பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

வருமான வரித் திட்டமிடல்... 8 எளிய வழிகள்..!

வருமான வரி
News
வருமான வரி

மேற்கண்ட விஷயங்களை கவனித்து இனி வருமான வரி சேமிப்பை மேற்கொள்வீர்கள்தானே..?

நடப்பு 2022-23-ம் நிதி ஆண்டு முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. இந்த நிலையில், வருமான வரித் திட்டமிடலை மேற்கொள்ளும் எட்டு எளிய வழிகள் பற்றிப் பார்ப்போம்.

1. செலவுகளுக்கும் வரிச் சலுகை...

நம்மில் பெரும்பாலானோர் முதலீடுகளுக்குதான் வரிச் சலுகை இருக்கிறது என நினைத்துக்கொண்டிருக் கிறோம். ஒரு மாதத்துக்குப் போக்குவரத்து செலவுக்கு ரூ.1,600 வரை (ஆண்டுக்கு ரூ.19,200) வருமான வரிச் சலுகை இருக்கிறது.

இதே போல், மருத்துவச் செலவுகளுக்கான கட்ட ணத்தை நிறுவனம் திரும்ப அளிக்கும் (Reimbursment) தொகைக்கு நிதி ஆண்டில் ரூ.15,000 வரைக்கும் வரி விலக்கு இருக்கிறது. இதே போல், சொடக்ஸோ (Sodexo) போன்ற உணவு கூப்பன்கள் மூலம் செலவிடும் ரூ.5,000 வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை உண்டு.

மேலும், நான்கு ஆண்டு களில் இரண்டு முறை விடுமுறைப் பயணப் படிக்கு (Leave Travel Allowance - LTA) செலவிடும் தொகைக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இவற்றை கவனித்து சரியாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நிதி ஆலோசகர் மற்றும் வருமான வரி ஆலோசகரை அணு கலாம்.

த.ராஜன் 
இணை நிறுவனர்
த.ராஜன் இணை நிறுவனர்

2. வரிச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்துங்கள்...

வருமான வரி பிரிவு 80C பிரிவின்கீழ் பி.எஃப், வங்கி 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட், இ.எல்.எஸ்.எஸ் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட், பிள்ளை களின் கல்விச் செலவு உள்ளிட்ட சுமார் 15 முதலீடு கள் மற்றும் செலவுகளுக்கு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

என்.பி.எஸ் பென்ஷன் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD(1B)-கீழ் ரூ.50,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது.

80D பிரிவின்கீழ் மருத்துவக் காப்பீட்டுக்குக் கட்டும் பிரீமியத்துக்கு 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரி வினருக்கு ரூ.25,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதுவே 60 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு ரூ.30,000 வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. மேலும், பெற் றோருக்குப் பிள்ளைகள் கட்டும் பிரீமியத்துக்கு பிள்ளைகள் வரிச் சலுகை பெற முடியும்.

3. வீட்டுக் கடன் வரிச்சலுகை...

ஒருவருக்கு வீட்டுக் கடன் இருந்தாலே அவருக்குப் பெரும்பான்மையான வருமான வரி மிச்சமாகிறது. காரணம், நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு திரும்பக் கட்டும் வீட்டுக் கடனில் 80சி பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இது தவிர, வட்டிக்குச் செல்லும் தொகையில் 24 பிரிவின்கீழ் நிதி ஆண்டில் ரூ.2 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும்.

கணவன் - மனைவி இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில், இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கும் போது, இருவரும் தனித்தனியே 80சி மற்றும் 24 பிரிவின்கீழ் தலா முறையே ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரிச் சலுகை பெற முடியும். அதாவது, திரும்பக் கட்டும் அசலில் ரூ.3 லட்சம், வட்டியில் ரூ.4 லட்சமாக மொத்தம் ரூ.7 லட்சம் வரை நிதி ஆண்டில் வரிச் சலுகை பெற முடியும். இதற்கு இவர்கள் இருவரும் கடனை இணைந்து பெற்றிருக்க வேண்டும். கணவன், மனைவி மட்டும் அல்ல, வேலை பார்க்கும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இணைந்து வீட்டுக் கடன் வாங்கிக்கூட இப்படி அதிக வருமான வரியைச் சேமிக்க முடியும்.

4. நிதித் திட்டமிடலுடன் வருமான வரி சேமிப்பு...

வருமான வரியை மிச்சப்படுத்த தனியே திட்டமிடக் கூடாது. ஒட்டுமொத்த நிதித் திட்டத்துடன் வரி சேமிப்பை சேர்த்து மேற்கொண்டு வர வேண்டும்.வரி சேமிப்புத் திட்டம், வருமான வரியை மட்டும் சேமிக்க அல்ல. அது பிள்ளைகளின் உயர்கல்வி, சொந்த வீடு, ஓய்வுக்காலம் போன்ற நிதி இலக்குகளுக்கு ஆனதாகும்.

வருமான வரித் திட்டமிடல்... 8 எளிய வழிகள்..!

5. அலசி ஆராய்ந்து முதலீடு செய்யவும்...

யாரோ சொன்னார், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் சொன்னார் என்பதற்காக வரி சேமிப்புத் திட்டத்தை அலசி ஆராயாமல் உடனடியாக முதலீடு செய்யா தீர்கள். முதலீட்டுத் திட்டத்தைப் பரிந்துரை செய் பவர்கள் ‘ஆகா, ஓகோ’ என்றுதான் சொல்வார்கள்.முதலீடு செய்பவர்தான் அது சரியான திட்டமாக என்பதைக் கவனிக்க வேண்டும். தேவைப்பட்டால், இதற்காக நல்லதொரு நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுவது அவசியம். இப்போதெல்லாம் ஆன்லைனில் அனைத்து வரிச் சேமிப்புத் திட்டங்கள் பற்றிய விரிவான ஆய்வுகள் காணக் கிடக்கின்றன. அவற்றை படித்துப் பார்த்து முதலீட்டு முடிவை எடுப்பது நல்லது.

6. வரி சேமிப்புத் திட்டங்களும் முதலீட்டுக் காலமும்...

வரி சேமிப்புக்கான முதலீட்டைத் தேர்வு செய்யும்போது, எவ்வளவு நாளைக்குத் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், முதலீட்டை எவ்வளவு நாளைக்கு எடுக்க முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

வரி சேமிப்புத் திட்டமான தேசிய சேமிப்புப் பத்திரத்தில் (NSC), ஒருமுறை முதலீடு செய்யும் வசதி இருக்கிறது. இந்த முதலீட்டை ஐந்தாண்டு களுக்கு எடுக்க முடியாது.

இதேபோல், வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் ஒரு முறைகூட முதலீடு செய்யலாம்; இப்படிச் செய்யும் முதலீட்டுக்கான லாக்கின் (lock-in) காலம் மூன்றாண்டுகள் ஆகும். ஆனால், பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் என்கிற பி.பி.எஃப் வரி சேமிப்புத் திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வர வேண்டும்.

வரி சேமிப்பு தொடர்பான எந்த முதலீட்டை நீங்கள் தேர்வு செய்வதாக இருந்தாலும், இதை எல்லாம் கவனித்து முதலீட்டுக் கான திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

வருமான வரித் திட்டமிடல்... 8 எளிய வழிகள்..!

7. வேலை மாறும்போது, வரி சேமிப்பையும் மாற்றுங்கள்...

நிதி ஆண்டின் இடையில் வேலை மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், வரி சேமிப்பை அதற்கு ஏற்ப மேற்கொள்ளுங்கள். அதிக சம்பளத்தில் வேலைக்கு சேரும்போது, வரி சேமிப்பை அதிகப்படுத்தினால்தான் வரியை அதிகமாக மிச்சப்படுத்த முடியும். அப்போதும் நிதி இலக்குகளுக்கேற்ப, நிதித் திட்டத்துக்கேற்ப வரி சேமிப்பு களை மேற்கொள்வது அவசிய மாகும்.

8. கடைசி நிமிட அவசரத்தைத் தவிர்க்கவும்...

உண்மையில் வரி சேமிப்பை ஆரம்பிக்க சரியான நேரம் நிதி ஆண்டின் தொடக்கம் ஆகும். எப்போதும் வரி சேமிப்பு திட்டத்தை அடுத்த வாரம், அடுத்த மாதம் என ஒத்தி வைத்து விட்டு கடைசி நிமிடத்தில் அதைச் செய்தால், சரியான வரி சேமிப்புத் திட்டங்கள் / முதலீடுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது.

கடைசி நிமிட அவசரத்தில், ஏதோ ஒரு வரி சேமிப்பு திட்டத் தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆண்டு ஆரம்பத்தைத் தவறவிட்டாலும் இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதாவது வரி சேமிப்புகான முதலீட்டை ஆரம்பியுங்கள்.

மேற்கண்ட விஷயங்களை கவனித்து இனி வருமான வரி சேமிப்பை மேற்கொள்வீர்கள்தானே?