தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பீட்டர் லின்ச்... முதலீட்டைத் தாண்டி சேமிக்கச் சொன்ன மாமேதை!

பீட்டர் லின்ச்
பிரீமியம் ஸ்டோரி
News
பீட்டர் லின்ச்

முதலீட்டு உலகில் ஒரு ஆக்டிவ் ஃபண்டை நீண்ட காலத்துக்கு வெற்றிகரமாக நடத்தியவர்களில் பீட்டர் லின்ச்சை விஞ்ச ஆளில்லை..!

முதலீட்டு உலகின் கலங்கரை விளக்கமாக மின்னும் இன்வெஸ்ட்மென்ட் குருக்களின் வரிசையில் வாரன் பஃபெட்டுக்கு அடுத்து வருபவர் பீட்டர் லின்ச். முதலீட்டு உலகில் ஒரு ஆக்டிவ் ஃபண்டை நீண்ட காலத்துக்கு வெற்றிகரமாக நடத்தியவர்களில் பீட்டர் லின்ச்சை விஞ்ச ஆளில்லை!

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

கோல்ஃப் மைதானத்தில் கற்ற பாடங்கள்...

‘‘ஏழ்மை என்பது ஒருவரின் வளர்ச்சியை ஒருபோதும் தடுக்க முடியாது’’ என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லும் இவர் வாழ்க்கையே ஒரு படிப்பினைதான்.

1944-ல் பிறந்து, 10 வயதில் தந்தையை இழந்த இவர், தன் படிப்புச் செலவுக்காக கோல்ஃப் மைதானத்தில் பந்து பொறுக்கும் பையனாக வேலைக்குச் சேர்ந்தார். கோல்ஃப் விளையாட வரும் பெரும் பணக்காரர்கள் பணம் பற்றியும், பங்குச் சந்தை பற்றியும் பேசிய உரை யாடல்கள் அவருடைய இளம் செவிகளில் விழ, அதை இறுகப் பற்றி படர்ந்தது அவர் அறிவு.

பீட்டர் லின்ச்
பீட்டர் லின்ச்

தொட்ட உயரங்கள்...

கோல்ஃப் மைதானத்தில் பெற்ற சொற்ப சம்பளத்தில் பீட்டர் லின்ச் பள்ளிக் கல்வியை முடித்தார். அந்த இளம்வயதிலேயே அவர் செய்திருந்த பங்குச் சந்தை முதலீடுகள் வார்ட்டன் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸில் எம்.பி.ஏ படிக்க உதவியது.

பொருளாதாரம் பற்றிய படிப்புகளில் அவர் செலுத் திய கவனத்தால், அந்தத் துறையில் நல்ல வேலை வாய்ப்புகளுக்கான கதவுகள் திறந்தன. அவற்றைப் பயன் படுத்தி முன்னேறி, மெகல்லன் ஃபண்டுக்குத் தலைவர் என்ற உயரத்தைத் தொட்டபோது அவர் வயது 33. அங்கு அவர் கோலோச்சிய 13 ஆண்டு களிலும் அதன் வாடிக்கை யாளர்களின் முதலீடுகளுக்குக் கிடைத்த ஆண்டு வளர்ச்சி (CAGR) 29%.

பி.இ.ஜி ரேஷியோ...

மண்ணில் புதைந்த ரத்தினங்கள் போன்று சந்தை யால் கவனிக்கப்படாத நல்ல நிறுவனங்களைத் தேர்ந் தெடுத்து முதலீடு செய்து, நீண்ட காலங்களுக்கு அந்த முதலீட்டைத் தொடர வேண்டும் என்பது அவரது கொள்கை. அவர் கண்டு பிடித்த பி.இ.ஜி. (PEG - Price/ Earnings-to-Growth Ratio) ரேஷியோ முறை ஒரு பங்கின் எதிர்கால வளர்ச்சியைக் கணக்கிட்டு இன்றைய விலை சரியா, அதிகமா என்று கண்டறிய உதவுகிறது.

இன்றைய இளம் தலை முறையினரின் கனவான விருப்ப ஓய்வை அவர் தன் 46 வது வயதிலேயே அடைந்தார். அதற்கு உதவியாக இருந்தது குறுகிய காலத்தில் அவர் ஈட்டிய பெரும்செல்வம். அந்த செல்வத்தை, தான் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்காமல், தான் படித்த கல்வி நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளித்தது அவரின் பெருந்தன்மை.

முதலீடு குறித்து 3 புத்தகங்கள்...

முதலீடு குறித்து அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் இன்றும் விற்பனையில் தலைசிறந்து விளங்குகின்றன. ‘ஒன் அப் ஆன் வால் ஸ்ட்ரீட்’ (One Up On Wall Street) என்ற புத்தகம், அதிக விஷயங்கள் அறிந்திராத ஒரு சாதாரண முதலீட்டாளர்கூட எப்படி முதலீட்டு உலகில் ஜெயிக்க முடியும் என்று காட்டுகிறது. ‘பீட்டிங் தி ஸ்ட்ரீட்’ (Beating The Street) என்ற புத்தகம் அவரின் வெற்றிகரமான முதலீட்டு வழிமுறைகளை நமக்கு சொல்லித் தருகிறது. ‘லேர்ன் டு எர்ன்’ (Learn To Earn) என்கிற புத்தகம் முதலீடு சம்பந்தப்பட்ட ரிப்போர்ட்டுகள், சார்ட்டுகள் போன்றவற்றை எப்படி ஆய்வு செய்வது என்று விளக்குகிறது.

நிலைக்கும் பொன்மொழி...

“உங்கள் வருங்கால செல்வநிலையைத் தீர்மானிப் பது உங்கள் வருமானமல்ல; அந்த வருமானத்தில் நீங்கள் எவ்வளவு சேமித்தீர்கள், எவ்வளவு முதலீடு செய்தீர்கள் என்பதுதான்” என்று அவர் கூறியிருப்பது எல்லா காலத்துக்கும், எல்லா மனிதருக்கும் பொருந்தும்.

கடன்பட்டுக் கலங்கிய மைக்கேல் ஜாக்சன்...

கிங் ஆஃப் பாப் (King of Pop) என்று போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன் மட்டும் பீட்டர் லின்ச்சின் இந்த அறிவுரையைப் பின்பற்றியிருந்தால், கடைசிக் காலத்தில் கடனாளியாக இறந்திருக்க மாட்டார். தன் வாழ்நாளில் சுமார் 3 பில்லியன் டாலர்களை வருமானமாகப் பெற்ற கிங் ஆஃப் பாப் செலவழிப்ப திலும் கிங்தான்.

மைக்கேல் ஜாக்சனின் கண்கவரும் கையுறைகளின் விலை மட்டுமே லட்சங்களைத் தொட்டது. 2,600 ஏக்கர் தோட்டத்துடன்கூடிய பங்களா, 75 கார்கள், தனி விமானங்கள், ஹெலிகாப்டர்கள், அவருக்கு மட்டுமே சொந்தமான மிருகக் காட்சி சாலை, அதில் அவர் வளர்த்த செல்லப் பிராணிகள், ஒட்டகச் சிவிங்கிகள், புலிகள், முக்கியமாக பபிள்ஸ் என்ற பெயருடன் அவருடன் வலம்வந்த சிம்பன்சீ குரங்கு, அதற்கான ஆடை, அணிகலன்கள், இவை தவிர அவர் மீதிருந்த வழக்குகள் இவை எல்லாமே அவரின் வரவைவிட செலவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக இருந்தன.

சேமிப்பு பற்றி சற்றும் கவலைப்படாமல் தன் செலவுகளை அதிகரித்தபடியே இருந்த மைக்கேல் ஜாக்சன், ஒரு கட்டத்தில் தினசரி செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் தன் வருமானத்தில் 10% அளவு சேமித்திருந் தால்கூட, கடனாளி ஆகாமல் வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவ்வப்போது அவர் வாங்கிய கடன் 360 மில்லியன் டாலராக வளர்ந்து நின்றபோது, அவர் நிம்மதி இழக்க நேர்ந்தது. அந்தக் கடன்களை அடைப்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட அவரின் கடைசி இசை டூருக்கு முன்பே, அவர் கடனாளியாக இறக்க நேர்ந்தது.

மைக்கேல் ஜாக்சன்
மைக்கேல் ஜாக்சன்

வினையாகிய விளையாட்டுப் போக்கு...

திடீரென கையில் பணம் புரளும்போது மனித அறிவும் தடம் புரண்டுவிடுகிறது என்பதை இந்தப் பணம்சூழ் உலகம் அடிக்கடி நிரூபித்து வருகிறது. விளையாட்டு வீரர்களை நிஜ வாழ்வின் ஹீரோக்களாக எண்ணிப் போற்றுபவர்கள் ஏராளம். ஆனால், விளையாட்டு வீரர்களில் 78% பேர் ஓய்வுபெற்ற இரண்டே வருடங்களில் தங்கள் பணத்தை இழந்து திவாலாகிவிடுகிறார்கள்.

அமெரிக்காவின் கால்பந்து விளையாட்டு வீரர் டெரல் ஓவன்ஸின் கதை இதற்கு உதாரணம். 80 மில்லியன் டாலர்களை கால்பந்து விளை யாட்டில் அநாயசமாக ஈட்டிய இவரிடம் இன்றிருப்பது வெறும் 5 லட்சம் டாலர்கள் மட்டுமே. பணம் வர வர தன் வாழ்க்கைத் தரத்தைப் பலரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு உயர்த்தும் ஆசை இவருக்கு வர, மெர்சிடிஸ் கார், கண்கவரும் நகைகள் என்று செலவழித்தது தவறு என்று அவர் புரிந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது. சேமிப்பிலும், முதலீட்டிலும் சரியான அளவு கவனம் செலுத் தாததுதான் தன் வீழ்ச்சிக்குக் காரணம் என்று அவரே ஒப்புக் கொள்கிறார்.

கல்லெழுத்து...

அமெரிக்காவின் 18-வது ஜனாதிபதியாக இருந்த யுலிஸஸ் க்ரான்ட், விளையாட்டு வீரர் மைக் டைசன் போன்ற பிரபலங் களின் கதையும் இதுவே. இவர்கள் கையில் புரண்ட பணத்துக்கு அளவே இல்லை. ஆனால், அதை சரியாக உபயோகித்து வாழ்வை வள மாக்கத் தவறியவர்கள் இவர்கள். இது போன்ற இன்னும் பலரின் கதையை அமெரிக்காவின் இ.எஸ்.பி.என் டி.வியில் ப்ரோக் (Broke) என்ற நிகழ்ச்சியில் காட்டி மக்களுக்கு சேமிப்பின் முக்கியத் துவம் பற்றி எடுத்துக் கூறுகிறார்கள்.

நம் ஊரிலும் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு, சாவித்திரி போன்ற பிரபலங்கள் பணத்தின் உச்சியில் இருந்து சரிந்து, பாதாளத்தில் வீழ்ந்த கதை களுக்குப் பஞ்சமேயில்லை. அதனால்தான் பீட்டர் லின்ச் போன்ற அறிஞர்கள் கூறும் முதலீட்டு மொழிகளைக் கல்லெழுத்தாக நம் மனதில் பொறித்து வைக்கும்படி கூறுகிறார்கள் பொருளாதார ஆலோசகர்கள்.