தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

18% தாண்டி வருமானம் தந்த டாப் 10 ஃபண்டுகள்!

டாப் ஃபண்டுகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாப் ஃபண்டுகள்!

சிறப்புக் கட்டுரை

கடந்த 10 வருடத்தில் இந்தியப் பொருளாதாரத்துக்குப் பல சோதனைகள்... திடீரென எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பல்வேறு குழப்பங்களுடன் அறிமுகமான ஜி.எஸ்.டி எனப் பல இடர்ப்பாடு களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்த போதிலும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு கள் வருமானத்தை அள்ளித் தந்துள்ளன. அதிலும் கோவிட் தொற்று நோய் வந்த பிறகு, பங்குச் சந்தை புள்ளிகள் மிகவும் உயர்த்திருக்கின்றன.

சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் 
(www.prakala.com)
சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் (www.prakala.com)

இந்த நிலையில், 18 சதவிகிதத்துக்கும் அதிகமான வருமானம் தந்த ஃபண்டுகள் பற்றிப் பார்ப்போம். கூட்டு வட்டி அடிப்படை யில் ஆண்டுக்கு 18% என்பது ஓர் உன்னதமான வருமானம். மக்கள் பாஷையில் சொன்னால், மாதத்துக்கு ஒன்றரை வட்டி. இந்த சதவிகிதத்தில் கடன் வாங்கினால், அநியாய வட்டி என்போம். ஆனால், அதுவே நமக்கு வருமானமாகக் கிடைத்தால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்? அப்படி 18% வருமானம் தந்த ஃபண்டுகள் பற்றியும், அந்த ஃபண்டுகளை இனி என்ன செய்யலாம் என்பது பற்றியும் பார்ப்போம்.

நமது இந்த ஆய்வுக்காக 10 வருடத்துக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து ஃபண்டுகளையும் எடுத்துக்கொண்டோம். அதில் குளோஸ் எண்டட் திட்டங்களை நீக்கிவிட்டோம். அதில் 278 ஃபண்டுகள் நமக்கு கிடைத்தன. அதில் 18 சதவிகிதத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் தந்த ஃபண்டுகளை மட்டும் தனித்து எடுத்தோம். அதில் நமக்கு கிடைத்தவை 25 ஃபண்டுகள்.

இந்த ஃபண்டுகளில் இருந்து செக்டோரல் மற்றும் தீமேட்டிக் ஃபண்டுகளை ஃபில்டர் செய்தோம். அதன்மூலம் நமக்கு கிடைத்தது 18 ஃபண்டுகள். அதிலிருந்து டாப் 10 ஃபண்டு களை அட்டவணையில் உங்களுக்குத் தந்துள்ளோம். (பார்க்க, அட்டவணை-1) இந்த 10 ஃபண்டுகளில் 10 ஆண்டுகளுக்குமுன், ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்திருந்தால், அதன் தற்போதைய மதிப்பையும் அதே அட்டவணையில் தந்துள்ளோம்.

இதில் அனைவரும் குறிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த டாப் 10 ஃபண்டுகளில் 7 ஃபண்டுகள் ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்டகிரியில் இருந்து இருக்கின்றன. மிட் அண்ட் ஸ்மால்கேப் கேட்டகிரி அதிக ரிஸ்க் உடையது என்றாலும், நீண்டகாலத்தில் அதீதமான வருமானத்தை அள்ளித் தரவல்லது என்பது இதிலிருந்து நமக்கு புரியவரும். (இந்த டாப் 10 ஃபண்டுகளின் போர்ட் ஃபோலியோ விவரம் அட்டவணை 2-ல் தரப்பட்டுள்ளது).

18% தாண்டி வருமானம் தந்த டாப் 10 ஃபண்டுகள்!

1. எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட்

இந்த ஃபண்ட் தொடங்கப்பட்டது 2009-ம் ஆண்டில். தற்போது இந்த ஃபண்ட் ரூ.14,000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. மொத்த முதலீடுகளை இந்த ஃபண்ட் பெறுவதில்லை. எஸ்.ஐ.பி மூலமாக மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதுவும் ஒரு பான் அட்டைக்கு ரூ.25,000 மட்டுமே எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய முடியும்.

இதன் ஃபண்ட் மேனேஜர் ஆர்.னிவாசன். இவரே இந்த ஃபண்ட் நிறுவனத்தின் பங்கு சார்ந்த முதலீடுகளுக்கு முதன்மை முதலீட்டு அலுவல ராகவும் உள்ளார். தொடர்ந்து திறம்பட ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார். ஃபண்ட் தொடங்கியபோது செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.11,48,000-க்கும் மேலாக உள்ளது.

2. நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்

2010-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்த ஃபண்ட் தற்போது ரூ.22,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. ஃபண்ட் தொடங்கிய போது செய்த முதலீடான ரூ.1 லட்சம், தற்போது ரூ.9,25,000-க்கும் மேலாக உள்ளது. கேப்பிடல் கூட்ஸ், ஃபைனான்ஷியல் மற்றும் கெமிக்கல் துறைகளில் அதிக மான பங்குகளை வைத்துள்ளது. 159 பங்குகளைத் தனது போர்ட்ஃபோலியோவில் கொண்டுள்ளது. ஸ்மால்கேப் கேட்டகிரியில் தொடர்ந்து நன்றாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.

3. மிரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட்

இது தற்போது லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டாக செயல்பட்டு வருகிறது. ஐந்து வருடங்கள் முன்பு வரை இது ஒரு மிட்கேப் ஃபண்டாக செயல்பட்டு வந்தது. இந்த ஃபண்டில் ரூ.23,000 கோடிக்கு மேலான சொத்துகள் நிர்வகிக் கப்பட்டு வருகின்றன. ஃபைனான்ஸ், ஆட்டோ மற்றும் எனர்ஜி துறைகளில் ஓவர்வெயிட்டாக உள்ளது. அங்கித் ஜெயின் மற்றும் நீலேஷ் சுரானா இதன் ஃபண்ட் மேனேஜர்களாக உள்ளனர்.

4. குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட்

இது ஒரு மல்ட்டிகேப் ஃபண்ட் ஆகும். குவான்ட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தில் பல ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் முன்பு எஸ்கார்ட்ஸ் மியூச்சுவல் ஃபண்டாக இருந்தது. நிறுவனம் கைமாறிய பிறகு, சந்தீப் டண்டன் தலைமையில் உள்ள ஃபண்ட் நிர்வாகக் குழு அக்ரெஸிவ்வாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஃபண்ட், கன்ஸ்யூமர் ஸ்டேப்பிள்ஸ் (consumer staples), சர்வீசஸ், கெமிக்கல்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், ஃபைனான்ஸ் துறையில் அண்டர் வெயிட்டாகவும் உள்ளது. நன்றாகச் செயல்பட்டு வரும் மல்ட்டிகேப் ஃபண்டுகளில், இது முன்னணியில் உள்ளது.

5. டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட்

2007-ல் தொடங்கப்பட்ட இந்த ஃபண்டில், ஆரம்பத்தில் ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் தற்போது ரூ.11,23,000-க்கும் மேலாக உள்ளது. தற்போது ரூ.9,000 கோடிகளுக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அபிஷேக் கோஷ், ரேஷம் ஜெயின் மற்றும் வினித் சாம்ரே ஆவார்கள். மெட்டீரியல்ஸ், கெமிக்கல்ஸ், கன்ஸ்யூமர் ஸ்டேப்பிள்ஸ், மெட்டல்ஸ் போன்ற துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், கேப்பிடல் கூட்ஸ், ஃபைனான்ஸ் போன்ற துறைகளில் அண்டர் வெயிட்டாகவும் உள்ளது. நீண்ட காலத்தில் தனது பெஞ்ச்மார்க்குடன் ஒப்பிடும்போது நல்ல வருமானத்தைத் தந்துள்ளது.

6. கனரா ராபிகோ எமர்ஜிங் ஈக்விட்டீஸ் ஃபண்ட்

இது ஒரு லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டாகும். 2005-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், ரூ.15,000 கோடி களுக்கும் மேலான மதிப்புடைய சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இந்த ஃபண்டின் மேனேஜர் தத்தா பந்த்வால்தார்.ஃபைனான்ஸ் மற்றும் ஆட்டோ துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், டெக்னாலஜி, ஹெல்த்கேர் மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர் வெயிட்டாகவும் உள்ளது. 2005-ம் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்டில், ஒருவர் அப்போது செய்த முதலீடான ரூ.1.லட்சம் தற்போது ரூ.16,50,000-க்கும் மேலாக உள்ளது.

7. எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட்

ரூ.2,300 கோடிகளுக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்துவரும் இந்த ஃபண்ட் ஆரம்பித்தது 2007-ம் ஆண்டில். இதன் ஃபண்ட் மேனேஜர்கள் திரைதீப் பட்டாசார்யா மற்றும் சஹில் ஷா ஆவார்கள். இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ், கேப்பிடல் கூட்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், சர்வீசஸ், டெக்னாலஜி மற்றும் எனர்ஜி துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது. இந்த ஃபண்ட் ஆரம்பித்த காலத்தில் சற்று மெதுவாக செயல்பட்டு இருந்தாலும், கடந்த 10 வருடங்களாக நன்றாகச் செயல்பட்டு வருகிறது.

18% தாண்டி வருமானம் தந்த டாப் 10 ஃபண்டுகள்!

8. கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட்

2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட் தற்போது ரூ.22,000 கோடிக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. இதன் ஃபண்ட் மேனேஜர் பங்கஜ் டிப்ரிவால் ஆவார். கேப்பிடல் கூட்ஸ், கெமிக் கல்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் துறைகளில் ஓவர்வெயிட் டாகவும், ஃபைனான்ஸ், ஹெல்த்கேர் மற்றும் ஆட்டோ துறைகளில் அண்டர்வெயிட் டாகவும் உள்ளது. இந்த ஃபண்டை நிர்வகிக்கும் பங்கஜ் டிப்ரிவால், இதே நிறுவனத்தில் உள்ள மற்றொரு ஃபண்டான கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்டையும் திறம்பட நிர்வகித்து வருகிறார்.

9. ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட்

ரூ.7,000 கோடிக்கும் அதிக மான சொத்துகளை நிர்வகித்து வரும் இந்த ஃபண்ட் ஆரம்பித் தது 2006-ம் ஆண்டு. இதன் ஃபண்ட் மேனேஜர்கள் அகில் கல்லூரி மற்றும் ஆர்.ஜானகி ராமன் ஆவார்கள். இந்த ஃபண்ட் ஃபைனான்ஸ் மற்றும் கன்ஸ்ட்ரக்‌ஷன் துறைகளில் ஓவர்வெயிட்டாகவும், கேப்பிடல் கூட்ஸ் மற்றும் மெட்டீரியல்ஸ் துறைகளில் அண்டர்வெயிட்டாகவும் உள்ளது.

10. கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட்

2005-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃபண்ட், தற்போது ரூ.8,000 கோடிகளுக்கும் மேலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. கோட்டக் எமர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டை நிர்வகித்து வரும் பங்கஜ் டிப்ரி வால்தான் இந்த ஃபண்டையும் நிர்வகித்து வருகிறார். இந்த ஃபண்ட் மெட்டீரியல்ஸ், கன்ஸ்யூமர் டிஸ்கிரீஷனரி (consumer discretionary), கெமிக்கல்ஸ், மெட்டல்ஸ் போன்ற துறை களில் ஓவர்வெயிட்டாகவும், கேப்பிடல் கூட்ஸ், சர்வீசஸ் மற்றும் டெக்னாலஜி துறை களில் அண்டர் வெயிட்டாகவும் உள்ளது. நீண்டகாலத்தில் நன்றாகச் செயல்பட்டு வரும் ஸ்மால்கேப் ஃபண்டுகளில் இதுவும் ஒன்று.

18% தாண்டி வருமானம் தந்த டாப் 10 ஃபண்டுகள்!
18% தாண்டி வருமானம் தந்த டாப் 10 ஃபண்டுகள்!

இனி என்ன செய்யலாம்?

நாம் மேலே கண்ட ஃபண்டுகள் அனைத்தும் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மேற்கண்ட ஃபண்டு களில் முதலீடு வைத்துள்ளவர்கள், முதலீட்டைத் தொடர்ந்து வரலாம். இனிமேல் முதலீடு செய்ய நினைப்பவர்கள், தங்களின் தேவைக்கு ஏற்ப ஃபண்ட் கேட்டகிரியைத் தேர்வு செய்து முதலீட்டைத் தொடங்க வேண்டும்.

இந்த 10 ஃபண்டுகளில், 7 ஃபண்டுகள் ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்டகிரியைச் சேர்ந்தவை. எஞ்சிய 3 ஃபண்டுகளில், ஸ்மால் அண்ட் மிட்கேப் பங்குகள் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே 10 ஆண்டுகள் தொலைநோக்கு உள்ளவர்கள், நல்ல லாபத்தை சம்பாதிப்பதற்கு ஸ்மால் அண்ட் மிட்கேப் கேட்டகிரியில் முதலீட்டை மேற்கொள்ளலாம். அதற்கு குறைவாக கால அளவு உள்ளவர்கள் லார்ஜ் அண்ட் மிட்கேப் அல்லது மல்ட்டிகேப் கேட்டகிரியில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.