
சேமிப்பும் முதலீடும் - 13
நம்மவர்களுக்கு பங்கு முதலீடு (Share Investing) மீது எப்போதும் அதிக ஆர்வம் இருக்கிறது. ஆனால், பலருக்கும் அதுபற்றிய அடிப்படை விஷயங்கள் தெரியவில்லை. மேலும் அதிலுள்ள ரிஸ்க் காரணமாகப் பலரும் அதில் ஈடுபடாமல் விலகி நிற்கிறார்கள். ஆனால், நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் பெறவும், வருமானத்துக்குக் குறைவான வரியைக் கட்டவும் பங்கு முதலீடு ஒருவருக்கு உதவுகிறது.
ஒரு நிறுவனத்தின் பங்கில் ஒருவர் முதலீடு செய்கிறார் எனில், அந்த நிறுவனத்தின், வணிகத்தின் உரிமையாளர் களில் (Ownership) ஒருவராக மாறுகிறார். ஒரே ஒரு பங்கில் முதலீடு செய்திருந்தால் கூட, அந்த நிறுவனம் நடத்தும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM - Annual General Meeting) கலந்துகொள்வதுடன், நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்க உரிமை உண்டு. மேலும், அந்த நிறுவனத்தின் லாப நஷ்டத்திலும் அவருக்கு பங்கு இருக்கிறது.

வருமானம் எப்படி?
ஒரு நிறுவனப் பங்கில் முதலீடு செய் திருப்பவருக்கு இரண்டு வகைகளில் லாபம் கிடைக்கும். ஒன்று, பங்கின் விலை உயர்வால் கிடைக்கும் மூலதன ஆதாயம். அடுத்து, நிறுவனம் வழங்கும் டிவிடெண்ட் வருமானம் ஆகும்.
இந்த டிவிடெண்ட் என்பது பங்கின் முகமதிப்புக்குதான் வழங்கப்படும். உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் முக மதிப்பு ரூ.1 என்றும், பங்கு விலை ரூ.1,000 என்றும் வைத்துக்கொள்வோம். இந்த நிறுவனம் 100% டிவிடெண்ட் வழங்குகிறது எனில், பங்கு ஒன்றுக்கு ரூ.1 டிவிடெண்ட் கிடைக்கும். இங்கே டிவிடெண்ட் சதவிகிதம் மிக அதிகமாகத் தெரிகிறது. ஆனால், ரூபாய் மதிப்பில் மிகக் குறைவாக இருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் குழம்பிவிடு கிறார்கள். இதைத் தவிர்க்க செபி அமைப்பு, இனி டிவிடெண்டை ரூபாய் மதிப்பில் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
ஒரு பங்கின் விலை அதாவது, முதலீட்டுத் தொகையுடன் ஒப்பிடும்போது டிவிடெண்ட் என்பது பெரிய தொகை இல்லை என்பதால், பலரும் பங்கின் விலை உயர்வால் கிடைக்கும் மூலதன ஆதாயத்தைத்தான் பெரிதும் விரும்பி முதலீடு செய்கிறார்கள். மிகக் குறைவானவர்களே டிவிடெண்ட் வருமானத்துக்காக முதலீடு செய் கிறார்கள். அதுவும் பங்கின் விலை மிகக் குறைவாக இருக்கும்போது பல ஆண்டுகளுக்குமுன் அந்தப் பங்கில் முதலீடு செய்தவர்களாக இருப்பார்கள்.
யாருக்கு ஏற்றது?
பங்கு முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது. பொதுவாக, நிறுவனத்தின் விற்பனை, லாபம் ஆகியவை நன்றாக இருக்கும்பட்சத்தில் பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும்.
இந்தப் பங்கு முதலீடு அதிக ரிஸ்க் ஆனது. போட்ட மூலதனத்தின் மதிப்பு குறைய அதிக வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில், அதிக வருமானம் கிடைக்கவும் நிறைய வாய்ப்புள்ளது. 10, 15, 20 ஆண்டுகளில் அதவாது, நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% - 15% வரை வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
நிறுவனப் பங்குகளை அவற்றின் பங்குச் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப்படையில் லார்ஜ்கேப் (முதல் 100 நிறுவனங்கள்), மிட்கேப் (101-வது நிறுவனம் முதல் 250-வது நிறுவனம் வரை), ஸ்மால்கேப் (251-வது நிறுவனம் முதல் சுமார் 5,100-வது நிறுவனம் வரை) என மூன்றாக இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பின் வரையறைப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது.
லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகள் என்பவை மிகப் பெரிய நிறுவனங்கள் என்பதால், அவற்றின் பங்குகளில் செய்யப்படும் முதலீட்டில் ரிஸ்க் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும். அதே போல், வருமானமும் ஓரளவுக்குக் குறைவாகவே இருக்கும். மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் ரிஸ்க்கும் மிக அதிகம், வருமானமும் மிக அதிகமாக இருக்கும்.
மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் முதலீட்டுக் காலம் எனில், லார்ஜ்கேப் பங்குகளிலும், ஐந்து ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் எனில், மிட்கேப் பங்குகளிலும் அதற்கு மேல் எனில், ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யலாம்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்து, குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் காத்திருக்க முடியும் எனில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
நீண்ட காலத்தில் நிதி இலக்குகளை நிறைவேற்ற, ஓய்வுக் காலத் தொகுப்பு நிதியைச் சேர்க்க, செல்வம் சேர்க்க விரும்பு கிறவர்கள் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து வரலாம்.

முதலீடு Vs வர்த்தகம்
நிறுவனங்களின் அடிப்படையை (Fundamental) அலசி ஆராய்ந்து நல்ல வருமானம் ஈட்டும் நிறுவனப் பங்குகளில் நீண்ட காலத்தில் முதலீடு செய்வது ஒரு வகையாகும்.
குறுகிய காலத்தில் பங்குகளின் விலைப் போக்கைக் கணித்து வர்த்தகம் செய்பவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். பங்கு முதலீட்டைவிட பங்கு வர்த்தகத்தில் ரிஸ்க் அதிகமாகும்.
எப்படி முதலீடு செய்வது?
நிறுவனப் பங்குகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதலீடு முதலீடு செய்யலாம். 18 வயதுக்குக் கீழ் உள்ள மைனர்கள் காப்பாளர் அல்லது பெற்றோரின் மூலம் முதலீடு செய்யலாம். பங்குகளில் பங்கு தரகர் (Share Broker) மூலம்தான் முதலீடு செய்ய முடியும். இந்தத் தரகர் என்பவர் தனிநபர் அல்லது நிறுவனமாக இருக்கலாம்.
பங்குகளில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை. இந்தக் கணக்கு என்பது கிட்டத்தட்ட வங்கிச் சேமிப்புக் கணக்குப் போன்றதுதான். வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் வரவு வைக்கப் படும். டீமேட் கணக்கில் பணத்துக்குப் பதில் பங்குகள் வரவு வைக்கப்படும்.
இந்த டீமேட் கணக்கை ஆரம்பிக்க பான் எண், ஆதார் எண், புகைப்படம், முகவரிக்கான ஆதாரம், வங்கி சேமிப்புக் கணக்கு எண், காசோலை ஆகி யவை தேவைப்படும். இப்போது ஆன்லைன் மூலமும் டீமேட் கணக்கை ஆரம்பிக்கலாம்.
யாருக்கு ஏற்றதல்ல?
முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், பங்கு முதலீட்டை தவிர்ப்பது நல்லது.
போட்ட பணத்தின் மதிப்பு 30%, 40% இறங்கினால் தாங்கும் சக்தி இல்லாமல் பங்குகளை விற்றுவிட்டு வெளியேற நினைப் பவர்கள் இந்த முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. அதாவது, ரிஸ்க்கைத் தாங்கும் சக்தி இல்லாதவர்கள் பங்குகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மாற்று முதலீடுகள்...
நிறுவனப் பங்கு முதலீட்டுக்கு இணையாக பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளைக் குறிப்பிடலாம். அவற்றிலும் முதலீட்டுக் காலம் குறைந்தது மூன்று ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
* பங்கு முதலீட்டின் சிறப்பு அம்சம், அவற்றை எளிதில் பணமாக்க முடியும் என்பதுதான்.
* பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் (காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை) எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம்; விற்கலாம்.
* பங்குகளை விற்ற இரண்டு வர்த்தக தினங்களில் வங்கிக் கணக்குக்கு பணம் வந்துவிடும்.
* இந்தியாவின் முன்னணி பங்குச் சந்தைகளாக பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பி.எஸ்.இ) மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (என்.எஸ்.இ) உள்ளன. இவற்றின் மூலம் பங்குகளை வாங்கி விற்க முடியும்.
வருமான வரி
பங்குகளை வாங்கி ஓராண்டுக் குள் விற்று லாபம் பார்த்தால், அந்த லாபம் குறுகிய கால மூலதன ஆதாயம் எனப்படும். அதற்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் வந்தாலும் 15% வரிக் கட்ட வேண்டும்.
ஓராண்டு கழித்து விற்று லாபம் பார்த்தால் அது நீண்ட கால மூலதன ஆதாயம் ஆகும். அதற்கு நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரி இல்லை. அதற்கு மேற்படும் லாபத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் எதுவும் இல்லாமல் 10% வரி கட்ட வேண்டும்.
பங்கு முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்டுக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். நிதி ஆண்டில் வழங்கப்படும் டிவிடெண்ட் 5,000 ரூபாயைத் தாண்டும் போது மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படும். அதாவது, 10% வரியானது பிடிக்கப்படும்.
நிறுவனப் பங்குகளில் செய்யப்படும் முதலீடு மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஆனால், சரியான பங்கை வாங்கியிருக்கும் பட்சத்தில் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் கிடைக்க அதிக வாய்ப்பிருக்கிறது. மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும்போது வருமான வரி குறைவாகக் கட்ட வேண்டியிருக்கும் என்பது இதன் சிறப்பு அம்சம்.
25 வயது தொடங்கி ஒருவர் பங்குச் சந்தையில் சரியாக முதலீடு செய்து வந்தால், ஓய்வுக்காலத்தில் மிகப் பெரிய சொத்தை, பங்கு முதலீடின் மூலம் சேர்க்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை!
(தெரிந்துகொள்வோம்)
ஒருவர் பங்குச் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?
பங்குச் சந்தையில் ஒருவர் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதற்கு உலக அளவில் ஒரு பொதுவான விதிமுறை உள்ளது. அதாவது 100 என்கிற எண்ணிலிருந்து ஒருவரின் வயதைக் கழித்தால் என்ன எண் கிடைக்கிறதோ, அதை சதவிகிதமாகப் பாவித்து ஒருவர் அவரின் மொத்த முதலீட்டுத் தொகையில் அத்தனை சதவிகித தொகையைப் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
உதாரணத்துக்கு ஒருவரின் வயது 35 என்றால் அவர் 100-35=65 சதவிகிதத் தொகையை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். இங்கு பங்குச் சந்தை சார்ந்த முதலீடு என்பது நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளைக் குறிக்கும். இந்த சதவிகிதம் என்பது 5-10 சதவிகிதம் வரைக்கும் முன்பின் இருக்கலாம். மேலும், 3 ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விகிதாசாரத்தை வயது அதிகரிப்புக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும்.