நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வெளிநாடு சுற்றுலா போகிறீர்களா? கிரெடிட் கார்டு செலவுக்கு 20% வரி..!

வரி...
பிரீமியம் ஸ்டோரி
News
வரி...

ஜூலை 1 முதல் வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்தால், 20% வரி விதிக்கப்படும்!

மத்திய அரசு சமீபத்தில் இரண்டு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒன்று ‘2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30-க்குப் பிறகு செல்லாது’; இன்னொன்று, ‘வெளிநாடுகளில் செய்யும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 20% வரி வசூலிக்கப்படும்’ என்பதுதான் அவை.

கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் காரணமாக என இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு பரவலாகப் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வருகிற ஜூலை 1, 2023 முதல் வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் பயணிகள் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்தால், 20% வரி வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் பலருக்கு எழுந்துள்ளன. இது பற்றி ஆடிட்டர் சதிஷ்குமாரிடம் கேட்டோம். அவர் தெளிவான விளக்கத்தைத் தந்தார்.

சதிஷ்குமார்
சதிஷ்குமார்

“அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்கீழ் (FEMA) வெளிநாடுகளில் இந்தியர்கள் மேற்கொள்ளும் செலவுகளுக்கு அதாவது, இந்தியாவிலிருந்து வெளிநாடு களுக்குப் போகும் பணம் தொடர்பாக உள்ள விதிகளில் தற்போது அரசு திருத்தம் செய்து உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு வெளியே கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளும் செலவினங்களையும் சுதந்திரமாகப் பணம் அனுப்புதல் திட்டத்தின்கீழ் (LRS - Liberalised Remittance Scheme) கொண்டு வந்துள்ளது.

வெளிநாடு சுற்றுலா போகிறீர்களா? கிரெடிட் கார்டு செலவுக்கு 20% வரி..!

முன்பு இந்தத் திட்டத்தின்கீழ் டெபிட் கார்டு, யு.பி.ஐ, நெட்பேங்கிங் பரிவர்த்தனை போன்றவையே இருந்தன. இந்த எல்.ஆர்.எஸ் திட்டத்தின்கீழ் ஒரு நிதி ஆண்டில் 2,50,000 டாலர் வரை ரிசர்வ் வங்கியின் எந்தவிதமான கேள்வியுமின்றி அனுப்பலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இதில் கிரெடிட் கார்டு பரிவர்த்தனையும் எல்.ஆர்.எஸ் திட்டத்தின்கீழ் சேர்க்கப் பட்டுள்ளது.

இதற்குமுன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனை கள் எல்.ஆர்.எஸ் திட்டத்தின் கீழ் கொண்டு வராததால் பெரும்பாலானவர் கள் தங்களின் வெளிநாட்டு செலவினங் களை அதிக அளவில் கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொண்டுவந்தனர். உள் நாட்டில் மட்டுமல்ல, இந்தியர்கள் வெளி நாடுகளுக்குச் சுற்றுலா செல்லும்போது கிரெடிட் கார்டுகளை அதிகம் பயன்படுத்து கிறார்கள். வெளிநாடுகளுக்குப் படிக்கப் போகிறவர்கள் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தவும், மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளுக்காகவும் மற்றும் வெளிநாடுகளில் தங்குவதற்கு, சாப்பிடுவதற்கு, ஷாப்பிங் செய்வதற்கு எனப் பல்வேறு விஷயங்களுக்காக `இன்டர்நேஷனல் கிரெடிட் கார்டுகளை’ பயன்படுத்துகின்றனர்.

இப்படி இந்தியர்கள் வெளிநாடுகளில் மேற்கொண்ட செலவுகளை ஆய்வு செய்த நிதி அமைச்சகம், கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலமாகப் பெருமளவிலான பணம் வெளி நாடுகளுக்குச் செல்வதைத் தெரிந்துகொண்டதுடன், அரசுக்கு வரவேண்டிய வரியும் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக நினைத்தது. அரசு தரும் புள்ளிவிவரங்கள்படி பார்க்கும்போது, எல்.ஆர்.எஸ் திட்டத்தின்கீழ் 2021-22-ம் நிதி ஆண்டில் 19.61 பில்லியன் டாலர் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை 2020-21-ல் 12.68 பில்லியன் டாலராக இருந்தது. இது 2022-23-ம் நிதி ஆண்டில் மேலும் உயர்ந்து 24 பில்லியன் டாலராக உள்ளது. இந்த 24 பில்லியன் டாலர் தொகையில் வெளிநாட்டுச் சுற்றுலாவுக்காக அனுப்பப்பட்ட தொகை மட்டுமே 50% எனக் கூறப்படுகிறது.

அரசு வெளியிட்ட விளக்கம்...

வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 20% டி.சி.எஸ் என்பதில் பல்வேறு கேள்விகள் குழப்பங்கள் எழுந்த நிலையில், சில விஷயங்களை அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்த டி.சி.எஸ் என்பது இறுதி வரி அல்ல. மாறாக, முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படும் வரி என்று சொல்லலாம். வெளிநாடு களில் மேற்கொள்ளும் கிரெடிட் கார்டு செலவினங்கள் மேல் பிடித்தம் செய்யப்படும் இந்த டி.சி.எஸ் வரியை வருமான வரிக் கணக்கீட்டின்போது தெரிவித்து கழிவு பெற்றுக் கொள்ளலாம் அல்லது வரி செலுத்திய பிறகு ரீஃபண்டாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த பரிவர்த்தனை களுக்கான வரியும், சலுகைகளும் முன்பிருந்த நிலையிலேயே தொடர்கிறது. மருத்துவம், கல்வி போன்ற செலவினங்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு உள்ளது. (பார்க்க அட்டவணை) அதே போல, கிரெடிட் கார்டு செலவினங்களிலும் இந்தியாவுக்கு வெளியே செய்யப்படும் ரியல் எஸ்டேட், பத்திரங்கள், பங்குகள் போன்ற முதலீடுகள், சுற்றுலா பேக்கேஜ், வெளிநாட்டினருக்கு பரிசுகள் ஆகியவை தவிர பிற செலவினங் களுக்கு ரூ.7 லட்சம் வரையில் விலக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

டெபிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை கள் முன்பு இருந்தே எல்.ஆர்.எஸ் திட்டத்தின்கீழ் இருந்து வருகிறது. கிரெடிட் கார்டு செலவினங்களுக்கு வழங்கப் பட்டு வந்த விலக்கால் பெரும் பாலானோர் அதன் மூலம் செலவினங்களை மேற் கொண்டுவந்தனர். இதனால் பலர் எல்.ஆர்.எஸ் வரம்பு அளவைக் கடந்து செலவு செய்தனர். டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு இடையே உள்ள வேறுபாடு களைக் களையவும், வரி ஏய்ப்பு நடக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கிறது என்று தெளிவுபடுத்தி உள்ளது.

வெளிநாடு சுற்றுலா போகிறீர்களா? கிரெடிட் கார்டு செலவுக்கு 20% வரி..!

யாருக்கு என்ன பாதிப்பு?

மருத்துவம், கல்வி சார்ந்த செலவினங்கள் மீதான வரி விதிப்புகளில் எந்த மாற்றங் களும் செய்யப்படவில்லை. ஏற்கெனவே இருந்த நிலைதான் தொடர்ந்து இருக்கும். ஆனால், கிரெடிட் கார்டுகள் மீதான செலவினங்களைக் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, கல்வி, மருத்துவம் சார்ந்த செல வினங்கள் எனில் அவற்றை முறையாகச் செய்ய வேண்டும். மேலும், கிரெடிட் கார்டுகளில் தேவையற்ற செலவினங்களை மேற்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவம், கல்வி தவிர்த்து வேறு ஏதேனும் செலவினங்கள் மேற்கொண் டால் அவையெல்லாம் சுற்றுலா மற்றும் பிற செலவினங்களில் சேர வாய்ப்புள்ளது. அப்படி சேரும்பட்சத்தில் ரூ.7 லட்சத்துக்குமேல் ஆகும் செலவினங்களுக்கு 20% வரி பிடித்தம் செய்யப்படும். முக்கியமாக, இந்த 20% வரி என்பது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா நிமித்தம் செல்கிறவர் களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

முன்பு சுற்றுலா பேக்கேஜ் செலவினங்களுக்கு 5% வரி விதிக்கப்பட்டது தற்போது 20 சதவிகிதமாக உள்ளது. அதே போல, வெளிநாடுகளில் செய்யப்படும் ரியல் எஸ்டேட், பங்குகள், பத்திரங்கள், மீதான முதலீடுகளுக்கும் மற்றும் பரிசு களுக்கும் 20% வரி விதிக்கப் பட்டிருக்கிறது. மேலும், வெளி நாடுகளுக்குச் சென்று செய்யும் செலவினங்கள் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தபடி வெளி நாட்டுச் சேவைகளை, பொருள் களை ஆன்லைனில் வாங்கும் போதும் இந்த விதிகள் பொருந்தும். ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பை, அந்த நாட்டு செலாவணியில் வாங்கும்போது இந்த விதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆன்லைனில் பொருள்களை வாங்கும்போது கவனம் தேவை.

வெளிநாடுகளில் இந்தியர்கள் மேற்கொள்ளும் செலவினங்களுக்கு பிடித்தம் செய்யப்படும் டி.சி.எஸ் வரி அனைத்தையும் வருமான வரிக் கணக்கீட்டின்போது தெரிவித்து, அவரவர் வருமான வரம்பு தகுதிக்கு ஏற்ப செலுத்த வேண்டிய வரியில் கழிவு அல்லது ரீஃபண்ட் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு ஆவணமாக வங்கித் தரப்பிலிருந்து வழங்கப்படும் டி.சி.எஸ் சான்றிதழைத் தாக்கல் செய்ய வேண்டும்.

ஒருவர் தன் வருமானத்துக்கேற்பதான் செலவு செய்திருக்கிறாரா, இல்லையா என்பதை உறுதி செய்யவும், இந்தியர்களின் வருமான ஆதாரங்களைக் கண்டவறிவதற்கான முயற்சியாகவும் இந்த நடவடிக்கை உள்ளது. வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்களுக்கு 20% வரி என்பது நெருக்கடியாக மாறும் என்பதால், வெளிநாட்டுச் சுற்றுலாவைத் தவிர்த்து உள்நாட்டு சுற்றுலாவைத் தேர்வு செய்ய நிறையவே வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் அரசு இத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்கலாம். மற்றபடி இந்த அறிவிப்பால் வேலைக்காகவோ, படிப்பதற்காகவோ, தொழில் காரியங் களுக்காக வெளிநாடு செல்பவர்களுக்குப் பாதிப்புகள் எதுவும் இல்லை” என்று கூறி முடித்தார்.

வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்பவர்கள் இந்தப் புதிய வரிமுறையைக் கருத்தில்கொண்டு செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இது தெரியாமல் பழைய நினைப்பில் ஏகப்பட்ட செலவுகளை கிரெடிட் கார்டு மூலம் செலவு செய் தால், அதிக வரியைக் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.