
சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.33 கோடியாக அதிகரித்துள்ளது...
அரசுசாராத் துறைகளில் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme - NPS) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் முதலீடு செய்துவருகிறார்கள்.
2023 மார்ச் நிலவரப்படி, இந்தத் திட்டங்களில் கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி நிர்வகிக்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட 22% அதிகரித்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் கார்ப்பரேட் மற்றும் ஆல் சிட்டிசன் மாடல் வகைகளில் 10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் சேர்ந்திருக் கிறார்கள். ஒரு நிதியாண்டில் அரசு அல்லாத பிரிவுகளில் 10 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் சேர்வது இதுவே முதல் முறை ஆகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2.11 கோடியாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 6.33 கோடியாக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றுக்குப் பின் சிறு வணிகர் களுக்கு இடையே ஏற்பட்ட ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வுதான் இந்த அதிக வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் எனப்படுகிறது.
என்.பி.எஸ் திட்டத்தில் சேர்வதற்கான நடைமுறை இன்னும் எளிதாக்கப்படும் பட்சத்தில் இன்னும் பல கோடி பேர் இந்தத் திட்டத்தில் சேருவார்கள் என்பது நிச்சயம். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் விரைவில் எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு!