Published:Updated:

வெளிநாட்டுப் பங்குகளில் நேரடி முதலீடு: கவனிக்க வேண்டியவை!

வெளிநாட்டுப் பங்குகளில் 
நேரடி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாட்டுப் பங்குகளில் நேரடி முதலீடு

ஃபின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டுப் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு அதிக அளவில் கொண்டு வந்துள்ளன.

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.49 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்); மேலும், முன்னணியில் உள்ள முதல் 10 நிறுவனங்களின் ஒட்டுமொத்தச் சந்தை மதிப்பு 75.7 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்தியப் பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நா.சரவணகுமார்
நா.சரவணகுமார்

உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு... பலம்!

2008-ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியால் இந்தியப் பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையைப் பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் 2020-ம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தை வீழ்ந்திருந்தபோதும், அதற்குப் பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் இந்திய முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

சமீபகாலமாக வெளிநாட்டு முதலீடுகள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அதிக அளவில் வெளியேறியிருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கியக் காரணம், உள்ளூர் முதலீடுகள் பெருகிவருவதுதான். ஃபின்டெக் செயலிகள் (Fintech Apps), நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கித் திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்குப் பக்கபலமாக உள்ளன.

கிராமத்தில் இருந்தபடிகூட வெளிநாட்டுப் பங்குகளில் நேரடி முதலீடு!

ஃபின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டுப் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்தியப் பங்குச்சந்தைக்கு அதிக அளவில் கொண்டு வந்துள்ளன. இவற்றையும் கடந்து சமீபகாலங்களில் வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களைப் பெரும்பாலான பங்குத் தரகர்கள் (Stock Brokers) இந்தியாவில் வழங்கிவருகின்றனர். மேலும், பங்குச்சந்தையில் நேரடிச் செயல்பாடுகளைக் கொண்டிருக்காத மூன்றாம் தரப்புச் செயலிகளும் (Third Party Apps) வெளிநாட்டுப் பங்குகளை வாங்குவதற்கான வசதிகளைச் செய்து தந்துள்ளன. இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவனப் பங்குகளை வாங்க முடியும்.

இணைய வளர்ச்சியால் தற்போது கிராமத்தில் இருந்தபடிகூட, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது அவ்வளவு சுலபமாகியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டுப் பங்குகளில் ஒரு தளத்தின் வாயிலாக நேரடியாக முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் உள்ளன.

வெளிநாட்டுப் பங்குகளில் 
நேரடி முதலீடு: கவனிக்க வேண்டியவை!

மூன்றாம் தரப்புச் செயலிகள் (Third Party Apps) மூலம் வெளிநாட்டுப் பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன? வெளிநாட்டுப் பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு தொடங்கத் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்கள் என்னென்ன? வெளிநாட்டுப் பங்குகளை வாங்கவும் விற்கவும் கட்டணம் எவ்வளவு? பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கிக் கணக்கில் வரவுவைப்பதற்கான கட்டணம் (Withdrawal Charges) எவ்வளவு? முதலீடு செய்த பங்குகளுக்கு டிவிடெண்ட் வழங்கப்பட்டால் எந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது? இந்த விவரங்களை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

நேரடிப் பங்கு முதலீடு (Direct Equity) அதிக ரிஸ்க் கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து வந்தால், நல்ல வருவாயைப் பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர்பெற்ற பிராண்ட்களும், அனைத்துப் பென்னி பங்குகளும் (Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை.

சமீப காலமாக சில ஃபின்டெக் தளங்களில் ‘அதிகமானோர் விரும்பும் பங்குகள்’, ‘10 ரூபாய்க்குக் கீழான பங்கு நிறுவனங்கள்’, ‘எங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்’, ‘ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்’ போன்ற விளம்பரங்களை

(Promotions) அதிகம் காண முடிகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதில் ரிஸ்க் உள்ளது. அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பவை, விழாக்காலச் சலுகை போல. கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை இதுபோன்ற பரிந்துரைகளின் அடிப்படையில் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டுப் பங்குகளில் 
நேரடி முதலீடு: கவனிக்க வேண்டியவை!

அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 55%. இதுவே பிரிட்டனில் (United Kingdom) 33%, சீனாவில் 13%. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டுதான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்துவருகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயேதான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.

‘நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டிவருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டுப் பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டுப் பங்குகளைக் கூடுதல் வாய்ப்பாகக் கருதுகிறேன்’ என்று நீங்கள் சொன்னால் வெளிநாட்டுப் பங்கு முதலீட்டை (கட்டணம் மற்றும் வரிகளைப் புரிந்துகொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களில் சில, வெளிநாட்டுப் பங்குகளில் முதலீடு செய்யும் குளோபல் ஃபண்ட்கள் வைத்துள்ளன. ரிஸ்க்கை வெகுவாகக் குறைக்க, இதில் பணத்தைப் போட்டு வரலாம்.