வரிசைகட்டும் புதிய ஃபண்டுகள்... பார்க்க வேண்டிய பாசிட்டிவ் - நெகட்டிவ் பாயின்டுகள்!

கவர் ஸ்டோரி
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் நம் மக்களிடம் வேகமாக அதிகரித்து வருகிறது. ஒருவருடைய அனைத்து நிதித் தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்கிற மாதிரி மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இருப்பதே இதற்குக் காரணம்.
ஆனால், கடந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் புதிய ஃபண்டுகள் வெளியிட (New Fund Offer - NFO) சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தடை விதித்திருந்தது. புதிதாக ‘பூலிங் ஆஃப் ஃபண்டுகள்/யூனிட்டு’கள் என்ற சிஸ்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்ததே இதற்குக் காரணம். இந்தப் புதிய சிஸ்டம் எப்படி இருக்கிறது என்பது தெரியும் வரை புதிய ஃபண்டுகள் வெளியிடத் தடை விதித்திருந்தது செபி. தற்போது இந்தத் தடை முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்த ஜூலை மாதத்தில் இருந்து புதிய ஃபண்டுகள் வெளியிட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தயாராகி இருக்கின்றன.
புதிதாக வெளியிடப்பட உள்ள ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பாசிட்டிவ் - நெகட்டிவ் அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் பேசினோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
‘‘மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல்வேறு வகையான உத்திகளின் அடிப்படையில் ஃபண்டுகளை அறிமுகப்படுத்துகின்றன. புதிதாக ஒரு ஃபண்டை (NFO) அறிமுகப்படுத்தும்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன. இந்த என்.எஃப்.ஓ ஆஃபர் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். ஓப்பன் என்டட் ஃபண்டாக இருந்தால், சில வாரங்களுக்குப் பிறகு அதில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யத் தொடங்கிவிடலாம். அப்போது இருக்கும் என்.ஏ.வி-க்கு இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். அந்த என்.ஏ.வி-யானது அப்போதைய சந்தை நிலவரம் குறித்து 10 ரூபாயிலிருந்து ஏறவோ, இறங்கவோ செய்யலாம். குளோஸ் என்டட் திட்டங்கள் எனில், என்.எஃப்.ஓ வரும்போது மட்டும்தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு முதலீடு செய்ய முடியாது.

என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்யலாமா?
என்.எஃப்.ஓ-வில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாமா என்று பார்த்தால், பொதுவாகவே ஏற்கெனவே நல்ல அனுபவம் உள்ள ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்கும், சந்தையில் நீண்ட காலமாக இருக்கும் ஃபண்டில் முதலீடு செய்வதே நல்லது. ஏற்கெனவே சந்தையில் உள்ள ஃபண்ட் எனில், அதன் செயல்பாடு, கடந்த கால வரலாறு ஆகியவை நமக்குத் தெரியும் என்பதால், நாம் அலசி ஆராய்ந்து அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
ஆனாலும் புதிய ஃபண்ட் வெளியீடு களுக்கு முதலீட்டாளர்களிடையே தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமாகவே இருக்கிறார்கள். அதிக அளவில் அதில் முதலீடும் செய்கிறார்கள். எனவே, ஃபண்ட் நிறுவனங்கள் புதிய புதிய ஃபண்டுகளை அவ்வப்போது வெளியிடவே செய்கின்றன.
அதே சமயம், செபியின் கட்டுப்பாட்டின்படி, ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு கேட்டகரியில் ஒரு ஃபண்ட் மட்டுமே வைத்திருக்க முடியும். பெரிய ஃபண்ட் நிறுவனங்கள் எல்லாம் பெரும்பாலான கேட்டகரிகளில் ஃபண்டுகளை வைத்திருக் கின்றன. சிறிய ஃபண்ட் நிறுவனங்கள் சில கேட்டரிகளில் மட்டுமே ஃபண்டுகளை வைத்திருக்கும். அந்த ஃபண்ட் நிறுவனத்திடம் இல்லாத கேட்டகரி ஃபண்டுகளை அவ்வப் போது வெளியிடுகின்றன. இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முன், அந்த நிறுவனம் பற்றியும், ஃபண்ட் மேனேஜர் பற்றியும் தெரிந்துகொண்டு முதலீடு செய்யலாம்.
என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்வதில் இருக்கும் சாதகமான அம்சம் என்னவெனில், சந்தை ஏற்றத்தில் இருக்கிறதா, இறக்கத்தில் இருக்கிறதா என்பது குறித்து பயப்படும்போது எஸ்.டி.பி முறையில் முதலீடுகளை மேற்கொள்வோம். அதற்குப் பதிலாக என்.எஃப்.ஓ-வில் பணத்தை முழுவதுமாக முதலீடு செய்தால், ஃபண்ட் மேனேஜர்கள் 3, 6 மாத அடிப்படையில் சீராகவே முதலீடுகளை மேற்கொள்வார். எனவே, எஸ்.டி.பி-க்கு சமமாக இந்த முறையிலும் முதலீடு ஆவரேஜ் ஆகிவிடும்.
ஆக்டிவ் மற்றும் பேசிவ் என்.எஃப்.ஓ ஃபண்டுகள்...
தற்போது புதிதாக வெளிவரக்கூடிய என்.எஃப்.ஓ-களில் நிறைய இண்டெக்ஸ் ஃபண்டுகள் உள்ளன. இந்த ஃபண்டுகள் எந்த இண்டெக்ஸை சார்ந்து செயல்படுகின்றனவோ, அந்த இண்டெக்ஸுக்கேற்பவே ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும். இண்டெக்ஸ் என்ன லாப நஷ்டத்தில் இருக்கிறதோ, அதே அளவு லாப, நஷ்டத்தை இண்டெக்ஸ் ஃபண்டுகள் வழங்கும். இதை பேசிவ் ஃபண்டுகள் என்றும் சொல்வோம்.
ஆனால், ஆக்டிவ் ஃபண்டுகள் என்பவை தனது போர்ட் ஃபோலியோவை அவ்வப்போது மாற்றம் செய்பவை. அதாவது, மோசமாகச் செயல்படும் பங்குகளை விற்றுவிட்டு, நன்கு லாபம் தர வாய்ப்புள்ள பங்குகளை வாங்கி, தேவைப்படும்போது போர்ட்ஃபோலியோவை சரிசெய்வதுதான் ஆக்டிவ் ஃபண்டு களின் வேலை.

எடெல்வைஸ் ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்ட்...
இந்த ஆக்டிவ் கேட்ட கரியில் பார்க்கும்போது, தற்போது ஓப்பனில் உள்ள புதிய ஃபண்ட் எடெல்வைஸ் ஃபோகஸ்ட் ஈக்விட்டி ஃபண்ட் ஆகும். இந்த ஃபண்ட் ஃபோகஸ்டு கேட்ட கரியில் உள்ளது. இதில் 30 பங்குகளுக்கு மேல் இருக்காது. இவை கான்சென்ட்ரேட்டட் ஃபோகஸ்ட் பங்குகளாக இருக்கும் என்பதால், அதிக ரிஸ்க் இருக்கும். அதிக ரிஸ்க் எனில், ரிட்டர்னும் அதிகமாக இருக்கும். இந்த ஃபண்டு மல்ட்டிகேப் ஃபண்ட் போலவே செயல்படும். ஏனெனில், இதில் பங்குகள் தேர்வு லார்ஜ், மிட்கேப், ஸ்மால் கேப் எனக் கலவை யாக இருக்கும். பொதுவாக, இந்த ஃபண்டில் லார்ஜ் கேப் பங்குகள் அதிகமாகவே இருக்கும். பெரும்பாலான ஃபோகஸ்ட் ஃபண்டுகளில் அப்படித்தான் இருக்கிறது. இந்த நிறுவனமும் இதையே ஃபாலோ செய்கிறது.
குவான்ட் லார்ஜ்கேப் ஃபண்ட்...
எடெல்வைஸ் ஃபோகஸ்டு தவிர, ஜூலை 20-ம் தேதி அன்று குவான்ட் லார்ஜ்கேப் ஃபண்ட் ஓப்பன் ஆகிறது. குவான்ட் நிறுவனத்தின் பல ஃபண்டுகள் கடந்த பல ஆண்டுகளாகவே சராசரியை விட அதிகமாகவும், பென்ச் மார்க்கைவிட கூடுதலாகவும், கேட்டகரி சரா சரியைவிடவும் அதிகமாக வருமானத்தைத் தந்துள்ளன. எஸ்கார்ட்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைக் கைப்பற்றி, அதை குவான்ட் என பெயர் மாற்றம் செய்து செயல்பட்டு வருகிறது. இது சிறிய ஃபண்ட் நிறுவனம் என்றாலும், ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்து நிர்வாகம் உள்ளது. இன்று நிலவும் ஏற்ற, இறக்கமான சந்தைச் சூழலில் லார்ஜ் கேப்பில் உள்ள ரிஸ்க்கே இதில் இருப்பதால், இந்த ஃபண்ட் நன்கு செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.

ஐ.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்சுனிட்டி ஃபண்ட்...
ஐ.டி.எஃப்.சி. நிறுவனத்திடம் இதுவரை இப்படி மிட்கேப் வகை ஃபண்ட் எதுவும் இல்லை. இப்போதுதான் புதிதாக இந்த கேட்டகரியில் ஃபண்ட் கொண்டுவருகிறது. இதில் குறைந்தது 65% மிட்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள 35% ஃபண்ட் மேனேஜரின் விருப்பப்படி லார்ஜ் அல்லது ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம். மிட்கேப் கேட்டகரியில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு இது நல்ல ஃபண்ட் தேர்வாக இருக்கும். பொதுவாக, நீன்டகால அடிப்படையில் எஸ்.ஐ.பி முறையில் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது ஆக்டிவ்வாக நிர்வகிக்கப்படும் ஃபண்டுகள் மற்ற இண்டெக்ஸ் ஃபண்ட் மற்றும் இ.டி.எஃப் விட நல்ல ரிட்டர்ன் தருகின்றன. அதிக ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள முதலீட்டாளர்கள் 7, 10 வருஷத்துக்கு பணம் தேவைப் படாதவர்கள் இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
டி.எஸ்.பி நிஃப்டி மிட்கேப் 150 குவாலிட்டி 50 இண்டெக்ஸ் ஃபண்ட்...
நிஃப்டி மிட்கேப் 150 நிறுவனங்கள் உள்ளன. இந்த 150 நிறுவனங்களில் நல்ல நிர்வாகத்திறன் உள்ள, நல்ல தொழில் வாய்ப்புகள் உள்ள, தரமான 50 நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்து முதலீடு செய்யும் ஃபண்ட் இது. இது ஒரு இண்டெக்ஸ் ஃபண்ட் ஆகும். நிஃப்டி மிட்கேப் இண்டெக்ஸ் சார்ந்த வருமானம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த ஃபண்டைக் கவனிக்கலாம்.
மோதிலால் ஆஸ்வால் எஸ்&பி பி.எஸ்.இ ஹெல்த்கேர் இ.டி.எப்
மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் ஏற்கெனவே மோதிலால் ஆஸ்வால் எஸ்&பி பி.எஸ்.இ ஹெல்த்கேர் இ.டி.எப் ஃபண்டும், மோதிலால் ஆஸ்வால் எஸ் & பி பி.எஸ்.இ ஃபைனான்சியல் எக்ஸ் பேங்க் 30 இண்டெக்ஸ் ஃபண்டும் வெளியிட்டிருக் கிறது. இவை இரண்டுமே இண்டெக்ஸ் சார்ந்த ஃபண்டு கள்தான். பென்ச்மார்க் ஒட்டிய வருமானத்தை எதிர்பார்க்கும் அல்லது இண்டெக்ஸ் மீது விருப்பம் உள்ள முதலீட்டாளர்கள் இவற்றில் முதலீடு செய்யலாம்.
தவிர, இந்த மாதிரி குறிப்பிட்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, அது எப்போது நன்கு செயல்படும், எப்போது நன்கு செயல்படாது என்பது நமக்குத் தெரியாது. அந்த ஃபண்டின் வரலாறு நமக்குத் தெரியாது என்ப தால், முதலீட்டாளர்களுக்கு சிரமத்தைத் தர வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக டைவர்சிஃபைடு ஆக்டிவ் அல்லது பேசிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

மிரே அஸெட் பேலன்ஸ்ட் அட்வான்டேஜ் ஃபண்ட்...
இந்தப் புதிய ஃபண்ட் வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி வரை சந்தையில் இருக்கும். இந்த நிறுவனம் ஈக்விட்டி பிரிவில் தொடர்ந்து சிறப் பான செயல்பாட்டை வெளிப்படுத் தி வந்திருக்கிறது.
இந்த நிறுவனம் முதலீட் டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக இருக்கிறது. ரிஸ்க் குறைவாகவோ, நடுத்தரமாகவோ இருக்க வேண்டும் என்று நினைப்ப வர்கள், பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டைத் தேர்வு செய்யலாம். சமீபத்தில் எஸ்.பி.ஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டை அறிமுகப்படுத்தி நிறைய முதலீட்டைத் திரட்டியுள்ளது. முழு ஈக்விட்டி ஃபண்டைவிட இதில் ரிஸ்க் ஓரளவு குறைவு. அதே சமயம், ரிட்டர்ன் அடிப்படையில் பார்த்தாலும், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட நல்ல வருமானம் தரக்கூடியது. இந்த ஃபண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வ தால், ரிஸ்க் ஓரளவு இருக்கும். இருந்தாலும் ஃபண்ட் மேனே ஜரின் பத்திரங்கள், பங்குகள் என பேலன்ஸ் செய்து முதலீடு செய்வதால், குறைவான அல்லது நடுத்தரமான ரிஸ்க் இருக்கலாம் என நினைப்ப வர்கள் பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
பரோடா மியூச்சுவல் ஃபண்டும், பி.என்.பி பரிபாஸ் ஒன்றாக இணைந்த பிறகு தற்போது ஃபிளக்சி கேப் ஃபண்டை என்.எஃப்.ஓ கொண்டு வருகிறது. ஜூலை 25 - ஆகஸ்ட் 5 வரை இது சந்தையில் இருக்கும். இவற்றில் உள்ள பல ஃபண்டுகள் நல்ல செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த ஃபண்டும் நல்ல செயல்படும் என எதிர்பார்க்கலாம்.
ஒயிட் ஓக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஃப்ளெக்சிகேப் ஃபண்டை வெளியிடுகிறது. இவர்கள் யெஸ் வங்கியின் மியூச்சுவல் ஃபண்டை விலைக்கு வாங்கி, தற்போது என்.எஃப்.ஓ வெளியிடவிருக்கிறது.
கில்ட் ஃபண்டுகள் - யு.டி.ஐ கில்ட் 10 வருட கில்ட் ஃபண்ட் மற்றும் யூனியன் கில்ட் ஃபண்ட்...
கில்ட் ஃபண்டுகள் அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய ஃபண்டுகள் ஆகும். வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது இவற்றின் ரிட்டர்ன் அதிகமாக இருக்கும். வட்டி விகிதம் உயரும்போது ரிட்டர்ன் குறைவாகவோ, நெகட்டிவாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது.
கில்ட் ஃபண்ட் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் இதில் முதலீடு செய்யலாம். ஆனால், விவரம்தெரியாதவர்கள், எப்போது முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள் கில்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவசியமில்லை.
ஹெடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் எஃப்.எம்.பி 1158 நாள் ஃபண்ட் புதிதாக வெளியாகிறது. ஆதித்ய பிர்லா சன்லைஃப் நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் இ.டி.எஃப், ஆதித்ய பிர்லா சன்லைஃப் ஃபிக்ஸ்ட் டேர்ம் பிளானைக் கொண்டு வருகிறது. பொதுவாகவே, ரீடெய்ல் முதலீட் டாளர்கள் அதிகமான வருமானத்தை எதிர்பார்க் கிறார்கள். கடன் ஃபண்டு கள் பலருக்கும் பொருந் தாது. அதற்குப் பதிலாக குறைவான காலம் கொண்ட அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டு களில் முதலீடு செய்வது நல்லது. இதுபோன்ற குறிப் பிட்ட நீண்டகால டேர்ம் கொண்ட ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. பிக்ஸ்ட் டேர்ம் பிளான் ஃபண்டு களில் சில பிரச்னைகள் வந்ததை யாரும் மறுக்க முடியாது. எனவே, குளோஸ் என்டட் திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. இந்த ஃபண்ட் தொடர்பான தகவல்கள் நமக்கு எளிதில் கிடைக்கும். எனவே, கவலை இல்லாமல் இருக்கலாம்.