
முதலீடு
சிந்தன் ஹரியா, தலைவர் – திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
உலகம் முழுவதும், பங்குச் சந்தை பெஞ்ச் மார்க் குறியீடுகள் (Equity Benchmark Indices) பெரும் பாலும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை வெளிப் படுத்தும் குறியீடாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரை, நிஃப்டி 50 இண்டெக்ஸ் (Nifty 50 Index) வளர்ந்துவரும் பொருளாதாரத்தின் முன்னணிக் குறியீடாகக் கருதப்படுகிறது.
இந்தக் குறியீடு தேசிய பங்குச் சந்தையில் (National Stock Exchange -NSE) பட்டிய லிடப்பட்டுள்ள சந்தை மூலதனத் தின் அடிப்படையில் முதல் 50 நிறுவனங் களின் சராசரியைப் பிரதி பலிக்கிறது.
அதே நேரத்தில் இந்த முதல் 50 நிறுவனங்களைத் தவிர, அபரிமிதமான வளர்ச்சித் திறன் கொண்ட பல பெரிய நிறுவனங்கள் உள்ளன. அவை நிஃப்டி 50 குறியீட்டின் எதிர்காலப் போட்டியாளர்களாக இருக் கின்றன.
அதாவது, நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் (Nifty Next 50 index) என்பது நிஃப்டி 100 ஃப்ரீ-ஃப்ளோட் மார்க்கெட் கேப்பிடலைசேஷன் (Free-float Market Capitalisation) அடிப்படையில் முதல் 50 நிறுவனங்களுக்குப் பிறகு, வரும் அடுத்த 50 பெரிய நிறுவனங்களின் செயல் திறனை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எஃப்...
இன்றைய நிலையில், எதிர்காலத்தில் நிஃப்டி 50 குறியீட்டின் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய நிறுவனங் களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளருக்கு, நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண் டெக்ஸ் (Nifty Next 50 Index) அல்லது நிஃப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எஃப்பில் (Nifty Next 50 ETF) முதலீடு செய்வது எளிதான அணுகு முறையாக இருக்கும்.
தனிப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய் வதைவிட நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் முதலீடு செய்வது எளிதான தீர்வாகும். மேலும், இதில் ரிஸ்க் குறைவு; கூடவே முதலீட்டுப் பரவலாக்கம் பெறுகிறது.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் அடிப்படை யிலான இ.டி.எஃப் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் ஒரு பரவலான முதலீட்டுக் கலவையில் (Portfolio) முதலீடு செய்யும் வாய்ப்பைப் பெறுகிறார்.
இ.டி.எஃப் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானமானது, இண்டெக்ஸ் மூலம் கிடைக்கும் வருமானத்தைவிட சிறிது குறைவாக இருக்கும். அதாவது, குறியீட்டைப் பின்பற்றுவதில் ஏற்படும் டிராக்கிங் பிழைக்கேற்ப (Tracking Error), சற்றுக் குறைவான வருமானம் கிடைக்கும்.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் 16 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு தனிப்பட்ட பங்கின் வெயிட்டேஜ் 6.2 சத விகிதத்துக்கு மிகாமல் இருக்கிறது என்பதால், ரிஸ்க் பரவலாக்கப்பட்டிருக்கிறது. டாப் மூன்று துறைகளை சேர்ந்த நிறுவனப் பங்குகளின் பங்களிப்பு சுமார் 43 சதவிகிதமாக உள்ளது.

வருமான செயல்பாடு எப்படி?
நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் கொடுத்திருக்கும் வருமானம் நீண்ட காலத்தில் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது. இந்தக் குறியீடு கடந்த ஓராண்டில் 6.2% வருமானம் கொடுத்துள்ளது.
அதே நேரத்தில், கடந்த மூன்றாண்டில் ஆண்டுக்கு சராசரியாக 18.5% வருமானம் கொடுத்து வருகிறது. நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் கடந்த 10 ஆண்டு களில் ஆண்டுக்கு சராசரியாக ஆண்டுக்கு 16.6% வருமானம் கொடுத்துள்ளது.
2022 ஜூலை 31 நிலவரப்படி, கடந்த பத்தாண்டுகளில் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் இடம்பெற்றிருந்த 21 நிறுவனங்களின் பங்குகள், நிஃப்டி 50 இண்டெக்ஸுக்கு இடம்பெயர்ந்துள்ளன. இது இப்போது நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் நிறுவனங்கள், எதிர்கால நிஃப்டி 50 இண்டெக்ஸில் இடம்பெறப்போகும் பங்குகள் என்று கூட சொல்லலாம்.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டில் தற்போதைய முதலீட்டுக் கலவையில் நிதிச் சேவைகள், எஃப்.எம்.சி.ஜி, உலோகங்கள் மற்றும் சுரங்கம் மற்றும் நுகர்வோர் சேவைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக வெயிடேஜ் கொண்டிருக்கிறது.
தற்போதைய பட்டியலில் முதல் 10 பங்குகள் பெரும்பாலும் நுகர்வு அடிப்படையிலான துறைகளைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. அவை வேகமாக வளர்ந்துவரும் உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் அதிகரித்து வரும் உற்பத்தித் திறனால் பயனடைத்து வருகின்றன. மேலும், இந்த நிறுவனங்கள் கவர்ச்சிகரமான ஏற்றுமதி வாய்ப்புகள் மூலமும் பயனடைகின்றன.
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி காண இருப்பதால், இந்த நிறுவனங்கள் முக்கிய உள்நாட்டுத் துறைகளில் ஒட்டுமொத்த பொருளாதார விரிவாக்கத்தின் மூலம் பயனடையும் நிலையில் உள்ளன.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 குறியீட்டின் மற்றொரு தனித்துவமான முக்கியமான அம்சமாக, காலாண்டு அடிப்படையில் எஃப்&ஓ பிரிவில் வர்த்தகமாகாத பங்குகளின் பங்களிப்பு அதிக பட்சமாக 15% ஆகவும், எஃப்&ஓ அல்லாத தனிப்பட்ட பங்கு 4.5 சதவிகிதமாகவும் உள்ளது.

நிஃப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எஃப் யாருக்கு ஏற்றது?
இ.டி.எஃப்.களின் யூனிட்டு களைப் பங்குச் சந்தை வர்த்தக நேரத்தில் சுலபமாக வாங்கவும் விற்கவும் முடியும். நிஃப்டி 50 பங்குகளைத் தாண்டி முதலீட்டைப் பரவலாக்கம் செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக நிஃப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எஃப் இருக்கிறது.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண் டெக்ஸில் இடம் பெற்றிருக்கும் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, தனிப்பட்ட ஒரு பங்குக்கு ரூ.25,000 கோடிக்கு மேல்தான் இருக்கிறது. அந்த வகையில், நிஃப்டி நெக்ஸ்ட் 50 இண்டெக்ஸ் மற்றும் நிஃப்டி நெக்ஸ்ட் 50 இ.டி.எஃப் முதலீடுகளின் மதிப்பானது, ரிஸ்க் குறைந்து மற்றும் தரமானதாக இருக்கிறது.
நிஃப்டி 50 இ.டி.எஃப் மற்றும் நிஃப்டி நெக்ஸ்ட் இ.டி.எஃப் முதலீடு என்பது குறைந்த முதலீட்டுச் செலவு மற்றும் குறைந்த ரிஸ்க்கில் பரவலாக பங்கு முதலீட்டுக்கு வழி வகுக் கிறது.
இந்த இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களில் முதலீட்டுக் காலம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் பணவீக்க விகிதத்தைவிட நல்ல வருமானத்தைப் பெற முடியும்.