நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

நிதி சார்ந்த முதலீடுகளில் இந்தியர்கள் எப்படி..? ஒரு விரிவான அலசல்

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

2021-22-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் திட்டங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது 150% அதிகரித்துள்ளது... மற்ற முதலீடுகளில் எப்படி..?

இந்தியக் குடும்பங் களின் நிதி சார்ந்த முதலீடு (Financial Investments) எப்படி இருக்கிறது என்பது தொடர்பான புள்ளி விவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் (ஆர்.பி.ஐ) வெளியிட்டு உள்ளது.

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

நிதி சார்ந்த முதலீடு என்கிறபோது, அதில் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் தொடங்கி பங்குச் சந்தை வரை பல முதலீடுகள் அடங்கும். நிதிசாரா முதலீடு என்கிறபோது தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் (வீடு, மனை, கட்டடங்கள்) போன்றவை அடங்கும்.

தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பெரும்பாலும் அணிந்து அழகு பார்க்க வாங்கப்படுவை என்பதால், அவை நிதி சார்ந்த முதலீடு களாக எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. அதே போல், வீடு என்பது குடியிருக்க அவசியத் தேவை என்பதால், அதுவும் நிதி சார்ந்த முதலீட்டுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவ தில்லை.

ரூ.25 லட்சம் கோடி முதலீடு...

முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் அதாவது, 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான 12 மாதத் தில் இந்தியக் குடும்பங்களின் நிதி சார்ந்த முதலீடுகள் எந்தெந்த முதலீட்டு வகைகளில் எப்படி செய்யப் பட்டுள்ளன என்கிற விவரம் ஆர்.பி.ஐ-யின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

2021-22-ம் நிதி ஆண்டில் இந்தியக் குடும்பத்தினர் கிட்டத்தட்ட 25 லட்சம் கோடி ரூபாயை நிதி சார்ந்த திட்டங்களில் முதலீடு செய் திருக்கிறார்கள்.

நிதி சார்ந்த முதலீடுகளில் 
இந்தியர்கள் எப்படி..? ஒரு விரிவான அலசல்

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்...

இந்தியக் குடும்பங்களின் மிகப் பெரிய சேமிப்பாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டுகள் உள்ளன. 2021-22-ம் ஆண்டில் இந்தியக் குடும்பங் களின் மொத்த நிதி சார்ந்த சேமிப்பில் வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் 25.68 சதவிகிதமாக உள்ளது. இந்த விகிதம் 2019-20-ம் ஆண்டில் கொரோனா பாதித்த கால கட்டத்தில் 34.4% என்ற அளவில் இருந்தது.

2021-22-ம் ஆண்டில் இந்தியக் குடும்பங்கள் வங்கி எஃப்.டி-யில் செய்திருந்திருந்த முதலீடு, 6,51,700 கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய 2020-21-ம் ஆண்டில் ரூ.12,59,767 கோடி அளவுக்கு மிக அதிகமாக இருந்தது.

இது தவிர, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் 1.64% தொகை அதாவது, ரூ.41,600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 0.09% அதாவது, ரூ.2.200 கோடிக்கு டெபாசிட் செய்யப் பட்டுள்ளது. இந்தியக் குடும்பங்கள், இதுவரையில் மொத்தம் 170 லட்சம் கோடி ரூபாயை (2022 மார்ச் 31 நிலவரப்படி) வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்துள்ளன.

ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் பணவீக்க விகித அளவுக்கு சுமார் 7% - 7.5 சதவிகிதமாக உள்ளது. மேலும், இதன் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் (பழைய முறையில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். அதிக வருமான வரி வரம்பில் வருபவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிகம் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் (நிதி ஆண்டில் 60 வயதுக்கு உட்பட்டவர் களின் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ்) ஃபிக்ஸட் டெபாசிட்டில் தேவைக்கு முதலீடு செய்துகொள்ளலாம்.

நிதி சார்ந்த முதலீடுகளில் 
இந்தியர்கள் எப்படி..? ஒரு விரிவான அலசல்

பிராவிடென்ட் ஃபண்ட்...

வங்கி எஃப்.டி-க்குப் பிறகு, பணியாளர் பிராவி டென்ட் ஃபண்ட் (EPF), பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF) ஆகியவை இந்தியர்களின் மிகப் பெரிய சேமிப்பாக இருக்கிறது.

இந்தியக் குடும்பங்களின் மொத்த சேமிப்பில் 2021-22-ம் ஆண்டில் இ.பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் ஆகியவற்றின் பங்களிப்பு 22.92 சதவிகிதமாக உள்ளது. அதாவது, அந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.5,81,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக தொகை முதலீடு செய்யப்பட முக்கியமான காரணம், சம்பளதாரர்கள் இ.பி.எஃப் திட்டத்தில் கட்டாயமாக சேமித்தாக வேண்டும் என்பதால்தான். பென்ஷன் திட்டங்களில் மொத்தம் ரூ.32 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இ.பி.எஃப், பி.பி.எஃப் திட்டங்களிலும் முதலீடு மற்றும் வட்டி வருமானம், முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வருமான வரி எதுவும் கிடையாது என்பதால், இவை சிறந்த முதலீடுகள் ஆகும். தற்போதைய நிலையில், இ.பி.எஃப் முதலீட்டுக்கு 8.1%, பி.பி.எஃப் முதலீட்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது.

பணிபுரியும் அலுவலகத்தில் இ.பி.எஃப் பிடிக்கப்படு கிறது எனில், அவர்கள் வழக்கமான தொகையுடன் சுய விருப்பத்தின் பேரில் கூடுதல் தொகையை இ.பி.எஃப் திட்டத்தில் பிடிக்கச் சொல்வது மூலம் கூடுதல் தொகையை முதலீடு செய்ய முடியும். இப்படி செய்யும்போது பணி ஓய்வின்போது கூடுதல் தொகை கிடைக்கும்.

சுய விருப்பத்தின் பேரில் கூடுதலாகக் கட்டும் பி.எஃப் தொகைக்கும் வருமான வரிச் சலுகை கிடைக்கும். 2022 மார்ச் 31 நிலவரப்படி, இ.பி.எஃப் மூலம் ரூ.11 லட்சம் கோடி நிர்வகிக்கப்பட்டது. இ.பி.எஃப் வசதி இல்லாதவர்கள் 15 ஆண்டு திட்டமான பி.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்து முதலீடு செய்து வரலாம்.

ஆயுள் காப்பீட்டு பாலிசிகள்...

நம்மவர்கள் எண்டோவ்மென்ட் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முதலீடாகக் கருதுவதால், அதில் 17.37% அதாவது, ரூ.4,40,800 கோடி போடப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகள் என்பவை முதலீடு அல்ல. இந்த ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்க அளவுக்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை என்பதால், இந்த பாலிசிகளை முதலீட்டு நோக்கில் அணுகுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த பாலிசிகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 5% வருமானம்தான் கிடைத்து வருகிறது. இந்த எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதற்குப் பதில், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் வழங்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துவிட்டு, மிச்ச மாகும் பணத்தை இ.பி.எஃப் அல்லது பி.பி.எஃப்பில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

இதன் மூலம் ஆயுள் காப்பீட்டில் அதிக கவரேஜ் கிடைக்கும் என்பதுடன், முதலீட்டின் மூலமும் அதிக லாபம் கிடைக்கும். கூடவே எண்டோவ் மென்ட் பாலிசி மூலம் கிடைக்கும் வருமான வரிச் சலுகை டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் பி.பி.எஃப்பில் கிடைக்கும் என்பதால், இப்படி மாற்றிச் செய்வதால், எந்த இழப்பும் இருக்காது.

நிதி சார்ந்த முதலீடுகளில் 
இந்தியர்கள் எப்படி..? ஒரு விரிவான அலசல்

சிறுசேமிப்புத் திட்டங்கள்...

தொடர் வைப்புத் (RD) திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களில் 2021-22-ம் ஆண்டில் 13.43% அதாவது, ரூ.3,40,700 கோடி போடப்பட் டுள்ளது.

சிறுசேமிப்புத் திட்டங்கள், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும் பாதவர்களுக்கு ஏற்றதாக இருக் கிறது. வருமான வரிச் சலுகை வேண்டும் என்பவர்கள், தபால் அலுவலக தேசிய சேமிப்புச் சான்றிதழ், செல்வமகள் சேமிப்புத் திட்டம் (பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும்.

நிதி சார்ந்த முதலீடுகளில் 
இந்தியர்கள் எப்படி..? ஒரு விரிவான அலசல்

மியூச்சுவல் ஃபண்ட்...

அண்மை ஆண்டுகளில் மியூச் சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், இதில் இந்தி யர்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியக் குடும்பங்களின் மொத்த முதலீட் டில் 6.33% அதாவது, ரூ.1,60,000 கோடி முதலீடு செய்யப்பட் டுள்ளது. இது முந்தைய நான்கு நிதி ஆண்டுகளைவிட மிக அதிக தொகை ஆகும். 2022 மார்ச் மாத நிலவரப்படி இந்தியர்களின் மியூச்சுவல் ஃபண்ட் மொத்த முதலீடு ரூ. 38.40 லட்சம் கோடியாக இருந்தது.

2021-22-ம் நிதி ஆண்டில் மியூச்சுவல் திட்டங்களில் சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது 150% அதிகரித்துள்ளது. இது இந்திய சிறு முதலீட்டாளர்கள், நவீன முதலீடுகள் குறித்த விழிப் புணர்வு பெற்றிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

மேலும், இதர முதலீடுகளுடன் ஒப்பிடும்போது கடன் சந்தை ஃபண்டுகள் மற்றும் பங்குச் சந்தை ஃபண்டுகள் நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தருபவையாக உள்ளன. கூடவே, வருமான வரியும் குறைவாக இருக்கின்றன. இந்தக் காரணங்களால், இந்தியக் குடும்பங்கள் வங்கி டெபாசிட்டை குறைத்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு மிகவும் அதிகரிக்கக் காரணம், எஸ்.ஐ.பி எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்தான். 2021-22-ம் ஆண்டில் மட்டும் 1 கோடி புதியவர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த ஆண்டில் எஸ்.ஐ.பி முறையில் செய்யப்பட்ட முதலீடு ரூ.1.2 லட்சம் கோடிக்கு மேலாகும்.

தற்போது எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முத லீடாகும் தொகை ரூ.13,000 கோடியைத் தாண்டியிருக்கிறது. அடுத்த ஒன்றிரண்டு ஆன்டுகளில் இந்தத் தொகை ரூ.15,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பங்குச் சந்தை அதிக ரிஸ்க் என்பதால், குறைவான ரிஸ்க்குடன் ஓரளவுக்கு நல்ல வருமானத்தைத் தரும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் இந்தியர்கள் அண்மைக் காலத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.

அதிக வட்டி தரும் மோசடித் திட்டங்களில் சேர்ந்து பணத்தை இழக்காமல், நீண்ட காலத்தில் பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் நிதி சார்ந்த முதலீடுகளை நம் நாட்டு மக்கள் அதிகம் தேடிச் செல்லத் தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்க விஷயமே!