
வரி சேமிப்பு
நம்மவர்கள் வருமான வரியை சேமிக்க பி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதில் எது பெஸ்ட்?

பி.பி.எஃப்....
முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பெரும்பாலும் பி.பி.எஃப்பில் முதலீடு செய்து வருகிறார்கள். இதில் 1986 முதல் 2000 ஜனவரி வரை ஆண்டுக்கு 12% வட்டி வழங்கப்பட்டது, பிற்பாடு 11 சதவிகிதமாகக் குறைந்தது. 2001 மார்ச் முதல் வட்டி 9.5 சதவிகிதமாகக் குறைந்தது. அதன் பிறகு, வட்டி வருமானம் ஒற்றை இலக்கத்திலேயே இருந்து, தற்போது ஆண்டுக்கு 7.10% வட்டி வழங்கப்படுகிறது.
இந்த வட்டியானது மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உட்படுகிறது. குறைந்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூ.500 ஆகவும் அதிகபட்ச முதலீடு ரூ.1.5 லட்சமாகவும் இருக்கிறது. இது 15 ஆண்டு திட்டமாகும். முதலீடு, வட்டி, முதிர்வு என மூன்று நிலைகளிலும் வருமான வரிச் சலுகை இருப்பது இதன் சிறப்பு. மேலும். இது மத்திய அரசின் திட்டம் என்பதால், முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகைக்கு 100% உத்தரவாதம் உள்ளது.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்...
முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக்கூடியவர்கள், பங்குச் சந்தைக்கு ஓரளவு பழக்கமானவர்கள் பங்குச் சந்தை சேமிப்புத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, பல்வேறு துறை நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது. இதனால், இதன் வருமானம் பங்குச் சந்தையின் செயல்பாட்டைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், முதலீடு மற்றும் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனினும், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைக்க அதிக வாய்ப்புண்டு. இதன் குறைந்தபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூ.500 ஆகும். அதிகபட்ச முதலீடு எவ்வளவு வேண்டு மானலும் செய்யலாம். ஆனால், நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரைதான் வரிச் சலுகை கிடைக்கும். 2022 அக்டோபர் 21 நிலவரப்படி, இந்த ஃபண்ட் பிரிவு கடந்த மூன்று, ஐந்து மற்றும் பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக முறையே 16.79%, 10.85% மற்றும் 14.56% வருமானம் கொடுத்துள்ளது.

வருமான ஒப்பீடு...
பி.பி.எஃப் முதலீடு கடந்த 15 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 8.21% வருமானம் தந்துள்ளது. இதே காலத்தில் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஆண்டுக்கு சராசரியாக 18% வருமானம் தந்துள்ளது. இந்த வருமானத்துக்கு வருமான வரி கட்டினாலும் பி.பி.எஃப் முதலீட்டைவிட மிகவும் அதிகம்.
ஒருவர் முழுப் பணத்தையும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யவில்லை என்றாலும் 50% பணத்தை பி.பி.எஃப்பிலும், 50% பணத்தை இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டிலும் கலந்து முதலீடு செய்து, கணிசமான வருமானம் ஈட்டலாம்!