இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகித்து வரும் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் சுமார் ரூ.41.5 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சுமார் 4 கோடி பேர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர்.

ஃபண்ட் தேர்வில் தவறு..!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில் பெரும்பாலோருக்கு இருக்கும் குழப்பம் ஒருவர் எத்தனை திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான்.
அண்மையில் 45 வயது மதிக்கதக்க ஒருவர் என்னிடம் முதலீடு தொடர்பான ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அவர், நண்பர்கள் சொன்னது, உடன் பணிபுரிபவர்கள் சொன்னது, கடந்த ஆண்டில் அதிக வருமானம் கொடுத்த திட்டங்களில் அவராக முதலீடு செய்தது எல்லாம் சேர்த்து மொத்தம் 50 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் பணத்தை போட்டிருக்கிறார்.
ஆனால், இந்த ஃபண்ட்களில் சில மட்டுமே நல்ல வருமானம் கொடுத்திருக்கின்றன. பல ஃபண்ட்கள் மைனஸ் வருமானம் கொடுத்திருக்கின்றன. மொத்தமாக 50 ஃபண்ட்களை பார்த்தால் வருமானம் எதுவும் இல்லை; இழப்பாக இருக்கிறது; 5 சதவிகித இழப்பில் இருந்தது.
இவர் இந்த அளவுக்கு அதிக ஃபண்ட்களில் போட்டதால் அவரால் ஃபண்ட்களை கவனிக்க முடியவில்லை. மேலும், அண்மைக் காலத்தில் அந்த ஃபண்ட்கள் கொடுத்திருக்கும் அதிக வருமானம் எதிர்காலத்திலும் கிடைக்கும் என தவறாக நினைத்து செயல்பட்டதாகும்.
சரியான ஃபண்ட் தேர்வு..!
ஒருவர் அதிகபட்சம் எத்தனை ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம் என்பதை பார்க்கும் முன் சரியான ஃபண்ட்களை எப்படி தேர்வு செய்வது எப்படி என பார்த்துவிடுவோம்.
ஒரு ஃபண்ட் கடந்த 3 மாதத்தில் 10% வருமானம் கொடுத்துள்ளது அல்லது கடந்த ஆறு மாதத்தில் 15% வருமானம் கொடுத்துள்ளது அல்லது கடந்த ஓராண்டில் 25 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது என்பதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது.

கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் என்றால் கடந்த 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு என அனைத்து காலக் கட்டத்திலும் எப்படி வருமானம் கொடுத்திருக்கிறது என கவனித்து முதலீடு செய்ய வேண்டும். மேலும், அந்த ஃபண்ட்களுக்கான தரக்குறியீடுகளையும் கவனிக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கும் கடன் ஃபண்ட்களின் விவரங்களை அதன் முதலீட்டுக் கலவையில் (போர்ட்ஃபோலியோ) பார்த்து தெரிந்து கொள்ளலாம். நிறுவனத்தின் கடன் தகுதிக்கு ஏற்ப அது வெளியிடும் கடன் பத்திரங்களுக்கு தரக்குறியீடு (Ratings) வழங்கப்படும். அதில் ஏஏஏ+ (AAA+) என்பது மிகவும் சாதகமான தரக்குறியீடாகும். இந்தத் தரக்குறியீடு கொண்ட பத்திரங்களில் அதிகமாக முதலீடு செய்திருக்கும் ஃபண்ட்களில் பயப்படாமல் முதலீடு செய்யலாம். இதற்கு கீழே ஏஏ+, ஏ தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் ஃபண்ட்களிலும் முதலீடு செய்யலாம். ஆனால், இதில் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது.
பிபிபி (BBB) தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்கள் நடுத்தர அளவு ரிஸ்க் கொண்டவையாகும். இதற்கு கீழே பிபி, சிசிசி, சிசி, சி, டி (D) ஆகிய தரக்குறியீடு கொண்ட பாண்ட்கள் அதிக ரிஸ்க் கொண்டவை. இவற்றை ஜங் பாண்ட் (Junk Bond) என்பார்கள். இவற்றில் முதலீடு செய்யும் கடன் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது; முதலுக்கே மோசம் போக வாய்ப்பிருக்கிறது.
ஈக்விட்டி ஃபண்ட்கள் என்கிற போது அவற்றின் 3 ஆண்டு, 5 ஆண்டு, 10 ஆண்டு வருமானத்தை பார்க்க வேண்டும். இது பணவீக்க விகிதத்தை விட அதிகமாக இருந்தால் அந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். இது ஹைபிரீட் ஃபண்ட்களுக்கும் பொருந்தும்.

எத்தனை ஃபண்ட்களில் முதலீடு?
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொறுத்த வரையில் ஒருவர் குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம், மிக நீண்ட காலம் என நான்கு காலக் கட்டங்களில் முதலீட்டை மேற்கொள்வார்.
குறுகிய காலம் என்றால் மூன்று மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் வரைக்கும் செல்லும். மிகக் குறுகிய காலம் அதாவது அவசரத் தேவைக்கான பணத்தை ரிஸ்க் இல்லாத லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். இந்த அவசரக் கால நிதியை கணவன், மனைவி இருவர் பேரிலும் பிரித்து போட்டு வைத்தால்தான் அவசரத்துக்கு உடனடியாக எடுத்து பயன்படுத்த முடியும். அந்த வகையில் ஆளுக்கு ஒரு லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டின் வருமானம் வங்கி சேமிப்பு கணக்கை விட சிறிது அதிகமாக இருக்கும்.
அடுத்து ஓராண்டுக்கு மேற்பட்டு இரண்டு ஆண்டுக்கு பின் தேவைப்படும் பணத்தை ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். மாத எஸ்.ஐ.பி ரூ.5,000 வரையில் என்றால் ஒரு ஃபண்டே போதும். ரூ.6,000 என்றால் தலா ரூ.3,000 என பிரித்து முதலீடு செய்து வரலாம். எஸ்.ஐ.பி ரூ.10,000 வரைக்கும் என்றால் இரண்டு ஃபண்ட்கள் போதும். இதன் பிறகு ரூ. 20,000-ரூ.40,000 என்றால் மூன்று ஃபண்ட்கள் போதும். மாத எஸ்.ஐ.பி ரூ.50,000 என்றால் நான்கு ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்யலாம். எஸ்.ஐ.பி தொகை ரூ.1 லட்சம் என்றால் ரூ.20,000 வீதம் ஐந்து ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம்.
மூன்றாண்டுக்கு மேல் ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட இலக்குகளுக்கு ஹைபிரிட் ஃபண்ட்களில் முதலீடு செய்து வரலாம். அதிலும் மேற்கண்ட முறையை பின்பற்றலாம்.

ஐந்தாண்டுகளுக்கு மேல் பத்தாண்டுகளுக்கான வரையிலான முதலீட்டை பங்குச் சந்தை ஃபண்ட்களில் குறிப்பாக லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட்கள், ஃபிளேக்ஸி கேப் ஃபண்ட்களில் மாத எஸ்.ஐ.பி என்றால் ரூ.5,000-ரூ.10,000 வரைக்கும் 2 ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்யலாம், மாத முதலீட்டுத் தொகை ரூ.5,000 என்றால் லார்ஜ் கேப் ஃபண்ட் மற்றும் மல்டி கேப் ஃபண்டில் தலா ரூ.2,500 வீதம் முதலீடு செய்து வரலாம். மாத எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகை ரூ.50,000 என்றால் 4 அல்லது 5 ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்யலாம். இப்படி பிரித்து முதலீடு செய்வது மூலம் ரிஸ்க்கை குறைக்க முடியும்.
முதலீட்டுக் காலம் பத்தாண்டுகளுக்கு மேல் என்றால் மிட் கேப் ஃபண்ட்களிலும், பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என்றால் ஸ்மால் கேப் ஃபண்ட்களிலும் முதலீடு செய்து வரலாம். ஒரு ஃபண்ட்க்கு ரூ.5,000-ரூ.10,000 என வைத்துக் கொள்ளலாம்.

மொத்த முதலீடு என்றால் முதலீட்டுத் தொகையை பொறுத்து ஒரு ஃபண்டில் ரூ.25,000 அல்லது ரூ.50,000 என முதலீடு செய்யலாம். அதேநேரத்தில், முதலீட்டுத் தொகை லட்சக்கணக்கில் இருக்கும் போது, ஒரு ஃபண்டில் லட்சக்கணக்கில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு மொத்த தொகை ரூ. 5 லட்சம் என்றால் தலா ரூ.1 லட்சம் என்பது போல் 5 ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். இதுவே முதலீட்டுத் தொகை ரூ.10 லட்சம் என்றால் பத்து ஃபண்ட்களில் பிரித்து முதலீடு செய்ய வேண்டாம். தலா ரூ.2 லட்சம் என ஐந்து ஃபண்ட்களில் முதலீடு செய்தால் போதும்.
முதலீட்டை எப்படிப் பிரித்து மேற்கொள்வது மற்றும் எத்தனை ஃபண்ட்களில் முதலீடு செய்வது என்பதில் குழப்பம் இருந்தால் முதலீட்டு ஆலோசகர்களை அணுக தயங்காதீர்கள்.