நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

எல்லோருக்கும் பென்ஷன்... இனிமையான ஓய்வுக்காலத்துக்கு கைகொடுக்கும் NPS

பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
பென்ஷன்

மேற்கண்ட ஏழு வகை பென்ஷன் திட்டங்களில் எதை வேண்டுமானாலும் ஒன்றைத் தேர்வு செய்யலாம்...

மத்திய அரசோ, மாநில அரசோ... அரசு வேலைக்கு அதிகமான வரவேற்பு இருந்ததற்கு முக்கியமான காரணம், பென்ஷன்தான். தனியார் ஊழியர்களுக்கு பென்ஷன் என்பது இல்லாமலே இருந்தது. ஆனால், இன்றைக்கு பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் எல்லோரும் பென்ஷன் பெறும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் எனப்படும் என்.பி.எஸ் (NPS) திட்டம். ஏற்கெனவே நடைமுறையில் இருந்துவந்த பழைய பென்ஷன் திட்டத்தை 31.12.2003 அன்று ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக 01.01.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைக்குக் கொண்டுவரப் பட்டதுதான் இந்த என்.பி.எஸ் திட்டம்.

ப.முகைதீன் சேக் தாவூது
ப.முகைதீன் சேக் தாவூது

பென்ஷன் திட்டமான என்.பி.எஸ்ஸில் ஓர் ஊழியரின் அடிப்படைச் சம்பளம் + அகவிலைப்படியின் கூட்டுத் தொகையில் 10% தொகையானது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு என்.பி.எஸ் பென்ஷன் கணக்கில் செலுத்தப்படும். அரசும் அதே தொகையைத் தனது பங்களிப்பாக ஊழியரின் பென்ஷன் கணக்கில் வரவு வைக்கும்.

ஊழியரும் அரசும் இப்படிக் கட்டும் தொகையானது என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்து, அதிலிருந்து கிடைக்கும் வருமானம் ஊழியரின் கணக்கில் அவ்வப்போது சேர்க்கப்படும். இதன்மூலம் ஓய்வுக்காலத்துக்குத் தேவையான நிதி பெருகிக்கொண்டே வரும்.

60 வயதில் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் போது நிதியத்தில் சேர்ந்துள்ள மொத்தத் தொகையில் 60% தொகையை ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம். மீதியுள்ள 40% தொகை யானது நிதியத்தின் ஓய்வுக்கால நிதிய மேலாளர்களால் (Pension Fund Managers) நிர்வகிக்கப்பட்டு, மாதம்தோறும் ‘பென்ஷன்’ தரப்படும். இதுதான் என்.பி.எஸ் பென்ஷன் திட்டத்தின் அடிப்படை.

ஆரம்பத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசின் தன்னாட்சி (Autonomous bodies) அமைப்புகளுக்கும் வடிவமைக்கப்பட்ட என்.பி.எஸ் திட்டம், பிற்பாடு நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்கள் (தமிழகம் தவிர), மாநிலங்களின் தன்னாட்சி அமைப்புகள் முதலியவை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தத் தொடங்கின.

பொதுமக்களுக்கும்...

அரசுப் பணியினரைப் போல், இந்தியக் குடிமக்கள் அனைவரும் தனது ஓய்வுக்காலத்தில் பென்ஷன் பெற வேண்டும். கையில் கணிசமான ரொக்கமும் பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மே 2009 முதல் பொதுமக்களுக்கும் என்.பி.எஸ் விரிவுபடுத்தப்பட்டது. இதன்படி, 18 வயது நிரம்பிய, 65 வயதைத் தாண்டாத இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும்கூட என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து பென்ஷன் கணக்கு தொடங்கலாம். தற்போது 70 வயது வரை இந்தத் திட்டத்தில் இணைய முடியும். 75 வயது வரை இந்தத் திட்டத்தில் ஒருவர் பங்களிக்கலாம்.

தனிநபர் மட்டுமன்றி, தாம் வேலைபார்க்கும் நிறுவனத்தின் மூலம் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்க்கப்படாத அனைவரும் பொதுமக்களுக்கான (All citizen model) என்.பி.எஸ் திட்ட உறுப்பினராகலாம். இ.பி.எஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், சி.பி.எஸ் திட்டத்தின்கீழ் உள்ள தமிழக அரசு ஊழியர்களும் இந்த என்.பி.எஸ் திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒருவருக்கு ஒரு என்.பி.எஸ் கணக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதே விதிமுறை.

என்.ஆர்.ஐ-களும் என்.பி.எஸ் உறுப்பினராகலாம். ஆனால், இவர்களின் சந்தா தொகை ரிசர்வ் வங்கி மற்றும் அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகளுக்கு உட்பட்டது. அயல்நாட்டு இந்தியர்களும் (Overseas citizens of India) இந்திய வம்சா வழியினரும் (Person of Indian origin) இந்து கூட்டுக் குடுபத்தினரும் சேர முடியாது. மேலும், என்.பி.எஸ் திட்டத்தில் கணக்கு I மற்றும் கணக்கு II என இரு வகை கணக்குகள் உள்ளன. கணக்கு I–ல் மட்டுமே என்.ஆர்.ஐ சேர முடியும். கணக்கு II-ல் சேர முடியாது.


பென்ஷன்
பென்ஷன்

மூன்று வகை என்.பி.எஸ் திட்டம்....

2004-ல் தொடங்கப்பட்ட என்.பி.எஸ் திட்டம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் உரியது. ஆகையால் இது அரசு வகை என்.பி.எஸ் (Government Model N.P.S) எனப்படுகிறது. 2004-ல் பொதுமக்களுக்கு அனுமதிக்கப்பட்ட என்.பி.எஸ் திட்டம் அனைத்து மக்களுக்குமானது. எனவே, இது அனைத்துக் குடிமக்கள் வகை (All citizen model) எனப் பெயர் பெற்றது.

2011–ல் தனியார் துறை ஊழியர்களுக்கான என்.பி.எஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது இதற்கு நிறுவன வகை (Corporate model) என்று பெயர் என என்.பி.எஸ் கணக்குகள் மொத்தம் மூன்று பெரும் பிரிவு களாகப் பிரிக்கப்படுகின்றன.

சலுகைகள் பொதுவானவையே...

என்.பி.எஸ் திட்டம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும், இந்தத் திட்டத்தில் சேரும் தகுதி, வயது, சேவை தரும் வருகை நிறுவனங்கள் (Point of presence - Service Providers), முதலீட்டு முறை, (Active Choice), தானாகத் தேர்வு செய்யும் முறை (Auto choice) முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம், ஓய்வுபெறும் வயது, இடையில் பகுதிப் பணம் எடுத்தல் போன்ற அனைத்துச் சலுகைகளும் மூன்று வகைத் திட்டங்களுக்கும் பொதுவானவைதான். நிர்வாக வசதிக்காகவே இந்தத் திட்டம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.

எவ்வளவு கட்ட வேண்டும்?

 மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசின் பங்களிப்பு சம்பளத்தில் 14 சதவிகிதமாகவும் ஊழியரின் பங்களிப்பு 10 சத விகிதமாகவும் உள்ளன.

 இதர மாநில அரசு ஊழியர் களுக்கு மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் செலுத்தும் நிறுவனப் பங்களிப்பு 10% மட்டுமே.

 தனியார் துறை (Corporate) ஊழியர்களின் நிறுவனப் பங்களிப்புத் தொகை ஊழியரின் சம்பளத்தில் 10 சதவிகிதத்துக்கு அதிகமாகவோ, குறைந்தோ இருக்கலாம்.

 எந்த நிறுவனத்திலும் வேலை செய்யாதவர்கள் தாம் செலுத்தும் பணம் மட்டுமே ஓய்வுக்கால நிதியத்தில் சேரும். அவர்களுக்காக அரசு எந்தப் பங்களிப்பையும் தராது.

என்.பி.எஸ் நிதியை நிர்வகிக்கும் நிறுவனங்கள்...

என்.பி.எஸ் திட்டத்தில் சேரு பவர்களுக்கு, அவர்களது முதலீட்டை நிர்வாகம் செய்ய ஆதித்ய பிர்லா சன் லைஃப் பென்ஷன் மேனேஜ்மென்ட் லிட், ஹெச்.டி.எஃப்.சி பென்ஷன் மேனேஜ்மென்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்சியல் பென்ஷன் ஃபண்ட் மேனேஜ்மென்ட், கோட்டக் மஹிந்திரா பென்ஷன் ஃபண்ட், எல்.ஐ.சி பென்ஷன் ஃபண்ட, எஸ்.பி.ஐ பென்ஷன் ஃபண்ட் பிரைவேட் லிட், யு.டி.ஐ ரிடையர்மென்ட் சொல்யூஷன் எனப் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தை நாம் தேர்வு செய்யலாம்.

முதலீட்டு முறை

என்.பி.எஸ் திட்டத்தில் நாம் விரும்பும் முதலீட்டு முறையையும் தேர்வு செய்யலாம். இவை இரு வகையாக உள்ளன. அதாவது, நாம் என்.பி.எஸ்ஸில் செலுத்தும் தொகையானது பங்குச் சந்தை (Equity), நிறுவனங்களின் கடன் ஃபண்டுகள் (Corporate debt), அரசுக் கடன் பத்திரங்கள் (Govt securities), மாற்று முதலீடு (Alternative Investment) ஆகிய நான்கு திட்டங்களில் முதலீடு செய்து, நமது ஓய்வுக்கால நிதியைப் பெருக்கலாம். இந்த நான்கில் எந்தத் திட்டத்தில் எத்தனை சதவிகிதத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்துகொள்ளலாம். இப்படி நமக்கான முதலீட்டை நாமே தேர்வு செய்வதற்கு ‘ஆக்டிவ் சாய்ஸ்’ (Active choice) என்று பெயர். சந்தை நிலவரம் பற்றித் தெரியாதவர்கள், ‘நீங்களே முதலீட்டு சதவிகிதத்தைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்’ என்று மேலாளரிடமே பொறுப்பை ஒப்படைப்பதற்கு ‘ஆட்டோ சாய்ஸ்’ (Auto choice) என்று பெயர். இப்படி ‘ஆட்டோ முறை’யைத் தேர்வு செய்யும்போது, அவரது வயதின் அடிப்படையில் முதலீட்டு வகை தேர்வு செய்யப்படும். அதாவது, இளம் வயதினராக இருந்தால், பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டில் அதிக நிதி முதலீடு செய்யப்படும். வயது அதிகரிக்க அதிகரிக்க, பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதியானது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, கடன் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

ஒருமுறை ‘ஆட்டோ சாய்ஸை’த் தேர்வு செய்துவிட்டு, பிற்பாடு ‘ஆக்டிவ் சாய்ஸை’யும் தேர்வு செய்துகொள்ளலாம். இதேபோல, ‘ஆக்டிவ் சாய்ஸ்’லிருந்து ‘ஆட்டோ சாய்ஸ்’-க்கும் மாறலாம்.

கால வரம்பு

என்.பி.எஸ் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டு நீடித்திருக்க வேண்டும். அதிகபட்சம் 75 வயது வரையும் கூட நீடித்திருக்கலாம். 60 வயது நிறைவடையும் முன்பே இந்தத் திட்டத்திலிருந்து விலகினால், ஓய்வுக்கால நிதியத்தில் 20% தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 80% தொகையைக் கொண்டு மாதம்தோறும் பென்ஷன் தரப்படும். முதிர்வுத் தொகை ரூ.5 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மொத்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம். பென்ஷன் பெறவும் விட்டு வைக்கலாம்.

முதிர்வுத் தொகை எவ்வளவு?

இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெற்று 60 வயதான பின், 60% தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மீதியுள்ள 40% தொகையைக் கொண்டு மாதாந்தர பென்ஷன் தரப்படும். ஓய்வுக்கு முன்பே விருப்பம் தெரிவித்தால், தொகை பெறு வதைத் தள்ளிப்போடலாம். அல்லது பென்ஷன் பெறுவதை 75 வயது வரைகூட ஒத்திப் போடலாம்.

தற்போதைய நிலையில், 70 வயதான மூத்த குடியினர்கூட என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து, 75 வயது வரை நீடிக்கலாம். தேவைப்பட்டால் இந்தத் திட்டத்தில் சேர்ந்த பின் மூன்று ஆண்டு கழித்து விலகிக் கொள்ளலாம்.

கணக்கு வைத்திருப்பவர் இறந்து விட்டால்...

இந்தத் திட்டத்தில் சேர்ந்து, தொடர்ந்து பணம் கட்டி வந்தவர் திடீரென இறந்துவிட்டால், அதுவரை கட்டிவந்த பணத்தைத் திரும்பப் பெறவும், பென்ஷன் பெறவும் முடியும். இந்தத் திட்டத்தில் சேர்ந்ததும் குடும்ப உறுப்பினர் ஒருவரை நியமனதார ராகப் பதிவு செய்து கொள்ளலாம்.

என்.பி.எஸ் கணக்கு எண் II

கணக்கு எண் I வைத்துள்ள அனைவரும் கணக்கு எண் II-யைப் பராமரிக்கலாம். இதில் செய்யப்படும் முதலீடும் சந்தை சார்ந்த வருமானத்தைத் தரக்கூடியதுதான். இந்தக் கணக்கில் உள்ள பணத்தை கணக்கு I-க்கு மாற்றவும் செய்யலாம். இதில் கணக்கு தொடங்க ஆரம்ப டெபாசிட் 1,000 ரூபாய்.

கடன் வசதி...

என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து மூன்று ஆண்டு கழிந்த பிறகு, அவசரத் தேவைக்கு, ஒருவர் கட்டியுள்ள மொத்தத் தொகையில் 25% பகுதி வரை (Partical withdrawal) திரும்பப் பெறலாம். திட்டக் காலத்தில் மூன்று முறை இவ்வாறு பெறலாம். ஒவ்வொரு முறை இப்படிப் பெறுவதற்கு ஐந்து வருட இடைவெளி இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவற்றுக்கும் குறிப்பிட்ட சில வகை நோய்களுக்கான மருத்துவச் செலவுக்கும் இப்படிப் பகுதி பகுதியாகப் பணம் பெறலாம். மற்றபடி, கடன் பெறும் வசதி எல்லாம் இந்தத் திட்டத்தில் இல்லவே இல்லை.

வரிச் சலுகை எவ்வளவு

என்.பி.எஸ் கணக்கில் செலுத்தப்படும் பணத்துக்கு பிரிவு 80CCE-க்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரிச் சலுகையும், கூடுதலாகப் பிரிவு 80CCD(1B)-ன்கீழ் 50,000 ரூபாய் வரிக்கழிவும் கிடைக்கும்.

என்.பி.எஸ்ஸின் சிறப்பம்சங்கள்...

வெளிப்படையான நிர்வாகம் அதாவது, என்.பி.எஸ் கணக்கில் மதிப்பு (Net Asset Value) எவ்வளவு என்பதை அன்றாடம் தெரிந்துகொள்ளலாம்.

 என்.பி.எஸ்ஸில் கணக்கு தொடங்கிய ஒவ்வொருவருக்கும் நிரந்தர ஓய்வுக்கால கணக்கு எண் எனப்படும் ‘பிரான்’ (Permanant retirement account number) தரப்பட்டுள்ளதால், பணி காரணமாக ஒருவர் எந்த நகரத்துக்குச் சென்றாலும், அங்கிருந்து என்.பி.எஸ் திட்டத்தில் பணம் கட்டலாம். வேண்டும் எனில், பகுதிப் பணத்தைத் திரும்ப எடுக்கலாம்.

 என்.பி.எஸ் கணக்கை ஆரம்பிப்பது மிகச் சுலபம். ‘பிரான்’ எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் பெற்றுவிட்டால் என்.பி.எஸ் திட்டத்தில் பணம் போடத் தொடங்கிவிடலாம்.

 என்.பி.எஸ் திட்டமானது, இந்திய அரசின் பென்ஷன் நிதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு மையத்தால் (PFRDA) நிர்வகிக்கப் படுவதால், பாதுகாப்பு அதிகம் கொண்டது.

 இன்றைய தேதியில் நாடு முழுக்க 4.48 கோடி பேர் என்.பி.எஸ் திட்டத்தில் உறுப்பினர் களாக உள்ளனர். இதில் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடியாக உள்ளது. எனவே, ஓய்வுக் காலத்துக்குக் கைகொடுக்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை சேராதவர்கள், இனியாவது சேர்ந்து அவசியம் பயன் பெறலாம். ஓய்வுக் காலத்தில் எந்த மனக்கவலையும் இன்றி நிம்மதியாக இருக்கலாம்!

ஆண்டுதோறும் 10% முதலீட்டை அதிகரித்தால்..?

பொதுவாக, நீண்ட கால முதலீடுகள் ஆச்சர்யப்படத்தக்க முதிர்வுத் தொகையைக் கொண்டு வந்து குவித்துவிடும். என்.பி.எஸ்ஸும் அப்படித்தான்.

சந்தை சார்ந்த முதலீடுகள் மூலம் ஆண்டுதோறும் 10% கூட்டு வளர்ச்சி தந்துவரும் என்பிஎஸ்ஸில் இரு வகையில் முதலீடு செய்யலாம். இதில் மாதம் ரூ.10,000 வீதம் 30 ஆண்டுகள் முதலீடு செய்து, அது 10% கூட்டு வளர்ச்சி அடைந்தால், முதிர்வுத் தொகை ரூ.2,27,93,253 கிடைக்கும்.

இன்றைக்கு மாதம் 30,000 ரூபாய் வருமானம் பெறும் ஒருவரால் மாதம்தோறும் ரூ.10,000 முதலீடு செய்ய முடியவில்லை எனில், ஆண்டுதோறும் 10% முதலீட்டை அதிகரிக்கும் வழியைப் பின்பற்றலாம். அதாவது, அமைப்புசாரா நிறுவனத்தில் சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்வோர், சிறு வணிகர்கள் முதலானோரின் வருமானம் ஆண்டுதோறும் சுமார் 10% அதிகரிக்கிறது. அந்த வகையில், தற்போது ரூ.30,000 மாத வருமானம் உடைய 30 வயதுக் காரர், தனது வருமானத்தில் 10% தொகையை என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்யலாம். அதாவது, முதல் ஆண்டில் ரூ.3,000, இரண்டாம் ஆண்டில் ரூ.3,300, மூன்றாம் ஆண்டு ரூ.3,630 என 60 வயது வரை அதிகரித்துக்கொண்டே போனால், 60-வது வயதில் ஒருவர் பெறக்கூடிய முதிர்வுத்தொகை ரூ.3,60,52,640 ஆக இருக்கும்.

என்.பி.எஸ்ஸில் சேருபவர் தனது 60-வது வயதில் பெறப்போகும் முதிர்வுத் தொகையில் 60% தொகையை ரொக்கமாகப் பெறலாம். குறைந்தபட்சம் 40% தொகையை மாதம்தோறும் பென்ஷன் (Annuity) பெறுவதற்காக முதலீடு செய்ய வேண்டும் என்பது என்.பி.எஸ் பென்ஷன் விதி. ஆனால், ஒருவர் தனது ஓய்வுக்கால தேவைக்கேற்ப 100% தொகையைக்கூட என்.பி.எஸ்ஸில் முதலீடு செய்து பென்ஷன் பெறலாம். தற்போதைய ஒருவருடைய குடும்பச் செலவு மாதம் ரூ.30,000 எனில், இது பணவீக்கம் 6% என்கிற அளவில் உயர்ந்தால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவருக்கு மாதம்தோறும் ரூ.1,72,290 தேவைப்படும். என்.பி.எஸ் திட்டத்தில் ஒருவர் ரூ.2,88,42,112-யை முதலீடு செய்தால், அவருக்கு ரூ.1,92,280 கிடைக்கும். எனவே, ஓய்வுக் காலத்தில் கவலை இல்லாமல் இருக்கலாம்.

ஏழு வகை பென்ஷன் திட்டங்கள்..!

1. ஆயுள்காலம் முழுவதும் பென்ஷன் பெற்று, மரணத்துக்குப் பிறகு பென்ஷனுக்கு டெபாசிட் செய்யப்பட்ட முதலீட்டை வாரிசுதாரர் பெற்றுக்கொள்வது.

2. ஆயுள் முழுதும் ஒரே தொகையை பென்ஷனாகப் பெறுவது.

3. ஒவ்வொரு வருடமும் பென்ஷன் தொகையை 3% அதிகமாக்கி மாதாந்தர பென்ஷன் பெறுவது.

4. முதலீட்டாளர் தனது ஆயுள் காலம் முழுவதும் பென்ஷன் பெற்று மரணமடைந்த பிறகு பென்ஷன் தொகையில் 50% தொகையை அவரின் மனைவி (அல்லது கணவர்) பெறும் வகையில் திட்டத்தை அமைத்துக்கொள்வது.

5. முதலீட்டாளர் தனது ஆயுள் காலத்தில் எவ்வளவு ரூபாயை மாதாந்தர பென்ஷனாகப் பெற்று வந்தாரோ, அதே அளவு பென்ஷன் தொகையை அவரின் மனைவி (அல்லது கணவர்) பெறும் பென்ஷன் திட்டம். 

6. முதலீட்டாளர் தனது ஆயுள் முழுதும் பென்ஷன் பெறுவது. அவரின் மறைவுக்குப் பின் அதே பென்ஷன் (100%) தொகையை அவரின் மனைவி (அல்லது கணவர்) பெறுவதுமாக பென்ஷன் தொடர்ந்து வழங்கப்பட்டு கடைசியில் யார் உயிருடன் இருக்கிறாரோ அவர் பென்ஷனுக்காகச் செய்யப்பட்ட டெபாசிட் தொகையைப் பெற்றுக்கொள்வது.

7. நிச்சயித்துக்கொள்ளப்பட்ட பென்ஷன் தொகையை 5 அல்லது 10 அல்லது 20 வருடங்கள் வரை பெற்றுக்கொண்டு எஞ்சிய காலத்துக்கும் பென்ஷன் பெறுதல்.

மேற்கண்ட ஏழு வகை பென்ஷன் திட்டங்களில் எதை வேண்டுமானாலும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஒரே முதலீட்டுத் தொகையாக இருந்தாலும் திட்டத்தைப் பொறுத்து, பென்ஷன் தொகை மாறுபடும். இந்த பென்ஷன் திட்டத்தைச் செயல்படுத்த 13 வகை பென்ஷன் சேவையாளர்கள் (Annuity Service Providers) உள்ளனர்.

பென்ஷன் சேவை தரும் 13 நிறுவனங்கள்..!

1. எல்.ஐ.சி, 2. எஸ்.பி.ஐ லைப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 3. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 4. ஹெச்.டி.எஃப்.சி. ஸ்டாண்டர்டு லைப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 5. ஸ்டார் யூனியன் டாய் இச்சி லைப் இன்ஷூரன்ஸ் கம்பனி லிட், 6. இந்தியாஃபர்ஸ்ட் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 7. எடல்வைஸ் (Edleweiss) டோக்யோ லைஃப் இன்ஷூரன்ஸ், 8. பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 9. கனரா ஹெச்.எஸ்.பி.சி. ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 10. கோடக் மஹிந்திரா லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 11. டாடா ஏ.ஐ.ஏ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 12. மேக்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட், 13. பி.என்.பி மெட்லைப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிட் ஆகிய பென்ஷன் சேவை தரும் இந்த 13 நிறுவனங்கள் இந்திய இன்ஷூரன்ஸ் ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் பதிவு பெற்ற நிறுவனங்கள் ஆகும். பென்ஷன் (Annity) பெறுவதற்காக முதலீட்டாளர் டெபாசிட் செய்துள்ள நிதியை மேலாண்மை செய்வதும், பென்ஷன் வழங்குவதும் இவற்றின் பணிகளாக உள்ளன.

எப்படிச் சேருவது?

என்.பி.எஸ்ஸில் சேர இரண்டு வழிகள் உண்டு. அதாவது, அரசுடமை வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்திலுமே என்.பி.எஸ் சேவை உண்டு. இவை வருகை முனைய சேவை மையங்கள் எனப்படுகின்றன. அஞ்சலகங்களும் சேவை மையங்களே. அருகில் உள்ள சேவை மையம் ஒன்றுக்குச் சென்று வயது இருப்பிட முகவரிக்கான ஆதாரம், ஆதார், மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பிரான் (Permanent retirement account number) எனப்படும் நிலையான ஓய்வூதியக் கணக்கு எண் பெற்று பணம் கட்டத் தொடங்கலாம்.

என்.பி.எஸ்ஸில் இணை கணக்கு கிடையாது. தனிக் கணக்கு மட்டும்தான். எனவே, குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஓய்வூதியக் கணக்கு எண் பெற்று பணம் செலுத்த ஆரம்பிக்கலாம்.

இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயுடன் கணக்கு தொடங்கலாம். ஓராண்டில் குறைந்தபட்ச டெபாசிட் 1,000 ரூபாய். அதிகபட்சம் என்கிற வரம்பு இல்லை!