
2023–ம் ஆண்டில் தங்கத்தின் விலையில் மிகப் பெரிய தாக்கம் இருக்கும்...
தங்கம் சார்ந்த முதலீடுகள் சிறந்ததா அல்லது பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் சிறந்ததா, நல்ல முதலீட்டு ஆதாயங்களைத் தருகின்றனவா என்று ஆராய்ந்து பார்த்தால், இரண்டுமே வெவ்வேறு முதலீட்டளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றவையாகக் காணப்படுகின்றன.

ஒரு முதலீட்டாளரின் ஆதாயத்தை, பண வீக்கத்தைக் கழித்துப் பார்த்தோமேயானால், நீண்ட காலத்தில் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பங்குச் சந்தை தருகிற ஆதாயம் அதிகமாக இருப்பதுதான் கடந்த கால வரலாறு.
ஆனால், பங்குச் சந்தை முதலீட்டில் ரிஸ்க் என்பது அதிகம். அதே சமயம், ஆதாயமும் அதிகம். காத்திருக்கும் காலம் அதிகம் என்பதாலும், முதலீட்டுக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும், பெரும்பாலான முதலீட்டாளர்கள் அச்சத்தின் காரணமாக முதலீடு செய்யவதற்குமுன் வருவதில்லை.
நம்முடைய முதலீடுகளை நிலம், வீடு, வங்கி டெபாசிட்டுகள், தங்கம் முதலியவற்றில் பிரித்து முதலீடு செய்வதுபோல், ஒரு பகுதியை பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்வது எதிர்கால பணத்தேவைகளுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்போது தங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஓரளவு நல்ல இறக்கத்தில் இருக்கிறது. இப்போது தங்கத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா என்கிற கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.
2020-ம் ஆண்டில் கோவிட் 19 காரணமாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுவந்த தங்கத்தின் விலை, 2022-ம் ஆண்டில் தொடர் இறக்கத்துடன் வர்த்தகம் நடைபெற்று வருவதைப் பார்க்க முடிகிறது. அமெரிக்கா வின் பொருளாதாரம், வட்டி விகிதம் சார்ந்த நடவடிக்கைகள் காரணமாக இந்த சரிவு காணப்படுகிறது. இந்த இறக்கங்களைப் பயன்படுத்தி முதலீடுகளை மேற்கொள்ளலாமா?

கடந்த 10 ஆண்டுகளில் தங்கத்தில் கிடைத்த லாபம்...
பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு முதலீட்டாளர் தங்கம் வாங்கியிருந்தால், தங்கத்தின் மூலம் கிடைத்த லாபம் சுமார் 6 சதவிகிதமாக இருக்கக்கூடும். அதே சமயம், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில் (இண்டெக்ஸ் பண்டுகளில்) 11% முதல் 14% ஆதாயம் கிடைத்திருக்கும். இதற்கு முந்தைய காலகட்டங்களில், தங்கத்தின் மூலம் கடந்த பத்து வருடங்களில் கிடைத்த லாபம் நவம்பர் 2001 முதல் நவம்பர் 2011 வரையிலான காலத்தில் 21% வரை அதிகபட்சமாக இருந்துள்ளது.
மேலும், குறுகிய காலத்தில் ஒப்பிடும்போது தங்க முதலீடானது, பங்குச் சந்தை தந்த முதலீட்டைவிட அதிகமாகக் காணப்படு கிறது. அதாவது, 2022-ம் ஆண்டில் இதுவரை (சென்செக்ஸ்/ நிஃப்டி) பங்குச் சந்தை -3% வருமானத்தையும், தங்கம் 11% வருமானத்தையும் கொடுத்துள்ளது. தற்போதைய ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றங்கள், உலக நாடுகளின் வங்கிக் கொள்கைகள் அனைத்தும் தங்க முதலீட்டை ஈர்த்துள்ளன.

சமீப காலமாக, தங்கத்தின் விலை இறக்கத்தில் வர்த்தகமாகி வரக் காரணம், அமெரிக்காவின் நிதிக்கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியமானதாக இருக்கிறது. மாதாந்தர அடிப்படையில், ஆறாவது மாதமாகத் தங்கத்தின் விலையானது, சர்வதேசச் சந்தையில் குறைந்து காணப்படுவதை வரைபடம் 1-ன் மூலம் பார்க்கலாம். 2018-ம் ஆண்டுக்குப் பிறகு 2022-ம் ஆண்டில் இத்தகைய இறக்கம் காணப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு...
உலக அளவில் பெரும்பாலான முதலீடுகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. தொடர்ந்து ஆறாவது மாதமாக (செப்டம்பர் மாதத்தில்) தங்கம் (-2.6%), பங்குச் சந்தை (-9%), கமாடிட்டி (-8%), கடன் பத்திரங்கள் (-5%) இறக்கத்தில் முடிந்துள்ளன.
இவ்வாறான இறக்கங்களுக்கு முக்கியமான காரணமாக இருப்பது, வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது. இதனால், வங்கிகள் உத்தர வாதம்மிக்க ஆதாயத்தைத் தரும்போது தங்கம், பங்குச் சந்தைகள், கமாடிட்டி விலைகள் இறங்குகின்றன.
வட்டி விகிதங்களை உயர்த்துவதன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர் ஏற்றத்தைக் காண் கிறது. டாலர் மதிப்பு அதிக மாகும்போதெல்லாம், தங்கம் (டாலர் விலையில்) இறக்கம் தவிர்க்க இயலாது.
அதே சமயம், ஆரம்ப கால கட்டத்தில் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக தங்கம் சர்வதேச சந்தையில் விலை அதிகரித்துக் காணப் பட்டாலும், பிறகு அது நீடிக் காமல் போனதற்கு முக்கிய மான காரணம், மேற்கத்திய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்ததுதான்.
அதாவது, ரஷ்யா தனது எரிபொருள் ஏற்றுமதியில் 30 சதவிகிதத்துக்கும் மேலாக நிறுத்திக்கொண்டதால், ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன.பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை அதிகரித்து, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. டாலர் இண்டெக்ஸ் அதிகபட்சமாக 114 ஆக அதிகரித்துள்ளது. இது இந்த ஆண்டு இறுதி யிலோ, 2023 தொடக்கத்திலோ மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (பார்க்க, படம்-2)

சர்வதேச தங்க இ.டி.எஃப் முதலீடுகள் விற்பனை அதிகரிப்பு...
பொருளாதாரத்தில் தொய்வு ஏற்பட்டாலோ, போர்பதற்றம் காணப் பட்டாலோ தங்கத்தின் விலை ஏறுவது வாடிக்கை. நடப்பு 2022-ம் ஆண்டு பொருளாதாரத்தில் நிச்சய மற்றத்தன்மை காணப் பட்டாலும், தங்கத்தின் விலை அதிகரிக்கவில்லை. உலகப் பொருளாதாரத்தின் வர்த் தகம், பெரும்பாலும் அமெரிக்க டாலரில் நடப் பதால், டாலருக்குத் தேவை இருந்துகொண்டே இருக் கிறது. அதனால், டாலர் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் அனைவரும், முதலீடுகளை மாற்றி அமைத் துக் கொள்கிறார்கள்.
ஒரு சமயத்தில், பாதுகாப்பு முதலீடாகப் பார்க்கப்பட்ட தங்கம் மட்டுமல்லாமல், அடிப்படை உலோகங் களையும் விற்று, டாலரை இருப்பாகக் கொள்வதால், கமாடிட்டிப் பொருள்களில் விலைச் சரிவு ஏற்படுகிறது. இதன் ஒருபகுதியாக, கோல்ட் இ.டி.எஃப் போன்றவையும் முதலீட்டாளர்களால் விற்கப் பட்டு, தங்களுடைய முதலீடு களை டாலர் முதலீடுகளாக மாற்றிக்கொள்வதால், கோல்டு இ.டி.எஃப் முதலீடு கள் வெளியேறியுள்ளன.
இந்த ஆண்டு 2022 தொடக் கத்திலிருந்து செப்டம்பர் வரையிலான காலத்தில், இதற்கு முந்திய ஆண்டுடன் ஒப்பிடுகையில், மதிப்பின் அடிப்படையில் 191 டாலர் களாகவும், டன்னேஜ் அடிப்படையில் 1% குறைந்து 3,548 மெட்ரிக் டன்களாகவும் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் சந்தையிலிருந்து வெளியேறி யுள்ளன.
உலக அளவில் கோல்டு இ.டி.எஃப் முதலீடுகள் 2021, மார்ச் மாதத்துக்குப் பிறகு, மாதாந்தர அடிப்படையில், சென்ற செப்டம்பர் மாதத்தில் அதிக அளவுக்கு வெளியேறியுள்ளன. அதாவது, 95 மெட்ரிக் டன்கள் விற்கப்பட்டுள்ளன.
வட அமெரிக்கா (3 பில்லியன் டாலர்கள்), ஐரோப்பிய நிதி அமைப்புக்கள் (2 பில்லியன் டாலர்கள்) கோல்டு இ.டி.எஃப் யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளன. ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிதி அமைப்புகள் இந்த விற்பனையில் முக்கியமான பங்கு வகித்துள்ளன.
ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக, இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 0.4 மெட்ரிக் டன், சீனாவில் 0.3 மெட்ரிக் டன் அளவுக்கு முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.
தங்கம் மேலும் இறங்குமா?
அமெரிக்க ஃபெடரல் இதுவரை 2022-ம் ஆண்டில் மட்டும் ஐந்து முறை வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. மார்ச், மே, ஜூன், ஜூலை, செப்டம்பர் ஆகிய ஃபெடரல் கூட்டங்களில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. (பார்க்க வரைபடம்-3)
வரும் காலங்களிலும் வட்டி விகிதங்களை அதிகரிக்க முகாந்திரங்கள் இருப்பதாகவே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அமெரிக்காவின் தற்போதைய பணவீக்கமானது 8 சதவிகிதத்துக்குமேல் இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் 0.1 சத விகிதமாகவும், செப்டம்பர் மாதத்தில் 0.4 சதவிகிதமாகவும் அதிகரித்தது. இதைக் கட்டுப்படுத்த, தற்போதைய 3% - 3.25% இருக்கக்கூடிய வட்டி விகிதத்தை, அடுத்த ஃபெடரல் கூட்டத்தில் மேலும் 0.75% உயர்த்த வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது. அதாவது, இந்த ஆண்டு இறுதிக்குள் 4 சதவிகிதத்துக்குமேல் வட்டி விகிதங்கள் சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலையானது தற்போதைய விலையிலிருந்து சற்று இறங்க வாய்ப்பிருக்கிறது. அதே சமயம், டாலரின் மதிப்பும் மேலும் அதிகரிப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பும் இறக்கமடையும் என்பதால், தங்கத்தின் விலை அதிக அளவில் குறைய வாய்ப்பில்லை என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.
இது ஒருபுறம் இருக்க, அமெரிக்க ஃபெடரல் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தி அதன் மூலம் பணவீக்கத்தைக் குறைக்க முயற்சி செய்வதில், முழுமையாக வெற்றி அடைய முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனெனில், வட்டி விகிதம் அதிகரிக்கும்போது பொருளாதார மந்தநிலை ஏற்படவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்போது, அதன் பக்கவிளைவுகளாக வீட்டுக் கடன்களின் வட்டி உயர்வதைத் தவிர்க்க முடியவில்லை. இதனால், வீடு விற்பனை மந்தநிலைக்குத் தள்ளப்படுகிறது. புதிய வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதாக அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம் கூறுகிறது. ஊழியர்களின் சம்பளமும் குறைந்துள்ளதை உணர்த்தியுள்ளது.
அமெரிக்காவில் இவ்வாறாக வட்டி விகிதங்களை உயர்த்துவதால் மட்டுமே நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் எனச் செயல்படும் ஃபெடரலின் நடவடிக்கைகளைத் தவறு என்கிற வாதங்களும் எழுந்துள்ளன. அதாவது, வாங்கும் சக்தியைக் குறைப்பதைக்காட்டிலும், சப்ளையை அதிகப் படுத்தினால் விலை குறையும் என்கிற வாதங்கள் அதிகரித்து வருகின்றன.
ஆனால், சப்ளையை அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறுவனங்களின் லாப சதவிகிதமும் அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம், தேவை அதிகமாக இருப்பதுதான். அதனால், நிறுவனங்கள் தங்களின் விற்பனை விலையைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வாய்ப்பில்லை என்கிறபோது பண வீக்கம் தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பிருக்கிறது.
இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்தமாக, பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டுவிடும் என்கிற கருத்துகள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய சூழலில், உடனடியாக இல்லா விட்டாலும், 2023–ம் ஆண்டில் ஒரு கட்டத்துக்குமேல் வட்டி விகிதங்களை உயர்த்துவது நிறுத்துவது தொடர்பான முடிவுகளை ஃபெடரல் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் கருதப்படுகின்றன. இதன் தாக்கம் தங்கத்தின் விலையில் மிகப் பெரிய அளவில் விலை ஏற்றத் துக்கான முகாந்திரங்கள் இருக்கின்றன.
ஆகையால், தங்கம் விலை இறங்கும் இந்த சமயத்தில், அதை வாங்கும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்க முதலீட்டுக்கு கோல்டு இ.டி.எஃப், அரசாங்கம் வெளியிடுகின்ற சாவரின் கோல்டு பாண்ட் போன்ற வற்றில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து ஆதாயங்களைக் காணலாம்.