நம் வாழ்க்கையில் பணி ஓய்வு பெறும்போது கோடீஸ்வரனாக இருக்க வேண்டும் என்கிற ஆசை யாருக்குத்தான் இல்லை? இந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வது கடினமா? இல்லவே இல்லை. மாதம்தோறும் பணம் சேமிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் கோடீஸ்வரன் ஆகமுடியும். எப்படி?

பொது வருங்கால வைப்பு நிதியமான பி.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்து தொடர்ந்து அதில் பணம் செலுத்தி வருவதன் மூலம் ஒரு கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைய முடியும். தற்போது பி.பி.ஃப் திட்டத்துக்கு சேர்க்கும் பணத்துக்கு மத்திய அரசாங்கம் 7.1% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை ஒவ்வோர் ஆண்டும் ஒருவர் பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 12 பரிவர்த்தனைகளில் இதைச் செய்யலாம்.
தேசிய சேமிப்பு அமைப்பால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் நாம் போடும் பணம், 15 ஆண்டுகளில் முதிர்ச்சி அடைந்துவிடும். பின்னர் அந்தப் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என எத்தனை முறை வேண்டுமானாலும் நீட்டித்துக் கொள்ளலாம்.
ஒருவர் 26 வயதில் பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து, அதை 55 வயது வரை அதாவது, 30 ஆண்டுகள் வரை (வருடத்திற்கு 1.5 லட்சம்) தொடர்ந்தால், அவர் மொத்தம் ரூ.45 லட்சம் முதலீடு செய்திருப்பார். இதற்கு 7.1% வட்டி என்கிற அளவில் வளர்ச்சி கண்டால், மொத்தம் ரூ1,54,50,911 கிடைக்கும். அதாவது, கூட்டு வட்டி வருமானம் மூலம் கிடைக்கும் ரூ.1,09,50,911 மூலம் ஒருவர் எளிதாக கோடீஸ்வரன் என்கிற நிலையை அடைய முடியும்.

பி.பி.எஃப் மூலம் கோடீஸ்வரன் என்கிற நிலையை அடைய விரும்புகிறவர்கள், ஒரு சில விஷயங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும். முதலாவதாக, குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். ஒருவர் தனது முதலீட்டை 22 வயதிலும் தொடங்கலாம், 26 வயதிலும் தொடங்கலாம். ஆனால், 58 வயதுக்குள் 30 ஆண்டுகளில் பூர்த்தியாகிவிடுகிற மாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.
இரண்டாவதாக, வேலைக்குச் சேர்ந்த ஆரம்ப காலத்தில் ஒருவரால் ஒரு ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் சேர்க்க முடியாது. அப்போது 50,000 ரூபாய் அல்லது 60,000 ரூபாய் சேர்த்தாலே அதிகம்தான். ஆனால், வேலைக்குச் சேர்ந்து சில ஆண்டுகள் கழிந்தபின் பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். அப்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையைக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தலாம். இதன்மூலம் 30 ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.1.5 லட்சம் முதலீடு என்கிற நிலையை அடையலாம்.

கோடீஸ்வரன் என்கிற நிலையை அடைய உதவுவதுடன், இந்தத் திட்டத்தில் சேர்க்கும் பணத்துக்கு வரிச் சலுகையும் உண்டு என்பது எக்ஸ்ட்ரா நன்மை. இந்தத் திட்டத்துக்கான வட்டி விகிதத்தை சில வாரங்களுக்கு முன் 7.1 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாக மத்திய அரசாங்கம் குறைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு தனது உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் மீண்டும் குறைக்கப்படவில்லை எனில், இந்தத் திட்டம் மிகச் சிறப்பான திட்டம் என்றே சொல்லலாம்!