
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 6
பாவனா ஆச்சார்யா, இணை நிறுவனர், Primeinvestor.in
ஆண்டுக்கு 133% வருமானம் தரக்கூடிய ஃபண்ட் உண்டென்றால், யார்தான் அதை விரும்ப மாட்டார்கள்? இதுபோன்ற பம்பர் வருமானம் பொதுவாக சில குறிப்பிட்ட வகை ஈக்விட்டி ஃபண்டுகளில்தான் கிடைக்கும். அவைதான் செக்டார் ஃபண்டுகள். இந்த ஃபண்டுகளில் நாம் செயல்படுத்தும் அணுகுமுறை, செய்யும் ஒதுக்கீடு, தேர்ந்தெடுக் கும் விதம், இவை எல்லாவற்றையும் பொறுத்தே போர்ட்ஃபோலியோவில் இந்த ஃபண்டுகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியும். செக்டார் ஃபண்டுகளை நம் போர்ட் ஃபோலியோவில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

செக்டார் ஃபண்ட் அல்லது தீமேட்டிக் ஃபண்ட்...
இந்த ஃபண்டுகளின் தன்மையைப் புரிந்து கொள்வது அவசியம். இந்தப் பிரிவில் பல ஃபண்டுகள் இருந்தாலும் அவற்றில் சில வித்தியாசங்கள் உள்ளன.
1. செக்டார் ஃபண்டுகளின் உண்மையான தன்மை ஒரே துறையில் கவனம் செலுத்துவது. உதாரணமாக, ஃபைனான்ஸ், ஐ.டி, ஃபார்மா என எந்தத் துறையாகவும் இருக்கலாம். இந்த ஃபண்டுகளில் அதிக ரிஸ்க் உள்ளது. ஏனெனில், சந்தை சுழற்சிகளில் துறைகள் ஏற்றம் அடையலாம். அதே சமயம், வீழ்ச்சியும் காணலாம். இந்த ஃபண்டுகளின் வருமானம் அந்தக் குறிப்பிட்ட துறையின் செயல் திறனைப் பொறுத்தது.
2. தீமேட்டிக் ஃபண்டுகள் உண்மையான செக்டார் ஃபண்டுகள் போல் அல்லாமல் சற்று விரிவானது. இந்த ஃபண்டுகளில் தேர்ந் தெடுக்கப்படும் பங்குகள் ஒரு தீம் அடிப்படையில் இருக்கும். அதாவது, அவற்றில் பல துறை சார்ந்த பங்குகள் இடம்பெறலாம்.நாம் எடுத்துக்கொண்ட தீம் சார்ந்து பொருந்தக்கூடிய பங்குகளை இதில் தேர்வு செய்வோம். உதாரணமாக, உள்கட்டமைப்பு என்ற தீம் எடுத்துக்கொண்டால், அதில் கட்டுமானம், சிமென்ட், மெட்டல், இன்ஜினீயரிங், எண்ணெய் மற்றும் எரிவாயு வரை அனைத்துமே அடங்கும்.
மேலும், ஒரு தீமுக்குள் வருகிற செக்டார்கள் அனைத்துமே அதனோடு நேரடியாகப் பொருந்துபவையாக இருக்க வேண்டிய தில்லை. உதாரணமாக, பல இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டுகளில் வங்கி நிறுவனப் பங்குகள் இடம்பெறும். அவை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் திட்டங்களுக்குக் கடன் தருவதே இதற்குக் காரணம். எனவே, ஒரு தீமுக்குள் வரும் துறைகள் குறித்த தெளிவுக்கு வர போர்ட் ஃபோலியோவை சில மாதங்களுக்குக் கவனிக்க வேண்டும் அல்லது ஃபண்டுகளின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும். தீமேட்டிக் ஃபண்டுகளின் இந்தப் பரவலான தன்மைதான் உண்மையான செக்டார் ஃபண்டுகளைக் காட்டிலும் ரிஸ்க் குறைவாக இருக்க காரணம்.

3. சில தீம்கள் தெளிவற்ற வகையில் வரையறுக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற ஃபண்டுகள் எதில் முதலீடு செய்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். தீமேட்டிக் ஃபண்டுகள் பன்முகப்படுத்தப்பட்ட ஈக்விட்டி ஃபண்டுகளைப் போலவே (அதாவது, மல்ட்டிகேப், ஃப்ளெக்ஸிகேப், வேல்யூ ஃபண்ட் போன்ற) ஃபண்டுகளை உருவாக்கவும் செய்யும். அவற்றில் வேல்யூ பங்குகளும் இருக்கலாம், குரோத் பங்குகளும் இருக்கலாம்.
அதே போல், முதலீட்டு உலக விதிகளின்படி பார்க்கும்போது, பிசினஸ் சுழற்சி தீம் ஆகவோ, இ.எஸ்.ஜி (ESG) தீம் ஆகவோ இருக்கலாம். இந்தக் காரணிகள் மிகவும் முக்கியமாகும். ஏனெனில், தீம்களை ஆய்வு செய்யும்போது அவற்றை வழக்க மான ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது அந்த தீம்களின் செயல்பாடுகள் குறித்து தெளிவான முடிவுக்கு வருவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், பரவலாக்கப்பட்ட தீம்கள் தரும் வருமானம், வரையறுக்கப்பட்டு கவனமாக உருவாக்கப்படும் தீம்கள், செக்டார்கள் தரும் வருமானத்தை விட சிறப்பானதாக இருப்பதில்லை. உதாரணமாக இ.எஸ்.ஜி ஃபண்டுகளின் ஒரு வருட வருமானம் நிஃப்டி 500 இண்டெக்ஸ் தரும் வருமானத்தைப் போலவோ, அதற்கும் குறைவாகவோதான் இருக்கின்றன.
4. இன்டர்நேஷனல் ஃபண்டுகளும் தீமேடிக் அல்லது செக்டார் சார்ந்த ஃபண்டுகளாக இருக்கலாம். தங்கச் சுரங்கம், ஆற்றல் உற்பத்தி ஆகியவை உதாரணமாக, தீமேட்டிக் வகை ஃபண்டுகளாகும். இவை உள்நாட்டு தீமேட்டிக், செக்டார் ஃபண்டுகளைவிடவும் கடினமானவை. ஏனெனில், இவை சர்வதேச சந்தை நகர்வுகள், வாய்ப்புகள் பொறுத்து இயங்குபவை என்பதால் புரிந்துகொள்வது சிரமமாகும்.
செக்டார் ஃபண்ட், தீமேடிக் ஃபண்ட்: எப்படி அணுகுவது?
இந்த ஃபண்டுகளை நம்முடைய போர்ட்ஃபோலியோவுக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு விதமான அணுகு முறைகள் உள்ளன. அதற்கு முன், முதலில் இந்த ஃபண்டுகள் உங்களுக்குத் தேவையா என்பதை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த ஃபண்டுகள் உங்களுடைய போர்ட்ஃபோலியோ ரிட்டர்னை மேம்படுத்தும் என்னும்பட்சத்தில் இவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதே சமயம் தவறான தீமேடிக், செக்டார் ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்தால் போர்ட் ஃபோலியோவின் வருமானம் கடுமையாகப் பாதிப்புக்குள்ளா கவும் வாய்ப்புள்ளது.
இரண்டாவது, தீம் ஃபண்ட் அல்லது செக்டார் ஃபண்ட் சிறப்பாக இருந் தாலும் சில சந்தை சுழற்சி களில் டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்டுகளால் மறைக்கப்படலாம். உதாரண மாக, ஐ.டி துறை சிறப்பாக செயலாற்றும்போது, பல்வேறு மிட்கேப் அல்லது ஸ்மால்கேப் ஃபண்டுகள் அதைவிட அதிக வருமானம் தருவதாக இருக்கும்.
மூன்றாவது, பெரிய தீம்கள் குறிப்பாக, வாய்ப்புகள், இ எஸ்.ஜி, குவான்ட் போன்றவை சந்தை தரும் வருமானத்தை விட அதிக வருமானத்தைத் தராமல் போகலாம்.
உங்களுடைய போர்ட் ஃபோலியோவை பொறுத்தே இந்த ஃபண்டுகளில் எது சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டும். உங்களுடைய போர்ட் ஃபோலியோ பெரிதாக இல்லை எனும்பட்சத்தில் - உதாரணமாக ரூ.15 - 20 லட்சத்துக்குக்கீழ் இருந்தால் - செக்டார், தீமேடிக் ஃபண்டு களைத் தவிர்த்துவிடுவது நல்லது. வழக்கமான ஈக்விட்டி ஃபண்டுகள், கடன் ஃபண்டுகள் கலவையே போதுமானது. இதில் தீமேடிக், செக்டார் ஃபண்டுகளைச் சேர்ப்பது கூடுதலாக ஃபண்டு களைக் கண்காணிக்கும் வேலையை அதிகரித்து போர்ட் ஃபோலியோவை சிக்கலாகவே மாற்றும்.
போர்ட்ஃபோலியோவில் ஏன் செக்டார், தீமேடிக் ஃபண்டுகளை சேர்க்க வேண்டும்?
செக்டார் ஃபண்ட், தீமேடிக் ஃபண்டுகளை போர்ட்ஃபோலியோவில் சேர்க்க முதல் காரணம், வேறுபட்ட வருமானத்தைப் பெறுவதுதான். இதற்கு அர்த்தம் போர்ட்ஃபோலி யோவின் மொத்த வரு மானத்தை இவற்றால் மாற்ற முடியும் என்பதல்ல. மாறாக, ஏற்கெனவே உள்ள ஈக்விட்டி ஃபண்டுகளில் இவற்றைச் சேர்ப்பதன் நோக்கம் போர்ட் ஃபோலியோவின் தன்மையை மாற்றி பரவலாக்குவதாகும்.
இந்த ஃபண்டுகளைத் தேர்வு செய்வதன் நோக்கம், போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கைக் கடுமையாக அதிகரிப்பதைத் தடுப்பதும், மற்ற ஈக்விட்டி ஃபண்டு களை சமநிலைப் படுத்துவதும் தான். இதற்கு என்ன செய்ய வேண்டும்?
1. பல்வேறு சந்தைப் பிரிவுகளை உள்ளடக்கிய தீமேடிக் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். இதன் மூலம் வருமானம் ஈட்டுவதற் கான வாய்ப்புகளை அதிகரிக் கவும், ரிஸ்க்கை குறைக்கவும் செய்யலாம். உறுதித்தன்மை இல்லாமல் சந்தேகமாக இருக்கும் நிலையில், செக்டார் ஃபண்டுகளைத் தவிர்க்கவும்.
2. வாய்ப்புகள் என்னும் தீமில் சொல்லப்பட்டிருக்கும் ஃபண்டுகள் போர்ட் ஃபோலி யோவுக்குப் பொருத்த மானவை. இந்த ஃபண்டுகள் எந்தவொரு குறிப்பிட்ட துறை சார்ந்தும் இல்லாமல் வேறுபட்ட துறைகளின் பங்குகளின் தொகுப்பாக இருக்கின்றன.
3. அதிகபட்சம் 15% ஒதுக் கீட்டை 2 - 3 ஃபண்டுகளில் வைத்துக்கொள்ளலாம். ஃபண்டுகளின் சமநிலைக்கு ஒரு குறுகிய தீம் மற்றும் பரந்த தீம் எனக் கலவையாக வைத்துகொள்ளலாம்.பெரிய மதிப்பிலான போர்ட்ஃபோலியோவில் பரவலாக்கத்தைக் கொண்டு வர தீமேடிக் ஃபண்டுகள் உதவுகின்றன. இதற்குப் பெரிதாக சந்தையைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை.

அதிக போர்ட்ஃபோலியோ வருமானம்
இரண்டாவது அணுகுமுறையானது, போர்ட் ஃபோலியோவின் மையக்கூறுகளுக்குத் தொடர்பு இல்லாத சில ஃபண்டுகளின் தொகுப்பை சேர்ப்பதன் மூலம் போர்ட்ஃபோலியோவின் வருவாய் சாத்தியங் களை அதிகரிப்பதாகும். இந்த அணுகுமுறையைச் செயல்படுத்த சந்தையைத் தொடர்ந்து கண்காணிப் பது, ஃபண்டுகளின் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்வது அவசியம். அதன்படிதான் எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த அணுகுமுறை சற்று அதிக ரிஸ்க் கொண்டது. அனுபவம் இல்லாத சீஸன் முதலீட் டாளர்களுக்கு இது அதிக ரிஸ்க்கானது. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையிலான கவனத்தைச் செலுத்த வேண்டும். தொடர்ந்து செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.
1. மைய போர்ட்ஃபோலியோவை லார்ஜ் கேப் சார்ந்த ஃப்ண்டுகள், கடன் ஃபண்டுகள், மிட்/ஸ்மால் கேப் ஃபண்டுகளின் கலவையாக வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் அக்ரெஸிவான ஃபண்டுகளைத் தவிர்த்து விட்டு, தீமேடிக்/செக்டார் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.
2. ஏற்கெனவே உள்ள ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக பங்கு வகிக்கும் செக்டார்/தீம்களைத் தவிர்க்க வேண்டும். பெரும்பாலான லார்ஜ் கேப் ஃபண்டுகளில் வங்கி, நிதிச் சேவைகளின் பங்கு அதிகமாக இருக்கும். ஆனால், ஃபார்மா, உள்கட்ட மைப்பு, நுகர்வு உள்ளிட்டவற்றின் பங்கு குறைவாகவே இருக்கும். எனவே, போர்ட்ஃபோலியோவில் ஏற்கெனவே உள்ள ஃபண்டுகளின் துறைகள்/தீம்களை மீண்டும் சேர்க்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. ஃபண்டுகளுக்கான ஒதுக்கீட்டை முடிவு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். ஒன்றிலேயே அதிக ஒதுக்கீடு இருக்கக் கூடாது. இந்த வகை பண்டுகளுக்கு 10% - 15% ஒதுக்கீடு பொருந்தாது. எனவே, அவ்வப்போது லாபத்தை எடுத்துவிட வேண்டும். ரிஸ்க் பரவலாக்கத்தைக் கவனிக்க வேண்டும். எனவே, ஒதுக்கீடுகளை 2 - 3 செக் டார்/தீம்களாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. ஃபண்டுகளைத் தேர்வு செய்யும்போது நீண்ட காலம், குறுகிய காலம் எனக் கலவையாகத் தேர்வு செய்யலாம். உள்நாட்டு தீம்களுக்கு போதுமான தேர்வுகள் இல்லை எனில், சர்வதேச தீம்களிலும் கவனம் செலுத்தலாம். இந்த அணுகு முறையின் முக்கியமான நோக்கம், சந்தையின் அதிகபட்ச பலனை அடையும் சாத்தியங்களைக் கொண்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கான செக்டார்/தீம் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதாகும். இதற்கு சந்தையின் செயல்பாடு குறித்தும், பரவலாக அனைத்து விதமான துறைகள் குறித்தும் போதிய அனுபவமும் தொடர் கண்காணிப்பும் அவசியம். இந்த அணுகுமுறையானது அனுபவமிக்க ரிஸ்க் அதிகம் எடுக்கத் தயாராக உள்ளவர்களுக்கானது.
ஃபண்டு தேர்வில் கவனிக்க வேண்டியவை...
ஃபண்டுகளைத் தேர்வு செய்யும்முன் அந்த செக்டார், தீம் குறித்தும், சந்தையின் போக்கு குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
1. ஒரு வருட அல்லது சமீபத்திய ரிட்டர்ன் அதிகமாக இருக்கிறது என்பதற்காகஃ பண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டாம். ஃபண்டு எடுத்துக் கொண்ட தீம் நன்றாகச் செயல் பட்டதன் காரணமாக அதிக ரிட்டர்ன் வந்திருந்தால், தொடர்ந்து அப்படியே இருக்கும் என்று உத்தரவாதம் இல்லை.
2. செக்டார்/தீம் ஃபண்டுகளில் உள்ள பங்குகள், ஏற்கெனவே போர்ட்ஃபோலியோவில் உள்ள ஃபண்டுகளில் உள்ள பங்கு களையும் கிராஸ் செக் செய்து கொள்ள வேண்டும். ஒதுக்கீடு செய்யும்போது ஒரே துறையில், ஒரே தீமில் அதிகமான ஒதுக்கீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
3. தேர்ந்தெடுக்கும் ஃபண்டுகளின் ட்ராக் ரெக்கார்டைப் பார்க்க வேண்டும். நீண்ட ட்ராக் ரெக்கார்ட் கொண்ட ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
இறுதியாக, செக்டார், தீமேடிக் ஃபண்டுகளை போர்ட் ஃபோலியோவுக்கு பயன்படுத்த விரும்பினால், அவை அதிக ரிஸ்க் உள்ளவை என்பதையும், அனைவருக்குமானவை இல்லை என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
(ஆய்வு தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்