கட்டுரைகள்
Published:Updated:

பணவீக்கத்தை மிஞ்சும் வட்டி வருமானம்... மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!

மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!

ஒருவர் முதலீட்டை மேற்கொள்ளும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அந்த வட்டி அவருக்கு இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலமான ஐந்து ஆண்டுகளுக்கும் மாற்றம் இல்லாமல் இருக்கும்

கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை நிலையான வருமானம் தரும் முதலீட்டுத் திட்டங்களான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்கள், தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகியவற்றின் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் வருமானம் எதுவும் இல்லாத, அதேசமயம், வட்டி போன்ற நிலையான வருமானத்தை முழுக்க முழுக்க நம்பியிருந்த மூத்த குடிமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். இந்நிலையில் பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த ஆர்.பி.ஐ (இந்திய ரிசர்வ் வங்கி) வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வரவே, வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கும் வட்டி உயர்த்தப்பட்டது. இதனால், மூத்த குடிமக்கள் சிறிது சந்தோஷப்பட்டனர். என்றாலும், வங்கிகளின் டெபாசிட்க்கு, டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் ரூ. 5 லட்சம் வரைதான் உத்தரவாதம் என்பதால் அதில் அதிக தொகையைப் போட வயதானவர்கள் பயப்பட்டார்கள்; பயப்படுகிறார்கள்.

மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!
மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்!

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-24 மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தபோது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS - Senior Citizens Savings Scheme) ரூ. 15 லட்சமாக இருந்த முதலீட்டு உச்ச வரம்பை, ரூ. 30 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். இது மூத்த குடிமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான அறிவிப்பு.

மூத்த குடிமக்களுக்குச் சேமிப்புத் திட்டம் என்பது ஐந்தாண்டுக் கால வைப்பு நிதி. அதன் பிறகு தேவைப்பட்டால் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கும் வசதியும் உண்டு. இது மத்திய அரசின் திட்டம் என்பதால், முதலீடு மற்றும் வட்டி வருமானம் 100% பாதுகாப்பானது. மேலும், இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரிச் சலுகை பெற முடியும். அதேநேரத்தில் வட்டி வருமானத்துக்கு, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

கட்டுரையாளர் :  சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com
கட்டுரையாளர் : சிவகாசி மணிகண்டன், நிதி ஆலோசகர், Aismoney.com

சமீபத்தில் இந்தத் திட்டத்துக்கான ஆண்டு வட்டி 8% என்பதிலிருந்து 8.2% என அதிகரிக்கப்பட்டுள்ளது. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி மாறும் என்றாலும், இந்த வட்டியானது வங்கி வட்டியைவிட, தபால் அலுவலகத்தின் இதர திட்டங்களையும்விட அதிகம். இந்தத் திட்டத்தில் வங்கிகள் மூலமோ தபால் அலுவலகம் மூலமோ முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்திற்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகும் என்றாலும் இந்தத் திட்டத்தில் சேரும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அதுவே ஐந்தாண்டுகளுக்கும் வழங்கப்படும். அந்த வகையில் இப்போது 8.2% வட்டியில் சேர்ந்தால், அது அடுத்த ஐந்தாண்டுகளுக்குத் தொடரும். வட்டி வருமானம், ஆண்டில் மார்ச், ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!
மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!

தபால் அலுவலக மாத வருமானத் திட்டம்..!

இத்திட்டத்தில் (Post Office Monthly Income Scheme - POMIS) 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றாலும், இதன் மூலம் மாதம்தோறும் நிலையான வட்டி வருமானம் கிடைத்துவருவதால் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இது ஐந்தாண்டு வைப்பு நிதி ஆகும். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் கணக்கை முடித்துக்கொள்ளலாம். இதுவும் மத்திய அரசின் திட்டம் என்பதால் முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு 100% உத்தரவாதம் உள்ளது. ஒருவருக்கான தனிக்கணக்கு (Individual Account), அதிகபட்சம் ரூ. 4.5 லட்சம்; இருவருக்கான இணைக்கணக்கு (Joint Account), ரூ. 9 லட்சம் முதலீடு செய்யலாம் என்று முன்னர் இருந்தது. மத்திய பட்ஜெட் 2023-24-ல் தனிக்கணக்கு உச்சவரம்பு ரூ. 9 லட்சம், இணைக்கணக்கு உச்சவரம்பு ரூ. 15 லட்சம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்துக்கான வட்டி சமீபத்தில் 7.1% என்பதிலிருந்து 7.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் மூத்த குடிமக்களுக்கான சந்தோஷச் செய்தி.

முதலீடு செய்த மாதத்திற்கு அடுத்த மாதத்திலிருந்து வட்டி வழங்கப்படும். இந்த வட்டி வருமானம் நாட்டின் சராசரி பணவீக்க விகிதமான 6% என்பதைவிட சுமார் 1.5% என்கிற அளவுக்கு அதிகமாக, அதாவது 7.4% ஆக இருப்பதால், இதை நல்ல திட்டம் என்றே சொல்லலாம். இந்த மாத வருமானத் திட்டத்திற்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால், ஒருவர் முதலீட்டை மேற்கொள்ளும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அந்த வட்டி அவருக்கு இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலமான ஐந்து ஆண்டுகளுக்கும் மாற்றம் இல்லாமல் இருக்கும். அதாவது, இப்போது முதலீடு செய்தால் 7.4% வட்டி என்பது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு சம்பந்தப்பட்ட முதலீட்டாளருக்கு அப்படியே தொடரும். இந்த முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது. வட்டி வருமானத்துக்கு, ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!
மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதம்!

தம்பதிகள் பாதுகாப்பாக ரூ.75 லட்சம் முதலீடு..!

கணவன், மனைவி இருவரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றால், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ரூ. 60 லட்சம், தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்தில் ரூ. 15 லட்சம் என மொத்தம் ரூ. 75 லட்சம் வரை 100% பாதுகாப்பான வைப்பு நிதியில் முதலீடு செய்து காலாண்டு/மாத வட்டி வருமானம் பெறலாம்.

ஓய்வு பெற்றோரில் பலர் குறுகிய கால டெபாசிட்களில் பணத்தைப் போட்டு வைக்கிறார்கள். கையில் செலவுக்குக் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு மிச்சத்தை மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் போன்ற நீண்டகால வைப்பு நிதியில் வைத்தால் அதிக வட்டியும் கிடைக்கும்; பாதுகாப்பாகவும் இருக்கும். மேலும், நம்மிடம் பணம் இருப்பது தெரிந்து, கடன் கேட்பவர்களிடமிருந்து இதைச் சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம்.

மூத்த குடிமக்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!