“இந்தியா @ 40 டிரில்லியன் டாலர்!” கணக்குப் போடும் அம்பானி... கவனிக்க வேண்டிய பங்குகள்!

கவர் ஸ்டோரி
சமீப காலமாக இந்திய பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து பல தரப்பட்ட செய்திகள் வந்தவண்ணம் இருக் கின்றன. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி குறித்த அச்சம் நிலவுகிறது. ஆனால், இந்தியா அதனால் பெரிய பாதிப்புக்குள்ளாது என்று நிபுணர்கள் பலரும் கூறுகிறார்கள். இந்த நிலையில், 2047-ல் இந்தியா முன்னணி இரண்டு பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்போது 3.3 டிரில்லியன் டாலர் முதல் 3.5 டிரில்லியன் டாலர் எனும் அளவில் இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2030-க்குள் இது 6 டிரில்லியன் டாலராக உயரும் என ஏற்கெனவே கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடம் உரை நிகழ்த்திய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியா வின் பொருளாதாரம் 2047-ல் 40 டிரில்லியன் டாலராக உயரும் திறனுடன் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். இது பலதரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் முன்னணித் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் ஜாம்பவான் சொல்லும் இந்தக் கணக்குப்படி பார்த்தால், இன்னும் 25 ஆண்டு களில் இந்தியப் பொருளாதாரம் 13 மடங்கு வளர்ச்சியை எட்டப்போகிறது. என்ன ஒரு பிரமிப்பான வளர்ச்சி!
முகேஷ் அம்பானி கணிக்கும் இந்த வளர்ச்சி சாத்தியமா, அவர் குறிப்பிடும் துறைகளின் போக்கு எப்படி இருக்கும், அதில் என்னென்ன பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘முகேஷ் அம்பானி குறிப்பிட்ட 2047-ம் ஆண்டில் இந்தியா 100-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும். அப்போது இந்தியப் பொருளா தார வளர்ச்சி 40 டிரில்லியன் டாலரை எட்டுவது மிக முக்கியமான சாதனையாக இருக்கும். இப்படியான வளர்ச்சி சாத்தியமாகும் போது ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் வாய்ப்புகளை அள்ளித் தரும். அதாவது, சந்தை சார்ந்து இயங்குகிற ஒவ்வொரு முதலீட்டாளரும் இந்தியாவின் 40 டிரில்லியன் டாலரை நோக்கிய பயணத்தில் நல்ல வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
எனவே, இந்த வளர்ச்சியில் ஜொலிக்கப்போகும் துறைகள் என்னென்ன, என்னென்ன நிறுவனப் பங்குகள் வளர்ச்சியின் பலனைப் பெறப் போகின்றன என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்வது முதலீட்டு முடிவுகளை எடுக்க பயனுள்ளதாக இருக்கும்.
இந்த வளர்ச்சியில் என்னென்ன துறைகள் சிறப்பான எதிர்காலத்துடன் இருக்கும் என்பதை முகேஷ் அம்பானி தன் உரையிலேயே குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடும்போது இந்தியாவின் பொருளாதார ஆட்டத்தையே தீர்மானிக்கும் மூன்று புரட்சிகரமான துறைகள் என்று கூறியுள்ளார். அவை, சூழலுக்கு உகந்த சுத்தமான ஆற்றல், உயிர் எரிபொருள் ஆற்றல், டிஜிட்டல் புரட்சி ஆகிய மூன்று துறைகள்தான். இந்தத் துறைகள் பற்றியும் இந்தத் துறைகள் சார்ந்து எந்தெந்த நிறுவனப் பங்குகளைக் கவனிக்கலாம் என்பதையும் பார்க்கலாம்.

சூழலுக்கு உகந்த சுத்தமான ஆற்றல் (Clean Energy)
சுத்தமான ஆற்றல் என்பது மீண்டும் புதுப்பிக்கத்தக்க ஆற்ற லாகவும், பூஜ்ய அளவு கார்பன் வெளியீட்டைக் கொண்ட சூழலை மாசுபடுத்தாத ஆற்றல் என்றும் கூறலாம். சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய, எந்தவித பக்க விளைவுகளையும் உண்டாக்கக் கூடிய, கார்பன் டை ஆக்சைடு போன்ற பசுமை இல்லை வாயுக்களை வெளியிடாமல் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய வகையான ஆற்றலைத்தான் சுத்தமான ஆற்றல் என்று குறிப்பிடு கிறார்கள். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் எனப் பல பிரச்னைகளை உலகம் சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில், சுத்தமான ஆற்றல் உற்பத்தியின் சாத்தியங்களை அதிகப் படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
சுத்தமான ஆற்றல் உற்பத்திக்கான முன்னெடுப்புகளே உலகம் சந்திக்கவிருக்கிற ஆபத்துகளில் இருந்து பூமியைக் காப்பாற்றும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில், காற்றாலை மின்சக்தி, நீர்மின் நிலையம், சோலார் எனப்படும் சூரிய ஆற்றல் மூலமான ஆற்றல் உற்பத்தி ஆகியவை சுத்தமான ஆற்றலுக்கான ஆதாரங்களாக உள்ளன. சுத்தமான ஆற்றல் உற்பத்தியின் எதிர்காலமும் பிரகாசமாகவே இருக்கிறது. ஏனெனில், சமீப ஆண்டுகளில் புதிதாக நிறுவப்பட்ட புதைபடிவ எரிபொருள் மற்றும் அணுசக்தி ஆற்றல் உற்பத்தி நிலையங்களின் திறனைக் காட்டிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான நிலையங் களின் உற்பத்தித்திறன் அதிகமாக நிறுவப்பட்டுள்ளது.
உலக அளவிலான மொத்த மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மின் உற்பத்தி மூன்றில் ஒரு பங்கு எனும் அளவில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த மாற்றத்துக்கு ஓர் உதாரணம்: இங்கிலாந்து 2022 நவம்பர் மாதத்துடன் 30 மாதங்கள் முழுவதுமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மின்சாரத்தையே பயன்படுத்தியிருக்கிறது. உலக அளவில் இப்படியான ஒரு நிகழ்வு நடப்பது இதுவே முதன்முறை.
அந்த வகையில் உலக நாடுகள் புதைபடிவ எரி பொருள் ஆற்றல் உற்பத்தியி லிருந்து புதுப்பிக்கத்தக்க சுத்தமான ஆற்றல் உற்பத்தி மாறிவருவதால், இந்தத் துறை வளர்ச்சிக்கான வாய்ப்பு களைப் பிரகாசமாகக் கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாடு, மின் சேமிப்பு எனப் பல்வேறு வகைகளில் இந்தத் துறையின் வளர்ச்சி இருக்கும். அதே சமயம், பொருளாதாரம் சார்ந்தும் தனிநபர் ரீதியிலும் பொதுவிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையின் பங்களிப்பு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, மின் பயன்பாட்டில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. கூடவே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியிலும் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ளது. 2022 இறுதிக்குள் 175 ஜிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலமான மின் உற்பத்தித் திறனை எட்டும் இலக்கை இந்தியா நிர்ணயித் துள்ளது.
2030-ல் இந்த இலக்கு 500 ஜிகாவாட் அளவுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. உலகி லேயே மிகப் பெரிய இலக்கு இது. இதற்கான முன்னெடுப்பு களில் அடுத்த 8 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகமான முதலீடு கள் இந்தத் துறையில் செய்யப் பட சாத்தியங்கள் உள்ளன. ஏற்கெனவே இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலமான மின் உற்பத்தி திறன் 396% வளர்ச்சி கண்டி ருக்கிறது. இதில் சோலார் மூலமான மின் உற்பத்தி திறன் 19.3 மடங்கு உயர்ந்து, ஜூன் 2022 நிலவரப்படி, 56.6 ஜிகாவாட் அளவுக்கு உள்ளது. எனவே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் சிறப்பான வளர்ச்சியை எட்டும் கவனிக் கத்தக்க நிறுவனங்களாக டாடா பவர், போரோசில் ரினிவபிள், ஜே.எஸ் டபிள்யூ எனர்ஜி, அதானி கிரீன் எனர்ஜி, ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் ரினிவபிள் எனர்ஜி, ஐனாக்ஸ் விண்ட் ஆகியவை உள்ளன.
டாடா பவர்: இந்நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நிறுவனமாக விளங்கு கிறது. முழுவதுமாக புதுப்பிக் கத்தக்க ஆற்றல் மூலமாக மட்டுமே மின் உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு இயங்கி வருகிறது. தற்போது இந்த நிறுவனம் தெர்மல், ஹைட்ரோ மற்றும் பிற ஆதாரங்கள் மூலமாக 12,800 மெகாவாட் அளவுக்கான மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் கணக்கீட்டை ஆராய்ந்து பார்க்கையில், மின் உற்பத்தி மூலம் மட்டுமே 37% வருவாயை ஈட்டுகிறது. இவற்றில் 16% வருவாய் காற்றாலை, சோலார் ஆகியவற்றின் மூலமாக உற்பத்தி ஆகும் மின் ஆற்றல் மூலமாகக் கிடைக்கிறது. 46% வருவாய் மின் விநியோகம் மற்றும் மின்கடத்தல் மூலமாக ஈட்டுகிறது.
ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி: ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் ஒரு நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி இந்தியா முழுவதிலும் 4,559 மெகாவாட் அளவு மின் உற்பத்தித்திறன் கொண்ட 6 நிலையங்களை வைத்துள்ளது. மேலும், மூன்று மின் நிலையங்களை கூடிய விரைவில் அமைக்கும் திட்டத்தையும் வைத்துள்ளது. இதன்மூலம் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமான மின் உற்பத்தித் திறனை இரு மடங்கு உயர்த்தி 10 ஜிகாவாட் அளவுக்குக் கொண்டு வர இலக்கு வைத்திருக்கிறது. மொத்தமாக 70% மின் உற்பத்தியைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள் மற்றும் ஹைட்ரோ ஆதாரங்கள் மூலமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனம் 79% வருவாயை இந்திய பிசினஸிலும், 21% வருவாயை வெளி நாடுகளிலிருந்தும் ஈட்டுகிறது.
ஸ்டெர்லிங் அண்ட் வில்சன் ரினிவபிள் எனர்ஜி: இந்த நிறுவனம் சோலார் மின் உற்பத்தி சார்ந்து பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அனைத்தையும் செயல்படுத்தும் முழுமையான நிறுவன மாக விளங்குகிறது. இந்தியா மட்டுமல்லா மல், வெளிநாடுகளுக்கும் தனது சேவைகளை வழங்கிவருகிறது. சோலார் மின் உற்பத்தி திட்டங்களின் செயல் பாடு மற்றும் நிர்வகிப்பு சார்ந்த தொழிலிலும் ஈடுபட்டுள்ளது. முக்கிய மாக, இந்த நிறுவனம் சோலார் சார்ந்த பொறி யியல், கொள்முதல் மற்றும் கட்டுமானத்தில் சந்தை லீடராக விளங்கு கிறது. இதுவரை 10,100 மெகாவாட் திறன் கொண்ட 250 சோலார் திட்டங்களை இந்த நிறுவனம் செயல் படுத்தி வருகிறது. நிறுவனத்தின் 95% வருவாய் அதன் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானப் பிரிவிலிருந்து ஈட்டு கிறது. 5% வருவாயை செயல்பாடு மற்றும் நிர்வகிப்புப் பிரிவிலிருந்து ஈட்டுகிறது.

உயிர் எரிபொருள் ஆற்றல்...
உயிர் எரிபொருள் ஆற்றல் என்பது இயற்கையான, உயிரியல் சார்ந்த ஆதாரங்களிலிருந்து உருவாக்கப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகும். தாவரங்கள், விலங்குகள் மற்றும் இவற்றின் உபபொருள்கள் ஆகியவற்றிலிருந்து இந்த வகை ஆற்றல் கிடைக்கிறது. நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் நிலப்பரப்புகள், கழிவு மண்டலங்கள் இந்த வகை ஆற்றலுக்கான ஆதாரங்களாக மாறியிருக்கின்றன. இவை வெப்ப ஆற்றல், எரிவாயு மற்றும் எரிபொருள் ஆகிய ஆற்றல் வகைகளை வழங்கும் நிலையான ஆதாரங்களாக உள்ளன. உயிர் எரிபொருள் ஆற்றல் பயன்பாடானது வேளாண்துறை சார்ந்து மின்தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். மேலும், வேளாண் பரப்புகளில் உருவாக்கப்படும் தாவர மற்றும் விலங்குக் கழிவுகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவியாக இருக்கும்.
வேளாண்மை, தோட்டம், தொழில்துறை, வனப் பகுதி, நகர்ப்புறம் என அனைத்திலும் மிகப்பெரிய அளவில் உயிரி கழிவுகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த ஆற்றல் பயன்பாட்டில் 32% உயிரி கழிவுகள் மூலமாக உற்பத்தி செய்யப்படும் ஆற்றலைப் பயன் படுத்துவதாகவும், 70% மக்கள் தொகை ஏதோவொரு வகையில் உயிரி எரிபொருள் ஆற்றலைச் சார்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் உயிரி எரிபொருள் ஆற்றல் ஆதாரங்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்தாமல்தான் உள்ளன. இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்ய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கச்சா எண்ணெயைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க உயிரி எரிபொருள் ஆதாரங்களில் கவனம் செலுத்திவருகிறது. கச்சா எண்ணெயின் விலை ஏற்றம், கச்சா எண்ணெய் ஆற்றலைப் பயன்படுத்தும் வாகனங் களால் ஏற்படும் மாசு என அனைத்தையும் இதனால் சரி செய்ய முடியும். மேலும், இதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். முக்கியமாக இந்தியா முழுமையான கிரீன் எனர்ஜி இலக்கை எட்டுவதற்கும் வழிவகுக்கும்.
இந்தப் பிரிவில் கவனிக்க வேண்டிய பங்குகள் ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ், ஐநாக்ஸ் விண்ட் ஆகியவை உள்ளன.
ப்ராஜ் இண்டஸ்ட்ரீஸ்: இந்நிறுவனம் உலக அளவில் உயிரி எரிபொருள் ஆற்றல் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் வெற்றிகரமான முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் உயிர் எரிபொருள் ஆற்றல், உயர்தர தூய்மையான நீர், தொழிற் சாலை கழிவு நீர் சுத்திகரிப்பு, புரூவரீஸ், இவற்றுக்கான உப கரணங்கள் என அனைத்துக்கும் நிலையான தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவன மாக விளங்குகிறது. புனேவில் தலைமை அலுவலகத்தை வைத்துள்ள இந்நிறுவனம், உலகம் முழுக்க தன் தொழிலை விரிவுபடுத்தியுள்ளது.
ஐநாக்ஸ் விண்ட்: காற்றாலை ஆற்றல் உற்பத்தியில் முன்னணி ஒருங்கிணைந்த நிறுவனமாக விளங்குகிறது. அகமதாபாத் அருகில் காற்றாலைக்கான பிளேட், ட்யூப்லர் டவர் ஆகிய வற்றின் உற்பத்தி மையத்தை வைத்துள்ளது. இமாசலப் பிரதேசம் உனாவில் ஹப் மற்றும் நாசெல் உற்பத்திக் கான நிலையத்தை வைத் துள்ளது.
ஐநாக்ஸ் விண்ட் நிறுவனம் உயர்தரமான, நவீன தொழில் நுட்பம் கொண்ட, நம்பகமான தயாரிப்புகளை வழங்குவதை உறுதி செய்கிறது, அதே சமயம், போட்டியாளர்களைவிட குறைவான விலையிலும் வழங்குகிறது. இந்தியாவின் குறைவான காற்று வேகம் உள்ள இடங்களுக்கான காற்றாலை தயாரிப்புகள் மூலம் 6% அளவுக்கு இந்த நிறுவனம் மின் ஆற்றல் உற்பத்தி செய் கிறது. இது போட்டியாளர் களின் தயாரிப்புகளைவிடவும் 18% அதிகம் ஆகும்.
டிஜிட்டல் துறை...
முகேஷ் அம்பானி குறிப் பிட்ட மூன்று துறைகளில் முக்கியமான துறை டிஜிட்டல் துறை. இந்தியா டிஜிட்டலில் மிக வேகமாக வளரும் அதே நேரத்தில் மிகப்பெரிய சந்தை யாகவும் விளங்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங் களுக்கான செலவினங்களில் உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய வற்றுக்கு அடுத்து நான்காம் இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 50 கோடி இணையப் பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரு கின்றன. தொழில் நிறுவனங் கள், தனிநபர்கள் என அனைத்துத் தரப்பும் தகவல் தொடர்பு, பரிமாற்றம், ஆட்டோமேஷன் மற்றும் நுண்ணறிவு எனப் பல வகைகளில் டிஜிட்டல் வசதி களைப் பயன்படுத்த தொடங்கிவிட்டோம்.
டிஜிட்டல் நுகர்வு அதிக முள்ள மிகப் பெரிய சந்தை யாக இந்தியா இருப்பதால், அதற்கேற்றவாறு முன்னணி வளர்ந்த நாடுகளைவிடவும் மிக வேகமாக இந்தியா மாற்றங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பு 2030-ல் 80 பில்லியன் டாலர் அளவுக்கு உயரும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், ஒப்பீட்டளவில் டிஜிட்டல் பயன்பாட்டின் பரவலாக்கம் என்பது இந்தியப் பகுதிகளில் பெரிய ஏற்றத்தாழ்வுகளுடன் தான் இருக்கிறது. உதாரணமாக, மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதத்தினர் மட்டுமே இணையத் தைப் பயன்படுத்துகிறார்கள். குறைந்த வருமானம் உள்ள, நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் இன்னமும் போதுமான இணைய சேவை கட்டமைப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதிகளில் மருத்துவம், நிதி சேவை மற்றும் சில்லறை வர்த்தகம் என அனைத்துப் பிரிவுகளிலும் பெரிய இடைவெளி யைப் பார்க்க முடிகிறது.
இதை சமன் செய்யும் நோக்கில் மத்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே, இந்தப் பிரிவில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. டிஜிட்டல் புரட்சியை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், ஐ.ஓ.டி என்கிற இணையம் சார்ந்த சேவைகளில் முன்னேற்றம் காண்பதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். இதன் பின்னணியில்தான் நிஃப்டி டிஜிட்டல் இண்டெக்ஸ் கடந்த ஓராண்டில் 54% அளவுக்கு வளர்ச்சி கண்டது.
இந்தத் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் வளர்ச்சியின் வாய்ப்புகளை சுவீகரித்துக்கொண்டு வரும் ஆண்டுகளில் சிறப்பாகப் பலனடையும். அந்த வகையில், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், ஹெச்.சி.எல், விப்ரோ, ஸொமேட்டோ, பாலிசி பஜார், பார்தி ஏர்டெல், எம்ஃபாசிஸ், ஹனிவெல் ஆட்டோ மேஷன், எல்.டி.ஐ, பேடிஎம் ஆகியவை முக்கியமாகக் கவனிக்க வேண்டிய பங்குகளாக உள்ளன. அதாவது, நிதி சார்ந்த சேவைகள், ஆட்டோமேஷன் தீர்வுகள், உணவு விநி யோகம் மற்றும் கிளவுட் கிச்சன் சேவைகள், டிஜிட்டல் தகவல் தொடர்பு, ஓடிடி ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்கள் என்ற வகையில் பங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் பங்கெடுத்துக் கொண்டு தனிநபர்களும் வளர்ச்சி அடையும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் ஆச்சர்யத்தை அனுபவிக்க முதலீட்டாளர்கள் தயாராக இருங்கள்!’’