
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 9
ஆரத்தி கிருஷ்ணன், primeinvestor.in
கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் அறிமுகம் ஆவதற்கு முன், நிலையான வருமானம் தருகிற முதலீட்டுத் திட்டங்களில் முதலீட் டாளர்கள் முதலீடு செய்து வட்டியுடன் முதிர்வின்போது அசல் தொகையையும் திரும்பப் பெற்றனர். கடன் ஃபண்டுகள் வந்தபிறகு, முதலீட்டாளர்கள் பெருமளவில் அதில் முதலீடு செய்யத் தொடங்கினார்கள்.
கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன், அது எப்படிச் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கடன் ஃபண்டுகள் மூன்று விதமான உத்திகளைப் பின்பற்றிச் செயல்படுகின்றன. லேடர், பார்பெல் மற்றும் புல்லட் என்பவைதான் அந்த மூன்று விதமான உத்திகள். இனி, இவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

லேடர் உத்தி...
கடன் பத்திர முதலீட்டில் லேடர் உத்தி என்பது, வெவ்வேறு காலங்களில் முதிர்ச்சி அடையக்கூடிய பல்வேறு பத்திரங்களில் முதலீடு செய்வதாகும். இதில் முதலீட்டை சமமான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும். உதாரணமாக, ரூ.5 லட்சம் இருக்கிறது எனில், அவற்றை ரூ.1 லட்சம் வீதம் ஜனவரி 2024, ஜனவரி 2025, ஜனவரி 2026, ஜனவரி 2027 மற்றும் ஜனவரி 2028 ஆகிய காலங்களில் முதிர்வடையும் வகையில் முதலீடு செய்வதாகும். இந்தப் பத்திரங்கள் அவற்றின் முதிர்வுக் காலத்தில் அதற்கான வட்டியுடன் முதிர்வு அடையும் என்பதால், தொடர்ச்சி யாக நிலையான வருமானம் பெற முடியும்.
இந்த லேடர் உத்தி மூலம் கடன் பத்திரங்களில் மறுமுதலீடு செய் வதற்கான ரிஸ்க்கைக் குறைக்க முடியும். அதாவது, வட்டி விகிதங்கள் மோசமாக இருக்கும்போது பத்திரங்களில் அதிக தொகையை முதலீடு செய்யும் நிலை உருவாவதைத் தவிர்க்க இந்த உத்தி உதவும்.
நீங்கள் இப்போது முழுமையாக ரூ.5 லட்சத்தையும் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சந்தை வட்டி விகிதம் இன்று 6.8 சதவிகிதமாக இருக்கிறது (10 வருட அரசு பத்திரங்களின் வருமான அடிப்படையில்). ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டி விகிதம் 5 சதவிகிதமாகக் குறைகிறது எனில், அப்போது உங்களிடம் இருக்கும் எல்லா பணத்தையும் குறைந்த வட்டி விகிதத்தில் ‘மறுமுதலீடு’ செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், லேடர் உத்தி மூலம் வெவ்வேறு முதிர்வுக் காலங்களைக் கொண்டவற்றில் சமமான அளவில் படிப்படியாக முதலீடு செய்யும் போது இதிலிருந்து தப்பிக்கலாம்.
இந்த வட்டி விகிதத்தால் வரக்கூடிய ரிஸ்க்கைக் குறைக்கும் அதே வேளையில், நம்முடைய பாண்ட் போர்ட் ஃபோலியோ விலிருந்து மொத்தமாகவும் வட்டியாகவும் கணிசமான பணவரவைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற உதவியாக இருக்கும். இது மாதிரி வெவ்வேறு முதலீட்டு வகைகளையும் நீங்கள் இந்த உத்தியில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, நீங்கள் ஓய்வு பெறும்போது, உங்களுக்கு நிறுவனத்திடமிருந்து ரூ.50 லட்சம் கிடைக்கிறது எனில், அந்தத் தொகை முழுவதையும் ஒரே வட்டி விகிதத்தில் சேமிப்பதற்குப் பதிலாக, நீங்கள் இந்த லேடர் உத்தியைப் பயன்படுத்தி வெவ்வேறு வட்டி விகிதங்களின் பலனைப் பெறலாம். ரூ.10 லட்சத்தை 364 நாள்கள் முதிர்வுகொண்ட அரசு டிரெஷரி பில்களிலும், ரூ.10 லட்சத்தை இரண்டு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டிலும்,ரூ.10 லட்சத்தை மூன்று வருட அஞ்சலக டைம் டெபாசிட்டிலும், ரூ.10 லட்சத்தை 5 ஆண்டு மூத்த குடிமக்களின் சேமிப்புத் திட்டத்திலும், ரூ.10 லட்சத்தை அரசின் 7 ஆண்டு முதிர்வுக்கால மாறக்குடிய வட்டி விகிதத்தைக் கொண்ட சேவிங்ஸ் பாண்டிலும் முதலீடு செய்யலாம். இப்படிச் செய்வதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய முதிர்வுத்தொகையை மீண்டும் மறுமுதலீடு செய்யலாம்.
கவனிக்க வேண்டியவை: இதில் வெவ்வேறு முதலீட்டு வகை களில் வெவ்வேறு முதிர்வுக் காலங்களில் முதலீடு செய்ய வேண்டியிருப்பதால், கூடுதலாகக் கவனம் செலுத்தி நிர்வகிக்க வேண்டியிருக்கும். மேலும், முதலீடு செய்யப்போகும் நேரங் களில் முடிவுகளைத் தெளிவாக எடுக்க வேண்டும். உதாரண மாக, வட்டி விகித சுழற்சியில் உச்சநிலையில் இருக்கிறது; அதன்பிறகு வட்டி விகிதங்கள் இறக்கத்தில்தான் இருக்கப் போகிறது எனில், முதிர்வுக் காலத்தில் வட்டி விகிதம் குறைந்திருக்கும் என்பதால், நீங்கள் மீண்டும் மறுமுதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

பார்பெல் உத்தி...
பார்பெல் என்பது ஜிம்மில் எடை தூக்கும் உபகரணமாகும். இதில் நம்மால் தூக்க முடிந்த திறனுக்கேற்ப எடைகளை இரு பக்கமும் சேர்த்துக்கொண்டே வருவோம். அதில் அதிக எடை கொண்டவையும் இருக்கும், குறைந்த எடை கொண்டவையும் இருக்கும்.
அதேபோல, கடன் பத்திரங்களின் போர்ட்ஃபோலி யோவில் பார்பெல் உத்தி மூலம் அதிக ரிஸ்க் உள்ள பத்திரங்களும், குறைவான ரிஸ்க் உள்ள பத்திரங்களும் கலவையாகத் தேர்வு செய்யப்படும். நம்முடைய முதலீட்டுத் தொகையைப் பிரித்து நீண்ட கால முதிர்வுகொண்ட பத்திரங்களிலும், குறுகிய கால முதிர்வுகொண்ட பத்திரங் களிலும் சமமாக முதலீடு செய்வோம்.
உதாரணமாக, உங்களுக்கு ரூ.10 லட்சம் கிடைக்கிறது. அதை எதில் முதலீடு செய்யலாம் என்று தெரியாத நிலையில், பார்பெல் உத்தி மூலம் ரூ.5 லட்சத்தை 91 நாள்களுக்கும் குறைவான முதிர்வுகொண்ட பத்திரங்கள் வைத்திருக்கும் லிக்விட் ஃபண்டுகளிலும், ரூ.5 லட்சத்தை 10 வருட முதிர்வு கொண்ட அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதங்கள் அவ்வப் போது ஏறவும் இறங்கவும் செய்கின்றன. இவ்வாறான வட்டி விகிதங்களின் ஏற்ற இறக்கத்தால் நம்முடைய வருமானம் குறைவதற்கான ரிஸ்க் அதிகமாக இருப்பதால், ரிஸ்க்கைக் குறைப்பதற்காக இந்த பார்பெல் உத்தி நமக்கு உதவுகிறது. நடுத்தர காலக் கடன் பத்திரங்களைத் தவிர்த்து விட்டு, நீண்ட கால பத்திரங்கள், குறுகிய கால பத்திரங்களில் மட்டும் முதலீடு செய்யும்போது முதலீட்டின் மீதான ரிஸ்க்கையும் குறைக்க முடிவதுடன், அதிகமானவருமானத்தையும் பெற முடியும்.
கவனிக்க வேண்டியவை: நீங்கள் வட்டி விகித சுழற்சியின் இடைப்பட்ட காலத்தில் இருக்கிறீர்கள்; மேலும், தொடர்ந்து வட்டி விகிதம் உயர்கிறது எனில், நீண்ட கால பத்திரங்களில் உள்ள பாதியளவு முதலீடானது குறைவாகவே வருமானம் தரக்கூடியதாக இருக்கும். உங்களிடம் கைவசம் மிக அதிக அளவிலான பணம் இருக்கிறது எனில், பார்பெல் உத்தியால் பெரிய அளவில் பயன் கிடைக்காமல் போகலாம்.
புல்லட் உத்தி...
புல்லட் அல்லது ரோல் டவுன் உத்தி என்பது ஒரே தேதியில் முதிர்வு அடையக் கூடிய வெவ்வேறு பத்திரங் களில் முதலீடு செய்வதாகும். இதன் மூலம் போர்ட்ஃபோலி யோவின் சராசரி முதிர்வு வருமானத்தை நம்மால் யூகித்துவிட முடியும். உதாரணமாக, உங்களிடம் ரூ.5 லட்சம் இருக்கிறது எனில், 2028-ல் ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் முதலீடு முதிர்வு அடைய வேண்டும் எனில், அவற்றைப் பிரித்து 5 வருட அரசு கடன் பத்திரத் திலும், தேசிய சேமிப்புப் பத்திரத்திலும் முதலீடு செய்யலாம்.
இந்த உத்தியானது இந்திய கடன் ஃபண்ட் மேனேஜர் களிடம் மிகவும் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. குறிப் பிட்ட காலத்தில் குறிப்பிட வருமானத்தை எட்டும் இலக் குடன் இந்த உத்தி பயன் படுத்தப்படுகிறது.
வட்டி விகித ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு வருமானத்தை எட்ட இந்த உத்தி பயன்படுகிறது. உதாரணமாக, 5 ஆண்டு முதிர்வு கொண்ட ஃபண்டில் இந்த உத்தி மூலம் முதலீடு செய்யும்போது அந்தப் போர்ட்ஃபோலியோவில் 6.5% வருமானம் கிடைக்கிறது எனில், செலவின விகிதம் 0.30% போக இறுதி வருமானம் 6.2% என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும்.
நம்முடைய குறிப்பிட்ட நிதி இலக்குகளை எட்ட நாம் இந்த உத்தியைப் பயன்படுத்த லாம். அதாவது, நம் குழந்தை களின் மேற்படிப்பு அல்லது திருமணத்துக்கான தொகையை அடைய இந்த முறையில் பணம் சேர்க்கலாம். வீடு, கார் என எந்த இலக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். 7 வயது மகளுக்கு 2033-ல் மேற்படிப்பு செலவுக்கான பணத்தைத் திரட்ட, 2033-ல் முதிர்வு அடையக்கூடிய பத்திரங் களில் ஒவ்வோர் ஆண்டும் உபரியாக இருக்கும் தொகையை முதலீடு செய்தால் போதும்.
கவனிக்க வேண்டியவை: இந்த உத்தியில் குளோஸ் எண்டெட் வகையிலான பத்திரங்களில் முதலீடு செய்வது எளிது. அவற்றில் ஃபண்ட் மேனேஜர்கள் மொத்தமாக முதலீடு செய்வார்கள். ஆனால், ஓப்பன் எண்டெட் வகை எனில், அவற்றில் முதலீடு உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். உதாரணமாக, 2028-ல் முதிர்வு அடையக்கூடிய பத்திரத்தில் 2024-ல் திடீரென்று முதலீடு வெளியேறினால் 5 ஆண்டு முதிர்வுக்காலத்துக்கு முன்பே முதலீட்டை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அதனால் முதலீட்டில் இழப்பு ஏற்படும்.
இந்த மூன்று உத்திகளிலும் ஃபண்ட் மேனேஜர்கள் அதிகமாகப் பயன்படுத்துவது பார்பெல் மற்றும் புல்லட் உத்திகளைத்தான். ஏனெனில், இவை இரண்டும் குறிப்பிட்ட முதிர்வுக் காலங்களைக் கொண்டவையாக இருப்ப தால், ரிஸ்க்கும், வருமான மும் சிறந்த கலவையில் இருக்கின்றன. பத்திரச் சந்தையில், பத்திரங்களின் முதலீட்டுக் காலத்தை நீட்டிக்கும்போது அதிக வருமானம் தரக்கூடியவை யாக இருக்கின்றன. ஏனெனில், வட்டி விகித மாற்றங்கள், பேமென்ட் தவறுதல் போன்றவை சார்ந்து அதிக ரிஸ்க்கை முதலீட்டாளர்கள் எடுக்க முடியும்.
அதே சமயம், அரசு கடன் பத்திரங்களில் கிடைக்கக்கூடிய வருமானத்தை ஆய்வு செய்யும்போது, 1-8 வருடங் களில் முதிர்வு அடையக்கூடிய பத்திரங்கள் நல்ல வருமான வளர்ச்சியைத் தருகின்றன. 8 வருடத்தைத் தாண்டிய பத்திரங்களின் வருமானம் பெரிய வளர்ச்சியைத் தருவதில்லை. இதனால் பாண்டு மேனேஜர்கள் 8 வருட முதிர்வுகொண்ட பத்திரங்களில் அதிக கவனம் செலுத்துகின்றனர்!
தமிழில்: ஜெ.சரவணன்
(ஆய்வு தொடரும்)