
ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் - 22
நாம் ஓய்வுக்கால செலவுகளுக்கு ஏன் சேமிக்க வேண்டும் என்பதற்கு இன்றைய நிலையில் பல காரணங்களைச் சொல்லலாம்.
முக்கியமாக, பலருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு பென்ஷன் இல்லாமல் இருப்பதாகும். எதற்கு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். ஓய்வுக்காலச் செலவுக்கு வருமானம் எதுவும் இல்லாத நிலையில் கடன் வாங்க முடியாது. எனவே, இந்த இலக்குக்கான பணத்தை முன்னுரிமை கொடுத்து தொகுப்பு நிதியைச் சேர்த்தாக வேண்டும்.

இன்றைய நிலையில், பலரும் ரூ.1 கோடியை ஓய்வுக்கால நிதியாக சேர்த்து வைக்க விரும்பு கிறார்கள். ஆனால், ரூ.1 கோடியானது எத்தனை ஆண்டுகளுக்கு வரும் என்று பலரும் கணக் கிட்டுப் பார்ப்பதில்லை.
உதாரணமாக, ஒருவர் ஓய்வுக்கால தொகுப்பு நிதியாக ரூ.1 கோடி சேர்த்து வைத்திருக்கிறார். அவர் 60 வயதில் பணி ஓய்வு பெறுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்தத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் ஹைபிரிட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்திருக்கிறார். அந்த முதலீட்டின்மூலம் ஆண்டுக்கு 8% வருமானம் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம்.
அவருக்கு மாதத்துக்கு ரூ.50,000 செலவுக்குத் தேவைப்படுகிறது. அந்தத் தொகையை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (SWP) முறையில் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எடுத்துக்கொள்கிறார். அந்த வகையில், அவர் ரூ.1 கோடியிலிருந்து ஆண்டுக்கு ரூ.6,00,000 எடுத்து செலவு செய்கிறார். இது ரூ.1 கோடியில் 6% ஆகும்.
ஆண்டு சராசரி பணவீக்க விகிதம் 6% எனில், இப்படிச் செலவு செய்யும்பட்சத்தில் ரூ.1 கோடி என்பது 20 ஆண்டுகளில் தீர்ந்துவிடும்.
இதுவே முதலீட்டின்மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டுக்கு 10 சதவிகிதமாகவும், ஆண்டுக்கு எடுத்துச் செலவிடும் தொகை 5% அதாவது, ரூ.5 லட்சம் (மாதம் சுமார் ரூ.41,665) ஆகவும் இருந்தால், ரூ.1 கோடி தொகுப்பு நிதியானது 35 ஆண்டுகளுக்கு வரும். இதுவே ஆண்டுக்கு 8% அதாவது, ரூ.8 லட்சம் (மாதம் சுமார் ரூ.66,665) ஆகவும் இருந்தால், ரூ.1 கோடி தொகுப்பு நிதி 16 ஆண்டுகளுக்குத்தான் வரும். (பார்க்க, அட்டவணை 1)

அஸெட் அலோகேஷன்...
தொகுப்பு நிதியை முழுக்க முழுக்க நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வரவாய்ப்பு உள்ளது.
உதாரணமாக, தொகுப்பு நிதியை 100% அதிக ரிஸ்க் இல்லாத லார்ஜ்கேப் ஈக்விட்டி ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் வருவதாக வைத்துக்கொள்வோம். இதற்கு சராசரி ஆண்டு பணவீக்க விகிதம் 5% என வைத்துக் கொள்வோம். ஆண்டுக்கு 4% எடுத்துச் செலவிட்டால், தொகுப்பு நிதி சுமார் 29 ஆண்டுகளுக்கு வரும்.
இதுவே தொகுப்பு நிதியில் 50% பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலும் 50% கடன் சந்தை சார்ந்த முதலீடுகளிலும் பிரித்து செய்யப்படுகிறது என வைத்துக்கொள்வோம். பங்குச் சந்தை முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு 10%, கடன் சந்தை சார்ந்த முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு 6% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், ஆண்டுக்கு 6% தொகையை எடுத்துச்செலவு செய்தால், தொகுப்பு நிதி சுமார் 22 ஆண்டுகளுக்கு வரும். (பார்க்க, அட்டவணை 2)

கவனிக்க வேண்டியவை விஷயங்கள்...
* நான் ஏற்கெனவே சொன்னதுபோல, வருமான வரியை மிச்சப்படுத்த தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுப்பது எனில், நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், அக்ரசிவ் கடன் ஃபண்டுகளிலிருந்து ஓராண்டுக்குப் பிறகு எடுக்கவும். இதுவே, கடன் ஃபண்டுகள் எனில், மூன்றாண்டுக்குப் பிறகு தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கவும்.
* பங்கு சார்ந்த முதலீடு எனில், ஓராண்டுக்குப் பிறகு பணம் எடுக்கும்போது நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது. அதற்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும்,
* கடன் ஃபண்டுகள் என்கிற போது மூன்றாண்டுக்குப் பிறகு பணம் எடுக்கும்போது நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும்.
* இந்த வருமான வரி என்பது நிதி ஆண்டில் மொத்த வருமானம் மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சத் தைத் தாண்டும்போது மட்டுமே கட்ட வேண்டி வரும்.
* ஒருவருக்குப் பணி ஓய்வு பெறு வதற்கு முந்தைய செலவு ரூ.50,000 எனில், பணி ஓய்வின்போது அவரின் செலவு அடுத்த மாதம் ரூ.50,000-ல் 80% அதாவது, ரூ.40,000-ஆக இருக்கும். ஆனால், அடுத்து வரும் ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கேற்ப இந்தத் தொகை அதிகரிக்கும்.
எனவே, ஓய்வுக்காலத் தொகுப்பு நிதிக்கு கிடைக்கும் வருமானத்தை விட எடுத்துச் செலவு செய்யும் தொகை குறைவாக இருந்தால் மட்டுமே அந்தத் தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வரும். அடுத்து வரும் ஆண்டுகளில் கூடுதலாக செலவுக்குப் பணம் எடுக்க முடியும்.
உதாரணமாக, தொகுப்பு நிதி மூலம் 8% வருமானம் வருகிறது எனில், செலவு செய்யும் அளவு 6% அல்லது 4 சதவிகிதமாக இருப்பது நல்லது.
* பணி ஓய்வுக்குப் பிறகும் அவசர கால செலவுக்கு என மாதச் செலவைப்போல் 6 மடங்கு தொகையைத் தனியே ரிஸ்க்கே இல்லாத முதலீட்டில் பராமரித்து வர வேண்டும். இது 10 - 12 மடங்காக இருந்தால் நல்லது,
* ஆயுள் காப்பீட்டு பாலிசிக்கான பிரீமியம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் என்பதால், அதற்கேற்ப தொகுப்பு நிதியை அதிகமாகச் சேர்த்து வைப்பது அவசியமாகும்.
* குறுகிய காலத் தேவை மற்றும் நீண்ட காலத் தேவை எனத் தனித்தனியே பிரித்து சற்று ரிஸ்க் உள்ள முதலீடுகள், கொஞ்சம் அதிகம் ரிஸ்க் உள்ள முதலீடுகள் என முதலீடு செய்வதன்மூலம் நீண்ட காலத்துக்குத் தொகுப்பு நிதியைப் பயன்படுத்த முடியும்.
* 45 - 50 வயதில் பணி ஓய்வு பெறும்பட்சத்தில் மிக நீண்ட ஆண்டுகள் அதாவது, சுமார் 40 ஆண்டுகள் பணி ஓய்வுக்குப்பிறகும் செலவுக்குப் பணம் தேவைப்படும். அதற்குகேற்ப அதிக தொகுப்பு நிதியைச் சேர்த்து வைக்க வேண்டும் அல்லது பணி ஓய்வு பெற்ற பிறகும் வருமானத்துக்கு ஏதாவது வழி செய்துகொள்வது நல்லது.
* தொகுப்பு நிதிக்கு ஆண்டுக்கு 7% வருமானம் கிடைக்கும் நிலையில் ஆண்டுக்கு 4% தொகை எடுத்து செலவிட்டால், தொகுப்பு நிதி 30 ஆண்டுகளுக்கு வரும். இதைக் கணக்கிட்டு, தொகுப்பு நிதியை முன்கூட்டியே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
* ஆண்டுக்கு எவ்வளவு தொகை செலவுக்குத் தேவையோ, அதே போல் 25 மடங்கு தொகை தோராய தொகுப்பு நிதியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவரின் மாதச் செலவு ரூ.50,000 எனில், ஆண்டுச் செலவு ரூ.6 லட்சம். இதன் 25 மடங்கு ரூ.1.5 கோடி தொகுப்பு நிதியாக இருக்க வேண்டும்.
* பணி ஓய்வுக் காலத்துக்கான தொகுப்பு நிதியை சேர்க்க எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வர வேண்டும். பணி ஓய்வுக்கு சில ஆண்டுகளுக்குமுன் அதைப் பாதுகாப்பு கருதி ஹைபிரிட் ஃபண்டுகளுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
பணி ஓய்வு பெற்றதும், அதைக் கடன் ஃபண்டுகளுக்கு மாற்றி, எஸ்.டபிள்யூ.பி முறையில் எடுத்து செலவு செய்ய வேண்டும். இது அனைவருக்கும் ஏற்ற அணுகுமுறையாக இருக்கும். ஓய்வுக்காலத்துக்கு ரூ.1 கோடியைச் சேர்த்தால் போதும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், 20 ஆண்டு கள் கழித்து, ரூ.1 கோடி என்பது நமக்கு போதாதது என்கிற நிலையில் இருக்கும். இன்னும்கூட சில கோடிகளை சேர்த்து வைத்திருக்கலாமே என்று நினைக்கத் தோன்றும். எனவே, ஓய்வுக்காலத்துக்கு எவ்வளவு தேவையாக இருக்கும் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள்!
(திட்டமிடல் தொடரும்)