Published:Updated:

நீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி?! #DoubtOfCommonMan

ஆன்லைனில் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக பார்ம்-16, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கையில் வைத்துக்கொள்வது நல்லது.

Published:Updated:

நீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி?! #DoubtOfCommonMan

ஆன்லைனில் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பாக பார்ம்-16, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கையில் வைத்துக்கொள்வது நல்லது.

இது வருமான வரி தாக்கல் செய்யும் காலம். ஆண்டுக்கு இரண்டரை லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் அனைவரும் கட்டாயம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். ஆன்லைனிலேயே கணக்கைத் தாக்கல் செய்யமுடியும் என்றாலும், அதற்கான நடைமுறைகள் தெரியாமல் பலரும் தவிக்கிறார்கள்.

ஆடிட்டர் சத்யநாராயணன்
ஆடிட்டர் சத்யநாராயணன்
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் சுரேந்திரன் இதுதொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். "எனது ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய். நான் ஆன்லைனில் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய முடியுமா? அதற்கான நடைமுறைகள் என்ன?" என கேட்டிருந்தார். ஆடிட்டர் கே.ஆர்.சத்யநாராயணனிடம் இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.

"தாராளமாக, அவரவர்களே ஆன்லைன் மூலம் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யமுடியும். ஆனால், சிலவற்றுக்கு வருமான வரிச்சட்டம் 44ஏபி என்ற பிரிவின் ஆடிட்டர் சரிபார்த்து சான்றிதழ் தரவேண்டி இருக்கும். அவற்றுக்கு மட்டுமே தனி நபரால் வருமான வரித்தாக்கல் செய்ய முடியாது. ஒருவருடைய ஆண்டு வருமானம் அல்லது ஆண்டு `டர்ன் ஓவர்' அல்லது விற்பனை ஒரு கோடி ரூபாய்க்குமேல் இருந்தால், அவருக்கான வருமான கணக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து சான்றிதழ் அளித்த பின்னர்தான் தாக்கல் செய்யமுடியும். ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களே வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

வருமான வரி இணையதளம்
வருமான வரி இணையதளம்
vikatan

மாதச்சம்பளதாரர்கள் வருமான வரித்துறையின் இணையதளத்தில் www.incometaxindiaefiling.gov.in/home ஐடிஆர்-1 படிவத்தை நிரப்பி, வருமான வரி தாக்கல் செய்யலாம். Log in செய்வதற்கு முன் பார்ம்-16, பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை கையில் வைத்துக்கொள்வது நல்லது.

முதலில் இணையதளத்தில், உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பதிவுசெய்து பயனாளர் ஐடியை உருவாக்க வேண்டும். அதற்கு, நீங்கள் தனிநபரா, கூட்டுக்குடும்பமா என்றெல்லாம் ஆப்ஷன் இருக்கும். சரியானதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பான் கார்டு எண், பெயர், பிறந்த தேதி, இந்தியாவில் வசிப்பவரா அல்லது வெளிநாட்டில் வசிப்பவரா என்பது போன்ற விவரங்களை அளிக்க வேண்டும். அடுத்து மொபைல் எண், இமெயில் முகவரி போன்ற விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். மொபைல் எண்ணை உறுதிப்படுத்த `ஒன் டைம் பாஸ்வேர்ட்' வரும். அதேபோல், இமெயில் முகவரியை உறுதிப்படுத்த முதலில் ஒரு ஆக்டிவேஷன் லிங்க் மெயிலுக்கு வரும். மெயிலிலும் ஒரு `ஒன் டைம் பாஸ்வேர்ட்' வரும். இரண்டு ஒன் டைம் பாஸ்வேர்ட்களையும் பதிவுசெய்து நிரந்தரமான பாஸ்வேர்டு உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

வருமான வரி இணையதளம்
வருமான வரி இணையதளம்
vikatan

அதன்பின்னர், இணையதளத்தில் Log in செய்ததும் அடுத்த பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் Filing of Income tax return என்ற லிங்கை கிளிக் செய்யவும். அதில், பான் கார்டு எண்ணைப் பதிவுசெய்து கணக்குத் தாக்கல் செய்யும் ஆண்டை (2019-20) தேர்வுசெய்ய வேண்டும். அடுத்து, ஐ.டி.ஆர்-1 பார்மைத் தேர்வு செய்ய வேண்டும். `Submission mode' என்ற ஆப்ஷனில் 'Prepare and Submit Online' என்பதைத் தேர்வுசெய்து continue கொடுங்கள். ஐ.டி.ஆர் -1 பார்ம் கிடைக்கும்.

அதில், உங்களது வங்கிக்கணக்கை பதிவு செய்ய வேண்டும். இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன் தொகை ஏதேனும் உங்களுக்கு வர வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அந்தக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். அடுத்து continue கொடுத்தால், விதிமுறைகள் திறக்கும். இந்தப் பக்கத்தில் 7 மெனுக்கள் இருக்கும். இரண்டாவது மெனு, General Information. இதில் உங்களது பான் கார்டு, பெயர், ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவற்றைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

வருமான வரி இணையதளம்
வருமான வரி இணையதளம்
vikatan

அடுத்து computation of income and tax என்ற மெனுவை கிளிக் செய்யுங்கள். அதில், உங்களது மாதச்சம்பளம், வங்கி வட்டி வருமானம், இதர வைப்பு நிதி வருமானம், சொந்தமாக வீடு இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் வருமானம், வங்கிக்கடன் ஏதாவது பெற்றிருந்தால் அதற்கான வட்டி, வேறு ஏதேனும் முதலீடுகள் செய்திருந்தால் அந்த விவரங்கள், காப்பீடுகள், வருமான வரிச்சட்டம் 80டி பிரிவுக்கான சலுகை விவரங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். பெரும்பாலும் இது ஏற்கெனவே நிரப்பப்பட்டிருக்கும். ஏதேனும் விடுபட்டிருந்தால் நிரப்பிக்கொள்ளுங்கள். உங்கள் மொத்த வருமானம், கழிவுகள் போக நீங்கள் கட்ட வேண்டிய வரி அல்லது உங்களுக்கு ரிட்டனாகும் தொகை குறித்த விவரங்களும் அதில் இருக்கும்.

அடுத்த மெனு Tax details. இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை, டிடிஎஸ் விவரங்கள் இந்தப் பக்கத்தில் இருக்கும். அடுத்த மெனு, Taxes paid and verification. இந்தப் பக்கத்தில் நீங்கள் கட்ட வேண்டிய தொகை அல்லது ரிட்டனாகும் தொகை, உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் இருக்கும்.

வருமான வரி இணையதளம்
வருமான வரி இணையதளம்
vikatan

அடுத்த மெனு Donations 80G. நீங்கள் ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கோ, அல்லது தேசிய பேரிடர்களின்போது முதல்வர் அல்லது பிரதமர் நிவாரண நிதிகளுக்கோ நன்கொடை அளித்திருந்தால் அவற்றை இந்தப் பக்கத்தில் பதிவிட வேண்டும். இந்த நன்கொடைகளுக்கு 50 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை வரிக்கழிவு உண்டு. அரசு சார்ந்த அமைப்புகளுக்கான நன்கொடைகளுக்கு 100 சதவிகித வரிக்கழிவு கிடைக்கலாம். தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தால் 50 சதவிகிதம் வரிக்கழிவு வழங்கப்படும். நன்கொடை அளித்த நிறுவனத்திடம் அது தொடர்பான சான்றிதழ் பெறுவது அவசியம். அந்த நிறுவனத்தின் பான் கார்டு மற்றும் முகவரியைப் பதிவுசெய்ய வேண்டும்.

அடுத்துள்ள மெனு Donations 80GGA. அறிவியல் ஆராய்ச்சி சார்ந்த பணிகளுக்கு நன்கொடை வழங்கியிருந்தால் இந்த மெனுவில் விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். நன்கொடைகள் குறித்து நீங்கள் செய்யும் பதிவுகள், Taxes paid and verification பக்கத்தில் பதிவாகிக்கொண்டே வரும். எல்லாப் பதிவுகளையும் முடித்தபிறகு, எல்லாவற்றையும் மீண்டும் ஒருமுறை சரிபார்த்து Taxes paid and verification பக்கத்துக்கு வந்து preview and submit பட்டனை அழுத்த வேண்டும். நீங்கள் ஏதேனும் விவரங்களைப் பதிவு செய்யாமல் விட்டிருந்தால் அதுவே உங்களுக்குச் சுட்டிக்காட்டும். எல்லாம் நிறைவாகப் பதிவு செய்திருந்தால் சப்மிட் ஆகிவிடும்.

வருமான வரி இணையதளம்
வருமான வரி இணையதளம்
vikatan

இதோடு முடிந்துவிடாது. இன்னும் ஒரு முக்கியப் பணி இருக்கிறது. கணக்கைத் தாக்கல் செய்தது நீங்கள் தான் என்பதை உறுதிசெய்ய இ-வெரிபிகேஷன் செய்ய வேண்டும். கணக்கைத் தாக்கல் செய்ததும் இ-வெரிபிகேஷன் என்றொரு மெனு உங்கள் பார்வைக்கு வரும். அதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். மூன்றாவதாக உள்ள `ஆதார் கார்டு வழியாக இ-வெரிபிகேஷன் செய்யும்' பட்டனை அழுத்தினால் ஆதார் கார்டில் இணைத்துள்ள மொபைல் நம்பருக்கு ஒரு `ஒன்டைம் பாஸ்வேர்டு' வரும். அதை அந்தப் பக்கத்தில் பதிவு செய்து சப்மிட் கொடுத்தால் முடிந்தது. நீங்கள் எந்த மெயிலை வருமான வரிக் கணக்கில் பதிவு செய்திருக்கிறீர்களோ, அந்த மெயிலுக்கு சான்றிதழ் வந்துவிடும்.

நீங்கள் கூடுதலாக வரி கட்ட வேண்டியிருந்தால் ஆன்லைனிலேயே கட்டிவிடலாம். உங்களுக்கு பணம் ரிட்டனாகும் வாய்ப்பிருந்தால் நீங்கள் தந்துள்ள வங்கிக்கணக்குக்கு தானாக வந்துவிடும். மாதச்சம்பளம் பெறுபவருக்கு ஒரு வீடு மட்டும் சொந்தமாக இருக்கும்வரை ஐடிஆர்-1 படிவமே போதுமானது. குறைவான வருமானமுள்ள சிறு விற்பனையாளர்களாக இருந்தால் ஐடிஆர்-4 என்ற படிவத்தின்மூலம் வருமான வரித்தாக்கல் செய்யலாம்.

Doubt of Common Man
Doubt of Common Man