நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும் ஹைபிரிட் ஃபண்டுகள்!

ஹைபிரிட் ஃபண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹைபிரிட் ஃபண்டுகள்

கார் வாங்க, சொந்த வீடு வாங்க வீட்டுக் கடனுக்கான முன்பணம் திரட்ட ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்...

முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை; அதே நேரத்தில், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் வேண்டும்; வருமான வரியும் குறைவாகக் கட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏற்றதாக ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds) உள்ளன.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன்  நிதி ஆலோசகர், Aismoney.com

ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால்..?

முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப் படும் நிதியானது கடன் பத்திரங்கள், பணச் சந்தை பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த நிதி ஆவணங்கள் ஆகிய வற்றில் கலந்து முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் வகையே ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் எனப்படுகிறது.

ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் பல வகைகளாக உள்ளன. அவற்றில் முக்கியமான வகைகளையும் அவை யாருக்கு ஏற்றது என்பதையும் பார்ப்போம்.

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும்
ஹைபிரிட் ஃபண்டுகள்!

கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட்...

இந்த வகை ஃபண்டில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்பட்ட நிதி சுமார் 75% முதல் 90% வரை அதிக ரிஸ்க் இல்லாத கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். மீதி பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் திட்டங் களில் முதலீடு செய்யப்படும்.

ஃபிக்ஸட் டெபாசிட்  வட்டி வருமானத்தை விட அதிக வருமானம் எதிர்பார்ப்பவர்கள் இந்த வகை ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் இருப்பது நல்லது.

டாப் ஃபண்டுகளில் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 9 - 10% ஆகவும், மூன்றாண்டு களில் 9.5% - 12 சதவிகிதமாகவும் இருக்கிறது.

நீண்ட காலத்தில் வருமான வரிக்குப் பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வருமானம் இந்த ஃபண்டுகள் மூலம் கிடைக்கும். மூன்றாண்டுகளுக்குள் யூனிட்டுகளைப் பெற்றால், ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப குறுகிய கால மூலதன ஆதாய வரியைக் கட்ட வேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து யூனிட்டுகளை விற்று லாபம் பார்க்கும்போது நீண்ட கால மூலதன ஆதாய வரியாகப் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% கட்ட வேண்டும்.

பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்ட்...

இந்த வகை ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணமானது நிறுவனப் பங்குகளில் 40% முதல் 60% முதலீடு செய்யப்படும். மீதமுள்ள பணம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்டுகள் கன்சர்வேட்டிவ் ஃபண்டுகளைவிட சற்று ரிஸ்க் அதிகமானது.

முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருந்தால் நல்லது. இந்த வகை யிலான ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகளின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 7 சதவிகிதமாகவும், மூன்றாண்டுகளில் 8 - 13 சதவிகிதமாகவும் இருக்கிறது.

வருமான வரியைப் பொறுத்தவரை, இதற்குமுன் நாம் பார்த்த கன்சர்வேட்டிவ் ஃபண்டுகளுக்கு எப்படி வரி கட்ட வேண்டுமோ, அதேபோல இந்த ஃபண்டின் லாபத்துக்கும் கட்ட வேண்டும்.

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும்
ஹைபிரிட் ஃபண்டுகள்!

அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட்

இந்த வகை ஃபண்டில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், 65% முதல் 80% வரை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப் படும். இதன் முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஐந்து ஆண்டுகளுக்கு உட்பட்டதாக இருந்தால் நல்லது.

இந்த வகையிலான ஃபண்டுகளில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 - 18 சதவிகிதமாகவும், மூன்றாண்டுகளில் 15 - 20 சத விகிதமாகவும் இருக்கிறது.

இந்த வகை ஃபண்டுகளில், நிறுவனப் பங்குகளில் 65 சத விகிதத்துக்கு மேலான தொகை முதலீடு செய்யப் படுவதால், வருமான வரியைப் பொறுத்தவரையில் ஈக்விட்டி ஃபண்டாக எடுத்துக் கொள்ளப்படும். அதாவது, முதலீடு செய்து ஓராண்டுக்குள் யூனிட்டுகளை விற்று லாபம் பார்த்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15% வருமான வரி கட்ட வேண்டும். இதுவே ஓராண்டு கழித்து யூனிட்டுகளை விற்று லாபம் பார்க்கும்போது நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு, ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வருமான வரி கட்ட வேண்டும்.

டைனமிக் அஸெட் அலொ கேஷன் ஃபண்ட்

டைனமிக் அஸெட் அலொகேஷன் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டைப் பொறுத்தவரை, முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதியானது கடன் பத்திரங்கள் மற்றும் நிறுவனப் பங்குகளில், பங்குச் சந்தையின் சூழ்நிலைக்கேற்ப அதிகமாகவோ, குறைத்தோ முதலீடு செய்யப்படும்.

இந்த ஃபண்டில் நிறுவனப் பங்குகள் மற்றும் ஆர்பிட்ரேஜ் (Arbitrage) ஆவணங்கள் ஆகியவற்றில் மொத்தம் 65% மற்றும் அதற்குமேல் முதலீடு செய்யப்படும். ஆர்பிட்ரேஜ் என்பது இரு வேறு சந்தைகளில் காணப்படும் விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பதாகும். உதாரணமாக, ஒரு பங்கின் விலை பி.எஸ்.இ சந்தையில் குறைவாகவும் என்.எஸ்.இ சந்தையில் அதிகமாகவும் காணப்பட்டால், பி.எஸ்.இ-யில் வாங்கி, என்.எஸ்.இ-யில் விற்று லாபம் பார்ப்பதுதான் ஆர்பிட்ரேஜ்.

இந்த ஃபண்டில் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது லாபத்தை வெளியே எடுத்து கடன் பத்திரங்களில் முதலீட்டை அதிகரிப்பார்கள். இதுவே, பங்குச் சந்தை மிகவும் இறங்கி காணப்படும் சூழ்நிலையில் கடன் பத்திரங்களை விற்று, பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிப்பார்கள்.

இந்த ஃபண்ட் பிரிவின் டாப் ஃபண்டுகளின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10.5 - 11.5 சதவிகிதமாகவும், மூன்றாண்டுகளில் 15 - 18 சதவிகிதமாகவும் உள்ளது.

இந்தப் ஃபண்டுகளின் வருமானம் கிட்டத்தட்ட பேலன்ஸ்டு ஹைபிரிட் ஃபண்டுகள் அளவுக்கு இருக்கும். ஆனால், ரிஸ்க் என்பது அதைவிடக் குறைவாக இருக்கும். முதலீட்டுக் காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்குமேல் இருப்பது நல்லது.

லாபத்துக்கான வருமான வரியைப் பொறுத்தவரை, இந்த ஃபண்டுகளும் ஈக்விட்டி ஃபண்டுகளைப் போலவே கணக்கிடப் படும். அதாவது, ஓராண்டுக்குள் விற்று லாபம் பார்த்தால், குறுகிய கால மூலதன ஆதாய வரியாக 15% கட்ட வேண்டும். ஓராண்டு கழித்து விற்று லாபம் பார்த்தால், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டும்.

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும்
ஹைபிரிட் ஃபண்டுகள்!

மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்...

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், குறைந்தபட்சம் மூன்று சொத்துப் பிரிவுகளில் (Asset Classes) தலா 10% முதலீடு செய்யப்படுவது மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட் ஆகும். மூன்று சொத்துப் பிரிவுகள் என்கிறபோது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டில் வெளிநாட்டு நிறுவனப் பங்கு களில் முதலீடு செய்யப்பட்டால், தனி சொத்துப் பிரிவாக எடுத்துக்கொள்ளப்படாது. நிறுவனப் பங்குகளின் கணக்கில்தான் எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபண்டுகளில் முதலீட்டுக் காலம் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்டதாக இருப்பது நல்லது.

ஹைபிரிட் ஃபண்டுகளில் மிக அதிக வருமானத்தை மல்ட்டி அஸெட் ஃபண்டுகள் தான் கொடுத்திருக்கின்றன. காரணம், இதன் முதலீட்டுக் கலவையில் இடம் பெற்றிருக் கும் தங்கம் ஆகும்.

பொதுவாக, பொருளாதார வளர்ச்சி குறைவு, மந்தநிலை, போர் நடக்கும் காலங்களில் தங்கத்தின் விலை அதிகரித்து காணப்படும். டாப் ஃபண்டு களின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 - 21.5 சதவிகிதமாகவும் மூன்றாண்டு களில் 20 - 31.5 சதவிகிதமாகவும் உள்ளது.

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும்
ஹைபிரிட் ஃபண்டுகள்!

ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட்

முதலீட்டாளர்களிட மிருந்து திரட்டப்படும் பணம், குறைந்தபட்சம் 65%, அதிக பட்சம் 90% வரை நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஆவணங்களில் முதலீடு செய்யப்படும். அதாவது, நிறுவனப் பங்குகளில் 20-25%, ஆர்பிட்ரேஜ் முறையில் 40-45% முதலீடு செய்யப்படும். குறைந்தபட்சம் 10% கடன் சார்ந்த ஆவணங்களிலும் முதலீடு செய்யப்படும். இந்த ஃபண்ட் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்ட் எனப்படும்.

இந்த ஃபண்டில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் ஆர்பிட்ரேஜ் முதலீட்டு முறையும் கலந்து பின்பற்றப்படுவதால், இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவு என்பதுடன் என்.ஏ.வி ஏற்ற இறக்கமும் குறைவாக இருக்கும்.

இந்த ஃபண்டின் ரிஸ்க்கானது அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளைவிடக் குறைவாகும். முதலீட்டுக் காலம் இரண்டு முதல் மூன்றாண்டுகளாக இருப்பது நல்லது. வருமான வரியைப் பொறுத்தவரையில் இந்த ஃபண்டும் ஈக்விட்டி ஃபண்டாக எடுத்துக் கொள்ளப்படும். இந்த ஃபண்ட் பிரிவின் டாப் ஃபண்டுகளின் வருமானம் கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் 8.5 - 9 சதவிகிதமாகவும், மூன்றாண்டுக் காலத்தில் 10 - 12 சதவிகிதமாகவும் உள்ளது.

என்ன தேவை, யாருக்கு ஏற்றது?

இந்த ஹைபிரிட் ஃபண்டுகள் அனைத்தும் ஓப்பன் எண்டெட் ஃபண்ட் ஆகும். அதாவது, இவற்றில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்து, எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்று பணமாக்கிக்கொள்ளலாம்.

இந்த ஃபண்டுகளில் கார் வாங்க, சொந்த வீடு வாங்க வீட்டுக் கடனுக்கான முன்பணம் திரட்ட முதலீடு செய்யலாம். மேலும், பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணத் துக்கு சுமார் ஐந்து ஆண்டுகள் இருக்கும் நிலையிலும் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ரிஸ்க் எடுக்கத் தயங்கி, முழுக்க முழுக்க கடன் சந்தை அல்லது வங்கி எஃப்.டி-களில் மட்டும் முதலீடு செய்பவர்கள், கொஞ்சம் ரிஸ்க் எடுத்து அதிகம் லாபம் பார்க்க நினைத்தால் ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள்...

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் குறைந்தபட்சம் 65% வரையில் நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த ஆவணங்களில் ஆர்பிட்ரேஜ் முறையில் முதலீடு செய்யப்படும். ஆர்பிட்ரேஜ் என்பது இருவேறு சந்தைகளில் காணப்படும் விலை வித்தியாசத்தைப் பயன்படுத்தி லாபம் பார்ப்பதாகும்.

அதிக லாபம் அல்லது குறைந்த இழப்பு என்பதுதான் இந்த ஃபண்டின் நோக்கம். பங்குச் சந்தைகளில் இருக்கிற பலவிதமான முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டுபிடித்து, அதற்கு இடை யில் உள்ள விலை வித்தியாசங்கள் மூலமாக லாபம் சம்பாதிப்பதுதான் இதன் முதலீட்டு பாணியாகும். இந்த ஃபண்டில் ஒரே நேரத்தில் ஒரு நிறுவனப் பங்கிலும், அதன் ஃப்யூச்சர்ஸ் ஆப்ஷனிலும் முதலீடு செய்யப்படும். இதனால் இந்த ஃபண்டின் ரிஸ்க் குறைவாக உள்ளது; அதற்கேற்ப வருமானமும் சற்றுக் குறைவாக இருக்கும். அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகளைவிட இதன் ரிஸ்க் குறைவு. முதலீட்டுக் காலம் 2 ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக இருப்பது நல்லது.

கடந்த ஐந்து ஆண்டுக் காலத்தில் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகளின் வருமானம் 5.6 - 5.75 சதவிகிதமாக உள்ளது. மூன்றாண்டுக் காலத்தில் சுமார் 5 சதவிகிதமாக உள்ளது. ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்ட் அளவுக்கு வருமானம் கிடைக்க வேண்டும். அதே நேரத்தில், அதிக ரிஸ்க் இருக்கக் கூடாது; கடன் ஃபண்டுகளைவிட வருமான வரி குறைவாகக் கட்ட வேண்டும் என்பவர்களுக்கு, இந்த ஃபண்ட் ஏற்றதாகும். வருமான வரியைப் பொறுத்தவரையில் இந்த ஃபண்ட் ஈக்விட்டி ஃபண்ட் போல கணக்கிடப்படும்.