பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

போர்ட்ஃபோலியோ வருமானத்தை அதிகரிக்க உதவும் செக்டார் இ.டி.எஃப்-கள்..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

சிந்தன் ஹரியா, தலைவர் - திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

குறிப்பிட்ட துறை அல்லது கருப்பொருள் (Sector or Theme) மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒருவர் முதலீடு செய்து, அவை சிறப்பாகச் செயல்படும்போது, அந்த முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருமானம் அபரிமிதமாக இருக்கும். ஆனால், தேர்வுகள் தவறாக இருந்தால் இழப்பு அதிகமாக இருக்கும்.

சிந்தன் ஹரியா 
தலைவர் - திட்ட மேம்பாடு & உத்தி, 
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
சிந்தன் ஹரியா தலைவர் - திட்ட மேம்பாடு & உத்தி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி

அண்மைக் காலத்தில் செக்டார் மற்றும் தீமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. நடப்பு 2022 –ம் ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 12,500 கோடி ரூபாய் துறைசார் மற்றும் கருப்பொருள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். முதலில் சிறப்பாகச் செயல்படக்கூடிய சரியான துறையைத் தேர்ந்தெடுப்பது மிக முக்கியம். இரண்டாவதாக, சரியான நேரத்தில் முதலீடு செய்வது மற்றும் சரியான நேரத்தில் யூனிட்களை விற்றுவிட்டு வெளியேறுவது ஆகும்.

போர்ட்ஃபோலியோ வருமானத்தை அதிகரிக்க உதவும் செக்டார் இ.டி.எஃப்-கள்..!

துறைசார், கருப்பொருள் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-கள்...

ஒருவரின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ வின் வருமானத்தை நீண்ட காலத்தில் அதிகரிக்க துறைசார், கருப்பொருள் ஃபண்டு கள் மற்றும் இ.டி.எஃப்-களில் (Sectoral, Thematic Funds and ETFs) முதலீடு செய்யலாம். அப்படிச் செய்யும்போது புரிந்துகொள்ள வேண்டிய சில காரணிகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வெவ்வேறு துறைகள் வெவ்வேறு காலகட்டங்களில் சிறப்பாகச் செயல்படுகின்றன...

2020 மார்ச் மாதத்தில் கோவிட்-19 தொடங்கிய உடனேயே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாசாரத்துக்கு மாறின. இந்தக் காலகட்டத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உலகளாவிய வாடிக்கை நிறுவனங்களிடமிருந்து வலுவான டிஜிட்டல் ஒப்பந்தங்கள் கிடைத்தன.

இந்த நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி வலுவாக இருந்தன. இதன் விளைவாக, எஸ்&பி பி.எஸ்.இ ஐ.டி ( S&P BSE IT) குறியீடு 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் முறையே 56% மற்றும் 55% உயர்ந்தது.

வீட்டிலிருந்தே வேலை நிகழ்வு காரணமாக இணையப் பயன்பாடு அதிகரித்ததால், தொலைத்தொடர்பு நிறுவனப் பங்குகளும், தொலைத்தொடர்பு குறியீடுகளும் சிறப்பாக ஏற்றத்துடன் செயல்பட்டன.

இந்த நிலையில் 2022-ம் ஆண்டில் இதுவரை ஐ.டி துறை கிட்டத்தட்ட 25% சரிந்துள்ளது. காரணம், வட அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் காணப்படும் பொருளாதார மந்தநிலை ஆகும்.

இதன், விளைவாகத் தகவல் தொழில் நுட்பத்துக் காகச் செலவு செய்வது குறைந்துள்ளது. விளைவு, அந்த நிறுவனங்களின் நிகர லாபம் குறைந்து, கூடவே பங்குகளின் விலையும் குறைந்துள்ளது.

கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் கோவிட்-19 பரவியதால், உலகம் முழுவதும் மருந்துகள், தடுப்பூசி கள் மற்றும் தொற்றுநோயைச் சமாளிக்கப் பயனுள்ள சிகிச்சை களை மக்கள் தேடியதால் மருந்துத் துறை (pharma sector) மிகவும் சிறப்பாகச் செயல் பட்டது. மருந்துத் துறை குறியீடு 2020–ம் ஆண்டில் 60% மற்றும் 2021–ம் ஆண்டில் 10% அதிகரித்தது. ஆனால் 2022–ம் ஆண்டில் கோவிட்-19 பாதிப்பு குறைந்ததால் இந்தத் துறையின் செயல்திறன் குறைந்துள்ளது.

ஆட்டோ குறியீடு...

2017 மற்றும் 2021-க்கு இடையில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த ஆண்டு முதல் மீண்டும் சிறப்பாகச் செயல்படத் தொடங் கியுள்ளது.

பயணிகள் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு 38 லட்சம் கார்களைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறை தற்போதைய நிலையில் வலுவானதாகத் தெரிகிறது.

ஆட்டோ குறியீடு 2021–ம் ஆண்டில் 18% ஏற்றம் கண்டது. அதன் பிறகு நடப்பு 2022–ம் ஆண்டில் செப்டம்பர் வரையில் ஆட்டோ குறியீடு கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் விரும்பும் பொருள்களுக்கு செலவழிக்கும் நாட்டம் அதிகரித்து வருவதால் இது நடந்துள்ளது.

முதலீட்டாளர்கள் ஆட்டோ இ.டி.எஃப் அல்லது ஆட்டோ இண்டெக்ஸ் ஃபண்ட் மூலமாக ஆட்டோ நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும்.

சிறப்பான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் மற்றொரு துறை வங்கிச் சேவையாகும், இது முன்னேற்றத்தில் உள்ளது மற்றும் வலுவான மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம்.

நிதிச் சேவைகளுக்கான தேவை...

இந்திய வங்கித் துறை போது மான அளவுக்கு மூலதனத்துடன் உள்ளது மற்றும் வாராக்கடன், புதிய வாராக் கடன் உருவாவது சரிந்து வருவது போன்றவை வங்கித் துறையின் ஆரோக் கியத்தை பிரதிபலிப்பதுடன் இந்திய பொருளாதாரத்துக்கு வலு சேர்ப்பதாகவும் உள்ளன.

நிதிச் சேவைகளுக்கான உள்நாட்டுத் தேவை மேம்பட்டிருக்கிறது. மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குதல் அதிகரித்திருக்கிறது. இதனால், இந்திய வங்கித் துறை மேம்பட்ட வருவாயைக் காணும். இது முதலீட்டாளர் களுக்கு கவர்ச்சிகரமான முதலீட்டு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

இண்டெக்ஸ் ஃபண்ட் அல்லது இ.டி.எஃப் மூலம் வங்கித் துறையில் முதலீடு செய் வதைக் கருத்தில் கொள்ளலாம். துறை சார்ந்த சுழற்சி ஒவ்வொரு பங்குச் சந்தை சுழற்சியிலும் முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டித் தருவதாக இருக்கிறது.

முதலீட்டில் லாபம் ஈட்ட நேரம் முக்கியமானது...

வங்கி மற்றும் வாகனம் போன்ற சில துறைகள் சுழற்சி அடிப்படையில் செயல்படு கின்றன. அதாவது, அவற்றின் வணிகச் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேக்ரோ பொருளாதார காரணிகளின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு களைச் சந்திக்கின்றன.

உள்கட்டமைப்பு போன்ற கருப்பொருள்கள் பொருளாதார வளர்ச்சியின் திசையைப் பொறுத்து செயல்படுவதைக் காணலாம். எனவே, முதலீட்டாளர்கள் ஒரு துறை சார்ந்த நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், இ.டி.எஃப்-களில் முதலீடு செய்யும் நேரம் மிகவும் முக்கியமானது; கூடவே, சரியான நேரத்தில் வெளியேறுவதும் மிக முக்கியம் ஆகும்.

தகவல் தொழில்நுட்பத் துறை குறியீடுகள் இரண்டு ஆண்டுகளாக நல்ல வருமானத்தைக் கொடுத்தன. இந்த நிலையில் 2021–ம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2022-ம் ஆண்டில் ஒருவர் முதலீடு செய்திருந்தால், அவரின் முதலீடு இப்போது சுமார் 25% நஷ்டத்தைச் சந்தித்திருக்கும்.

மேலும். குறிப்பிட்ட நிறுவனப் பங்குகள் இன்னும் அதிக இழப்பை சந்தித்திருக்கும். மறுபுறம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மின்துறை பங்குகளில் முதலீடு செய்திருந்தால் சிறந்த வருமானத்தைப் பெற்றிருக்கலாம்.

போர்ட்ஃபோலியோ வருமானத்தை அதிகரிக்க உதவும் செக்டார் இ.டி.எஃப்-கள்..!

துறைசார் மற்றும் தீமெட்டிக் ஃபண்டுகள்,இ.டி.எஃப்-களை போர்ட்ஃபோலியோவில் சேர்த்தல்...

முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் லாபகரமாகச் செயல்படக்கூடிய துறையைத் தேர்ந்தெடுப்ப தற்கு, அந்தத் துறை சார்ந்த சிறப்பான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். மேலும். முதலீடு செய்வது மற்றும் விற்பது தொடர்பான முடிவுகளை எடுக்கவும் நன்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த அளவுக்கு போதிய திறமை இல்லாதபட்சத்தில் நிதி ஆலோசகரின் உதவியை நாடுவது நல்லது.

ஒரு துறை அல்லது கருப்பொருள் சார்ந்த நிறுவனங்கள் மூலம் லாபம் பெறுவதற்கான ஒரு சிறந்த வழி அத்தகைய துறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகும்.

முதலீட்டாளர்கள் தங்கள் முக்கிய போர்ட்ஃபோலியோவில் சொத்து ஒதுக்கீடு முறை, ரிஸ்க் எடுக்கும் திறன், நிதி இலக்கு மற்றும் முதலீட்டும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள், ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டுகளில் பிரதானமாக முதலீடு செய்திருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தத் துறை சார்ந்த இ.டி.எஃப்-கள் மற்றும் ஃபண்டுகள் போர்ட்ஃபோலியோவின் வருமானத்தை சற்றுக் கூடுதலாக அதிகரிக்கும் நோக்கத்துடன் ஒரு சிறிய சதவிகிதம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். மேலும், இந்த முதலீடு நீண்ட காலத்துக்கானதாக இருப்பது அவசியமாகும்.