தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இன்னும் மூன்றே மாதங்கள்... வரிச் சலுகைக்காக முதலீடு செய்யலாமா?

வரிச் சலுகை
பிரீமியம் ஸ்டோரி
News
வரிச் சலுகை

வரிச் சலுகை

அடுத்த 90 நாள்களுக்குள் நடப்பு (2022-23) நிதியாண்டு முடிவுக்கு வந்து விடும். வரிதாரர்கள் தங்களுக்கு இந்த ஆண்டு கிடைத்த வருமானம், 31.03.2023 வரை வர வேண்டிய வருமானம், இதர வருமான வகைகள் ஆகியவற்றைக் கூட்டி வரிக்கணக்கை தயார் செய்ய வேண்டிய நேரமிது. இதற்கு என்னென்ன விஷயங்களை நாம் தயார் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

வரி வரம்பு எவ்வளவு..?

60 வயதுக்கு உட்பட்ட வரிதாரர்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை, 60 வயது முதல் 80 வயதுக்கு உட்பட்டோருக்கு ரூ.3 லட்சம் வரை 80 வயதுக்கு மேற்பட்ட வரிதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் வரி கட்ட வேண்டிய தில்லை என்கிற நடைமுறையில் மாற்றமில்லை. வரி விகிதமும் மாறவில்லை. (எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1-ம் தேதி வரிச் சலுகை அறிவிக்கப்பட்டாலும் அது அடுத்த ஆண்டில் தான் நடைமுறைக்கு வரும்!)

வரி இல்லாத ரூ.5 லட்சம்...

ஆனாலும், நிகர வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், அதற்கான வருமான வரி 12,500 ரூபாயாக இருக்கும். ஆனால், 5 லட்சத்துக்கு உட்பட்ட நிகர வருமானம் உடையோர் வரி செலுத்த வேண்டியதில்லை. காரணம், பிரிவு 87A-யின்படி, 12,500 ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டுவிடும்.

நிகர வருமானம் ரூ.5,00,000 எனில்...

மொத்த வருமானத்தில் (Gross Total Income) இருந்து 80C முதல் 80U வரையான வருமான வரிப்பிரிவுகளின்கீழ் பெறக்கூடிய வரிச் சலுகையைக் கழித்துவிட்டால் வருகிற வருமானமே நிகர வருமானம் (Total Income) ஆகும். இந்த நிகர வருமானத்துக்கு மட்டுமே வருமான வரியைக் கணக்கிட வேண்டியிருக்கும். அதாவது, ஒருவரது மொத்த வருமானம் ரூ.10 லட்சம்; 80C முதல் 80U வரையான வரிச் சலுகை ரூ.5 லட்சம் எனில், நிகர வருமானம் ரூ.5 லட்சம். இதற்கு வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை.

இன்னும்  மூன்றே மாதங்கள்...
வரிச் சலுகைக்காக முதலீடு செய்யலாமா?

நிகர வருமானம் 5,05,000...

60 வயதுக்கு உட்பட்ட வரிதாரர் ஒருவரின் நிகர வருமானம் ரூ,5,05,000-ஆக இருக்குமெனில், அவருக்கு வரித் தள்ளுபடி (Tax Rebate) கிடைக்காது. அவர் வரி கட்ட வேண்டியிருக்கும். இதற்கான கணக்கீடு எப்படி எனில், ரூ.2.5 லட்சத்துக்குமேல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி அதாவது ரூ.12,500 கட்ட வேண்டும்.

மேலும், ரூ.5 லட்சத்துக்கு மேல் 5,05,000 வரையிலான 5,000 ரூபாய்க்கு 20% வரி, அதாவது 1,000 ரூபாய் என மொத்தம் கட்ட வேண்டிய வருமான வரி ரூ.13,500 ஆகும். இத்துடன் 4% உபரி வரி (Chess) ரூ.540 சேர்த்து 14,040 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

வரியைத் தவிர்க்க...

அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட் திட்டத்திலோ, வங்கி டேர்ம் டெபாசிட் திட்டத்திலோ (Bank Term Deposit Scheme 2016) 5,000 ரூபாயை 5 ஆண்டுக் கால டெபாசிட்டில் செலுத்திவிட்டால், நிகர வருமானம் ரூ.5 லட்சமாகக் குறைந்துவிடும். வரி செலுத்த வேண்டியதில்லை.

வரிச் சலுகைத் திட்டங்கள்...

இந்த வரியைக் குறைக்க அல்லது வரியைத் தவிர்க்க வரிச் சலுகை இனங்களை தாராளமாக நாடலாம். ஆனால், குறுகிய கால முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்கான காரணங் களைப் பார்க்கலாம்.

1. வருங்காலமா... வெறும் காலமா?

நமது சராசரி வயது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.வாழ்நாள் நீண்டுகொண்டே போகிறது. உதாரணமாக, 2020-ம் ஆண்டில் 69.96-ஆக இருந்த சராசரி வயது, 2021-ல் 70.19-ஆக உயர்ந்து நிற்கிறது. அதிலும் ஆண்களைவிட பெண்களின் சராசரி வயது 4 வருடம் அதிகமாக உள்ளது. எனவே, வருங்காலம், ‘தரும் காலமாக’ இருக்க வேண்டுமே தவிர, ‘வெறும் காலமாக இருந்து விடக் கூடாது. அதற்காக ஓய்வுக்கால தேவைக்கு நீண்ட கால முதலீடு அவசியம். அப்போதுதான் வருங்காலம் தரும் காலமாக அமையும்.

2. வட்டி குறைப்பு...

2000-ம் ஆண்டில் பிராவிடன்ட் ஃபண்டுக்கான வட்டி 12 சதவிகிதமாக இருந்தது. பி.பி.எஃப்-க்கும் இதே வட்டிதான். அது மட்டுமல்ல, ஊழியராக உள்ள ஜி.பி.எஃப் சந்தாதாரர் மூன்று ஆண்டுகள் பிராவிடன்ட் ஃபண்டில் பணம் எடுக்காமல் இருந்தால் 1% கூடுதல் வட்டி தரப்பட்டது. அதாவது, 12+1=13%. தற்போதைய ஜி.பி.எஃப், சி.பி.எஃப் மற்றும் பி.பி.எஃப்-க் கான வட்டி 7.1% மட்டுமே. இந்த வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

ஏனெனில், சேமிப்புத் திட்டங்களிலிருந்து பெறும் கடனுக்கு மத்திய அரசு 7.4% வட்டி வழங்குகிறது. இதைவிட குறைந்த வட்டிக்கு வெளிச்சந்தையில் கடன் கிடைப்பதால், இனி வட்டி உயர வாய்ப்பு மிகவும் குறைவு. நீண்ட கால முதலீட்டுக்கு சிறுசேமிப்புத் திட்டங்களில் உள்ள முதலீடு பி.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் ஆகிய இரண்டு மட்டுமே என்பதும் கவனிக்கத்தக்கது. இவற்றுக்கு வரிச் சலுகை உண்டு.

3. இரட்டை வரி விதிப்பு

1860-ல் தொடங்கி, 01.04.1962-ல் சீரமைக்கப்பட்டு, நடைமுறையில் இருந்த ஒற்றை வரி விதிப்பு முறை 2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் இரட்டை வரி விதிப்பாகி விட்டது. அதாவது, வரிச் சலுகையுடன்கூடிய பழைய வரித் திட்டத்துடன், வரிச் சலுகையற்ற புதிய வரித் திட்டம் 2020-21 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. வரிச் சலுகை படிப்படியாகக் குறைக்கப் படும் என்றும் அறிவிக்கப் பட்டது.

இதன் முதல்படியாக, மூத்த குடிமக்களுக்கான ரூ.3 லட்சம் மற்றும் ரூ.5 லட்சம் என்ற வரி வரம்பு நீக்கப்பட்டு, அனைவருக்கும் வரி வரம்பு ரூ.2.5 லட்சம் என்ற நிலைப் பாட்டுடன் நடைமுறையில் உள்ளது புதிய வரித் திட்டம்.

4. வரி - ஜி.டி.பி விகிதாசாரம்...

உலக நாடுகள் பலவற்றில் வரிக்கும் ஜி.டி.பி-க்கு மான (Gross Domestic Product) விகிதாச்சாரம் 20% முதல் 25% வரை உள்ள நிலையில், நம் நாட்டின் வரிக்கும் – ஜி.டி.பி-க்குமான விகிதாசாரம் 12 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இந்த விகிதாசாரத்தை உயர்த்த வரிச் சலுகை குறைப்பு பயன் படலாம்.

5. இலக்கு இல்லாமல்...

இலக்கு இல்லாமல் வரிச் சலுகைக்காக செய்யப் பட்ட குறுகிய கால முதலீடு வீண் விரயமாகலாம்.

குறுகிய கால முதலீடு தவிர்க்கலாம்...

மேற்கண்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு வரிச் சலுகை பெறுவதற்காக, இளைய வயதினர் குறுகிய கால முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம்.

வரிச் சலுகை தொடரும்பட்சத்தில் மூத்த குடிமக்கள் வங்கி டெபாசிட், அஞ்சலக டெபாசிட் போன்ற வட்டி கூட்டு வளர்ச்சி பெறும் குறுகிய கால திட்டங்களிலும், மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி தரும் ‘மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலும்’ டெபாசிட் செய்யலாம்.

நீண்ட கால முதலீடுகள்...

30 ஆண்டுக்கு மேலும் தொடரக்கூடியதும் வருமானம் அதிகம் தரக் கூடியதுமான பி.பி.எஃப், என்.பி.எஸ், அரசுக் காப்புறுதிகள் (Govt. Securities), மியூச்சுவல் ஃபண்டுகள் முதலான வற்றில் முதலீடு செய்வதே வாழ்நாள் நீண்டுவரும் இந்தக் கால கட்டத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

மனநிலை, பணநிலை, குடும்ப நிலை ஆகியவையும் முதலீட்டுக்குப் பரிசீலிக்கப்பட வேண்டிய காரணி களாக இருப்பதால், நல்ல நிதி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று தத்தம் வசதிக்கேற்ற நீண்டகால முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

வரிச் சலுகைகளைத் தரும் முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்வது அவசியத்திலும் அவசியம்!

வரி வரம்பு 5 லட்சம்..!

வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் சம்பளதாரர் களிடையே பெரும் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது. அதாவது, இனி வரிச் சலுகை வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பே இந்தப் பரபரப்புக்குக் காரணம்.

தற்போது ரூ.5 லட்சம் வரையான நிகர வருமானத்துக்கு அதிகபட்சமாக ரூ.12,500 வரித் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த விதியின்படி, ரூ.5,05,000 வரையிலான நிகர வருமானம் உள்ள ஒரு வரிதாரர் ரூ.14,040 வரி செலுத்த வேண்டியிருக்கும். காரணம், வருமானம் ரூ.5 லட்சம் என்ற வரம்பைத் தாண்டிவிட்டது.

ரூ.5 லட்சம் வரை வரிச் சலுகை என்று அறிவிக்கப்படுமானால், பழைய வருமான வரித் திட்டத்தின்படி, ரூ.5,05,000 நிகர வருமானம் உள்ளவர் ரூ.1,000+40 மட்டுமே வரி செலுத்துவார். புதிய வரித் திட்டத்தின்படி செலுத்த வேண்டிய வரித்தொகை வெறும் 520 ரூபாயாக மட்டுமே இருக்கும். பிரிவு 87A-யின்படி அதிகபட்சமாக ரூ.12,500 வரை வரித் தள்ளுபடி இருப்பதால், அரசுக்கு வரி இழப்பு அதிகரிக்கும் என்கிற கருத்தும் உள்ளது. எனவே, ரூ.5 லட்சம் வரை வரி இல்லை என்கிற அறிவிப்பு வருமா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!