
கொரோனா செய்திருக்கும் காரியம் இந்த நம்பிக்கையை முற்றிலுமாக அழித்திருப்பதுதான்.
இந்த உலகம் எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்ததோ, எதற்கெல்லாம் அதிக பணம் செலவழித்ததோ அவற்றையெல்லாம் கண்ணுக்கே தெரியாத ஒரு கிருமி மாற்றி எழுதியிருக்கிறது. “அடுத்த 6 மாசத்துக்கு உணவைத் தவிர வேறு எதற்கும் நான் செலவழிக்க மாட்டேன்” என ஒருவர் சமூக வலைதளத்தில் எழுதியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த பலரும் “அப்படியெல்லாம் இருந்தால் அவ்வளவுதான். நாடும், பொருளாதாரமும் காலி” என்றார்கள். கொரோனாவுக்குப் பிறகு, நுகர்வுக் கலாசாரம் என்ன ஆகும், வாடிக்கையாளர்கள் மாறிவிடுவார்களா, அதனால் நம் வாழ்க்கை முறையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

“ஷேர் மார்க்கெட்ல மட்டும் 19.5 லட்சம் முதலீடு பண்ணியிருக்கேன். அதில்லாம, மியூச்சுவல் ஃபண்ட். அப்புறம் தங்கம் கையிருப்பு இன்றைய மதிப்புக்கு 12-13 லட்சம் இருக்கும். சென்னைக்குள்ள 1 ஃப்ளாட், சென்னைக்கு அருகில் 2 ப்ளாட்... அதோட மதிப்பு 1.5 கோடிகிட்ட வரும். ஆனா, கைல இப்ப காசில்லை. ஷேர் மார்க்கெட்ட எல்லாம் இப்ப தொட்டா நஷ்டம் மட்டுமே பல லட்சங்கள் போகும். காத்திருக்கணும். ஃபிரெண்ட்ஸ்கிட்ட அனுப்பச் சொன்னா நம்ப மாட்றாங்க. எங்க ஏரியா ஏ.டி.எம்ல பணமில்லை. தூரமா போக பயமா இருக்கு. மத்த எல்லா லிக்விட் கேஷையும் முதலீடு பண்ணிட்டேன். இன்னைக்கு நிலவரத்துக்கு என் கைல இருக்கிறது 2,500. இத வெச்சுட்டு மே 3 வரைக்கும் ஓட்டணும்.”
சென்னையைச் சேர்ந்த ஒரு முதலீட்டாளரிடம் இந்தக் கட்டுரைக்காகப் பேச முயன்றபோது அவர் சொன்னது இது.
இதுவும் கடந்து போகுமென்றாலும் கடந்த பின் எல்லாமே சரியாகிவிடுமா? கொரோனா போனபிறகு நம் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுமா? கொரோனாப் பிரச்னையிலிருந்து ஓரளவுக்கு மீண்டுவிட்ட சீனாவைப் பார்த்தால் நம்மால் உறுதியாகச் சொல்லமுடிவது, உலகம் முன்புபோல் இருக்கப்போவதில்லை. உலகம் என்று சொல்வது நம்மைத்தான். நம் அனைவரையும்தான். கடந்த 30 நாள்களில் நாம் எப்படி மாறியிருக்கிறோம்?
“என் அம்மா சீரியல் தவிர எதுவுமே பாக்க மாட்டாங்க. இந்த லாக் டெளன் பீரியட்ல அவங்களுக்கு அமேசானையும் ஹாட் ஸ்டாரையும் பழக்கப்படுத்தினேன். இப்ப தினமும் ஒரு படமோ வெப் சீரிஸோ பாக்குறாங்க. எல்லாம் நார்மல் ஆன பிறகும் அவங்க இப்படியே இருக்கணும்னு விரும்புறேன், திரும்ப சீரியல் பக்கம் போக வேணாம்னு. அவங்களும் அப்படித்தான் இருக்காங்க” என்கிறார் 20 ஆண்டுகளாக மென்பொருள்துறையில் இருக்கும் நண்பர் ஒருவர்.
இது ஒரு உதாரணம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் நாம் நிறைய மாறியிருக்கிறோம். காய்கறிகளை ஸ்விகி மூலம் வாங்குகிறோம். பொதுப் போக்குவரத்தை மறந்து சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். கடந்த 30 நாள்களில் கூகுளில் ‘ஆன்லைன் டெலிவரி’ பற்றி அதிகம் தேடியிருக்கிறார்கள். சிகரெட், மது அருந்துதல் கணிசமாகக் குறைந்திருக்கிறது. கொரோனா முடிந்த பிறகும் இவற்றையெல்லாம் முற்றிலும் மறந்து முழுவதுமாகப் பழைய நிலைக்கு மாறிவிடுவது நடக்காத காரியம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்தியச் சந்தை வித்தியாசமானது. இங்கே, உற்பத்தியாளர்கள் நினைத்தால் கவர்ச்சியான விளம்பரங்கள் மூலம் மக்களை எதையும் வாங்க வைக்க முடியும். அப்படித்தான் கடந்த 30 ஆண்டுகளில் இந்தியச் சந்தை வேகமாக வளர்ந்திருக்கிறது. அதற்கான திறனும் இந்தக் காலகட்டத்தில் இந்தியர்களில் கணிசமானோர்க்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இனி அது அப்படியே தொடருமா என்பதுதான் இப்போதைய முக்கியமான கேள்வி.

உற்பத்தியாளர்களிடமும் அவ்வளவு பொருள்கள் இல்லை. மக்களிடமும் வாங்கும் சக்தி குறைந்திருக்கிறது. கூடவே, எதிர்காலம் குறித்த அச்சமும் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த அச்சம்தான் இன்று அனைத்து நாட்டையும், முதலாளிகளையும், பொருளாதார வல்லுநர்களையும் யோசிக்க வைத்திருக்கிறது.
50 வயதைத் தாண்டியவர்களிடம் கேட்டுப் பாருங்கள். வீடு வாங்குவதென்றால்கூட குறைந்தது 80 சதவிகித பணம் கையிருந்தால்தான் வாங்குவார்கள். இரண்டு கார் வாங்கும் திறன் கொண்டவர் ஒரு காரோடு நின்றுவிடுவார். பேங்க் பேலன்ஸையெல்லாம் பார்க்கத் தேவையில்லாத ஒருவர்கூட தீபாவளிக்கும் பொங்கல் தவிர, கூடுதலாகப் புத்தாடைகள் வாங்குவார். ஆனால், 30 வயதுக்குட் பட்டவர்களைப் பாருங்கள். 10% சதவிகித முன்பணம் மட்டுமே செலுத்தி 90% வங்கி லோனோடு வீடு வாங்கியிருப்பார். டீசல் போடக்கூட சில சமயம் கையிருப்பு இல்லாதவரிடம் செகண்ட் ஹேண்ட் கார் ஒன்று இருக்கும். துவரம் பருப்பு வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் போனால்கூட “நல்லாருக்குல்ல” என ஒரு சட்டையோ குர்தியோ வாங்கி வருவார்கள். இந்த வித்தியாசம்தான் முக்கியம். எப்படியும் சம்பளம் வரும், வேலை போனால் இன்னொரு வேலை வருமென்ற அந்த நம்பிக்கைதான் வாங்கும் திறனைவிட முக்கியம். அது அவர்கள் திறனைத் தாண்டி வாங்க வைத்தது. சந்தையை வளர்த்தது. அந்த நம்பிக்கை தரும் தைரியத்தில்தான் இந்தியா ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் வாங்கிக் குவிக்கிறது. கொரோனா செய்திருக்கும் காரியம் இந்த நம்பிக்கையை முற்றிலுமாக அழித்திருப்பதுதான்.
ட்விட்டரில், இந்தக் கட்டுரைக்காகச் சில கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் ஒன்று,கொரோனாவால் எதிர்காலம், வேலை, சேமிப்பு போன்றவற்றைப் பற்றிய அச்சம் எழுந்திருக்கிறதா?
இதற்கு 85% ஆம் எனச் சொல்லியிருக்கிறார்கள். இந்த அச்சத்தைப் போக்காமல் என்ன பொருளாதாரச் சீர்திருத்தம் செய்தாலும் அது எடுபடாது. அச்சம் போக வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி காலம்தான். காத்திருப்பதுதான்.
கொரோனா காலத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? கிட்டத்தட்ட 40 நாள்கள் வீட்டிலே முடங்கிக் கிடக்கிறோம். அதனால் நிறைய சாப்பிடுகிறோம். ஆனால், பொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம். ஆடம்பரம் குறைந்திருக்கிறது. எது தேவை, எது தேவையற்றது என்பது தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒருவேளை, லாக் டெளன் நீட்டிக்கப்பட்டால் நம் கையிருப்புப் பணம் போதுமா எனச் சிந்திக்்கிறோம். நிறுவனம் சம்பளத்தைப் போடாவிட்டால் சமாளிக்க முடியுமா என யோசிக்கிறோம். வேலையே போனால் என்ன செய்வது என அஞ்சுகிறோம். முன்பு போல, ஒரு வேலை போனால் இன்னொரு வேலை என இருக்க முடியாது. காரணம், கொரோனா நம் ஏரியாவைத் தாக்கவில்லை. உலகையே தாக்கியிருக்கிறது. எல்லாருக்கும் பிரச்னைதான். இந்த பயம் நம்மைக் குறைவாகச் செலவு செய்ய வைக்கும். செய்வதை யோசித்து சமயோசிதமாகச் செலவு செய்ய வைக்கும்.
இன்னொரு பக்கமும் இதற்கு உண்டு. அதற்கு ரிவெஞ் ஷாப்பிங் என ஒரு சொல்லைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சீனாவில் லாக் டெளன் முடிந்து ஷாப்பிங் மால் ஒன்று திறந்தபோது சீனர்கள் ரெக்கார்ட் அடித்திருக்கிறார்கள். நீண்டகாலம் எதையுமே வாங்காமல் இருந்தவர்கள், வாய்ப்பு கிடைத்ததும் வாங்கிக் குவிப்பதை ரிவெஞ்ச் ஷாப்பிங் என்கிறார்கள். ஆனால், இது தொடரும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. உற்பத்தியாளர்களுக்கும் இடைத்தரகர்களுக்கும் இந்த ரிவெஞ்ச் ஷாப்பிங் ஸ்டார்ட்டிங் பிரச்னையைத் தீர்க்க உதவலாம். அதன்பின்னர், அந்த டிரெண்ட் தொடர்வது சிக்கல்தான்.

கொரோனா காலத்தில் நுகர்வோர்களிடம் காணப்பட்ட மாற்றங்களை நீல்சன்(Neilson) நிறுவனம் ஆராய்ந்திருக்கிறது. அவர்கள் கவனித்தவரை, இந்தக் காலத்து ஷாப்பிங் விஷயங்களை ஆறாகப் பிரித்திருக்கிறார்கள்.
உடல்நலம் தொடர்பான மருந்துகள் மற்றும் பொருள்கள்.
மாஸ்க் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விஷயங்கள்.
வீட்டிலேயே இருக்க நேர்ந்ததால் உணவுக்கான பொருள்களைச் சேமித்துவைக்க வாங்கப்பட்டவை.
கடைகளுக்குச் செல்லாமல் ஆன்லைனில் வாங்கப் பட்டவை. அதனால் கடைகளில் கூட்டம் குறைந்தது.
கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வு. குறைவான பொருள்கள், வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தது.
புதிய ரொட்டீன். வெளியே வந்தாலும் பாதுகாப்புக் காரணமாக, ஆன்லைனிலேயே பொருள்களையும் சேவைகளையும் வாங்குவது.
இது அமெரிக்க டேட்டாபடி முன்வைக்கப்பட்ட ஆய்வுதான். ஆனால், உலகம் முழுவதும் இதே டிரெண்ட் தான் என்கிறது நீல்சன். கொரோனா மட்டுமல்ல; அதன் விளைவுகளும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“கொரோனா நுகர்வோர்களிடம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது வந்திருக்கும் மாற்றங்கள் எத்தனை நாள்கள் நீடிக்கும்; அதன்பின் என்ன ஆகும் என்பதெல்லாம் போகப்போகத்தான் தெரியும்” என்கிறார் நீல்சன் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்காட் மெக்கன்ஸி.
பொதுவாக அனைத்து நதிகளும் கடலில் கலந்ததும் தங்கள் இயல்பை மறந்து கடலோடு கலப்பது இயற்கை. ஆனால், அமேசான் நதி மட்டும் அதன் நீளம், அகலம் மற்றும் வேகம் காரணமாக, கடலோடு கலந்த பின்னும் உப்பாகாமல் இருக்கும். கொரோனா அமேசான் நதியைவிடவும் பலம் வாய்ந்தது. அந்தப் பிரச்னை முடிந்தாலும் அதன் தாக்கம் நம் வாழ்வில் இன்னும் சில காலம் இருக்கத்தான் செய்யும். அதையும் சேர்த்து சமாளிக்கும் மனபலமும் இயற்கை நமக்கு வழங்கும் என நம்புவோம்.