Published:Updated:

பிக்ஸட் டெபாசிட்டில் இதை கவனிக்காமல் பணம் போட்டால்... முதலுக்கே பிரச்னைதான்!

வங்கி பிக்ஸட் டெபாசிட்

பிக்ஸட் டெபாசிட்டுகள் என்பன ரிஸ்க் இல்லாத முதலீடு என்பது சரிதான். ஆனால், அவர் தேடிப்போனது அதிக ரிஸ்க் இருக்கும் NBFC நிறுவனங்களை...

Published:Updated:

பிக்ஸட் டெபாசிட்டில் இதை கவனிக்காமல் பணம் போட்டால்... முதலுக்கே பிரச்னைதான்!

பிக்ஸட் டெபாசிட்டுகள் என்பன ரிஸ்க் இல்லாத முதலீடு என்பது சரிதான். ஆனால், அவர் தேடிப்போனது அதிக ரிஸ்க் இருக்கும் NBFC நிறுவனங்களை...

வங்கி பிக்ஸட் டெபாசிட்

1. பிக்ஸட் டெபாசிட்டில் இதை கவனிக்காமல் பணம் போட்டால்...

அவருக்கு வயது 80-க்குமேல். பெரிய கார்ப்பரேட் குழுமத்தில் நல்ல பொறுப்பில் இருந்தவர். அதெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது சமூக சேவை செய்து கொண்டிருக்கிறார். இணையவழியில் கூட்டங்கள் நடத்துகிறார். எனக்கு நண்பர். அவ்வப்போது தொலைபேசியில் அழைப்பார்.  சென்ற மாதம் ஒருமுறை அழைத்து, ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றி பேசவேண்டும் என நேரம் கேட்டார்.

என்ன அதிசயம் இது! எதற்காக நேரம் கேட்கிறார், என்ன பேசப் போகிறார் என்று யோசித்தேன்.அவர் சொன்னார், அவர் வயதை ஒத்த தொகையை, ஆம் ரூ.80 லட்சத்தை டெபாசிட் செய்திருக்கிறார். எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக்கூடாது என்கிற நிதி நிர்வாக பாலபாடத்தைக் கடைப்பிடித்து, நான்கு வெவ்வேறு நிறுவனங்களில் நான்கு பிக்ஸட் டெபாசிட்டுகளில் போட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் 20 லட்ச ரூபாய். 

ஓய்வுக்கால முதலீடு
ஓய்வுக்கால முதலீடு

`பரவாயில்லையே! முன்பெல்லாம் என்ன பங்கு வாங்கலாம்’ என்று கேட்பார், பங்குகளில் முதலீடு செய்து கொண்டிருந்தார். இப்போது பணி ஓய்வுக்குப்பின், பொறுப்பாக இனி ரிஸ்க்கே வேண்டாம் எனக் குறிப்பிட்ட வருமானம் `பிக்ஸட் ரிட்டர்ன்ஸ்’ தரும் பிக்சட் டெபாசிட்டுகளில் போட்டிருக்கிறாரே...!’ என்று மனதிற்குள் மகிழ்ந்தேன்.

அவர் போட்டிருந்த நான்கு பிக்ஸட் டெபாசிட்டுகளில் ஒன்று கெட்டுப்போனது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (DHFL) என்கிற நிறுவனத்தின் பிக்ஸட் டெபாஸிட்டுகளில் அவர் போட்டிருந்த 20 லட்ச ரூபாய் பணம் இப்போதைக்கு வராதாம். அசலுக்கே பிரச்னை என்பதால், வட்டியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதாம். ‘‘முதலீட்டாளர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு அமைப்பு உருவாக்கி கேட்டுக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

``அந்த நிறுவனத்தில் இருந்து இதுவரை வந்திருக்கிற தொகை வெறும் 1% மட்டுமே. போட்ட பணம் முழுவதும் கிடைக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். முழுவதும் இல்லாவிட்டாலும், சிறுக சிறுக போட்ட பணத்தில் ஒரு பகுதி வந்துவிடும் என்கிறார்கள்’’ என்று மேல்விவரம் சொன்னார். என்ன செய்யலாம் என்று கேட்டார்.

``மற்ற மூன்றும்கூட வங்கிசாரா நிதி நிறுவனங்கள் (Non Banking Financial Corporation - NBFC) தானே!” 

“அவற்றில் பிரச்னை இல்லை. சரியான நேரத்திற்கு வட்டி வந்துவிடுகிறது” என்றார்.

”அஞ்சலகம், வங்கிகளின் பிக்ஸட் டெபாசிட்டுகள் இருக்கும்போது ஏன் தேடிப் போய் இந்த நிறுவனங்களில் டெபாசிட் செய்தீர்கள்?”

‘‘அவற்றைக் காட்டிலும் NBFC-களில் வட்டி 1.5% அதிகம்”

”அதனால்..?”

”நான்காகப் பிரித்து..”

வங்கி டெபாசிட்
வங்கி டெபாசிட்
vikatan

”அதில் ஒன்று முழுதாகப் போய்விட்டதா?”

”.....................”

”நான்கில் ஒன்று என்றால், ரூ.20 லட்சம் காலியா! கூடுதல் 1.5% என்பது ரூ.80 லட்சத்திற்கும், ஆண்டுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். அதற்கு ஆசைப்பட்டு,  20 லட்சம் முதல் போய்விட்டதே!”

”...........................’”

“சரி, மற்றவை...?”

”இப்போதைக்கு இருக்கட்டுமே. அவற்றில் ஒன்றும் பிரச்னை இல்லை” என்றார் பரிதாபமாக.

திவான் ஹவுசிங் நிறுவனம் திவால் சட்ட நடவடிக்கையில் (Corporate insolvency resolution process) இருக்கிறது. ஆரம்பகட்டத் தகவல்கள்படி, 69,000 டெபாசிட்டர்களின் 5,270 கோடி ரூபாய் இப்படி மாட்டிக்கொண்டிருக்கிறது.

அவர் ஏன் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற முதலீடுகளைத் தவிர்த்து விட்டு, பிக்சட் டெபாசிட்டுகளில் பணம் போட முடிவு எடுத்தார்?

வயதாகிறது. இனி ரிஸ்க்-ஆன முதலீடுகள் கூடாது என்று நினைத்து பிக்ஸட் டெபாசிட்டுகளில், அதையும் சரியாக நான்கு நிறுவனங்களாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்.

இருந்தும் பங்குகளில், தங்கத்தில், ரியல் எஸ்டேட் வரமுடியாத அளவிற்கு பெரிய நஷ்டத்தை அவர் சந்திக்க நேர்ந்தது எதனால்?

 ரிஸ்க்
ரிஸ்க்

பிக்ஸட் டெபாசிட்டுகள் என்பன ரிஸ்க் இல்லாத முதலீடு என்பது சரிதான். ஆனால், அவர் தேடிப்போனது அதிக ரிஸ்க் இருக்கும் NBFC நிறுவனங்களை. இந்த நிறுவனங்களில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்டுகள் பாதுகாப்பானவையா என்று கேட்டால், பாதுகாப்பானவைதான். ஆனால், அஞ்சலகம் மற்றும் வங்கிகளில் செய்யப்படும் பிக்சட் டெபாசிட்டுகள் அளவுக்கு பாதுகாப்பானவை அல்ல. அப்படி ஒரு ரிஸ்க் இவற்றில் இருப்பதால்தான், சற்று கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது. நான் கவர்ட்டபிள் டிபன்சர்ஸ் (NCD - Non-Convertable Debenture) என்று சொல்லப்படும் முதலீட்டுக் கருவியிலும் பாதுகாப்பு தொடர்பான ஆபத்து இருக்கவே செய்கிறது.

நண்பர் செய்தது, ஒரு சின்ன சாமர்த்தியம். பாதுகாப்பான முதலீடுகளில் மற்றவற்றைக் காட்டிலும் கூடுதல் வருமானம் எதிர்பார்த்திருக்கிறார். அது அவருடைய முதலுக்கே வேட்டு வைத்துவிட்டது.

அஞ்சலகம் மற்றும் வங்கிகளின் டெபாசிட்டுகளுக்கு ஆபத்தே இல்லையா என்று கேட்கலாம்.

அஞ்சலக டெபாசிட்டுகளுக்கு மத்திய அரசின் முழு உத்தரவாதம் உண்டு. வங்கி டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் 5 லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு காப்பீடு உண்டு. 20 லட்சத்தை அவர் மற்றும் அவரது மனைவி பெயர்களில், தனியாகவும் இணையாகவும் எனப் பிரித்து நான்கைந்து வங்கிகளில் டெபாசிட் போட்டிருக்கலாம். அந்த டெபாசிட்டுகளுக்கு ஆபத்து வந்தால் இந்த ஏற்பாடுகள் முதலீட்டாளரைக் காப்பாற்றும்.

அஞ்சலக டெபாசிட்...
அஞ்சலக டெபாசிட்...

கூடுதல் ரிஸ்க் இல்லாமல் கூடுதல் வருமானம் கொடுக்க முடியாது. வயதாகிவிட்டது. ரிஸ்க் வேண்டாம் என்ற நிலையில், அதில் சமார்த்தியங்கள் எதற்கு? அவர் ரிஸ்க் எடுக்காமல் இருப்பதாக நினைத்துக்கொண்டு பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

அவர் செய்தது, சேலை கட்டுகிறேன் என்று நினைத்து, சேலை கட்டியது போல தைத்த துணியை ஒட்டிக் கொள்வது. போக்குவரத்து நெரிசலில் நிற்கிற வண்டிகளைத் தாண்டி, நான் சற்று வேகமாக போகவேண்டும். அதற்காக பிளாட்பாரத்தின் மீது இரு சக்கர வாகனத்தை ஓட்டுவது. எல்லாம் ஒன்றைத் தேர்வு செய்து அதற்கு நியாயமாக இல்லாமல் அதில் சாமர்த்தியம் காட்டுபவை. அப்படித்தான் அவர் செய்திருக்கிறார்.

அதே போல, ரிஸ்க்-ஆன பங்கு முதலீடுகளில், ரிஸ்க் இல்லாத அல்லது அதிகம் ரிஸ்க் இல்லாத ’லார்ஜ் கேப்’ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். அவற்றின் என்.ஏ.வி (NAV - Net Asset Value) வளர்ச்சி ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். காரணம், அவற்றில் ரிஸ்க் குறைவு. வளர்ச்சி வேண்டி பங்குச் சந்தைக்கு வந்துவிட்டு, ரிஸ்க்கை சாமார்த்தியமாகத் தவிர்க்க நினைத்தால், வளர்ச்சி கிடைக்காது.

ஆக, பிக்ஸட் டெபாசிட்டுகளில் ரிஸ்க் இருப்பவை உண்டு. பங்குகளிலும் பாதுகாப்பானவை உண்டு.

சோம வள்ளியப்பன்
சோம வள்ளியப்பன்

ரிஸ்க்கே வேண்டாம் என்றால் அஞ்சலக அல்லது வங்கி டெபாசிட்டுகள் அல்லது மத்திய அரசு பாண்டுகளில் பணம் போடலாம்! இவற்றில், வருமானம் கொஞ்சம் குறைவு என்றாலும், அசலுக்கு ஆபத்தில்லை.

இந்த உண்மையை 60 வயதைத் தாண்டியவர்களும், ரிஸ்க்கே எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களும் அவசியம் உணரவேண்டும்!

(மீண்டும் அடுத்த திங்கள் வருவேன்)