
ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் டிஜிட்டல் கோல்டு வாங்கப் பரிசீலனை செய்யலாம்...!
தங்கத்தை ஆபரணம், தங்கக் காசுகள், கோல்டு இ.டி.எஃப், தங்கப் பத்திரங்கள் தங்கம் சார்ந்த பரஸ்பர நிதி போன்றவை வாயிலாக முதலீடு செய்வது நமக்கு வழக்கமான வழிமுறைகளாக இருக்கின்றன. இந்த நிலையில், சமீபத்தில் தங்கத்தை ஆன்லைன் மூலமாக சந்தை யில் வாங்கி, ஆன்லைன் மூலமாகவே விற்கும் முதலீட் டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் என்னென்ன, எவ்வளவு காலம் முதலீட்டை வைத்திருக்கலாம், நடை முறைச் சிக்கல்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொள்வோம்.

டிஜிட்டல் கோல்டு என்றால்..?
நாம் கடையில் வாங்கும் தங்கம் போன்றதுதான். ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வாங்கும் டிஜிட்டல் கோல்டானது, அங்கீகரிக்கப் பட்ட தங்கப் பெட்டக நிறுவனங்களால் பாதுகாக்கப் பட்டு சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இது 24 காரட் தங்கம் என்பதால், எப்போது வேண்டுமானாலும், வாங்க வும் விற்கவும் முடியும்.
டிஜிட்டல் கோல்டுக்கும் கடையில் வாங்கும் (பிசிக்கல்) தங்கத்துக்கும் என்ன வித்தியாசம்?
ஆன்லைன் மூலமாக எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் டிஜிட்டல் கோல்டை வாங்கவும் விற்கவும் முடியும் என்பது சிறப்பு அம்சமாகும். அதே சமயம், கடைகளில் தங்கம் வாங்கும்போதும், விற்கும்போதும் சராசரியாக 10% இழப்பு காண நேரிடும். மேலும், பிசிக்கலாகத் தங்கத்தை வாங்கும்போது அதைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நம்மைச் சார்ந்தது. ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கினால், அதை பாதுகாக்க வேண்டிய பிரச்னை இருக்காது.
எதற்காக டிஜிட்டல் கோல்டை வாங்குகிறார்கள்?
இப்போதைய இளைய தலைமுறையினரின் விருப்பம் ஆபரணத் தங்கத்தின் மீதில்லாமல், எலெக்ட்ரானிக் வடிவத்தாலான தங்க முதலீட்டை நாடுவதால், டிஜிட்டல் கோல்டு மீது மோகம் ஏற்பட்டுள்ளது. ஆபரண நகை உடனடியாகத் தேவை இல்லாதவர்கள், டிஜிட்டல் தங்கத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய் கிறார்கள். தங்கத்தின் மீது குறுகிய காலத்தில் ஏற்படுகிற ஏற்ற, இறக்கங்களைப் பயன்படுத்தி லாபம் பார்க்க முடியும் என்கிற எண்ணத்தில், ஆன்லைன் வர்த்தகம் செய் பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டிஜிட்டல் கோல்டு... கிடைக்கும் பலன்கள் என்ன?
* வாங்கும் முறை எளிதாக இருக்கிறது. வங்கிக் கணக்கு, மொபைல், இன்டர்நெட் வசதி இருந்தால் உடனடியாக வாங்கிட முடியும்.
* 24 காரட் தங்கத்தில் முதலீடு செய்வதால், சுத்த மான தங்கம் கிடைக்கிறது. 24 மணி நேரமும் வர்த்தகம் நடைபெறுவதால், எப்போது வேண்டு மானாலும் பணமாக மாற்ற முடியும்.
* நுகர்வோர் வாங்கும் தங்கத்துக்கு இணையாக (Safety wallets) தங்கப் பெட்டகத்தில் தங்கமாக சேமிக்கப்படுகிறது. ஒருவரிடம் உள்ள நிதிக்கேற்ப மாதம்தோறும் இதில் முதலீடு செய்யலாம்.
* டிஜிட்டல் கோல்டாக வாங்கப்படும் தங்கத்தை கட்டித் தங்கமாக டெலிவரி எடுத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் கோல்டு முறையில் சேமித்த தங்கத்தை வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட கடைகளில் தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.
சுத்தமான தங்கம், எளிதில் பணமாக மாற்றக்கூடிய வர்த்தகம், வங்கி டெபிட் கார்டு, யு.பி.ஐ மூலமாக எளிதில் வாங்குவது, வாங்கி ஒரே நாளில் விற்க முடிவது போன்றவை மற்ற முக்கியமான அம்சமாகும். இ.டி.எஃப், கோல்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இந்த வசதி இல்லை.

ஆன்லைன்மூலம் வாங்கும் தங்கத்துக்கு உத்தரவாதம் உண்டா, இதை நெறிமுறைப்படுத்தும் அதிகாரம் யாருக்கு உண்டு?
இதுவரை இந்த வர்த்தகத்தை அரசாங்கமோ, ரிசர்வ் வங்கியோ அங்கீகரிக்கவில்லை. ஆன்லைன் தங்க வர்த்தகத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அரசோ, ரிசர்வ் வங்கியோ முதலீட் டாளர்களுக்குப் பாதுகாப்பு தராது. வங்கிகளுக்கு ஆ.பி.ஐ, பங்குச் சந்தைகளுக்கு செபி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கண்காணிக்க ஐ.ஆர்.டி.ஏ.ஐ என அமைப்புகள் இருப்பதுபோல, ஆன்லைன் தங்க வர்த்தகத்தைக் கண்காணிக்க அரசு சார்பில் எந்தக் கண்காணிப்பு அமைப்பும் இதுவரை இல்லை. எனவே, இதில், முதலீடு செய்வது முதலீட்டாளர்களின் தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். டிஜிட்டல் கோல்டு முதலீட்டைக் கண்காணிக்க அரசுத் தரப்பில் ஓர் அமைப்பு இனிவரும் காலத்தில் உருவாக்கப்படலாம். அப்போது இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் இந்த முதலீட்டை நாட வாய்ப்புண்டு. அதுவரை, அதிகம் ரிஸ்க் எடுக்க நினைக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் டிஜிட்டல் கோல்டு வாங்கப் பரிசீலனை செய்யலாம்!