பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தங்கத்தைத் தாண்டி முதலீட்டுக் களத்தில் சாதிக்கும் பெண்கள்!

முதலீடு
News
முதலீடு

முதலீடு

தங்கத்தைத் தாண்டி முதலீட்டுக் களத்தில் சாதிக்கும் பெண்கள்!

ஆண்களைவிட சேமிப்புப் பழக்கம் அதிகம் உடையவர்கள் பெண்கள். ஆனால், அவர்களின் சேமிப்பு வங்கி எஃப்.டி, தங்க நாணயங்களாக இருந்து, அடுத்த கட்ட வளர்ச்சியை எட்டாமலேயே போய்விடு கிறது. சேமிப்பை முதலீடாக மாற்றிய சில பெண்கள், தங்களின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். இந்த அனுபவங்கள் முன்னேறத் துடிக்கும் மற்ற பெண்களுக்கு நிச்சயம் உதவும். இனி அந்த அனுபவங்கள்...

தங்கத்தைத் தாண்டி முதலீட்டுக் களத்தில் சாதிக்கும் பெண்கள்!

“மிச்சப்படுத்தினால் மட்டும் போதாது; பணத்தைப் பெருக்கணும்!”

- பிரியா ஆரத்தி

“சின்ன வயசுல இருந்தே எனக்கு சேமிக்கிறது ரொம்ப பிடிக்கும். என்னுடைய ஆரம்பக்காலத்தில் ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில்தான் நான் சேமித்தேன். எனக்குத் திருமணம் ஆனதுக்குப் பிறகு என் கணவர் சொல்லித்தான் மியூச்சுவல் ஃபண்ட் பத்தி தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் மியூச்சுவல் ஃபண்டில் இன்வெஸ்ட் பண்ணா, நஷ்டம் வந்துரும்னு பயந்தேன். என் கணவர் திருமணத்துக்கு சில வருடங்களுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செஞ்சுகிட்டு இருந்ததால, அவருக்கு தெளிவான புரிதல் இருந்துச்சு. எனக்கு மியூச்சுவல் ஃபண்ட் பத்தி தெளிவா புரிய வெச்சார்.

நிறைய குழப்பங்கள், பயம் இருந்துச்சு. நிறைய படிச்சு, கேட்டுத் தெரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம் முதலீடு பத்தி தெளிவா புரிஞ்சுகிட்டேன். முக்கியமா, சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வித்தியாசத்தைப் புரிஞ்சுகிட்டேன். அதன்பின் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பிச்சேன். கடந்த மூணு வருஷமா நானும் என் கணவரும் சேர்ந்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்றோம். நான் ஒரு இல்லத்தரசி. குடும்பத்தின் செலவுக் கணக்குகளை நான்தான் பார்த்துக்கிறேன். ஒவ்வொரு மாதமும் முதலில் முதலீட்டுக்கான தொகையை எடுத்து வச்சுட்டுதான் செலவு செய்ய ஆரம்பிப்பேன். செலவுக்காக ஒதுக்கிய தொகையிலும் என்னால் முடிஞ்ச அளவு மிச்சப்படுத்துவேன்.

எங்களுடைய முதலீடு எங்களுடைய மகனின் படிப்பு, எங்களுடைய ஓய்வுக் காலத்துக்கானது. எங்ககிட்ட ஒரு தொகை சேரும்போதோ, கூடுதல் வருமானம் வரும்போதோ அந்தத் தொகையை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முதலீட்டு ஆலோசகர் வெங்கடேஷைத் தொடர்பு கொள்வோம். அவர் சில ஃபண்டு களைப் பரிந்துரை செய்வார். அதை நானும், என் கணவரும் கலந்து ஆலோசித்து, முதலீடு செய்கிறோம்.

ஆரம்பக்காலத்தில் ஆயிரங் களில் தொடங்கிய எங்களுடைய முதலீடு, இப்ப மாதம்தோறும் 50,000 ரூபாயா உயர்ந்துள்ளது. எங்களுடைய முதலீட்டை 20 ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்துள்ளோம்.

நீண்ட காலத் தேவைக்கு என்பதால், எஸ்.ஐ.பி முறையைத் தேர்வு செய்து ஈக்விட்டி ஃபண்டு களில் முதலீடு செய்து வருகிறோம். ஏற்ற இறக்கங்கள் பத்தியெல்லாம் நாங்க கவலைப் படுறதில்லை. இன்னும் 15 வருடம் கழிச்சு, எங்க முதலீடு 20% வளர்ச்சியை அடைஞ்சுடும்னு நம்புறோம்.

குடும்பத்தில் செலவைக் குறைத்து, பணத்தை மிச்சப் படுத்துறது மட்டும் பெண் களோட வேலை இல்ல. அந்தப் பணத்தை எப்படி லாபமாக்குறோம் என்கிறதும் முக்கியம். அது மியூச்சுவல் ஃபண்டில் சாத்தியம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் பயம் இருந்தால், ஒரு முதலீட்டு ஆலோசகரைக் கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.’’

பிரியா ஆரத்தி, ஶ்ரீநிதி வெங்கடேஷ், அமிர்த வள்ளி
பிரியா ஆரத்தி, ஶ்ரீநிதி வெங்கடேஷ், அமிர்த வள்ளி

“ஏழு ஃபண்டுகளில் தலா 2,000 ரூபாய்!”

- ஶ்ரீநிதி வெங்கடேஷ்

‘‘என்னோட அப்பா, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வாங்க. அதனால் நான் வேலைக்குப் போயி சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என்னுடைய 19- வது வயதில் நானும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆரம்பிச்சேன்.

நம்முடைய சேமிப்பைத் தங்கத்தில் முதலீடு செய்வது, ஃபிக்ஸட் டெபாசிட் செய்வது என கண்ணுக்குத் தெரிந்த அல்லது நாம் கூடவே வைத்துக்கொள்ளக் கூடிய பொருள்களில் முதலீடு செய்வதுதான் ஆரோக்கியமான சேமிப்புனு நிறைய பேர் நினைக் கிறாங்க. அப்படியான சேமிப்பு ரிஸ்க் இல்லாததுதான். ஆனா, அந்தச் சேமிப்பு உண்டியலில் போட்ட காசு மாதிரி நிலையா இருக்குமே, தவிர வளராது. சேமிப்பை முதலீடாக மாற்றும் போதுதான் அதில் லாபத்தை அடைய முடியும். அதனால மியூச்சுவல் ஃபண்ட் பத்திய கொஞ்சம் புரிந்துகொண்டு முதலீடு செய்ய ஆரம்பிச்சேன்.

முதலீடு செய்ய ஆரம்பிக்கும் முன் மியூச்சுவல் ஃபண்டில் எனக்கு இருந்த சந்தேகங்களை எல்லாம் முதலீட்டு ஆலோசகர்கள் கிட்ட கேட்டுத் தெளிவு பண்ணி கிட்டேன். அதன்பின் நல்ல நிறுவனங்களாகத் தேர்வு செஞ்சு முதலீடு பண்ண ஆரம்பிச்சேன். இப்போ அஞ்சு வருஷமா முதலீடு பண்ணிகிட்டு இருக்கேன்.

என் ஓய்வுக்காலத்துக்காகத் திட்டமிட்டு முதலீடு செய்றேன். என் சம்பளத்திலிருந்து என்னால் மாதம் ரூ.14,000 வரை மிச்சப்படுத்த முடிகிறது. எனவே, ஏழு ஃபண்டு களைத் தேர்வு செய்து ஒவ்வொரு ஃபண்டிலும் ரூ.2,000 முதலீடு செய்றேன். இப்ப சுமார் ரூ.4 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்திருக்கேன்.

நாம் முதலீடு செய்த தொகையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும். அது நம் மனதில் தேவையில்லாத பயத்தை விதைக்கும். எனவே, ஃபண்டின் வளர்ச்சி என்ன நிலையில் இருக்கிறது என்பதை வருடத் துக்கு ஒருமுறைதான் செக் செய்வேன்.

நான் முதலீடு செய்த தொகை நல்லதொரு லாபமாகக் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.’’

“48 நிறுவனங்களின் பங்குகள் என்னிடம் இருக்கு!”

- அமிர்தவள்ளி

“எனக்கு வயசு 66. பங்குச் சந்தையைத் தெளிவாகப் புரிந்துகொண்ட பிறகு என்னுடைய முதலீட்டைப் பண்றேன். நான் அரசு சார்ந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னுடைய நிறுவனத்தில் இருந்து ஐ.பி.ஓ வெளியிட்டு எனக்கு 8000 பங்குகள் கொடுத்தாங்க. எனக்கு பங்குச் சந்தை பத்தி ஆரம்பத்தில் எதுவும் தெரியல. அதனால் அந்தப் பங்குகளை அப்படியே வச்சுருந்தேன். நான் ஓய்வுபெற்ற பின், என்னிடம் இருந்த பங்கை என் மகளுக்குப் பிரிச்சுக் கொடுத்துட்டு, நான் 3000 பங்குகளை மட்டும் வச்சுக்கிட்டேன். அந்த 3000 பங்குகள் தான் பங்குச் சந்தையில் எனக்கான ஆரம்பமாக இருந்துச்சு. கொரோனா ஊரடங்கு நேரத்தில் என்னிடம் இருந்த 2500 பங்குகளை விற்று, வெவ்வேறு நிறுவனத்தின் பங்குகளை வாங்குனேன்.

வயசு பத்தியெல்லாம் கவலைப்படாம பங்குச் சந்தை சார்ந்து நிறைய படிக்க ஆரம்பிச்சேன். இப்போ தொடர்ந்து பங்குச் சந்தையில் முதலீடு பண்ணிகிட்டு இருக்கேன். ஆரம்பத்துல பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின்போது கொஞ்சம் பயம் இருந்துச்சு. அடுத்தடுத்து கிடைத்த அனுபவங்கள் என் பயத்தைக் குறைச்சது. இப்போ 48 நிறுவனங்களின் பங்குகள் என்னிடம் இருக்கு. ஒரு நிறுவனத்தின் பங்குகள் வாங்கும்போது, நல்ல நிறுவனமா, அந்த நிறுவனத்தின் பங்குகள் கம்பெனி, நல்லா பர்ஃபாம் பண்ணுதா என்பது போன்ற அடிப்படை விஷயங்களை மட்டும் பார்த்து வாங்குறேன்.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் நிகழும்போது எதனால இந்த மாற்றம் நிகழுது என்பதைத் தெரிஞ்சுக்கிறது அவசியம். அப்படித் தெரிந்துகொள்வதால் சமூகத்தின் நிகழ்வுகளில், இந்த வயதிலும் அப்டேட்டாக இருக்கேன். மேலும், முழுமையான நிதிச் சுதந்திரம் எனக்குக் கிடைச்ச சந்தோஷமும் இருக்கு.”

நமக்குத் தெரிந்த பல பெண்கள் இன்னும் வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் என்றுதான் செல்ல விரும்புகின்றனர். அவர்கள் இந்தப் பெண்களைப் பார்த்து, தங்கள் முதலீட்டு சிந்தனையை மாற்றிக்கொள்வது நல்லது!