
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு புதிய வருமான வரி முறையா, பழைய வருமான வரி முறையா - எது பெஸ்ட் என்பது உட்பட பல கேள்விகளைப் பலரும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான விளக்கம்...
இந்தியாவில் புதிய வருமான வரி முறை (Income Tax New Regime) 2020-21-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின்போது அறிமுகப் படுத்தப்பட்டது. அப்போது, வரிதாரர்கள் விருப்பத்துக்கேற்ப பழைய அல்லது புதிய வரி முறையில் எதை வேண்டுமானாலும்தேர்வு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பழைய வரி முறை என்பது வழக்கமான முறையாக (Default Tax Regime) இருந்தது. விருப்பப்படுகிறவர்கள் புதிய முறைக்கு மாறிக் கொள்ளலாம் என்று சலுகை அளிக்கப்பட்டது. பழைய வரி முறையில் வருமான வரிச் சலுகைக்கான முதலீடுகள் மற்றும் செலவுகளை செய்வது மூலம் 80சி உள்ளிட்ட பிரிவுகளின் மூலம் வரியைத் தவிர்க்க அல்லது குறைக்க முடியும்.
இந்த நிலையில், 2023, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் பட்ஜெட் 2023-24-ல் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்குக் கூடுதலாகச் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு புதிய வருமான வரி முறையா, பழைய வருமான வரி முறையா - எது பெஸ்ட் என்பது உட்பட பல கேள்விகளைப் பலரும் அடிக்கடி கேட்டு வருகிறார்கள். இந்தக் கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

இனி எல்லோரும் புதிய வருமான முறையைத்தான் தேர்வு செய்ய வேண்டுமா?
“2023-24 முதல் புதிய வருமான வரி முறை வழக்கமான வருமான வரி முறையாக (Default tax regime) மாற்றப்படுகிறது. ஆனால், பழைய வரி முறையும் நடைமுறையில் இருக்கும். வரிதாரர்கள் வரிச் சலுகை பெற விரும்பினால் பழைய முறையைப் பயன் படுத்தலாம்.”
2023-24-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரி முறையில் அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பில் (Basic Income Tax Exemption Limit) என்ன மாற்றம் நடந்திருக்கிறது?
“அடிப்படை வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் என்பது ரூ.3 லட்சமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிதாரருக்கு ரூ.2,500 வருமான வரி மிச்சமாகும். இந்த மாற்றம் பழைய வரி முறையில் இல்லை.”
புதிய வருமான வரி முறையில் வருமான வரி அடுக்கில் (Income Tax Slab) என்ன மாற்றம் நடந்திருக்கிறது?
“வருமான வரி 6 அடுக்குகளாக இருந் தது தற்போது 5 அடுக்காகக் குறைக்கப் பட்டுள்ளது. அதாவது, பழைய வரி முறையில் 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30% என இருந்தது; இது தற்போது 5%, 10%, 15%, 20%, 30% என மாற்றப் பட்டுள்ளது. வருமான வரி விதிப்பில் 25% என்பது நீக்கப்பட்டி ருப்பதால் ஓர் அடுக்கு குறைந்திருக்கிறது. அதே நேரத்தில், வரி விகிதமும் குறைந்திருக்கிறது. (பார்க்க அட்டவணை 1).”

புதிய வரி முறையில் செய்யப் பட்ட மாற்றங்களால் 2023-24-ல் வருமான வரி குறையுமா?
“கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது மாற்றப்பட்ட புதிய வரி முறையில் மொத்த வரி குறையும். கடந்த ஆண்டு ஒவ்வொரு ரூ.2.5 லட்சத்துக்கும் வரி விகிதம் அதிகரித்து வந்தது (ரூ.2.5 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7.5 லட்சம்… என). 2023-24-ல் ஒவ்வொரு ரூ.3 லட்சத்துக்கும் (ரூ.3 லட்சம், ரூ.6 லட்சம், ரூ.9 லட்சம்… என) வரி விகிதம் மாற்றப் பட்டுள்ளது. (அட்டவணை 2 மற்றும் 3-ஐ பார்க்கவும்).”
2023-24-ம் ஆண்டில் புதிய வருமான வரி வரம்பில் வரிக்கழிவு எவ்வளவு கிடைக்கும்?
“2023-24-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரி முறையில் முக்கியமான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022-23-ம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்குள் வருமானம் இருந்தால் 87A பிரிவின்கீழ் வரித் தள்ளுபடி (87A Tax Rebate) ரூ.12,500 அளிக்கப் பட்டது. 2023-24-ம் ஆண்டில் ரூ.7 லட்சத்துக்குள் வருமானம் இருந்தால் 87A பிரிவின்கீழ் ரூ.25,000 வரித் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
தற்போது ஒருவர் பழைய வரி முறையைத் தேர்வு செய்தால், 2023-24-ம் நிதி ஆண்டில் அவரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்கும்பட்சத்தில், 87A பிரிவின்கீழ் 12,500 ரூபாய்தான் வரித் தள்ளுபடி கிடைக்கும்.”
பழைய மற்றும் புதிய வருமான வரி முறையில் இருந்து ஒருவர் எப்போதெல்லாம் மாறலாம்?
“வணிக வருமானம் (Business income) எதுவும் இல்லை எனில், தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்து கூட்டுக் குடும்பத்தினர் (HUF) பழைய அல்லது புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக் கலாம். ஒரு முறையிலிருந்து இன்னொரு முறைக்கு எப்போது வேண்டுமானாலும் எத்தனை ஆண்டுகளுக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
வணிக வருமானம் கொண்ட தனிநபர் அல்லது வணிக வருமானம் கொண்ட பிரிக்கப்படாத இந்து கூட்டுக் குடும்பத்தினர் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ஆனால், அவர்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே மீண்டும் பழைய வரிமுறைக்கு மாற அனுமதிக்கப்படுவார்கள். அதன்பிறகு அவர்கள் வாழ்நாள் முழுக்க பழைய வரி முறையிலேயே வரிக் கணக்கைத் தாக்கல் செய்துவர வேண்டும்; புதிய முறைக்கு மாற முடியாது.”

பழைய மற்றும் புதிய வரி முறை - இந்த இரண்டில் ஒன்றை எப்போது தேர்வு செய்யலாம்?
“ வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது, பழைய முறை, புதிய முறை என எதை வேண்டு மானலும் தேர்வு செய்துகொள்ளலாம். அதற்குமுன், வருமான வரியை, கணக்கீட்டு கால்குலேட்டரைப் (http://bit.ly/3RApDqA) பயன்படுத்தி, எதில் குறைவாக கட்ட வேண்டியிருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம்.”
புதிய முறையில் நிலைக்கழிவு (Standard Deduction) சலுகை உண்டா?
“பழைய வரி முறையில் நிலைக்கழிவு (Standard Deduction) ரூ.50,000 அனுமதிக்கப் பட்ட நிலையில், புதிய வருமான முறையில் அந்தச் சலுகை இல்லாமல் இருந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டு முதல் புதிய வருமான வரி முறையிலும் சம்பளதாரர்கள், ஓய்வூதிய தாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.”
புதிய வரி முறையில் வயதுக்கேற்ப வரிச் சலுகை உண்டா?
“பழைய வரி முறையில் வயதுக்கேற்ப (60 வயது வரை - ரூ.2.5 லட்சம், 60-80 வயது வரை - ரூ.3 லட்சம், 80 வயதுக்கு மேல் - ரூ.5 லட்சம்) அடிப்படை வருமான வரம்பில் வரிச் சலுகை அளிக்கப்படுவது மாதிரி, புதிய வருமான வரி முறையில் அளிக்கப்படவில்லை. அனைவருக்கும் அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.3 லட்சம் ஆகும்.”
பழைய வரி முறையைத் தேர்வு செய்வதாக நிறுவனத்திடம் சொல்லாத நிலையில், நிறுவனமானது சம்பளத்தில் இருந்து எப்படி வருமான வரியைப் பிடிக்கும்?
“2023 ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிறுவனமானது புதிய வருமான வரி முறையில் எவ்வளவு வருமான வரியைக் கட்ட வேண்டும் என்பதைக் கணக்கிட்டு, வருமான வரியைப் பிடிக்கத் தொடங்கும். ஆண்டின் ஆரம்பத்தில் எந்த முறை தேர்வு செய்யப்பட்டிருக் கிறதோ, அதுதான் நிதி ஆண்டு இறுதிவரை இருக்கும்; இடையில் மாற்ற முடியாது.
ஆனால், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் போது, பழையது, புதியது என எந்த வரி முறையை வேண்டு மானாலும் தேர்வு செய்து வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய லாம். எந்த முறை லாபகரமாக இருக்கிறதோ அதாவது, குறைவாக வரி வருகிறதோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.”
புதிய வருமான வரி முறையில் எதற்கெல்லாம் வருமான வரித் தள்ளுபடிகள், வரி விலக்குகள் கிடையாது?
“கிட்டத்தட்ட 70 வகையான வரித் தள்ளுபடிகள், வரி விலக்குகள் புதிய முறையில் கிடையாது. குறிப்பாக, 80சி பிரிவின்கீழ் வரும் முதலீடுகள், வீட்டு வாடகைப்படி, வீட்டுக் கடன் வட்டி, விடுமுறை பயணச் செலவு உள்ளிட்டவைக்கு வரி விலக்கு கிடையாது. மேலும், தொழில் வரியையும் (Professional Tax) சம்பளத்தில் கழிக்க முடியாது.”

புதிய வருமான வரி முறையில் எவற்றுக்கெல்லாம் வருமான வரி விலக்கு உண்டு?
“2023-24-ம் ஆண்டு முதல் புதிய வரி முறையில் நிலைக் கழிவு ரூ.50,000 உண்டு. மேலும், டயர்-I என்.பி.எஸ் கணக்கில் நிறுவனத்தின் பங்களிப்பை பிரிவு 80CCD (2)-யின்கீழ் பணியாளர் அவரின் சம்பளத்தில் கழித்துக்கொண்டு மீதமுள்ள தொகைக்கு வரியைக் கட்டினால் போதும்.
நிதி ஆண்டில் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் அதிகபட்சம் 10% வரை இப்படி வரிச் சலுகை பெற முடியும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இது 14 சதவிகிதமாக அனுமதிக்கப்படுகிறது.
புதிய வரி முறையில் மாற்றுத் திறனாளி எனில், போக்கு வரத்துப்படி அனுமதிக்கப்படுகிறது. இது தவிர, விருப்ப ஓய்வின்போது பெறும் தொகை (10(10C)), பணிக்கொடை (10(10)), விடுப்புப் பணம் (10(10AA)) ஆகியவை வரி விலக்கு பெறுகிறது.
ரூ.5,000 வரைக்கும் பெறும் அன்பளிப்புக்கு வரிச் சலுகை உண்டு. புதிய வருமான வரி முறையில் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆண்டுக்கு ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம்.”
புதிய வருமான வரி முறை யாருக்கெல்லாம் ஏற்றதாக இருக்கும்?
“மொத்த வருமானம் ரூ.7 லட்சத்துக்குள் இருப்பவர் களுக்கு புதிய வரி முறைதான் லாபகரமாக இருக்கும்.
மொத்த வருமானம் ரூ.7 லட்சம் முதல் 8.25 லட்சம் வரைக்கும் உள்ளவர்கள் 80C பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம் வரை முதலீடுகள் செய்திருந்தாலே பழைய முறை லாபகரமாக இருக்கும்.
ரூ.8.25 - ரூ.9 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு 80C பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம், வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம், வங்கி சேமிப்பு வட்டி வருமானம் ரூ.10,000 இருந்தால் பழைய முறை லாபமாக இருக்கும்.
ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் உள்ளவர்களுக்கு 80C பிரிவின்கீழ் ரூ.1.5 லட்சம், வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம், வங்கி சேமிப்பு வட்டி வருமானம் ரூ.10,000, 80D பிரிவின்கீழ் ரூ.25,000 மருத்துவக் காப்பீடு பிரீமியம், 80CCD(1B) பிரிவின்கீழ் என்.பி.எஸ் ரூ.50,000 முதலீடு, ரூ.2 லட்சம் வீட்டுக் கடன் வட்டி கொண்டவர் களுக்கு பழைய வரி முறை லாபகரமாக இருக்கும்.
பொதுவாக, ரூ.7 லட்சத்துக் குள் இருப்பவர்களுக்கும் ரூ.15 லட்சத்துக்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கும் புதிய முறை லாபகரமாக இருக்கும். குறிப்பாக, வீட்டுக் கடன் இல்லாதவர்கள், அதிக சம்பளம் வாங்கு பவர்களுக்கு புதிய வருமான வரி முறை லாபகரமாக இருக்கும்.”
வரிச் சலுகை இல்லாத நிலையில் எந்தெந்த முதலீட்டைத் தொடரலாம்?
சுந்தரி ஜகதீசன்
* இதுவரை பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்டில் (PPF) சேமித்து வந்தவர்கள் அதைத் தொடர்வது நல்லது. இதில் அதிக அளவு பணத்தை சேமிக்க முடியாவிட்டாலும், பி.பி.எஃப் கணக்கை உயிரோட்டத்துடன் வைத்துக்கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.500 வீதம் சேமித்து வந்தாலே போதும்.
* செல்வமகள் சேமிப்புத் திட்டத்திலும் வருடத்துக்கு ரூ.250 சேமிப்பது நல்லது. பாதியில் நிறுத்த இயலாத இந்தக் கணக்குகளில் வருடத்துக்கு குறைந்தபட்சத் தொகையாவது கட்டவில்லை எனில், அபராதம் கட்ட நேரிடும். மேலும், மேற்சொன்ன இந்த இரண்டு முதலீடு களில் இருந்து கிடைக்கும் வட்டிக்கும், கடைசியில் வெளிவரும் முதிர்வுத் தொகைக்கும் வரி விதிப்பு கிடையாது (இன்று வரை).
* இ.எல்.எஸ்.எஸ். முதலீடுகளைத் தொடர்வது நம் முதலீட்டுக்கு பல்வகைப்படுத்துதலைத் தருவதுடன், சந்தை தரக்கூடிய உயர் வருமானத்தையும் தரவல்லது. இதன் லாக்-இன் பீரியட் மூன்று வருடங்கள் மட்டுமே. இதில் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்தாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. மேலும், இதில் கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கு ரூ.1 லட்சம் வரை வரி விதிப்பு இல்லை.
* வரிவிலக்கு இல்லை என்றாலும் மெடிக்கல் இன்ஷூரன்சைத் தொடர்வது நமது முதலீட்டின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதே போல, இதுவரை முதலீடு செய்த எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி போன்ற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை இன்ஷூரன்ஸ் ஏஜென்ட் உதவியுடன் பரிசீலித்து, அதிக நஷ்டமின்றி வெளியேறக்கூடிய பாலிசிகளை சரண்டர் செய்யலாம். அவற்றுக்குப் பதில், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது குறைந்த செலவில் அதிக கவரேஜ் பெற உதவும்.
* நேஷனல் பென்ஷன் ஸ்கீம் டயர் 2 திட்டத்தில் வட்டிக்கு மட்டுமல்லாது, முதிர்வின்போது கிடைக்கும் மொத்தத் தொகைக்கும் வரிப் பிடித்தம் உண்டு என்பதால், இதில் வரிச் சலுகைக்காக ரூ.50,000 சேமித்து வருபவர்கள் இதிலிருந்து வெளியேறுவது பற்றி யோசிக்கலாம்.

மார்ச் 31-க்குள் அவசரப்பட்டு இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்காதீர்கள்!காரணம் என்ன?
எஸ்.ஶ்ரீதரன், இன்ஷூரன்ஸ் நிபுணர்
‘‘ ‘வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் ரூ.5 லட்சத்துக்குமேல் பிரீமியம் கட்டி இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி எதுவும் கட்டத் தேவை இல்லை. எனவே, உடனடியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுங்கள்’ என சில ஏஜென்டுகள் தவறாக இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விற்று வருகிறார்கள்.
இதற்குமுன் யூலிப் பாலிசியில் ரூ.2.5 லட்சத்துக்குமேல் பிரீமியம் கட்டினால் அதற்கு வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு எண்டோவ்மென்ட் பாலிசியிலோ, ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசிகளிலோ கட்டும் பிரிமீயம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் வந்திருக்கும் அறிவிப்பை முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த பாசிட்டிவ்வான விஷயம் போல எடுத்துச் சொல்கிறார்கள் சில இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள். இதில் உண்மை இல்லை. இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்கள் முதலில் அது ஒரு முதலீடு அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்ஷூரன்ஸ் என்பது பாலிசிதாரர் இல்லாத நிலையில், அவரின் குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காகச் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடு மட்டுமே. தவிர, எண்டோவ்மென்ட் பாலிசிகள் மூலம் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பில்லை. அவற்றின் மூலம் அதிகபட்சம் 5% - 6% வருமானம் மட்டுமே கிடைக்க வாய்ப்புண்டு. தற்போது பணவீக்கமே 6% - 7% இருக்கும் நிலையில், அதைவிடக் குறைவான வருமானம் தரும் ஒரு திட்டத்தில் ஏன் பணத்தைப் போட வேண்டும்? தவிர, இன்ஷூரன்ஸ் திட்டத்தில் போடப்படும் பணம் குறைந்தது ஐந்து ஆண்டுக் காலத்துக்குத் திரும்ப எடுக்கவே முடியாது.
இந்த உண்மையை எல்லாம் பெரும்பாலான இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள் சொல்வதே இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியை விற்பதன் மூலம் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால், பல விஷயங்களை மறைத்து, அவர்கள் பாலிசிகளை விற்றுவிடுகிறார்கள். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கும்போது, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.’’
- சு.உ.சவ்பாக்யதா