பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஸ்மால்கேப் பங்கு முதலீடு... உங்களுக்கு ஏற்றதா?

ஸ்மால்கேப் பங்கு முதலீடு...
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மால்கேப் பங்கு முதலீடு...

பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தை அதிகமாகவே இறங்கி, தற்போது சற்று மீண்டிருக்கிறது. இதில், அதிகமாக இறக்கம் கண்டிருப்பது ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளின் விலைதான். ஸ்மால்கேப் நிறுவனப் பங்கு இண்டெக்ஸ் கணிசமாக இறங்கி, இப்போது நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த நிலையில், ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்யும்முன் அதன் சாதக, பாதக அம்சங்கள் மற்றும் ரிஸ்க் குறித்து தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

கா.ராமலிங்கம் 
இணை நிறுவனர், 
https://www.holisticinvestment.in/
கா.ராமலிங்கம் இணை நிறுவனர், https://www.holisticinvestment.in/

ஸ்மால்கேப் பங்கு என்றால்..?

இந்தியப் பங்குச் சந்தையை நெறிப்படுத்தும் செபி அமைப்பின் வரையறைபடி, பங்குகளின் சந்தை மதிப்பின் (Market Capitalization) அடிப் படையில் 1 முதல் 100 இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் லார்ஜ்கேப் நிறுவனங்கள் எனப் படுகிறது. பங்குகளின் மதிப்பின் அடிப்படை யில் 101 முதல் 250 வரையில் இருக்கும் நிறுவனங்கள் மிட்கேப் நிறுவனங்கள் எனப்படும்.

பங்குகளின் மதிப்பின் அடிப்படையில் 251 வது நிறுவனத்துக்கு மேல் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஸ்மால்கேப் நிறுவனங்கள் எனப்படும்.

இந்த லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனங்களின் பட்டியலை இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி ஆறு மாதத்துக்கு ஒரு முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.

2022 ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டிருக் கும் நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு பட்டியல் விவரத்தைத் தெரிந்துகொள்ள https://bit.ly/3zqhLAp. இதன்படி, ஸ்மால்கேப் நிறுவனங்களின் பங்குச் சந்தை மதிப்பு ரூ.16,365 கோடியில் ஆரம்பிக்கிறது.

இந்தப் பட்டியலில் டி.சி.எம் ராம், அஜெந்தா பார்மா, குஜராத் ஸ்டேட் பெட்ரோ லியம், ஹேப்பியஸ்ட் மைண்ட்ஸ், கார்போ ரென்டம் யுனிவர்சல், யூகோ பேங்க், ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி, சி.டி.எஸ்.எல், எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ், அப்போலோ டயர்ஸ், என பல முன்னணி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

நீண்ட காலத்தில் லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் பங்கு களைவிட ஸ்மால்கேப் பங்குகள் அதிக வருமானம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதிக ரிஸ்க் மற்றும் பங்கின் விலை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும். இந்த ஏற்ற இறக்கத்தைத் தாங்கிக்கொள்ளும் முதலீட்டாளர்கள் மட்டுமே ஸ்மால்கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.

ஸ்மால்கேப் நிறுவனங்களை அதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் அவற்றை இளைய நிறுவனங்களாகவும் விரைவாக வளரக்கூடிய நிறுவனங்களாகவும் பார்க்கிறார்கள். இதன் அர்த்தம், அவை எதிர்காலத்தில் மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் நிறுவனங்களாக மாறும் என்பதே. இன்றைக்கு மிகப் பெரிய ஐ.டி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ்கூட ஒரு காலத்தில் ஸ்மால்கேப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டதே!

ஸ்மால்கேப் பங்கு முதலீடு...
உங்களுக்கு ஏற்றதா?

ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளின் சாதகங்கள்...

 பொதுவாக, நன்கு நெருக்கமான சிலர் கூட்டாக இணைந்து சிறிய நிறுவனங்களை ஆரம்பித்து, நடத்துகிறார்கள். அவற்றில் பெரிய நிறுவனங் களுக்கு உரிமை இருக்காது. எனவே, ஸ்மால்கேப் நிறு வனங்கள் விரைவில் மாற்றங் களை ஏற்றுக்கொண்டு வளர்ச்சி காண வாய்ப்புண்டு. அதற்கேற்ப அந்த நிறுவனப் பங்குகளின் விலை ஏற்றம் காணும்.

 லார்ஜ் மற்றும் மிட்கேப் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஸ்மால்கேப் நிறுவனங் களில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால், அவற்றின் பங்கு விலை வேகமாக அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

 ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள், பங்குத் தரகு நிறுவனங்கள் எல்லாம் இந்த நிறுவனப் பங்குகள் பற்றி அதிகம் ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிட வாய்ப்பில்லை. எனவே, அவற்றை மறைந்து கிடக்கும் வைரம் எனலாம்.

 பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது இதன் பங்கு களின் விலை மிக வேகமாக ஏற்றம் காணும்.

ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளின் பாதகங்கள்...

 லார்ஜ் மற்றும் மிட்கேப் பங்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்மால்கேப் பங்குகள் அதிக ரிஸ்க் ஆனவை.

 ஸ்மால்கேப் நிறுவனங்கள் அந்தத் துறையில் புதிதாக நுழைந்த நிறுவனங்களாக இருக்கும். அந்த வகையில் அதன் வணிகம் நிலையற்ற தாக இருக்கும். மேலும், பல விஷயங்களுக்கு அது நிறுவ னத்துக்கு வெளியே உள்ளவர் களை சார்ந்திருக்கும். எனவே, ஸ்மால்கேப் நிறுவனங்களில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் ஏற்படக்கூடும். இது பங்கு விலையிலும் பிரதிபலிக் கக்கூடும்.

 பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது சிறிய நிறுவனங்களால் எளிதில் நிதி திரட்ட முடியாது. இந்த நிறுவ னங்கள் அதிக வட்டிக்கு கடன் வாங்கி இருக்கும். இதனால், வட்டிக்குச் செல்லும் தொகை அதிகமாக இருக்கும். இது நிறுவனத்தின் லாபத்தைக் குறைக்கக் கூடும். இது பங்கின் விலையும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

 மேலும், சிறிய நிறுவனங் களில் பணவரத்து (Cash Flow) முறையாக இருக்க வாய்ப்பு குறைவு. இது அவை புதிய சந்தைகளைக் கண்டறிந்து வெற்றி பெறுவதற்கு சற்று காலம் எடுக்கும்.

 லார்ஜ் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகளுடன் ஒப்பிடும்போது ஸ்மால்கேப் பங்குகளை விற்று பணமாக்கு வது எளிதல்ல.

 ஸ்மால்கேப் பங்குகளில் நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் அந்நிய நிதி நிறுவனங் களின் முதலீடு மிகக் குறை வாக இருக்கும். இதனால், இவற்றுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மதிப்பு சற்றுக் குறைவாக இருக்கும்.

 ஸ்மால்கேப் நிறுவனங் களின் பிசினஸ் மாடல் நிரூபிக்கப்பட்டதாக இருக்காது. எனவே, ரிஸ்க் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.

 மேலும், இதன் வாடிக்கையாளர்கள் புதியவர் களாக இருப்பார்கள். இனிதான் அவர்கள் நம்பக மானவர்களாக மாறுவார்கள். பங்குச் சந்தை சரிவில் இருக்கும்போது இந்த ஸ்மால்கேப் பங்குகளின் விலை மிக வேகமாக இறக்கம் காணும்.

 பொருளாதார மந்தநிலையால் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளின் விலை இறக்கம் காணும். மீண்டும் அவை ஏற்றம் பெற்றுவர அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.

 பெரும்பாலான ஸ்மால்கேப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவது இல்லை. இதனால், புதிய முதலீட்டாளர்கள் இதன் பங்குகளில் ஆர்வமாக அதிகமாக முதலீடு செய்வதில்லை.

ஸ்மால்கேப் பங்கு முதலீடு...
உங்களுக்கு ஏற்றதா?

சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற ஸ்மால்கேப் ஃபண்டுகள்...

ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்ய அந்த நிறுவனங்கள் குறித்து ஆழ்ந்த ஆராய்ச்சி தேவை. இதை சிறு முதலீட்டாளர்கள் செய்வது கடினமான விஷயமாகும். எனவே, சிறு முதலீட் டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்வதே லாபகரமாக இருக்கும்.

ஸ்மால்கேப் நிறுவ னங்கள் மற்றும் அவற்றின் பங்குகள் குறித்த ஆராய்ச் சியை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஃபண்ட் மேனேஜர்கள் மேற்கொண் டிருப்பார்கள். மேலும், ஒரு ஸ்மால்கேப் ஃபண்டில் சுமார் 30 - 50 நிறுவனப் பங்குகள் இடம் பெற்றி ருக்கும். இவை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவையாக இருக்கின்றன என்பதால், ரிஸ்க் குறைகிறது.

எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட், கோட்டக் ஸ்மால் கேப் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ஆகிய ஸ்மால்கேப் ஃபண்டுகளை நீண்ட கால முதலீட்டுக்குக் கவனிக்கலாம். 10 ஆண்டு காலத்துக்குமேல் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த ஸ்மால்கேப் ஃபண்டுகளைத் தாராளமாக பரிசீலிக்கலாம்!