Published:Updated:

பணி ஓய்வுக்குப் பிந்தைய முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும்?

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! - சூப்பர் பிளானிங் 21

பணி ஓய்வுக்குப் பிறகு, வருமானம் என்பது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. எந்த வருமானமும் இல்லாத நிலையில் செலவுகள் எக்கச்சக்கமாக இருக்கும். அந்தச் செலவுகளில் முக்கியமானது மருத்துவச் செலவு.

என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர்,
https://www.click4mf.com/
என்.விஜயகுமார், நிர்வாக இயக்குநர், https://www.click4mf.com/

பணி ஓய்வுக்காக செய்து வைத்திருக்கும் முதலீடுகளைப் பணமாக்கி அவற்றை ரிஸ்க் இல்லாத முதலீட்டில் போட்டு வைப்பது நல்லது. பலரும் ஓய்வுக்காலத் தேவைக்கு உகந்ததாக இருக்கும் என்று நினைத்து வீடு வாங்குகிறார்கள். ஒருவரின் வீடு ரூ.1 கோடிக்கு விலைபோகும் நிலையில், அதிலிருந்து மாதம் ரூ.20,000 - ரூ.25,000 தான் வாடகை வருமானம் வருகிறது. ஆனால், அதே ஒரு கோடியை 7% ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்திருந்தால், மாதம் சுமார் ரூ.58,000 வட்டி கிடைக்கும். இதுவே வட்டி 6% எனில், ரூ.49,750 கிடைக்கும். மேலும், மாதம்தோறும் சரியாக வீட்டு வாடகை வந்து சேரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒரு வாடகைதாரர் வீட்டைக் காலி செய்து அடுத்தவர் குடிவர காலம் எடுக்கும். இந்தப் பிரச்னை எஃப்.டி, ஃபிக்ஸட் வருமானத் திட்டங்களில் குறிப்பாக, கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் கிடையாது; தொடர்ந்து வருமானம் வந்துகொண்டே இருக்கும். எனவே, ஓய்வுக்காலத்துக்கான சரியான முதலீடாக வீடு வாங்குவது இருக்காது.

நிலையான வருமானத்துக்கு வழி...

ஓய்வுக்கால தொகுப்பு நிதியிலிருந்து இஷ்டத்துக்கு எடுத்து, செலவு செய்வது என்பது அந்தத் தொகையை விரைவாகக் கரைத்து விடும். இதை நிறைய பேரின் வாழ்க்கையில் பார்க்கிறோம். பணி ஓய்வின்போது லட்சக்கணக்கான ரூபாய் பெற்றிருப்பார்கள். அந்தத் தொகையிலிருந்து உறவினர்கள், நண்பர்கள் பலரும் அவர்களின் பல்வேறு தேவைகளுக்கு பணம் கேட்டு வாங்கிக்கொள்வதை நடைமுறையில் பார்க்க முடியும்.

மேலும், பணி ஓய்வு பெற்றவர்கள் ரிடையர்மென்ட் பணத்தைப் பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்குப் பிரித்து தருவதைப் பார்க்க முடிகிறது. விசு திரைப்படத்தில் வருவது போல் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கும் சூழல் பல வீடுகளில் இருக்கிறது. இப்படி செய்யும்போது ஓரிரு ஆண்டுகளில் செலவுக்குப் பணமில்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்; அன்றைய செலவுகளைச் சமாளிக்க வயதான மற்றும் முடியாத காலத்தில் கிடைக்கும் குறைவான சம்பளத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

கோடீஸ்வராகப் பணி ஓய்வு பெற்று சில ஆண்டுகளில் வறுமை நிலை என்பதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்க்க ஓய்வுக்கால தொகுப்பு நிதியை ஏதாவது ஒரு முதலீட்டில் போட்டுவிட்டு, அதிலிருந்து மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை எடுத்து செலவிடுவது போல் பண வரத்துக்கு ஏற்பாடு செய்வது மிக முக்கியமாகும்.

பணி ஓய்வுக்குப் பிந்தைய 
முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும்?

பணவீக்கம்...

ஓய்வுக்கால முதலீட்டைத் தேர்வு செய்யும் போது பணவீக்க விகிதம் மற்றும் வருமான வரியைக் கவனிப்பது மிக முக்கியம். அதற்கேற்ப சரியான திட்டங்களைத் தேர்வு செய்வது மிக முக்கியம். இல்லை எனில், தொகுப்பு நிதி சில ஆண்டுகளில் கரைந்து காணாமல் போய்விடும் அல்லது நீண்ட காலத்தில் மாதம்தோறும் கிடைக்கும் தொகைக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். மேலும், ஓய்வுக்கால முதலீட்டுக்கு அதிக வருமான வரி கட்டும் போது, அது செலவுக்குக் கிடைக் கும் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிடும்.

செலவுக்கு மாதம்தோறும் எடுக்கும் தொகை, உங்களின் மாதச் செலவுக்குப் போதுமான தாகவும், உங்களின் வாழ்க்கைத் தரத்தை (Lifestyle) பாதிக்காத வகையிலும் பார்த்துக்கொள்வது அவசியம். உதாரணமாக, காரில் பயணம் செய்து பழக்கப்பட்டவர் களுக்கு இரு சக்கர வாகனத்திலோ, பொது வாகனத்திலோ திடீரென பயணம் செய்யும் சூழ்நிலை வந்தால், அதை எதிர்கொள்வது கஷ்டமாக இருக்கும். எனவே, அதற்கேற்ப தொகுப்பு நிதியை அதிக வருமானம் கிடைப்பது போல் முதலீடு செய்வது அவசியம்.

உங்களுடன் வசிக்கும் பிள்ளைகள் அல்லது தனியே வசிக்கும் பிள்ளைகளுக்கு நீங்கள் ஏதாவது உதவி செய்ய வேண்டி இருந்தால் அதையும் மாதச் செலவு தொகையில் சேர்த்து மாதம்தோறும் தேவைப்படும் தொகை என்ன என்பதை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து ஆண்டுக்கு ஒரு முறை கட்டும் இன்ஷூரன்ஸ் பிரீமியம், சொத்து வரி போன்றவற்றை 12-ஆல் வகுத்து மாத செலவுத் தொகையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான தொகையை எடுக்காமல் வங்கியிலேயே விட்டுவிட்டு எப்போது தேவைப் படுகிறதோ, அப்போதுதான் எடுத்து செலவு செய்ய வேண்டும்.

முதலீட்டு வாய்ப்புகள்...

பொதுவாக, ஓய்வுக்காலத்தில் முதலீட்டில் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பார்கள். ஆனால், அதிகரித்து வரும் பணவீக்க விகித பாதிப்பை சமாளிக்க ஓய்வுக்கால தொகுப்பு நிதியில் ஒரு பகுதியை முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், தொகுப்பு நிதியின் அளவுக்கேற்ப, ஈக்விட்டி ஃபண்ட் அல்லது ஹைபிரிட் ஃபண்ட் அல்லது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகிய ஏதாவது ஒரு வகை ஃபண்டில் முதலீடு செய்வது நல்லது.

மொத்தத் தொகுப்பு நிதியில் சுமார் 30% - 35% தொகையை, உதாரணமாக, தொகுப்பு நிதி ரூ.1 கோடி இருக்கிறது எனில், அதில் ரூ.30 - ரூ.35 லட்சத்தை ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இது போன்ற திட்டங் களில் முதலீடு செய்யும்பட்சத்தில் வாழ்க்கைத் தரத்தைக் குறைக்க வேண்டியதில்லை. மேலும், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் கிடைக்கும் என்பதால், தொகுப்பு நிதி நீண்ட காலத்துக்கு வர அதிக வாய்ப் புள்ளது.

மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் திட்டங்களில் மற்றவர்களைவிட வட்டி சிறிது அதிகம் தரப்படுகிறது. தற்போதைய நிலையில், தபால் அலுவலகம் மற்றும் வங்கிகளில் செயல்படுத்தப்படும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஒருவர் அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிப் பிரிவு 80சி-யின்கீழ் நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும் என்பது கூடுதல் சலுகையாகும். ஆனால், வட்டி வருமானத்துக்கு, அடிப்படை வரி வரம்புக்கேற்ப வரி இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நிதி ஆண்டில் வருமானத்துக்கு ரூ.3 லட்சம் வரைக்கும் வரி இல்லை என்பதால், பெரும்பாலும் வரி கட்ட வேண்டியிருக்காது.

மூத்த குடிமக்களுக்கான மற்றொரு திட்டம், பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா (Pradhan Mantri Vaya Vandana Yojana -PMVVY). அடுத்து தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டத்தின் மொத்த உச்சவரம்பான ரூ.30 லட்சத்தைத் தாண்டும்போதுதான், தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இதையும் தாண்டி பணம் இருக்கிறது எனில், வங்கிகளின் மூத்த குடிமக்களுக்கான திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பணி ஓய்வுக்குப் பிந்தைய 
முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும்?

வாழ்க்கைமுறை...

தற்போதைய வாழ்க்கைமுறையில் எந்த மாற்றமும் வரக்கூடாது; விலைவாசி உயர்வை சமாளித்து எப்போதும் போல செலவு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் ஓய்வுக்கால தொகுப்பு நிதியில் சுமார் 15% - 20% தொகையை அதிக ரிஸ்க் இல்லாத பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். மீதமுள்ள பணத்தை கன்சர்வேட்டிவ் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வருமான வரிச் சலுகை எதிர்பார்ப்பவர்கள் மிகக் குறுகிய காலம் அதாவது, மூன்று ஆண்டுகள் லாக்- இன் கொண்ட இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். மூன்று ஆண்டு கழித்து, சந்தை நிலவரத்தைக் கவனித்து அதை மல்ட்டி கேப் அல்லது ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம். அல்லது வரிச் சலுகை தேவை எனில், மீண்டும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை இருக்கிறது. நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரை வரி கிடையாது. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% மட்டும் வரி கட்டினால் போதும்.

பல வகைகளில் மாத வருமானம்...

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நாம் ஏற்கெனவே சொன்னது போல், தொகுப்பு நிதியிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (swp) மூலம் மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையை எடுத்து செலவு செய்யலாம். ஓய்வுக் காலத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், பிரதான் மந்திரி வயா வந்தனா திட்டம் போன்றவற்றில் செய்யப்பட்ட டெபாசிட் மூலம் கிடைக்கும் தொகை, மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.டபிள்யூ.பி, வீட்டு வாடகை, பணியாளர் சேம நல நிதி பென்ஷன் என பலவழிகளில் செலவுக்கு பணம் கிடைப்பது போல ஏற்பாடு செய்துகொள்வது சரியாக இருக்கும்.

(திட்டமிடல் தொடரும்)