
கேள்வி - பதில்
மகேஷ் குமார், ஈரோடு.
நான் இந்தியாவில் இருந்தபடியே அமெரிக்கப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறேன். வெளிநாட்டுச் சொத்துகள் என்கிற கணக்கில் நான் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது இந்த விவரங்களைக் கொடுக்க வேண்டுமா?
ஆடிட்டர் ஜி.கே.சீனிவாஸ், கோவை.
“நீங்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்தாலும், அது வெளிநாட்டுச் சொத்துகளாகத்தான் கருதப்படும். இந்தப் பங்கு விவரங்களை நீங்கள் வருமான வரித் தாக்கலின்போது வெளிநாட்டுச் சொத்துகள் என்ற அட்டவணையில் கட்டாயமாகக் குறிப்பிட வேண்டும். வெளிநாட்டுப் பங்குகளைப் பொறுத்தவரை, ஒரு குடியிருப்பாளராக (Resident) உள்ள பங்குதாரர் பெறும் டிவிடெண்ட்டுக்கு இந்தியாவில் வரி விதிக்கப்படும்.
2015-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டில் இருக்கக்கூடிய சொத்துகள் அல்லது வெளிநாட்டிலிருந்து பெறும் வருமானத்தை வரிக் கணக்கு தாக்கலில் காண்பிக்காத வரிதாரர்கள் மீது வருமான வரித்துறை சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கும் அதிகாரமும் இந்தச் சட்டப்பிரிவுக்குக் கொடுக்கப் பட்டுள்ளது.”

கிராபியென் ப்ளாக், கெருகம்பாக்கம், சென்னை-122
சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்று நான் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கினேன். அதற்கு முறைப்படி இ.எம்.ஐ தொகையைச் செலுத்தி, என்.ஓ.சி சான்றிதழையும் பெற்றுவிட்டேன். எனது இரு சக்கர வாகனத்தை எனது பெயருக்கே மாற்றி, சொந்தமாக்கியும் விட்டேன். என்.ஓ.சி பெற்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், அண்மையில் ஓர் அரசு வங்கியில் கடனுக்காக விண்ணப்பம் செய்தேன். எனது சிபில் ஸ்கோரில் நான் இருசக்கர வாகனத்துக்கான இ.எம்.ஐ-யைச் செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். இதை நிவர்த்திசெய்வது எப்படி?
வி.தியாகராஜன், ஆடிட்டர், www.bizlane.in
“எந்த அரசு வங்கியில் கடனுக்காக நீங்கள் விண்ணப்பித்தீர்களோ, அவர்களிடமிருந்து முடிந்தால் சிபில் அறிக்கையின் நகலைக் கேட்டு வாங்குங்கள். அதை எடுத்துக்கொண்டு, நீங்கள் எந்தத் தனியார் நிதி நிறுவனத்தில் இருசக்கர வாகனக் கடன் வாங்கி முழுவதுமாகச் செலுத்தி முடித்து, என்.ஓ.சி பெற்றீர்களோ, அவர்களிடம் கொண்டு போய்க் காட்டி, உங்களது புகாரை முறைப்படியாக அவர்களிடம் பதிவு செய்தால், அவர்கள் உங்கள் குறையை உடனே நிவர்த்தி செய்து தருவார்கள்.
இதற்கு 10 முதல் 20 நாள்கள் வரை ஆகலாம். அப்போது அந்தத் தனியார் நிதி நிறுவனத்திடமிருந்து அவர்கள் இந்தத் தவற்றை நிவர்த்தி செய்துவிட்டார்கள் என்ற கடிதத்தையும் கேட்டுப் பெறுங்கள்.
20 நாள் கழித்தும் அந்தத் தனியார் நிதி நிறுவனம் உங்களது புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனில், ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மேன் (RBI Ombudsman) பிரிவுக்கு, தனியார் நிதி நிறுவனத்தின் மீதான புகாரைத் தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள். இந்தப் புகாரை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்யலாம்.”
கமலேஷ், கள்ளக்குறிச்சி.
என் தந்தை கோவிட் பாதிப்பால் அண்மையில் இறந்துவிட்டார். அவரின் பெயரில் உள்ள வீட்டை விற்பனை இப்போது செய்ய உள்ளோம். வீடு விற்பதன் மூலம் கிடைக்கக்கூடிய தொகைக்கு, வாரிசுகளாகிய மகன்கள் வருமான வரியைச் செலுத்த வேண்டியது அவசியமா?
கே.ஆர்.சத்தியநாராயணன், ஆடிட்டர், சென்னை.
“வருமான வரியைக் கட்டாயமாகச் செலுத்த வேண்டும். சொத்தை விற்றதன் மூலம் நீங்கள் பெற்ற பங்குக்கு ஏற்ப (தொகைக்கு) வாரிசுகளாகிய நீங்கள் மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும்.
சொத்தை வாங்கியதற்கான செலவு என்பது உங்கள் தந்தை என்ன விலை கொடுத்து வாங்கினாரோ, அந்தத் தொகை எடுத்துக் கொள்ளப்படும். உங்களின் பங்குக்கு என்னவிலை வருகிறதோ, அதன் விகிதாசாரம் எடுத்துக் கொள்ளப்படும்.
இதேபோல, விற்பனை விலையின் விகிதாசாரம் எடுத்துக் கொள்ளப்படும். சொத்தை வாங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்திருக்கும் பட்சத்தில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு 20% வரி கட்ட வேண்டும்.
இதுவே சொத்து வாங்கி இரண்டு ஆண்டுகளுக்குள் இருந்தால், குறுகிய கால மூலதன ஆதாயமாக இருந்தால், உங்களின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு அதற்கேற்ப நீங்கள் வரி கட்ட வேண்டும்.”

எஸ்.நடராஜன், ஜலகண்டபுரம், சேலம்.
மியூச்சுவல் ஃபண்டில் செக்ரிகேட்டட் யூனிட்டுகள் (Segregated units) என்றால் என்ன, அந்த யூனிட்டுகளை எப்போது விற்றுப் பணமாக்க முடியும் என்பதை விளக்கமாகச் சொல்லவும்.
மீ.கண்ணன், ராதா கன்சல்ட்டன்சி, radhaconsultancy.blogspot.com
“இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் அமைப்பு செபி, 2018, டிசம்பரில் வாராக்கடன் அல்லது சந்தேகத் துக்கு இடமான கடன் இருக்கும் தருணத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான யூனிட்டு களை அந்த வாராக்கடனுக்கு ஏற்றவாறு பிரித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்குப் பெயர்தான் செக்ரிகேட்டட் யூனிட்ஸ் (Segregated units). இதனால், நாம் வைத்திருக்கும் நல்ல யூனிட்டுகளின் என்.ஏ.வி குறையும்.
இந்த செக்ரிகேட்டட் யூனிட்டுகளை விற்பனை செய்ய முடியாது. அந்த ஃபண்ட் நிறுவனத்துக்குக் கடன் தொகை திரும்ப வரும்போது, வந்த விகிதத்தில் செக்ரிகேட்டட் யூனிட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும். கடன் ஃபண்டுகளைச் சார்ந்த மிகச் சில திட்டங்களில் இந்த செக்ரிகேட்டட் யூனிட்ஸ் உண்டு.”
எஸ்.நடராஜன், ஜலகண்டபுரம், சேலம்.
மியூச்சுவல் ஃபண்ட் பெர்பெச்சுவல் (Perpeyual) காலத்திலிருந்து எஸ்.ஐ.பி முதலீட்டுக் காலத்தைக் குறைத்துக்கொள்ள முடியுமா, அதற்கென பிரத்யேக படிவம் ஏதாவது இருக்கிறதா என விளக்கிச் சொல்லவும்.
சி.குமார், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர், நாமக்கல்.
“மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும்போது ஓராண்டு, இரண்டு ஆண்டு, ஐந்து ஆண்டு என்று விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடாமல் பெர்பெச்சுவல் என்பதைத் தேர்வு செய்தால் தொடர்ச்சியாக அந்தத் திட்டத்தில் 31.12.2099 வரை முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
நீங்கள் முதலீட்டுக் காலத்தைக் குறைக்க விரும்பினால் எஸ்.ஐ.பி-யை ரத்துசெய்யும் படிவத்தைத் தவணைத் தேதிக்கு 30 நாள்களுக்கு முன்னர் தர வேண்டும். பின்னர், புதிய எஸ்.ஐ.பி விண்ணப்பப் படிவத்தை முதலீட்டுக் காலத்தைக் குறிப்பிட்டு, அருகில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் கிளை அலுவலகம் அல்லது கேம்ஸ் / கேஃபின்டெக் (Cams/KFintech) அலுவலகத்தில் தர வேண்டும்.
ஏற்கெனவே தரப்பட்டிருக்கும் ஃபோலியோ எண்ணிலேயே இந்த முதலீட்டைத் தொடரலாம். இது தொடர்பாக இன்னும் விளக்கமாக நீங்கள் தெரிந்துகொள்ள நினைத்தால், உங்கள் அருகில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரை அணுகினால், அவர் உங்களுக்கு உதவுவார். தற்போது ஆன்லைன் வசதிகளும் உள்ளன.”