அரசியல்
கட்டுரைகள்
Published:Updated:

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்... இந்தியா வராமலே வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்குவது எப்படி?

வீட்டுக்கடன்
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்கடன்

சொத்துப் பத்திரம் வங்கி, வீட்டு வசதி நிறுவனம் அல்லது நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்படுவதன் மூலம்தான் கடன் வழங்கப்படுகிறது.

வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indian -NRI ) அனைவரின் முதன்மை விருப்பமாக இருப்பது, சொந்த நாட்டில் ஒரு பெரிய வீடு. இப்படி ஆசைப்படும் என்.ஆர்.ஐக்கள் வீடு வாங்க இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அங்கே இருந்தபடியே இந்தியாவில் எளிதாக வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்க முடியும்.

எஸ்.கார்த்திகேயன்
எஸ்.கார்த்திகேயன்

யார் வெளிநாட்டு வாழ் இந்தியர்?

இந்திய அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டப்படி, வேலைவாய்ப்பு, வணிகம் அல்லது வேறு காரணங்களால் வெளிநாட்டில் நீண்ட காலமாகத் தங்கியிருப்பவர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். பொதுவாக ஒரு நிதி ஆண்டில் 182 நாள்களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் என்.ஆர்.ஐ எனப்படுவார். தற்போது உலகம் முழுக்க 3 கோடி என்.ஆர்.ஐக்கள் உள்ளனர். என்.ஆர்.ஐக்களுடன் இந்திய அரசு ஊழியர்கள், மத்திய அரசு அமைப்புகளில் வெளிநாடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்கள், பன்னாட்டு நிதியம் (IMF), உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்கள், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களுக்காக வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், மற்றும் இந்திய வம்சாவளியினரும் அந்தந்த நாடுகளில் இருந்தபடியே வீட்டுக்கடன் மூலம் இந்தியாவில் சொத்து வாங்க முடியும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்... இந்தியா வராமலே வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்குவது எப்படி?

எதற்கெல்லாம் கடன் வாங்க முடியும்?

என்.ஆர்.ஐக்கள் இந்தியாவில் வீட்டுமனை (Housing Plot), வில்லா மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்கக் கடன் வாங்கலாம். வீடு கட்ட, வீட்டைத் தேக்கு மரம், மார்பிள் போன்றவை கொண்டு அழகுபடுத்த, வீட்டை விரிவாக்கம் செய்யக் கடன் வாங்கலாம். இந்தியாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வீட்டுக்கடன் வாங்க முடியும்.

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஆக்ஸிஸ் பேங்க், கனரா பேங்க், ஐ.டி.பி.ஐ பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், எல்.ஐ.சி. ஹவுஸிங் ஃபைனான்ஸ், இந்தியாபுல்ஸ் போன்றவை என்.ஆர்.ஐக்களுக்கு வீட்டுக் கடன் அளிக்கின்றன.

எவ்வளவு தொகை கடன் கிடைக்கும்?

பொதுவாக வீட்டு மனை என்றால் அதன் மதிப்பில் சுமார் 60-70 சதவிகித தொகை, வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு என்கிற பட்சத்தில் அதன் மதிப்பில் கிட்டத்தட்ட 80-85 சதவிகித தொகை கடனாகக் கிடைக்கும். மீதியை, கடன் வாங்குபவர் தன் கையிலிருந்து போட வேண்டும்.

கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு வீட்டுக் கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரின் சம்பளம் குறைவாக இருக்கிறது. ஆனால், சொத்து வாங்க அதிக தொகை கடனாகத் தேவைப்படுகிறது என்றால் வருமானம் ஈட்டும், சம்பாதிக்கும் இன்னொரு நபருடன் இணைந்தும் வீட்டுக் கடன் வாங்க முடியும். அந்த இன்னொருவர் என்.ஆர்.ஐயாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்தியாவில் வசிக்கும் துணைவர் (கணவன்/மனைவி) அல்லது மகனாக, மகளாக இருக்கலாம்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்... இந்தியா வராமலே வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்குவது எப்படி?

சொத்துப் பத்திரம் வங்கி, வீட்டு வசதி நிறுவனம் அல்லது நிதி நிறுவனத்தில் அடமானம் வைக்கப்படுவதன் மூலம்தான் கடன் வழங்கப்படுகிறது. இதுதவிர, வருமானம் ஈட்டும் இரு தனிநபர்கள் உத்தரவாதம் (கேரண்டி) கொடுக்க வேண்டும். கடன் வாங்குபவரின் மாத சம்பளம் மற்றும் இதர வருமானம், வயது, கல்வித் தகுதி, வேலை அனுபவம் மற்றும் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் சேவை ஆண்டுகள், துணைவரின் வருமானம், தற்போது உள்ள சொத்துகள், வேலையில் தொடரவிருக்கும் ஆண்டுகள், ரொக்கக் கையிருப்பு, இந்தியா திரும்பிய பின்னான வேலைவாய்ப்பு, சேமிப்பு மற்றும் முதலீடுகள் உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராய்ந்துதான் கடன் தொகை எவ்வளவு, கடனைத் திரும்பக் கட்டும் காலம் நிர்ணயிக்கப்படும். மேலும், கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கடனுக்கான வட்டி குறைவாக இருக்கும்.

தேவைப்படும் ஆவணங்கள்:

வெளிநாட்டில் பணிபுரிவதற்கான ஒப்பந்தம், மாத சம்பள ரசீது, அலுவலக அடையாள அட்டையின் நகல், விசா முத்திரை பதிக்கப்பட்ட பாஸ்போர்ட், கட்டப்போகும் வீடு அல்லது வாங்க உள்ள வீட்டின் கட்டட அனுமதி திட்டம், தாய்ப்பத்திர நகல், வில்லங்கச் சான்றிதழ் (குறைந்தது 13 ஆண்டுகள்), கட்டுமானச் செலவு மதிப்பீட்டு அறிக்கை, வீட்டின் மதிப்பீட்டு அறிக்கை ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.

என்.ஆர்.ஐ-க்குச் சொந்தமான மனையில் வீடு கட்ட கடன் வாங்கினால், மனையின் கிரயப் பத்திர அசல் மற்றும் நகல் தேவைப்படும். அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கினால் புரமோட்டருடன் போட்டிருக்கும் விற்பனை ஒப்பந்தம் தேவைப்படும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்... இந்தியா வராமலே வீட்டுக்கடன் மூலம் வீடு வாங்குவது எப்படி?

விண்ணப்பிப்பது எப்படி?

வெளிநாட்டு வாழ் இந்தியரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவிலுள்ள வங்கி அல்லது வீட்டு வசதி நிறுவனம், நிதி நிறுவனத்தைத் தொடர்புகொண்டு விண்ணப்பப் படிவத்தை வாங்கலாம்.

கடன் வழங்கும் நிறுவனத்தில் பொது அதிகார ஆவண (Power of Attorney) படிவம் ஒன்றைக் கேட்டுப் பெற வேண்டும். இது கடன் பெறுபவர் தனக்கு பதில், கடன் வாங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்திட, வேறு ஒரு நபருக்கு அதிகாரம் கொடுக்கும் படிவம். இதனை கடன் வாங்க உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர், தான் பணிபுரியும் நாட்டிலுள்ள தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தில் கொடுத்து அங்குள்ள உயர் அதிகாரியின் கையொப்பம் மற்றும் அலுவலக முத்திரை பெற்று இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும். 'பவர் ஆஃப் அட்டர்னி' பெறுபவரே கடன் வாங்குபவர் சார்பில் அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொள்வார். வட்டி விகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்படும் வீட்டுக்கடனுக்கான வட்டியைவிட ஓரிரு சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.