
சேமிப்பு இயல்பாகவே உங்களுக்கான நிதி சுதந்திரத்தைத் தரும். இக்கட்டான கால கட்டத்தில் கைகொடுக்கும். உங்களுடைய ஓய்வுக்காலத்தை சிறப் பானதாக மாற்றும்.
நம் அம்மாக்களும் பாட்டிகளும் கடுகு டப்பாவிலும், உளுந்து டப்பாவிலும் சேமித்து வைத்த சிறுவாட்டுக் காசுதான் குடும்பத்தின் இக்கட்டான சூழல்களில் உதவியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், இன்றைய தலைமுறைக்கு சேமிப்பு என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது.
சேமிப்பின் அவசியம் பற்றி விளக்கி, அதைச் சாத்தியப்படுத்துவதற்கான டிப்ஸையும் தருகிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்...
‘`சம்பளம் கைக்கு வந்ததும் முதலில் நம் முன் நிற்பது செலவு தான். ‘செலவு போக மிச்ச காசை சேமிச்சுக்கலாம்’ என்ற எண்ணம் நம்மில் பெரும்பான்மையினருக்கு வந்து விட்டது. 20,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி... 2,00,000 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி... மாதாமாதம் சம்பளம் வந்தவுடன் குறிப்பிட்ட தொகையை முதலில் சேமிப்புக் காக ஒதுக்கிவிட வேண்டும். சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும். செலவுகள் நிரந்தரமானவை என்பதால் செலவுபோக மீதியை சேமிக்கலாம் என்பது சாத்தியமாகாது.

சேமிப்பால் என்ன பயன்?
சேமிப்பு இயல்பாகவே உங்களுக்கான நிதி சுதந்திரத்தைத் தரும். இக்கட்டான கால கட்டத்தில் கைகொடுக்கும். உங்களுடைய ஓய்வுக்காலத்தை சிறப் பானதாக மாற்றும். இதையெல்லாம்விட முக்கியமாக இன்றைக்கு வேலை பாதுகாப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை திடீரென்று உங்களுக்கு வேலை பறிபோனாலும் அடுத்த வேலை கிடைக்கும் வரை இந்தச் சேமிப்பு உங்களைக் காப்பாற்றும்.
எவ்வளவு சேமிக்க வேண்டும்?
குறைவான சம்பளம் பெறுபவர்கள் தங்களது சம்பளத்தில் இருந்து 5 அல்லது 10 சதவிகிதத்தையும், அதிக சம்பளம் பெறு பவர்கள் 30 சதவிகிதம் வரையிலும் சேமிக்கலாம். இன்று நம்மில் பலரும் ஆடம்பர செலவுகள் அதிகம் செய்கிறோம். அவற்றில் முதல் இடம் ஆடைகளுக்கே. தள்ளுபடியில் கிடைக்கிறது, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அறிவிப்புகளில் மயங்கி, ஆடைகளை வாங்கிக் குவிக்கிறோம். இது தேவைதானா என்று யோசிக்க வேண்டும்.
இன்று பிறந்தநாள்களைக் கூட திரு விழாவைப்போல கொண்டாடத் தொடங்கி விட்டோம். பிறந்தநாளை நமது வீட்டிலேயோ அல்லது மொட்டை மாடியிலோ எளிமையாகக் கொண்டாடலாம். சமுதாய அழுத்தத் துக்காக இத்தகைய தேவையற்ற செயல்களைத் தவிர்த்தாலே சேமிப்புத் தொகையில் துண்டு விழாது.
ஃபார்முலாவை மாற்றுங்கள்...
பலரும் வருமானம் மைனஸ் செலவுகள் = சேமிப்பு என்ற ஃபார் முலாவை பின்பற்றி வருகிறார்கள். இதைக் கொஞ்சம் மாற்றி வருமானம் மைனஸ் சேமிப்பு = செலவுகள் என்று பின்பற்ற வேண்டும்.
கடனிலிருந்து தப்பிக்க...
எந்தப் பொருளை வாங்கினாலும் நம்பர் ஒன் பிராண்டாக வாங்க நினைக்காமல், விஷயம் தெரிந்தவரிடம் விசாரித்து தரமாக வும், விலை குறைவாகவும் வாங்கலாம். பிராண்டடு தயாரிப்புகள் மட்டுமே தர மானவை என அர்த்தமில்லை. குடும்பம் தொடங்கிய முதல் 10-15 ஆண்டுகளுக்கு சிக்கனத்தைப் பின்பற்றினாலே கடன்களில் இருந்து தப்பித்துவிடலாம். பெண்களுக்கு எப்போதும் தங்கத்தின் மீது தீராத விருப்பம் இருக்கும். அதற்காக தங்கத்தை வாங்கிக் குவிக்க வேண்டும் என்றில்லை. நமக்குத் தேவையான அளவு தங்கம் மட்டும் வைத்திருந் தாலே போதும். நிறைய பணம் இருந்தால் வேறு விஷயங்களில் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளுக்கும் பழக்குங்கள்...
நம் குழந்தைகளுக்கும் சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுத் தருவது, மிக மிக அவசியம். அதற்கு முன் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையைப் புரியவைக்க வேண்டும். எந்த வீட்டில் சேமிப்பு குறித்தும், பணத்தின் மதிப்பு குறித்தும் அதிகம் பேசுகிறார்களோ, அந்த வீட்டுக் குழந்தைகள் பணத்தின் மதிப்பு தெரிந்து வளர்வார்கள்.
பணம் குறித்துப் பேசினால் மட்டும் போதாது. குழந்தை களைக் கடைக்கு அனுப்பி பொருள்களை வாங்கி வரச் சொல்லலாம். அப்போது குழந்தைகளுக்கு பொருள் களின் விலை குறித்தும், அதற்கு எப்படி, எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதும் தெரியும். இப்படி விலைவாசி குறித்து அவர்களுக்குத் தெரியும்போது ஒரு பொருளைக் கேட்கலாமா... அதற்கு நம் குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்குமா என்று யோசிக்கத் தொடங்குவார்கள்.
பாக்கெட் மணி நல்லது...
குழந்தைகளுக்கு ஆறாம் வகுப்பில் இருந்தே பாக்கெட் மணி பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இது ரூ.50 முதல் ரூ.200 வரை இருக்கலாம். அளவுக்கதிகமாகக் கொடுக்க வேண்டாம். பாக்கெட் மணியில் அவர்களது செலவு போக மிச்சத்தை சேமிக்கப் பழக்கலாம். இதற்காக உண்டியல் வாங்கித் தரலாம். அவர்களது சேமிப்பில் இருந்து தேவையான வற்றை வாங்கிக்கொள்ளச் செய்யலாம். இது அவர்களுக்கான பொறுப்பையும், சேமிப்பின் அருமையையும் உணர்த்தும்.”