பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மனை, வீடு, சொத்து மூலமாக வருமானம்... எப்படி வரி விதிக்கப்படுகிறது?

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரிச் செலுத்துவோர் சங்கம்

விவசாய நிலம், மனை, வீடு, கட்டடம் போன்ற சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு சூழ்நிலைக்கேற்ப வருமான வரி விதிக்கப்படுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரிச் செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரிச் செலுத்துவோர் சங்கம்

வாடகை வருமானமும் வரியும்...

வீடு மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். சொத்து மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு, வீட்டுச் சொத்து மூலமாக வருமானம் என்கிற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படுகிறது. விவசாய இடத்தை, விவசாயத் தேவைக்கு, பண்ணையாக, விவசாயத் தேவைக்கான கிட்டங்கியாக விவசாயி பயன்படுத்தினால், அதன் மூலம் கிடைக்கும் வாடகைக்கு வருமான வரி விதிக்கப்படாது. அதே நேரத்தில், விவசாய இடத்தை கார் மெக்கானிக் ஒருவருக்கு செட் அமைக்க இடம் கொடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் வாடகை வருமானம் இதர வருமானம் என்கிற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும்.

ஒருவர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் இருக்கிறார். அவர் அடுக்குமாடிக் குடியிருப்பு கள் மற்றும் வர்த்தகக் கட்டடங்களைக் கட்டி வாடகைக்கு விடுவது மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். வாடகை வருமானம் பெறுபவர் அந்தக் கட்டடங்களின் உரிமையாளராக இருக்கும் பட்சத்தில், அந்த வருமானம் ‘இன்கம் ஃப்ரம் ஹவுஸ் பிராபர்டி’ என்கிற பிரிவின்கீழ் வரி விதிக்கப்படும். அதாவது, இங்கே சொத்தின் உரிமையின் அடிப்படையில் வரி விதிக்கப் படுகிறது. இதுவே அந்தக் கட்டடங்களின் உரிமையாளராக இருந்தாலும், அவர்கள் அதை ஒரு தொழிலாகத் தொடர்ந்து செய்து வரும்பட்சத்தில், அந்த வருமானம், வணிக வருமானத்தின் கீழ் வரும்.

ஒருவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் மூலம் வாடகை வருமானம் வருகிறது. அவர் வாடகைக்கு விடுவதைத் தொழிலாகக் கொண்டிருக்கவில்லை எனில், அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வர்த்தகக் கட்டடங்கள் மூலம் வரும் வாடகை வருமானத்துக்கு அவர் ‘இன்கம் ஃப்ரம் ஹவுஸ் பிராபர்டி’ என்கிற பிரிவின் கீழ் வரி கட்ட வேண்டும்.

காலி இடத்தை பார்க்கிங், தரை பயன்பாடு போன்றவற்றுக்கு ஒருவர் தரும்போது கிடைக்கும் வாடகை வருமானம் என்பது இதர வருமானம் என்கிற பிரிவின் கீழ் வரி விதிக்கப் படும். இந்த இடத்தில் கட்டடம் இருக்கும்பட்சத் தில் அது வீட்டுச் சொத்து மூலமாக வரும் வருமானமாக எடுத்துக்கொள்ளலாம்.

மனை, வீடு, சொத்து மூலமாக வருமானம்... எப்படி வரி விதிக்கப்படுகிறது?

சொத்தின் தன்மையும் வரி விதிப்பும்

சொத்தின் தன்மைக்கேற்ப வருமான வரி விதிப்பு இருக்கிறது. சொத்தைக் குடியிருக்கும் வீடு, காலியாக இருக்கும் சொத்து, முன்னோர் சொத்து, வாடகைக்கு விட்டிருக்கும் வீடு/ வாடகைக்கு விடும் வீடு காலியாக இருப்பது, உள்வாடகைக்கு விடுதல் என அதன் தன்மைக் கேற்ப பிரிக்கலாம்.

குடியிருக்கும் வீடு அதாவது, குடும்ப உறுப்பி னர்கள் குடியிருக்கும் வீடு ஆகும், தற்போதைய வருமான வரி விதிமுறைகளின்படி வரிதாரர் இரண்டு வீடுகளைக் குடியிருக்கும் வீடாக காட்டி வரிச்சலுகை பெற முடியும். அதாவது, வரிதாரர் குடியிருக்க ஒரு வீடும், அவரின் பெற்றோர் குடியிருக்க இன்னொரு வீட்டையும் பயன்படுத்திக்கொள்வதாக வரிக் கணக்குத் தாக்கலின்போது காட்டி வரி விலக்கு பெறலாம். இந்த வீடுகளின் மூலம் வாடகை வருமானம் எதுவும் வராது என்பதால், வரி இல்லை.

காலியாக இருக்கும் சொத்து என்கிறபோது அதிலிருந்து வருமானம் எதுவும் வராது என்பதால், அதற்கும் வரியில்லை. வாடகைக்குக்கு விட்டிருக்கும் வீடு என்கிறபோது வாடகை வருமானத்தை வீட்டுச் சொத்து வருமானம் என்கிற பிரிவின்கீழ் வருமானமாகக் காட்டி வரி கட்ட வேண்டும். வாடகைக்கு விட்டிருந்த வீட்டில் இப்போது யாரும் குடியிருக்கவில்லை; வாடகை வருமானம் வரவில்லை என்றாலும், அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அந்தப் பகுதியில் என்ன வாடகை வருமானம் வருமோ, அதை வாடகை வருமானமாகக் காட்டி அந்தத் தொகைக்கு வீட்டுச் சொத்து வருமானம் என்கிற பிரிவின்கீழ் வரி கட்ட வேண்டும். இதை ‘டீம்டு லெட் அவுட்’ (Deemed Let out) என்பார்கள். அதாவது, காலியாக இருக்கும் வீட்டை, வாடகைக்கு விட்டிருப்பதாகவும் அதற்கு வாடகை வந்ததாகவும் காட்டி வரி கட்டுவதாகும்.

மனை, வீடு, சொத்து மூலமாக வருமானம்... எப்படி வரி விதிக்கப்படுகிறது?

மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டால்...

குடியிருக்கும் வீடானது ஒருவருக்கு இரண்டுக்கு மேல் மூன்றாவதாக ஒரு வீடு இருந்தால், அதன் மூலம் வாடகை வருமானம் வந்ததாகக் கணக்கு காட்டி வரி கட்டுவது கட்டாயம் ஆகும். ஒருவருக்கு மூன்று வீடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். மூன்று வீடுகளும் காலியாக இருக்கின்றன. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இரண்டு வீடுகள் குடியிருப்பதாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, ஒரு வீடு மட்டும் வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகக் கருதப்படும். அந்த வீட்டுக்கு என்ன வாடகை வருமானம் வருமோ, அதை வருமானமாகக் கணக்கில் காட்டி வரி கட்ட வேண்டும். இதை ‘நோஷனல் டாக்ஸ்’ (Notional Tax) எனக் குறிப்பிடுவார் கள். அதாவது, வாடகை வருமானம் வராது; ஆனால், வருமான வரி வரும்.

ஒருவருக்கு மூன்று வீடுகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். மூன்று வீடுகளிலும் குடும்பத்தினர் வசிக்கிறார்கள். அதாவது, ஒரு வீட்டில் வரிதாரர் வசிக்கிறார். இன்னொரு வீட்டில், அவரின் பெற்றோர் வசிக்கிறார்கள். மூன்றாவது வீட்டில், வரிதாரரின் திருமணமான மகன்கள் வசிக்கிறார்கள் எனில், இரண்டு வீடுகள் குடும்பத்தினர் வசிப்பதாகக் கொள்ளப்படும். மூன்றாவது வீடு, வாடகைக்கு விடப்பட்டிருப்பதாகக் கருதப் பட்டு ‘நோஷனல் டாக்ஸ்’ கட்ட வேண்டும்.

‘நோஷனல் டாக்ஸ்’ எப்படிக் கணக்கிடப்படுகிறது?

முதலில் சொத்தின் ஆண்டு மதிப்பு கணக்கிட வேண்டும். நிதி ஆண்டில் அந்தச் சொத்தின் மூலம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வாடகை வருமானம், இதில் எது அதிகமோ அது வரிக் கணக்கிட எடுத்துக்கொள்ளப் படும். சில மாதங்கள் வீடு காலியாக இருந்தால், அதன் மூலமாக இழப்பு கழிக்கப்படு கிறது. இந்தத் தொகை சொத்தின் ஆண்டு மதிப்பு எனப்படுகிறது.

இந்தத் தொகையிலிருந்து உள்ளாட்சி அமைப்புக்குக் கட்டிய வரிகள் (சொத்து வரி, குடிநீர் வரி, கழிவு நீர் வெளியேற் றும் வரி போன்றவை - அந்த ஆண்டில் கட்டிய வரியாக இருக்க வேண்டும்) கழிக்கப்படு கிறது. இப்போது சொத்தின் நிகர ஆண்டு மதிப்பு கிடைக்கும். நிகர ஆண்டு மதிப்பில் நிலைக்கழிவு 30% (வரிப் பிரிவு 24(ஏ), வீட்டுக் கடன் வாங்கியிருந்து அதற்கு வட்டி கட்டினால் (24(பி)) கழிக்கப்படும். இப்போது கிடைக்கும் தொகை வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் என நிர்ணயிக்கப் பட்டு வரி கட்ட வேண்டும்.

ஒருவருக்கு சென்னை நகரின் மையப் பகுதியான நுங்கம் பாக்கத்தில் 2,000 சதுர அடி வீடு இருக்கிறது என வைத்துக்கொள் வோம். இங்கு வீட்டு வாடகை என்பது மிக அதிகமாக இருக்கும். இந்த நிலையில், இந்த வீட்டின் உரிமையாளர், அவரின் நெருங்கிய நண்பருக்கு மாதத்துக்கு ரூ.5,000-க்கு வாடகைக்கு விடுகிறார். அதே பகுதியில் அது போன்ற வீடு மாதம் ரூ.25,000-க்கு வாடகைக்கு போகும். மாத வாடகை ரூ.5,000 எனில், ஆண்டு மொத்த வாடகை ரூ.60,000. இது சொத்தின் ஆண்டு மதிப்பாகும். இது சரியா எனில், சட்டப்படி சரி கிடையாது. மேலே குறிப்பிட்ட முறையில் சொத்தின் ஆண்டு மதிப்பு கணக்கிடப்படும். அதாவது, வீட்டு வாடகை எதிர் பார்ப்பு ரூ.25,000 என கொள்ளப் படும். வாடகை வருமானம் ரூ.5,000. இந்த நிலையில் இதில் அதிக தொகையான ரூ,25,000 வீட்டு வாடகையாக எடுத்துக் கொள்ளப்படும்.

குடியிருப்பவர் வாடகையை அந்த மாதம் தரவில்லை. அதை வாங்க சட்டப்படியான செலவு (வழக்கறிஞர், நீதிமன்றக் கட்டணம்) செய்தால், அந்தச் செலவுத் தொகையை சொத்தின் ஆண்டு மதிப்பிலிருந்து கழித்து மீதித் தொகைக்கு வரி கட்டலாம். மேலும், தரப்படாத வாடகையை அந்த நிதி ஆண்டில் ஆண்டு சொத்து மதிப்பில் கழிக்க முடியும். நிலுவை வாடகை எந்த ஆண்டில் தரப்படுகிறதோ, அந்த ஆண்டின் ஆண்டு சொத்து மதிப்புடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. இந்த இரு வீடு களையும் வாடகைக்கு விட்டிருக் கிறார். அவர் வேறு ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருக்கிறார். அவர் தனக்கு சொந்தமான இரு வீடுகளிலும் குடியிருப்பதாக வரிக் கணக்கில் காட்டி வரி கட்டாமல் இருக்க முடியுமா எனில், ஒருவருக்கு வாடகை வருமானம் வரும்பட்சத்தில் கணக்கில் காட்டுவது நல்லது. வீட்டில் குடியிருப்பவருக்கு பான் எண்ணைக் குறிப்பிட்டு வாடகை ரசீது கொடுத்தால், வாடகைக்கு குடியிருப்பவர், இந்த ரசீதுகளின் அடிப்படையில் வாடகைக்கு வரிச் சலுகை கோருவார். அப்போது வாடகையை வருமானமாகக் காட்டாத நிலையில் வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வர வாய்ப்பு அதிகம்.

கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

1. குடியிருக்கும் வீட்டுக்குக் கட்டும் சொத்து வரி, தண்ணீர் வரி போன்ற உள்ளாட்சி வரிகளுக்கு வரிக் கழிவு கிடையாது. 2. வாடகைக்கு விட்டிருக்கும் வீடு அல்லது நோஷனல் வருமானம் உள்ள வீடுகளுக்கு நிலைக்கழிவு 30 சதவிகிதத்தைக் கழித்துக்கொள்ள முடியும். 3. வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி இருக்கும்பட்சத்தில் நிதி ஆண்டில் கட்டும் முழு வட்டிக்கும் வரிச்சலுகை இருக்கிறது; 4. குடியிருக்கும் வீடு அல்லது வர்த்தகக் கட்டடம் மூலம் வருமானம் ஈட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருக்காத பட்சத்தில், அவற்றின் மூலமாக வரும், வீட்டுச் சொத்து மூலமாக வருமானம் என்கிற பிரிவின் கீழ் வரி விதிக்கப்படும். 5. சொத்து மூலம் வாடகை வருமானம் கிடைக்கும்பட்சத்தில், நிலைக் கழிவு 30% கிடைக்கிறது. இதனால், கட்டும் வரி குறையும். இதுவே, வணிக வருமானம் மற்றும் இதர வருமானம் என்கிற பிரிவின் கீழ் வரி கட்டும்போது நிலைக்கழிவு 30% கழிக்க முடியாது. அதாவது, கூடுதலாக வரி கட்ட வேண்டியிருக்கும்.