பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

கொஞ்சம் ரிஸ்க்... கூடுதல் வருமானம்... கைகொடுக்கும் மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்!

மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்

பங்கு முதலீடு மிகவும் பரவலாக்கப்பட்டு, ரிஸ்க் குறைகிறது; கூடவே லாபம் அதிகரிக்கிறது...

ஒரு முதலீட்டுக் கலவையின் (Portfolio) மூலமான வருமானம் நீண்ட காலத்தில் அதிகமாக இருக்கக் காரணம், முதலீட்டுத் தொகை எந்த மாதிரியான சொத்துப் பிரிவு களில் பிரித்து முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் 93.4% சார்ந்திருக்கிறது என்கிறது, ஒரு பகுப்பாய்வு. அந்த வகையில் முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்வது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இப்படிப் பிரித்து முதலீடு செய்வது முதலீட்டுக் கலவையின் ஏற்ற இறக்கத்தைக் குறைக்கிறது.

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

ஒருவர் பணத்தைப் பிரித்து முதலீடு செய் வதற்குப் பதிலாக, ஒரே ஒரு திட்டத்தில் முதலீடு செய்தபின், அந்தத் திட்டத்தை நடத்துபவர்களே பல பிரிவுகளில் முதலீடு செய்யும் வேலையை செய்துவிடுவார்கள் எனில், அது முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வசதிதானே... அது போன்ற ஒரு திட்டம்தான் மல்ட்டி அஸெட் ஃபண்ட் ஆகும்.

முக்கியமான முதலீட்டுப் பிரிவுகள்...

இந்த ஃபண்ட் பற்றி விரிவாகப் பார்க்கும்முன், இதில் உள்ள முக்கியமான முதலீட்டுப் பிரிவுகள் பற்றிப் பார்ப்போம். பொதுவாக, ஒரு முதலீட்டாளர் பங்குச் சந்தை, கடன் சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம் என நான்கு முக்கியமான சொத்துப் பிரிவுகளில் பணத்தைப் பிரித்து முதலீடு செய்ய முடியும்.

இதில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்கிறபோது நேரடியாக நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது நீண்ட காலத்தில் அதிக வருமானத்தைத் தரும். ஆனால், இதில் ரிஸ்க்கும் அதிகம். சந்தையின் ஏற்ற, இறக்கத்தில் தனிப்பட்ட பங்குகள் எப்படி செயல்படும் எனத் துல்லியமாகக் கணிக்க முடியாது. ஆனால், பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் முதலீடு என்று வரும்போது அதை நிர்வகிக்க நிபுணர்கள் இருப்பதால், நீண்ட காலத்தில் லாபகரமானதாகவும் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எடுத்துக் கொண்டால், அதன் முதலீட்டுக் கலவையில் சுமார் 30 முதல் 50 பங்குகள் வரை இடம்பெற்றிருக்கும். மேலும், ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட், லார்ஜ்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்ட் வகைகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இடம் பெற்றிருக்கும். அந்த வகையில், பங்கு முதலீடு மிகவும் பரவலாக்கப்பட்டு, ரிஸ்க் குறைகிறது; கூடவே லாபம் அதிகரிக்கிறது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் என்கிறபோது அதில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து சிறு முதலீட்டார்கள் பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். கூடவே, மொத்த முதலீடும் செய்ய வாய்ப்பிருப்பதால், தற்போது பலரும் அதை நாடுகிறார்கள்.

கடன் சந்தை சார்ந்தது என்கிறபோது ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள் ஆகியவை அடங்கும். ரியல் எஸ்டேட் என்கிறபோது மனை சொத்து மற்றும் ரெய்ட் (REIT -Real Estate Investment Trust] ஆகியவை அடங்கும். தங்கம் என்கிறபோது நகைகள், தங்கப் பத்திரம், கோல்டு இ.டி.எஃப், கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட் ஆகியவை அடங்கும்.

ஒவ்வொரு சொத்து வகையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நல்ல வருமானத்தைக் கொடுக்கும். உதாரணமாக, ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் காலத்தில் பங்குச் சந்தை நல்ல வருமானம் கொடுக்கும். பொருளாதார நெருக்கடி, போர் போன்ற சூழல் நிலவும்போது தங்கத்தின் விலை உயரும். இப்படி ஒவ்வொரு சொத்துப் பிரிவும் வித்தியாசமாக செயல்படுவதால், கலவையான சொத்துப் பிரிவு இருக்கும்போது அந்த முதலீட்டுக் கலவை எப்போதும் லாபம் கொடுப்பதாக இருக்கும்.

இனி மல்ட்டி அஸெட் ஃபண்டுகள் பற்றிப் பார்ப்போம்.

மல்ட்டி அஸெட் ஃபண்டுகள்...

மல்ட்டி அஸெட் ஃபண்ட் என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆகும். இந்தத் திட்டத் தில் திரட்டப்படும் நிதி பல்வேறு சொத்துப் பிரிவுகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. குறிப்பாக, பங்குச் சந்தை, கடன் சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது தங்கம் ஆகிய சொத்துப் பிரிவுகளில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது.

முதலீட்டுத் தொகை இப்படி பிரித்து முதலீடு செய்யப்படுவதால் முதலீட்டாளர்களுக்கு முக்கியமாக மூன்றுவிதமான பலன்கள் கிடைக்கின்றன. பங்குச் சந்தை இறக்கத்தால் முதலீட்டுக் கலவை மதிப்பு இறக்கம் என்பது குறைவாக இருக்கும். இரண்டு, முதலீடு பன்முகப் படுத்தப்படுவதால், அதிக நஷ்டம் அடைய வாய்ப்பில்லை. மூன்று, பங்குச் சந்தை இறக்கத்தில் இருக்கும் காலத்திலும் ஒட்டுமொத்த முதலீட்டுக் கலவை பாசிட்டிவ் வருமானத்தைத் தருவதாக இருக்கும்.

செபியின் வரையறைப்படி, மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டில் திரட்டப்படும் நிதி, குறைந்தபட்சம் மூன்று சொத்துப் பிரிவுகளில் (Asset Classes) தலா 10% முதலீடு செய்யப்பட வேண்டும். இங்கே மூன்று சொத்துப் பிரிவு என்கிறபோது நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். இந்த மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்டில் வெளிநாட்டு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டால், தனி சொத்துப் பிரிவாக எடுத்துக் கொள்ளப்படாது. இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்கும் ஓப்பன் எண்டெட் ஃபண்ட் ஆகும்.

தற்போதைய நிலையில், இந்தியாவில் மொத்தம் 12 மல்ட்டி அஸெட் மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன. மல்ட்டி அஸெட் ஃபண்டுகளில் நிறுவனப் பங்குகளில் 65 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்யப்பட்டிருந்தால் அவற்றுக்கு மூலதன ஆதாய வரி பங்குச் சந்தை ஃபண்டுகளுக்கு போல் விதிக்கப்படுகிறது. அதாவது, நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கு வரி விலக்கு இருக்கிறது. அதற்கு மேற்படும் மூலதன ஆதாயத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். ஓராண்டுக்கு உட்பட்ட குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு 15% வரி கட்ட வேண்டும்.

இதுவே திரட்டப்பட்ட நிதியில் பங்குகளில் 65 சதவிகிதத் துக்குக் குறைவாக முதலீடு செய்யப்பட்டிருந்தால் கடன் ஃபண்டுகளுக்கு உரிய வரி விதிப்பு இருக்கும். அதாவது, மூன்றாண்டுகளுக்குள் யூனிட்டுகளை விற்றால் குறுகிய கால மூலதன ஆதாயத்துக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி விதிப்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரி கட்ட வேண்டும். மூன்றாண்டுக்குமேல் விற்றால் ஆதாயத்துக்கு பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

வருமானம் எப்படி?

2022 அக்டோபர் 21-ம் தேதி நிலவரப்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் மல்ட்டி அஸெட் ஃபண்ட் பிரிவு சராசரியாக ஆண்டுக்கு 12.90% வருமானம் தந்திருக்கிறது. டாப் 5 ஃபண்டுகள் தந்த வருமானம் 15% - 30 சதவிகிதமாக இருக்கிறது. கடந்த ஐந்துஆண்டுகளில் டாப் 5 ஃபண்டுகள் தந்த வருமானம் 11% முதல் 20% ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் பொறுத்தவரை, கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் உறுதியாகக் கிடைக்காது என்றாலும் இதே அளவுக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

யாருக்கு ஏற்றது?

மிக அதிக ரிஸ்க் எடுக்காமல் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேல் எதிர்பார்ப்பவர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள், மூத்த குடிமக்களுக்கு இந்த மல்ட்டி அஸெட் ஃபண்ட் ஏற்றதாக உள்ளது.