது. எனவே, பிள்ளைகளின் மேற்படிப்புக்குப் பணம் சேர்ப்பது அவசியமாகிறது. பிள்ளைகளின் உயர்கல்விக்குத் தேவையான தொகையைத் திரட்டுவதற்கான முதலீட்டுத் திட்டத்தைப் பிள்ளைகள் பிறந்தவுடன் அல்லது அவர்கள் பள்ளிக் கூட்டத்தில் அடி எடுத்து வைக்கும் போதாவது அவர்களின் உயர்கல்வி செலவுக்கான முதலீட்டை ஆரம்பிப்பது அவசியமாகும்.

அப்போதுதான் போதிய தொகையைச் சேர்க்க முடிவதுடன், மாதம் முதலீடு செய்யும் தொகையும் குறைவாக இருக்கும். பிள்ளைகள் விரும்பும் படிப்பை படிக்க வைக்க போதிய தொகை பெற்றோரிடம் இல்லாதபட்சத்தில், துண்டு விழும் தொகையை ஈடுகட்ட கல்விக் கடன் வாங்கிக்கொள்வதில் தவறில்லை. இது ஓர் ஆக்கபூர்வமான கடன் என்பதால் அதை வாங்கிக்கொள்ளலாம்.

3. வாகனம் வாங்குவதற்கான திட்டம்

ஒருவரின் தேவை மற்றும் நிதி நிலையைப் பொறுத்து அலுவலகம் சென்று வர சொந்த வாகனம் இருந்தால் வசதியாக இருக்கும். இந்த வாகனம் என்பது மோட்டார் சைக்கிள், கார் என்பதாக இருக்கும்.

அலுவலகத்துக்குச் சென்று வர பொதுப் போக்குவரத்து (பஸ், ரயில்) சரியாக இல்லாமல் இருக்கிறது எனில், அதைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. பொது போக்குவரத்து வசதி போதிய அளவுக்கு இல்லாத பட்சத்தில் மட்டுமே சொந்த வாகனம் வாங்கத் திட்டமிட வேண்டும். வாகனம் என்பது ஒரு தேய்மான சொத்து என்பதால் அதைக் கடனில் வாங்குவதைத் தவிர்த்து பணம் சேர்த்துதான் வாங்க வேண்டும். வாகனம் கட்டாயம் வாங்க வேண்டும் என்றால் அதற்கான முதலீட்டுத் திட்டம், உங்கள் நிதித் திட்டத்தில் இருப்பது அவசியமாகும்.

4. சொந்த வீடு வாங்குவதற்கான திட்டம்

நம்மில் பலரின் வாழ்நாள் கனவாக சொந்த வீடு இருக்கிறது. ரியல் எஸ்டேட் விலை மிகவும் அதிகரித்திருக்கும் நிலையில் முழு பணத்தையும் கொண்டு ஒருவர் வீடு வாங்குவது என்பது இயலாத காரியமாகும்.

வீட்டுக் கடன் மூலம் வாங்குவது எனில், முன்பணம் (Down payment) தயார் செய்ய வேண்டியிருக்கும். இந்த முன்பணம் வீட்டின் மதிப்பில் சுமார் 20 சதவிகிதமாக இருக்கும். அதாவது, வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சம் எனில், வீடு வாங்குபவர் கையிலிருந்து தர வேண்டிய முன்பணம், ரூ.10 லட்சமாகும். இந்தத் தொகையைத் திரட்டுவதற்கான திட்டம், நிதித் திட்டத்தில் இருக்க வேண்டும்.

5. மகன் / மகளின் திருமணம்

இன்றைய தேதியில் கல்யாண மண்டப வாடகை, அலங்காரம், சாப்பாடு ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து உள்ளது. அந்த வகையில், ஒருவர் பிள்ளைகளின் திருமணச் செலவுக்கு என குறிப்பிட்டத் தொகையை மாதம்தோறும் சேமிப்பதற்கான திட்டம், நிதித் திட்டத்தில் இடம்பெறுவது அவசியமாகும்.

திருமணச் செலவுகளுக்கு பெற்றோர் அல்லது பிள்ளைகள் கடன் வாங்குவது கூடாது. எனவே, செலவுகளை முன்கூட்டியே திட்டமிட்டு கூடியவரையில் முன்னதாக முதலீட்டை ஆரம்பிக்கும் திட்டம் கட்டாயம் நிதித் திட்டத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

6. போதிய பணப்புழக்கம்

வேலை பார்க்கும் பெரும்பாலானோரிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. ஒன்று சம்பளத்தை அந்தந்த மாதமே முழுவதுமாகச் செலவு செய்துவிடுகிறார்கள். சிலர் கையில் பணமிருந்தால் கண்டபடி செலவு செய்துவிடுவோம் என மொத்தப் பணத்தையும் ஆர்.டி, தங்க நகைச் சீட்டு என முதலீடு செய்துவிடுகிறார்கள்.

ஏதாவது, அவசரப் பணத் தேவை என்று வரும்போது, இது போன்றவர்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள். இந்த நிலையைத் தவிர்க்க, குறிப்பிட்டத் தொகை யைத் தனியே சேர்த்து வைப்பது அவசியம் ஆகும். அந்தத் தொகை எளிதில் எடுத்து செலவு செய்வது போல் இருக்க வேண்டும். இந்தத் தொகையைச் சேர்த்து வைப்பதற்கான திட்டமும் நிதித் திட்டத்தில் அவசியம் இடம் பெற வேண்டும்.

நாம் வழக்கமாகச் சொல்லும் மாதச் செலவைப்போல் சுமார் 3 முதல் 6 மடங்கு தொகையைச் சேர்த்து வைத்திருப்பது நல்லது.

7. கடன் மேலாண்மை திட்டம்

பெரும்பாலான நிதித் திட்டத் தில் கடன் மேலாண்மை அம்சம் இடம்பெறுவதில்லை. இதனால் தான், பெரும்பாலானோர் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் கள். அத்தியாவசியத் தேவை களுக்கு மட்டும் கடன் வாங்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

எந்தப் பொருளையும் சேவை யையும் பணம் சேர்த்து அதன் மூலம் மட்டுமே அடைய வேண்டும் என்கிற உறுதியுடன் செயல்பட்டால், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏற்கெனவே கடன்கள் இருந்தால், அதை அடைக்கும் திட்டம் நிதித் திட்டமிடலில் அவசியம் இடம் பெற வேண்டும். அப்போதுதான் இதர முக்கியமான நிதி இலக்குகளை நிறைவேற்றுவதற் கான பணத்தை சுலபமாக ஒதுக்க முடியும்.

8. பணி ஓய்வுக்காலத்துக்கான செலவு

பெரும்பாலான நிதித் திட்டங்களில் இந்த அம்சம் இடம் பெறுவதில்லை. நிதி ஆலோசகர் சொன்னாலும் பல முதலீட் டாளர்கள் பின்னர் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனத் தள்ளி வைத்துவிடுகிறார்கள். பல நேரங்களில் தள்ளிவைத்தது தள்ளி வைத்ததாகவே இருந்துவிடுகிறது.

பணி ஓய்வுக்காலத்துக்கு திட்டமிடும்போது, பணி ஓய்வுக் காலத்துக்குப் பிறகு சுமார் 25 ஆண்டுகளுக்கான செலவுகளை சமாளிக்கும் விதமாக, தொகுப்பு நிதியைச் சேர்க்கும்படி திட்ட மிடுவது அவசியமாகும்.

9. வருமான வரியைச் சேமிக்கும் திட்டம்

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் வருமான வரியை மிச்சப்படுத்த வேண்டியிருந்தால், நிதி இலக்குகளை நிறைவேற்றச் செய்யும் அதே நேரத்தில் வருமான வரியையும் மிச்சப்படுத்துவது போல் முதலீடுகள் இருக்க வேண்டும்.

பெண் பிள்ளைகளின் உயர்கல்வி செலவுக்கு எனில், செல்வமகள் சேமிப்புத் திட்டம், ஆண் பிள்ளை களின் உயர்கல்விக்கு என்றால் பொன்மகன் சேமிப்புத் திட்டத் திலும் முதலீடு செய்து வரலாம். இது முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாத பெற்றோர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

இதுவே முதலீட்டில் ரிஸ்க் எடுக்கும் பெற்றோர்கள் என்றால் பங்குச் சந்தை சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம்.

10. எஸ்டேட் பிளான்

சேர்த்த செல்வத்தை அடுத்த தலைமுறையினருக்கு சிக்கல் இல்லாமல் விட்டுச் செல்ல எஸ்டேட் பிளான் அவசியம் நிதித் திட்டத்தில் இடம் பெற வேண்டும். பலர் வயதாகி பணி ஓய்வுபெற்ற பிறகுதான் உயில் எழுத வேண்டும் என நினைக்கிறார்கள். அது தவறான எண்ணம் ஆகும்.

ஓரளவுக்கு வசதி, வாய்ப்புகள் வந்தவுடனே உயில் எழுதி வைப்பது நல்லது. தேவைப்பட்டால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.

அனைத்து நிதித் தேவைகளும்...

நிதித் திட்டமிடல் என்பது ஓர் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும். அதில் குடும்பத்துக்கான அனைத்து நிதி சார்ந்த விஷயங்களும் இடம்பெறுவது அவசியமாகும். குறிப்பாக, செல்வ உருவாக்கம், செல்வத்தைப் பாதுகாத்தல், சரியான முதலீடுகளைத் தேர்வு செய்தல், குறிப்பிட்ட இடைவெளியில் நிதி இலக்குகளை ஆராய்தல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்,

உங்களுடைய நிதித் திட்டமிடலில் மேற்சொல்லப்பட்ட 10 அம்சங்களும் இருக்கின்றனவா என்பதைப் பாருங்கள்!

நிதித் திட்டத்தில் இந்த அம்சமும் இடம் பெறுவது அவசியம்..!

சம்பளத் தொகையை 50%, 20%, 30% எனப் பிரித்து செலவு செய்யும் பட்ஜெட் நிதித் திட்டத்தில் இடம் பெறுவது அவசியமாகும். இதில் 50 சதவிகித தொகையை வீட்டு வாடகை, மளிகைப் பொருள்கள், பால்,போக்குவரத்து செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, கடன் தவணைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டும்.

20 சதவிகித தொகையை சினிமா, ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களுக்குச் செலவிட வேண்டும். மீதி 30 சதவிகித தொகையை பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், சொந்த வீடு வாங்க பணம் என முக்கிய தேவைகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும்.